Published:Updated:

மகா பெரியவா - 44

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா - 44

ஓவியம்: கேஷவ்

Published:Updated:
மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

முதன்முதலில் (1909) மகா பெரியவரை தரிசனம் செய்ததிலிருந்து அவர்மீது அளவில்லாத பக்தியும் அலாதியான அன்பும் வளரத் தொடங்கின அன்னதான சிவனுக்கு. ‘தெய்வத்தன்மை வாய்ந்த மகா புருஷர்’ என்றே சுவாமிகளைப் பற்றி கூறி வந்தார். 1916 முதல், மடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். பெரும்பாலும் மடத்திலேயே தங்கியிருந்தவர், அவ்வப்போது அன்னதானம் செய்வதற்கு வெளியூர்களுக்குப் போய் வருவார்.

1921-ம் ஆண்டு, தஞ்சை மாவட்டத்தில் விஜய யாத்திரை செய்து கொண்டிருந்தார் மகா பெரியவா. அந்தப் பயணத்தின்போது பல நாள்கள் பிக்ஷை ஏற்காமல் பெரியவா உபவாசம் இருப்பதாகவும், அதனால் அவரின் சரீரம் மெலிந்து வருவதாகவும் சிவனிடம் சிலர் தெரிவித்தார்கள். சிவன் கண்கலங்கினார். மகானுக்கு நீண்ட கடிதம் ஒன்று அனுப்பினார்.

மகா பெரியவா - 44

அதில், சுவாமிகள் இப்படி உபவாசம் இருக்க வேண்டாம் என்றும், சுவாமிகள் திடகாத்திரமாக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டுமென்று சீடர்கள் விரும்புவதாகவும், எளிய உணவாக ஒவ்வொரு நாளும் சிறிதளவேனும் அன்ன பிக்ஷையை ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு எழுதினார். மேலும், உடல்நலக் குறையிருக்கும்போது வெந்நீரிலேயே ஸ்நானம் செய்ய வேண்டும், ஆற்றிலோ, குளங்களிலோ, கடலிலோ நீராடச் செல்லும்போது, நீளமான கம்பைக்கொண்டு முன்பே ஒருவரை ஆழம் பார்க்கச் செய்து, பிறகே தண்ணீரில் இறங்க வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் சுவாமிகள் தனியே நீரில் இறங்கக் கூடாது, நீராடும்போது சுவாமிகளைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக சிலர் நிற்க வேண்டும், இரவில் வெகுநேரம் கண்விழிக்க வேண்டாம், சுவாமிகள் தனிமையில் எங்கும் செல்ல வேண்டாம், நித்ய பூஜையைக் காலத்தில் முடித்துக்கொண்டு சிறிது ஓய்வுவெடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சிவன் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், தனது வேண்டுகோளின்படி சுவாமிகள் நடந்துகொள்கிறாரா என்பதை அறிய தாம் ஆவல் உள்ளவ னாக இருப்பதாகவும், அது தொடர்பாக மடத்தின் அதிகாரிகள்மூலம் கடிதம் எழுதியனுப்ப வேண்டும் என்றும் கடிதத்தில் அன்பொழுக கேட்டுக் கொண்டிருந்தார் சிவன்.

சிவனின் கடிதத்தை மகா பெரியவருக் குப் படித்துக்காட்டினார் மடத்தின் சிப்பந்திகளில் ஒருவர். மென்முறுவல் பூத்தார் பெரியவா. மீண்டும் ஒருமுறை அதை வாசிக்கும்படி கட்டளையிட்டார். ஓர் தந்தை அன்புடன் தன் அருமைப் புதல்வனுக்கு எழுதிய கடிதம் மாதிரி அது அமைந்திருந்தது. இருப்பினும், பெரியவா அதைப்பற்றி எதுவும் கூறவில்லை. என்ன பதில் எழுதுவதென்று மறுநாள் மடத்து அதிகாரிகள் கேட்டனர். “எல்லாம் சிவனின் மனம்போல நடக்கும்னு ஆள் மூலம் சொல்லி அனுப்பிடுங்கோ...” என்று உத்தரவிட்டார் மகா பெரியவா.

இந்தப் பதிலால் சிவன் திருப்தி அடையவில்லை. நேரில் சுவாமிகளை தரிசனம் செய்து, மனத்தில் தோன்றிய வற்றையெல்லாம் சுவாமிகளிடம் விண்ணப்பிக்க வேண்டி, மகான் முகாமிட்டிருந்த கிராமத்துக்கு வந்தார்.

