மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 45

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா

ஓவியம்: கேஷவ்

ரண்டொரு மாதங்களுக்கு முன் காஞ்சிபுரம் செல்ல நேரிட்டது. ஓரிக்கையில் மகா பெரியவாளுக்கு பிரமாண்டமாக எழுப்பப்பட்டிருக்கும் மணி மண்டபத்தை தரிசித்து வரத் திட்டம். கடம் வித்வான் ‘விக்கு’ விநாயக்ராம் உடன் வந்திருந்தார்.

மகா பெரியவா
மகா பெரியவா

“மணி மண்டபத்துக்குப் போற வழியில் மகா பெரியவா தாயாருக்குக் கட்டப்பட்டு வரும் கோயிலைப் பார்த்துட்டு வந்துடலாம்” என்றார் விநாயக்ராம். இதுகுறித்துப் பின்வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

காஞ்சியிலிருந்து ஓரிக்கைக்குப் போகிற வழியில் ‘பங்காரு அம்மன் தோட்டம்’ என்ற பகுதியில், ஒரு வீட்டு வாசலில் தொங்கிக் கொண்டிருந்த போர்டு கண்ணில்பட்டது. அதில்...

பகவான் யோகமூர்த்தி

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகா பெரியவா

‘மீளா அடிமை’

- என்று தென்பட்ட வரிகள் நம் கவனத்தை ஈர்த்தன. வண்டியை நிறுத்தினோம். பார்ப்பதற்கு கோயில் போன்ற தோற்றம். உள்ளே நுழைந்தால், வீடே கோயில்தான்!

பூஜை அறைக்குள் சட்டையை அவிழ்த்து விட்டுத்தான் நுழைய முடியும். உள்ளே, மகா சுவாமிகளுக்குக் கர்ப்ப கிரகம். ‘மீளா அடிமை’யின் பெயரன் ஸ்ரீராம், பெரியவா பூஜையில் ஈடுபட்டிருந்தார்.

மகா பெரியவா
மகா பெரியவா

‘மீளா அடிமை’ என்று அறியப் பட்ட பிரதோஷம் வெங்கடராம ஐயர், மகா பெரியவரின் அதி தீவிர பக்தர். 64-வது நாயன்மார் என்று சுவாமிகளால் அன்புடன் அழைக்கப்பட்டவர். ஒவ்வொரு பிரதோஷ நாளன்றும் பெரியவா எந்த ஊரில் முகாமிட்டிருந்தாலும் அங்கே சென்று ஆசி பெறுவதை வாழ்க்கையின் பாக்கியமாகக் கருதியவர். ‘பிரதோஷ மாமா’ என்று பிரபலமாகத் திகழ்ந்தவர். இவர் மனைவி வேதாம்பாள். மகா பெரியவரின் நீண்ட பயணத்தில் மீளா அடிமை நிரந்தர அங்கம் வகித்தவர். 1926-ம் ஆண்டு அக்டோபர் 20 அன்று பிறந்தவர் வெங்கடராமன். இவர் தந்தை ‘கவிக்குஞ்சரம்’ என்று மகா பெரியவா அவர்களின் திருக்கரங்களால் பட்டம் பெற்ற ஸ்ரீவைத்தியநாத சர்மா. தாயார் தஞ்சம்மாள். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி. ஆரம்பத்தில் சிறிது நாள்கள் ராணுவத்தில் பணிபுரிந்துவிட்டு, பின்னர் ரயில்வே துறையில் இணைந்தார்.

1952-ல் முதன்முதலில் மகா பெரியவா தரிசனம் கிட்டியிருக் கிறது பிரதோஷ மாமாவுக்கு. 14 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் மனைவியுடன் காளஹஸ்தியில் திவ்ய தரிசனம் பெற்றார். இருள் சூழ்ந்திருந்த ஒரு சூழ்நிலையில் டார்ச் ஒளியில் நடமாடும் தெய்வம் நடந்துவருவது தெரிய, நமஸ்கரிக்க யத்தனித்த தம்பதியை நோக்கி நேராக வந்து நமஸ்காரம் செய்யச் சொல்லியிருக்கிறார் மகான். ‘மனசே இல்லாத நிலை கொடு’ என்று கேட்க பிரதோஷ மாமாவுக்கு ஆசை. அதையே தன் மனைவி மூலம் சுவாமிகளிடம் விண்ணப்பிக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால், அப்படி முறையிடுவதற்கு முன்னதா கவே ‘தானே ஸ்புரிக்கும்’ என்று அசரீரியாக அருள்பாலித்தாராம் ஆசார்யப் பெருந்தகை!

