Published:Updated:

மகா பெரியவா - 43

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா - 43

ஓவியம்: கேஷவ்

Published:Updated:
மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

கா பெரியவா 1939 ஜூன் மாதம் 13-ம் தேதி ராமநாதபுரத்துக்கு விஜயம் செய்திருந்தபோது, சேதுபதி ராஜா அவரை வரவேற்று ராஜாங்க விருதுகளுடன் ஊர்வலமாகத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அங்கே பாதபூஜை முதலிய மரியாதைகளைச் செய்து வைத்தார். அடுத்து சிவகங்கை, திருப்பத்தூர் வழியே இளையாத்தங்குடிக்குச் சென்று அங்கே தம் பரமேஷ்டி குருவான ஸ்ரீமகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானத்தை தரிசித்துக்கொண்டார், மகா பெரியவா.

ஜூன் மாதம் 19-ம் தேதி காலை, புதுக்கோட்டை சமஸ்தானம் உதவி நிர்வாகி (Assistant Administrator) ராவ்பகதூர் கிருஷ்ணமாசார்யர், மற்ற சமஸ்தான அதிகாரிகள், தானாதிகாரி முதலான பண்டிதர்கள் ஆகியோருடன், நகர எல்லையில் அரசு மரியாதைகளுடன் மகா சுவாமி களுக்குப் பூரணகும்பம் அளித்து வரவேற்றார். 16 வருடங்களுக்குப் பின்னர் பெரியவா தரிசனம் கிட்டியிருப்பதில் பூரித்துப்போய் அதிகாலை யிலேயே வீதிகளில் திரண்டு விட்டனர் பக்தர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசாங்கக் குதிரைப்படை, போலீஸ் படை, மிலிட்டரி பேண்டு வாத்தியங்கள் புடைசூழப் புறப்பட்ட ஊர்வலம், கீழ ராஜவீதியை அடைந்தது. புதுக்கோட்டை நகர மக்கள் பலர் மகா சுவாமிகளுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள். மகா பெரியவா மௌனம் அனுஷ்டித்துக்கொண்ட நிலையிலும் ஊர் மக்கள் ஒவ்வொருவரையும் கருணைமிக்க தமது பார்வையினாலும் புன்சிரிப்பினாலும் ஆசி வழங்கினார். சுவாமிகளின் வருகையை முன்னிட்டு ஜூன் மாதம் 19, 20 ஆகிய இரண்டு நாள்களுக்கு சமஸ்தானம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. சமஸ்தான உயர் அதிகாரிகள் பலருக்கும், பொதுமக்களுக்கும் மகா பெரியவா தரிசனம் தந்து, தனித்தனியே ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தார்.

மகா பெரியவா
மகா பெரியவா

புதுக்கோட்டையில் இரண்டு நாள்கள் மட்டுமே தங்குவதற்கு மகா பெரியவா திட்டமிட்டிருந்தாலும், அந்த ஊர் பேட்டையார்கள் என்று கூறப்படும் வியாபார சங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மற்றுமொரு நாள் தங்க, மகா பெரியவா இசைந்தார். சுவாமிகளுக்குப் பேட்டையார்கள் பிக்ஷை, பாத பூஜை முதலியவற்றைச் செய்வித்து, அன்றிரவு ஒரு பெரிய ஊர்வலத்தையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். புஷ்பங்களால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட தந்தச் சிவிகையில் மகா பெரியவா அமர்ந்து புதுக்கோட்டையின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலம் சென்ற காட்சி, இன்னமும் மறக்க இயலாத அபூர்வக் காட்சியாகக் கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகா பெரியவா அவர்களின் புதுக்கோட்டை விஜயத்தின் நினைவாக அந்த ஊர் பொதுமக்கள் அம்பாள்புரம் என்னும் பகுதியில் சங்கரமடம் ஒன்றை அமைத்து, அதில் ஸ்ரீஆதிசங்கரரின் பிம்பத்தையும் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்பிகையின் பிம்பத்தையும் பிரதிஷ்டை செய்தனர். அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 1951-ம் ஆண்டு ஜூன் 24 அன்று நடைபெற்றது. ஆலயம் எழுப்பப்பட்டிருக்கும் நிலத்தை வக்கீல் ஆர்.ராமகிருஷ்ண ஐயர் என்னும் பக்தர் அப்போது இலவசமாக வழங்கினார்.