அவரிடம் மிகுந்த அன்புடன் பேசி, சாத்தியமானவரையிலும் அவர் கோரிக்கைப்படி நடந்துகொள்வதாகக் கூறினார் மகா பெரியவா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1925 முதல் 1932-ம் வருடம் வரை நடைபெற்ற மடத்தின் திருப்பணிகள் தொடர்பாக சிவன் ஆலோசனைகள் பல கூறி வந்ததுடன், அவற்றுக்காகச் சில மிராசுதார்களிடமிருந்து பொருளையும் சேகரித்தார். சிவனின் வயோதிகக் காலத்தில், மடத்தின் சிப்பந்திகள் சிலரை அவருடன் இருந்து அவரது உடல்நலனையும் ஆகாரத்தையும் கவனித்துக்கொள்ளும்படி பணித்திருந்தார் மகா பெரியவா. பின்னர், தாம் வெகுநாள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த சிவன், தன்னைத் திருபுவனத்துக்குக் கொண்டுபோய் விடும்படி கேட்டுக் கொண்டார். அப்படியே செய்யப்பட்டது.

மகா பெரியவா - 44

திருபுவனத்தில் தாம் வழிபட்ட ஸ்ரீகம்பஹரேஸ்வரர் சந்நிதானத்திலேயே சிவன் தமது பூத உடலை விடுத்தார். அன்றுதான் மகா பெரியவா கங்கா யாத்திரையை முடித்துக் கொண்டு சோழ நாட்டில் பாதம் பதித்தார்கள்.

சிவன், சிவபிரானின் திருவடி சேர்ந்த செய்தி சுவாமி களுக்குத் தெரிவிக்கப்பட்டது. “சந்நியாசம் பெறாமலும் ஞான மார்க்கத்தில் சாதனை இல்லாமலும் இந்த ஜன்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனாக சிவன் மோட்ச நிலையை அடைந்துவிட்டார். அவருக்கு இனி மறு ஜன்மம் இல்லை'' என்றாராம் மகா பெரியவா.

கும்பகோணத்திலும் திருபுவனத்திலும் அன்று மோட்ச தீபம் ஏற்றும்படி உத்தரவாயிற்று. சிவன் மோட்சம் அடைந்த பத்தாவது நாள் கும்பகோணத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு அன்னம் அளிக்கப்பட்டது. தமது இறுதி நாளில் தம்மிடம் இருந்த 160 ரூபாயை `பூர்த்த தர்மம்' எனக் கூறப்படும் குளம் வெட்டும் கைங்கர்யத்துக்குச் செலவிடும்படி திருச்சி வக்கீல் ஆர்.சீனிவாச ஐயரிடம் கொடுத்திருந்தார் சிவன். அந்தத் தொகையை சுவாமிகளிடம் சமர்ப்பணம் செய்தார் ஐயர். திருவள்ளூரில் இருந்த ஒரு குளத்தைச் சீர்திருத்தம் செய்ய அதைச் செலவிட உத்தரவிட்டார் மகா பெரியவா.

தம்முடைய அருளுரைகளில் ‘பக்தன்’ என்பது குறித்து அநேகம் பேசியிருக்கிறார் மகா சுவாமிகள். சில துளிகளைப் பருகுவோம்...

ண்மையான பக்தன் ஒருவன், பரமேசுவரனுக்குப் பூஜை செய்ய விரும்புகிறான். உடனேயே அவனுக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துவிடுகிறது. ஈஸ்வரனிடமே கேட்கிறான். `ஈஸ்வரா! நான் உனக்கு உபசாரம் செய்வதாக நினைத்து பூஜை செய்தாலும் உண்மையில் அபசாரம் அல்லவா செய்வதாகத் தோன்றுகிறது. திரிலோகமும் வியாபித்த உன் திருவடியை நான் ஓர் உத்தரணி தீர்த்தத் தால் அலம்ப முடியுமா?

மகா பெரியவா
மகா பெரியவா

விசுவாகரமான உன் சரீரத்தை இந்தச் சிறிய வஸ்திரத்தைக் கட்டி மூடமுடியுமா? உனக்கு நமஸ்காரம் பண்ணினால்... என் காலை எந்தப் பக்கம் நீட்டினாலும் அங்கேயும்தான் நீ இருக்கிறாய். எனவே, உனக்கு நேரே காலை நீட்டிய தோஷம் அல்லவா எனக்கு ஏற்படுகிறது!

சரி, பூஜையே வேண்டாம் என்று பிரார்த்தனை செய்யப் பார்த்தால், எல்லாம் அறிந்த ஸர்வக்ஞனான உன்னிடம் பிரார்த்திப்பதும் அபசாரமாக அல்லவா ஆகிறது? பிரார்த்தனை என்றால் உனக்குத் தெரியாததை நான் கேட்பதாகத்தானே ஆகும்?

இருந்தாலும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிற அளவுக்கு நான் குறை உள்ளவனாகத்தானே இருக்கிறேன்! அதனால், அந்தக் குறை நீங்குவதற்காக உன்னிடம் பிரார்த்திக்கிறேன். எல்லாமுமான நீயேதான் நானாகவும் ஆகியிருக்கிறாய் என்று தெரியாமல் என்னைக் குறைவுபடுத்திக் கொண்டிருக்கிறேனே... அந்தக் குறையை நீக்கு என்றே பிரார்த்திக்கிறேன். நீ அகண்ட ஆனந்த ஸ்வரூபன்; உன்னைத் தவிர வேறில்லை என்று வேதம் சொல்கிறது. அப்படிப் பூரண ஆனந்தமாகத் திகழும் உனக்கு வேறாக இப்படிக் கோணலும் மாணலுமாகக் குறையோடு நான் ஒருத்தன் இருப்பது போல் தோன்றுகிறதே... இல்லாவிட்டால், இப்படி நான் ஒருத்தன் அழுதபடியே உன்னைப் பிரார்த்தனை பண்ணவேண்டியதே இல்லையே!

இப்படி நான் உனக்கு வேறாக இருப்பதாகத் தோன்று வதைப் போக்கினால், நீதான் எல்லாமும் நீதான் நானும். அதாவது நான்தான் எல்லாமும் என்று ஆகும். அதாவது, உன்னிடம் நான் அதைக் கொடு, இதைக் கொடு என்று வெளி வஸ்துகளைக் கேட்கவில்லை. என்னையே எனக்குக் கொடு என்றே பிரார்த்திக்கிறேன்!” என்கிறார் அந்த பக்தர்.

இந்த ரீதியிலேயே ‘சிவ மானஸிக பூஜா’ என்ற ஸ்தோத் திரத்தில் பிரார்த்திக்கிறார் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர்.

மஹ்யம் தேஹி ச பகவன்

மதீயமேவ ஸ்வரூபம் ஆனந்தம்

‘என் ஆனந்த ஸ்வரூபத்தையே எனக்குக் கொடு’ என்கிறார் அவர்.

இப்போது நாம் எல்லோரும் நம் நிஜ சொரூபத்தை விட்டுவிட்டு வேஷத்தில் இருக்கிறோம். நமக்கு வேண்டியவர் களை விட்டுவிட்டால் தவிக்கிறோமே... எனில், நம்மையே விட்டுவிட்டதற்கு எப்படி தவியாய்த் தவிக்க வேண்டும்.

நம் ஆத்ம ஆனந்த சொரூபத்தோடு அதுவே நாமாக எப்போது கலக்கப் போகிறோம் என்கிற தவிப்பும், அதைப்பற்றிய நினைப்பும் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

பரமாத்மாவுடன் கலப்பதற்காக இப்படி சகிக்க முடியாமல் தவிப்பது தான் உண்மையான பிரேமை. அந்தப் பிரேமைக்குத்தான் பக்தி என்று பெயர்.

அதற்கு முதல் படியாக பூஜை, கோயில் வழிபாடு எல்லாம் வேண்டியிருக் கின்றன. உலக நினைப்பே ஓயாத காரியமாக இருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் இவைதான் பரமாத்மாவை நினைக்கச்செய்யும் சாதனங்கள் ஆகும். இந்தக் கட்டத்தில் `கோயிலில் மட்டுமன்றி எல்லா இடங்களிலும் ஸ்வாமி வியாபித்திருக்கிறார். நாமும்கூட அவரேதான்' என்பதை நாம் உணராவிட்டாலும் பரவாயில்லை, `மூல விக்கிரகத்தில் ஸ்வாமி இருக்கிறார்' என்று பயப்பட்டு, கோயில் தூணிலேயே பிரசாதக் கையைத் துடைக்கும் போக்கை மாற்றிக்கொள்ளும் நிலைக்காவது வருவது நல்லதுதானே!

சிரத்தை குறையாமல், நம்பிக்கை மாறாமல், அப்பியாசம் செய்து கொண்டே இருந்தால், நாளாவட்டத்தில் ஸ்வாமி எங்கும் இருக்கிறார்; எல்லாமாக இருக்கிறார் என்பது புத்திக்குப் புரியும்.

புத்திக்குப் புரிவது அனுபவமாக மாற, ‘என்னையே எனக்குக் கொடு’ என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருக்க வேண்டும். ஞானாம்பிகை கிருபை செய்வாள்!

மகா பெரியவர், ‘64-வது நாயன்மார்’ என்று தம்முடைய தீவிர பக்தர் ஒருவரை விளித்தது, சுவையான சம்பவம்!

- வளரும்