மகா பெரியவா - 45

சேலத்தில் பணியிலிருந்தபோது தான் மீளா அடிமைக்குப் பிரதோஷ தரிசனம் ஆரம்பமானது. முதல் பிரதோஷ தரிசனம் சனி மகா பிரதோஷமாக ஸ்திர வாரத்தில் ஆனந்தமாக ஆரம்பித்தது. அடுத்த பிரதோஷத் தில் அது தீவிர பக்தியாகத் தொடர்ந்தது. மூன்றாவது புண்ணிய பிரதோஷத்தில் அந்த முக்கண்ணனின் ஆசி கிட்டியது.

‘தான் பிரதோஷம் தோறும் வருவது பெரியவாளுக்குத் தெரியுமோ’ என்ற ஐயப்பாடு மீளா அடிமைக்கு. மகா பெரியவா முன் அவர் நமஸ்கரித்து எழுந்தபோது, “இன்னிக்கு என்ன பிரதோஷமா?” என்று கேட்டிருக்கிறார் மகா சுவாமிகள். அருகே கைங்கர்யம் செய்துகொண்டிருந்தவர், பஞ்சாங்கம் பார்த்து ‘`ஆமாம்...” என்று சொல்ல, “இவர் ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் வந்துண்டிருக்கார்” என்று மகா பெரியவா சொன்னதும் அதையே தனது பக்திக்கான அங்கீகாரமாகக் கருதி ஆனந்தமடைந்தார் பிரதோஷ மாமா!

சேலத்தில் இருந்தபோது ஒரு நாள் பிரதோஷ மாமாவின் மனைவி வேதாம்பாளுக்கு இடை விடாத ரத்தப்போக்கு. மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதும் வந்திருப்பது புற்றுநோய் என்றார்கள் மருத்துவர்கள். மிக மோசமான உடல்நிலையோடு இரவு முழுக்க தவித்துக் கொண்டிருந்தாள் வேதாம்பாள். அதிகாலை மூன்று மணி இருக்கும். வேதாம்பாளுக்குக் கனவில் சுப்ரமணியராக வந்து நின்றார் மகா பெரியவா. அதுவரை காஞ்சி சங்கர மடத்தையே கண்டிராத அந்த மாதரசிக்கு மடத்தில் ஆதிசங்கரர் அருள் பாலிக்கும் பூஜை மேடை கனவில் தோன்றுகிறது.

அங்கே வண்ணமயில் ஏறி வேல்முருகன் காட்சி தர, மகா பெரியவா திருமுகம் மலர்ந்து அருகில் ஒளிவிடும் ஆளுயரக் குத்துவிளக்கில் பிரகாசமாக தரிசனம் தருகிறார். சுற்றிலும் நான்கு பேர் சூழ்ந்திருக்க, சுவாமிகளிடம் போய் நின்று தன் குறைகளைக் கூறி அழுகிறாள் வேதாம்பாள்.

உடனே தான் தரித்துக் கொண்டிருந்த சால்வையை எடுத்து அவளுக்குப் போர்த்துகிறார் மகா பெரியவா. அது கனவுதான் என்றாலும் மெய்யாகவே உடலெல்லாம் சிலிர்க்கிறது வேதாம்பாளுக்கு. ஒருவித அதிர்வு ஏற்பட, அதுவரை அனுபவித்து வந்த உபாதைகளிலிருந்து சட்டென்று விடுபட்டது போன்ற ஓர் உணர்வு.

விடிகிறது. புத்துணர்வோடு எழுந்திருக்கிறாள் வேதாம்பாள். தெய்வத்தின் கருணையால், தான் காப்பாற்றப்பட்டிருப்பது அவளுக்குப் புரிகிறது. தனக்குப் புதுவாழ்வு கொடுத்த காருண்ய மூர்த்தியை தரிசிக்க அன்றே காஞ்சி செல்ல விரும்புகிறார். உடல் தேறிய பின்னர் அனுப்புவதாகக் கணவர் சொன்னாலும் வற்புறுத்திக்கொண்டே இருக்கிறாள் மனைவி. இன்னொரு கனவு வருகிறது அவருக்கு. ஏதோ ஒரு கல் மண்டபத்தில், இடுப்பில் வஸ்திரம் அணிந்து அமர்ந்த கோலத்தில் மகா பெரியவா.

‘ஏறுமயில் ஏறி விளையாடும்’ என்று வேதாம்பாள் பாட ஆரம்பித்து, ‘கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே’ என்று முழங்க, `போயிட்டு வா’ என்று பெரியவா ஆசி வழங்குவதுடன் கனவு நினைவுற்றது. இதைக் கேள்வியுற்றதும் பிரதோஷ மாமா, அன்றிரவே மனைவியைக் காஞ்சிபுரத்துக்கு ரயிலேற்றிவிட்டார். ஆனால், மகா பெரியவா கலவை நோக்கிப் பயணப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. வேதாம்பாளும் கலவைக்கு பஸ் ஏறினாள்.

- வளரும்...