புதுக்கோட்டையிலிருந்து கீரனூர், பின்னர் திருச்சிராப்பள்ளி, திருவானைக்காவல் மூன்று நாள்கள் முகாம்... தொடர்ந்து பூதலூர், வல்லம், தஞ்சாவூர், ஈச்சங்குடி, சுவாமிமலை வழியே ஜூன் மாதம் 29-ம் தேதி கும்பகோணம் வந்தடைந்தார் மகா பெரியவா. மகானின் 21 வருடத்திய சங்கல்ப யாத்திரையும் அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

உலக நலனுக்காகவும் பக்தகோடிகளின் நல்வாழ்வுக்காகவும் தவவாழ்வு வாழ்ந்தவர் மகா பெரியவா. அந்த மகானின் 21 வருட புனித யாத்திரை பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய புண்ணிய நிகழ்வு. இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற சத்திய வாழ்க்கைக்கு முழுமையான ஓர் உதாரண புருஷராய், தன்னை வருத்திக்கொண்டு நம் கண்முன்னே நடமாடிய அவதார புருஷர் மகா பெரியவா.

அவர் மேற்கொண்ட புனிதப் பயணங்கள் பெரும்பாலும் நடைப்பயணமாகவே இருந்திருக் கின்றன. கல்லைக் கனியாக்கி, முள்ளை மலராக்கி யவை அவருடைய பாதமலர்கள். கொதிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரிலும் தன் யாத்திரையைத் தொடர்ந்த தியாகச்சீலர் அந்த தவமுனி.

வெகு நாள்களாக மகா சுவாமிகளின் தரிசனத்தை எதிர்பார்த்திருந்தார்கள் கும்பகோண நகர மக்கள். ஆனால், அப்போது சுவாமிகள் மௌன விரதம் மேற்கொண்டிருந்ததால் அன்னாரின் திருவாக்கிலிருந்து வரும் உபதேச மொழிகளைக் கேட்டு பயனடைய நினைத்திருந்த பக்தர்கள் பலருக்கும் அது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

ஆயினும், அவர் ஊருக்குள் பிரவேசித்தபோது, ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எல்லோரையும் கண்டு தமது முக ஜாடையினாலும் கை ஜாடையினாலும் அவர்களின் நலனைப் பற்றியெல்லாம் கேட்டறிந்து அவர்களை ஆசீர்வதித்தார், காஞ்சி மாமுனிவர்.

மகா பெரியவா
மகா பெரியவா

சாதாரணமாக கும்பகோணத்திலிருந்து பெரியவா புறப்படும்போதும் திரும்பி வரும்போதும், முதலில் அந்த ஊரில் சௌராஷ்டிர பிரமுகரும் தர்மவானுமான அரண்மனை கிருஷ்ணன் செட்டியாரின் ரயிலடிச் சத்திரத்தில் தங்குவது வழக்கம். இந்த முறையும் செட்டியாரின் சந்ததியர் வேண்டுகோளை ஏற்று அந்தச் சத்திரத்தில் தங்கி, அன்று அவர்கள் அளித்த பிஷை, பாத பூஜைகளை ஏற்றார் மகா சுவாமிகள்.

அன்றிரவு நகர மக்கள் மிகப் பெரியதொரு ஊர்வலத்தை ஏற்பாடு செய்ய, ஊர்வலம் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மடத்தை இரவு இரண்டு மணிக்கு அடைந்தது. மறுநாள் காலை காவிரியில் நீராடிவிட்டு மடத்துக்குள் மகா பெரியவா நுழைந்தபோது, அங்கே கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் திரண்டிருந்தது. அப்போது மடத்தின் மாடி மீது ஏறி, கைப்பிடிச் சுவரை ஒட்டி ஓர் உயர்ந்த பீடத்தில் நின்று, வீதியில் கூடியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தந்தார் அந்த பரம தயாளன்.

மகா பெரியவாமீது எத்தனையோ பேர் அதீத பக்தியும் பிரேமையும் கொண்டிருந்தார்கள். சுவாமிகளின் நினைவிலேயே எந்நேரமும் திளைத்து, சங்கர நாமத்திலேயே மூழ்கி, பிரதிபலன் பாராமல் அன்னாருக்குச் சேவை செய்வதையே தங்கள் பேறாகக் கருதியவர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவர், ‘அன்னதான சிவன்’ என்று பரவலாக அறியப்பட்ட தேப்பெருமாநல்லூர் சிவன். அந்தத் தனிமனிதர், அதிலும் ஓர் ஏழை அந்தணர் தமது வாழ்நாளில் சுமார் 50 ஆண்டுகள் அறுசுவையுடன் அன்னதானம் செய்திருக்கிறார்.

கும்பகோணத்தை அடுத்த தேப்பெருமா நல்லூரில் 1852-ம் வருடத்தில் பிறந்தவர் சிவன். இயற்பெயர் ராமசுவாமி. தந்தையிடமிருந்து வேதம் பயின்றவர். பள்ளிப்படிப்பு பயில சந்தர்ப்பம் வாய்க்கப் பெறாதவர்.

கயத்தூர் சீனிவாச ஐயர் என்னும் தஞ்சை ஜில்லா மிராசுதார் ஒருவர், திருவிழா நடைபெறும் இடங்களிலெல்லாம் அன்னதானம் செய்து வந்ததை சிவன், தம் இளமைப் பருவத்தில் நேரில் பார்த்திருக்கிறார். சில காலம் அவருக்குப் பணிவிடைகளையும் செய்திருக்கிறார். பசித்த வருக்கு அன்னமளிப்பதே மனிதன் கடவுளுக்கும் மக்களுக்கும் செய்யக் கூடிய முதல் பணி என்ற எண்ணம் இவருடைய மனத்தில் ஆழமாகப் பதிந்தது. இளமைப் பருவத்திலேயே தாய் தந்தையை இழந்தவர் சிவன். திருமணமான சில வருடங்களில் மனைவியும் இறந்துவிட்டார். தமக்கிருந்த வீட்டையும் சிறிது நிலத்தையும் விற்று, அந்தப் பணத்தைக்கொண்டு அந்த ஊரிலுள்ள ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம பெருமாள் ஆலயத்தில் நடந்த திருவிழாவில் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்தார். வீட்டையும் ஆஸ்தியையும் இழந்தவருக்கு வேலை எதுவுமில்லை.

நண்பர்கள் வற்புறுத்தவே திருபுவனத்தில் இருந்த சிவாலயத்தில் பரிசாரகர் பணியில் அமர்ந்தார். ஆனால், நிம்மதி கிடைக்கவில்லை. ஏதோ குற்ற உணர்வு. தாம் செய்யும் குற்றம், குறைகளால் சிவஅபவாதம் ஏற்படுமோ என்கிற அச்சம். எனவே, அந்த வேலையைவிட்டுவிட்டு, மக்களுக்கு அன்னமளிப்பதே தாம் இறைவனுக்குச் செய்யும் பணியென்ற தீர்மானத்துடன் தஞ்சை மாவட்டத்திலுள்ள பல கோயில்களில் அன்ன தானம் செய்யத் தொடங்கினார் சிவன்.

1897-ம் வருட மகாமகத்தில் கும்பகோணம் சங்கர மடத்தில் அதுவரை செய்திராத ஒரு பெரிய அன்னதானத்தைச் செய்ய முயற்சி மேற்கொண்டார் சிவன். தஞ்சை மாவட்ட மிராசுதார்களும் வியாபாரிகளும் அன்னதானத்துக்கு வேண்டிய உணவுப் பொருள்களைக் கொடுத்து உதவினர். இளைஞர்கள் பலர், பணம் எதுவுமின்றி சிவனுக்கு உதவிட முன்வந்தனர். அநேகமாக ஒவ்வொரு மாதத்திலும் ஓர் ஊரில் அன்னதானம் செய்வதென அவர் திட்டமிட்டுக்கொண்டார்.

இப்படிப் பல ஊர்களுக்குச் சென்று அன்ன தானம் செய்து வந்ததுடன், அவ்வப்போது கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகங் களிலும் அன்னமளித்து வந்தார் சிவன். திருவிடைமருதூரிலும் திருச்சி மலைக் கோட்டையிலும் நடந்த மகா கும்பாபிஷேகங்களில் இவருடைய அன்னதான வைபவங்கள் நடந்திருக்கின்றன. 1916-ல் கும்பகோணம் சங்கர மடத்தில் நவராத்திரி காலத்தில் லட்சார்ச்சனை, லட்ச தீபம், லட்சபிராமண போஜனம் ஆகிய விழாக்களின்போது, அன்னதானம் முழுவதையும் சிவன் ஏற்றுக்கொண்டு நடத்தினார். இந்த விழாக்களிலெல்லாம் ஐந்து முதல் பத்து நாள்களுக்கு ஒவ்வொரு வேளையும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அன்னம் அளிக்கப்பட்டிருக்கிறது.

1909-வது வருட மகாமக காலத்தில், மகா பெரியவாவை அவருடைய 15 -ம் பால பருவத்தில் முதன்முதலாகச் சந்தித்தார் சிவன்!

- வளரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism