Published:Updated:

மகா பெரியவா - 46

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா - 46

ஓவியம்: கேஷவ்

Published:Updated:
மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

லவைக்கு பஸ் ஏறிய வேதாம்பாள், ஆற்காடு அருகே ஓர் இடத்தில் சுவாமிகள் இருப்பது தெரியவர, அங்கே சென்றாள்.

கனவில் கண்டது மாதிரி ஒரு கல் மண்டபத்தில் மகான் அமர்ந்திருந்தார். சுற்றிலும் கிராமத்து ஜனங்கள். பேரானந்த அனுபவத்தில் திளைத்த வேதாம்பாள் அங்கே போய் நிற்க, ``நீ உன் மாமனார் போட்ட பாட்டைப் பாடு...'' என்று உத்தரவானது.

மகா பெரியவா
மகா பெரியவா

மெய் சிலிர்த்தாள் வேதாம்பாள்.

`திங்களஞ்சடை சிவபிரான் உருத் தெரியவே விளங்கு அரியதோர் மகான்' என்று சுவாமிகளைப் போற்றும் பாடலைப் பாடினாள். மகா பெரியவா தம் திருக்கரத்தால் ஆசீர்வதித்து, வினை தீர்ந்தது என்று அருளி விடைகொடுத்தார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் குழந்தை, மனைவியுடன் எங்கு தங்குவது என்ற சிந்தனை மீளா அடிமைக்கு எழும்போதெல்லாம் `பெரியவா விட்டுடவா போறா' என்ற நம்பிக்கை அதைத் தடுக்கும்.

``வீடிருக்கா கேளு...'' என்று ஒருமுறை சதாராவில் தங்கியிருந்தபோது, பிரதோஷ மாமாவிடம் கேட்கச் சொல்லியிருக்கிறார் மகா பெரியவா.

ஓரிக்கை சிவாலயம்
ஓரிக்கை சிவாலயம்

அதன்படி தம்மிடம் வந்து விசாரித்தவர் களிடம் ``பெரியவா பேரின்ப வீடு கொடுப்பா...'' என்றாராம் அந்த அதீத பக்தர்.

ஒருநாள் விடியற்காலை நான்கு மணி தரிசனம். மீளாஅடிமையுடன் பாலாஜி, செட்டியார் மற்றும் பலர். அப்போது, ``இவரை வெச்சுப்பேளா?'' என்று மீளா அடிமையைச் சுட்டிக்காட்டி அவர்களிடம் கேட்டிருக்கிறார் சுவாமிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நான் வெச்சுக்கறேன்...'' என்றார் பாலாஜி. செட்டியாரோ பதிலேதும் கூறவில்லை.

``உன் வீடு சின்னது... உன்னால முடியாது...'' என்றார் பெரியவா, பாலாஜியிடம்.

மீளா அடிமைக்குச் சந்தேகம் கலந்த கலக்கம். பெரியவா ஏன் தன்னை யாராவது வைத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்கவேண்டும்? நான் என்ன முடியாதவனா? வைத்துக் கொள்வது என்றால் என்ன... இட வசதி கொடுத்து வைத்துக் கொள்வதா அல்லது முழுமையாகத் தன் குடும்பத்தைப் பராமரித்து வைத்துக்கொள்வதா?

மறுபடியும் ``உன்னை யாராவது வெச்சிக்கறாளா?'' என்று மீளா அடிமையிடம் கேட்டார் மகா பெரியவா. மீளா அடிமை திகைத்தார்.

ஆனால், அந்த வாக்குக்கான உண்மை வெளிப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. இரண்டு மாதங்களுக்குள் காஞ்சிபுரத்தில் வீட்டுக்கான நிலம், வீடு கட்ட பணம், கட்டுமானப் பணி என்று அத்தனையையும் நிறைவேற்றிக் கொடுத்துவிட்டார் அந்தக் காருண்யமூர்த்தி.

பிரதோஷ மாமா இல்லம்
பிரதோஷ மாமா இல்லம்

பணியிலிருந்து விடுபட்ட மாத்திரத்திலேயே மீளா அடிமைக்குக் குடிபுகப் புது வீடு அமைத்துக் கொடுத்துவிட்டார் மகா பெரியவா!

`பகவான் யோகமூர்த்தி

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா

மீளா அடிமை' - என்று வீட்டு வாசலில் மாட்டப்பட்டிருந்த போர்டை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டுக் கிளம்பினேன்!

மகா பெரியவா மேற்கொண்ட நீண்டதொரு பாரத யாத்திரையில் அன்னாரின் ‘சித்தூர் விஜயம்’ (1931 ஜூலை 28 )முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி. ஸ்ரீசுப்ரமணியக் கடவுளின் மாமனாராகிய நம்பிராசன் என்ற வேடுவனது பட்டணமே இப்போது சித்தூர் என்று அழைக்கப்படுகிறது.

மகா பெரியவரின் தாயார்
மகா பெரியவரின் தாயார்

அதன் பக்கத்தில் உள்ள வெள்ளிமலை என்ற சிறு குன்று இதற்கு சாட்சி. குன்றின் பக்கத்தில் ஒரு சிவாலயமும், அந்த ஆலயத்துக்கு அருகே ஒரு நதியும் இருக்கின்றன. ‘நீவா’ என்ற பெயர் அமையப்பெற்ற அந்த நதி, ஆலயத்திலிருந்து சற்று விலகியிருந்ததாகச் சொல்லப் படுவதுண்டு.

ஒருநாள் சிவபெருமானின் அபிஷேகத்துக்காகத் தண்ணீர் கொண்டுவர அர்ச்சகர் சென்ற போது, ஓர் அரக்கன் அவரை பயமுறுத்தினானாம். அவர் பொருட்டு சிவபெருமான் கருணை யுடன் அந்த நதியை ஆலயத்தின் சமீபத்துக்கு வரும்படி தமிழில் ‘நீ, வா’ என்று அழைத்ததாகவும், உடனே அந்த நதி ஆலயத்தின் பக்கத்திலேயே ஓடியதாகவும் வரலாறு. அதனால் அந்த நதிக்கு ‘நீவா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

மகா பெரியவா சித்தூரில் இரண்டு மாதங்கள் முகாமிட்டு சாதுர்மாஸ்ய விரதத்தைப் பூர்த்தி செய்துகொண்டார். இந்தத் தருணத்தில் ஒவ்வொரு தினமும் மகா பெரியவா நிகழ்த்திய பேருரையைக் கேட்டுப் பயன் பெறவும் பரவசம் அடையவும் பல நூறு பக்தர்கள் திரண்டு வருவார்கள். அரிய பெரிய வேதாந்தக் கருத்துகளை எவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய தமிழில் உரை நிகழ்த்துவார் பெரியவா. வாழ்வியல் தொடர்பான போதனைகள் அதில் இருக்கும். மனத்தை அரித்துக்கொண்டிருக்கும் ஐயப்பாடுகள் அகலும். சாஸ்திர சம்பிரதாயங்கள் குறித்துத் தெளிவு பிறக்கும். சாஸ்திரங்களுக்கு உட்பட்டு நாம் நடக்க வேண்டியதன் அவசியத்தை தமது உரையில் வலியுறுத்தினார் மகா பெரியவா.

மகா பெரியவரின் தந்தையார்
மகா பெரியவரின் தந்தையார்

“இப்போது நடத்தப்படும் கல்யாணங்கள் தர்ம சாஸ்திரத்துக்கு உட்பட்டவையல்ல. திருமணத் தின் முதல் நாளைத் தொடர்ந்து மாப்பிள்ளையின் வீட்டில் மூன்று நாள்களுக்கு ஔபாசனம் செய்தால் மட்டுமே அந்தத் திருமணத்தை சாஸ்திரம் ஒப்புக்கொள்ளும்” என்றார் சுவாமிகள்.

‘ஒருநாள் கல்யாணம்’ என்ற வழக்கத்தை வன்மையாகக் கண்டித்தவர் அவர். மாப்பிள்ளை வீட்டில் மூன்று நாள்கள் செய்யப்படும் ஔபாசனம் வைதீகச் செயலாகக் கருதப்படுகிறது.

“இந்த சாஸ்திர ரீதியான பழக்கம் பின்பற்றப் பட்டாலே, திருப்பதி மாதிரியான இடங்களில் நடத்தப்படும் அவசர ஒருநாள் கல்யாணத்தைத் தவிர்த்துவிடலாம். கோயிலிலோ, கோயிலுக்கு அருகிலோ கல்யாணம் நடப்பது நல்லதுதானே என்று நினைக்கலாம். ஆனால், தொடரும் மூன்று நாள்களுக்கு ஔபாசனம் எதுவும் செய்யப்படாத நிலையில், கட்டாயமாகச் செய்யப்பட வேண்டிய சடங்கு ஒதுக்கப்பட்டதாகிவிடுகிறது” என்பது பெரியவா வாக்கு.

அன்று வழக்கம்போல் காலையிலும் மாலை யிலும் பூஜைகள் நடந்தன. சித்தூர் வாழ் சுவாசினிகள் மகா சுவாமிகளுக்குப் பிக்ஷா வந்தனம் செய்தார்கள். அன்று மாலை பெண்களுக்கு ‘ஸ்த்ரீ தர்மம்’ பற்றி உரை நிகழ்த்தினார் மகா பெரியவா.

விக்கு விநாயக்ராம்
விக்கு விநாயக்ராம்

“ஆண்களைவிட மாதரசிகள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். கணவர்களின் மூலமாகக் கடவுள் அவர்களுக்குக் காட்சியளிக்கிறார். பெண்களின் ஒரே கடமை கணவர்களுக்குச் சேவை செய்வதும், அவர்களை வழிபடுவதுமேயாகும்” என்றார்.

அன்று இரவு நடந்த உபன்யாசத்தின்போது, “சுகமும் துக்கமும் பணக்காரர்களுக்கு மட்டும் எந்த வகையிலும் தொடர்பானவையல்ல. இந்திரன், வருணன் போன்ற கடவுளர்களும் இன்பமும் துன்பமும் அனுபவித்திருக்கிறார்கள். கடவுளுக்கு, நம் கடமையை நாம் செய்தாக வேண்டும். அது அந்த பரம்பொருளின் கட்டளை” என்றார் பெரியவா.

இன்னொரு நாள் விக்கிரக ஆராதனையைப் பற்றி மகா பெரியவா பேசும்போது, “ஏதோ ஒரு வஸ்துவின்மீது நமது முழு கவனமும் பதிந்திருக்கவேண்டும் என்பதற்காகவே விக்கிரக ஆராதனை செய்கிறோம் என்று சொல்வது சரியல்ல. கடவுள் எங்குமிருக்கிறார். ஒரு கல் உருவத்தை நாம் வழிபடுகிறோம் என்றால் அதில் கடவுள் இருக்கிறார் என்பதே காரணம். கடவுள் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை உணர்ந்து அனுபவிக்கும் வகையில் நாம் முன்னேறியிருந்தால், கல்லிலும் அவர் இருக்கிறார், அவரை அர்ச்சிக்கும் பூக்களிலும் இருக்கிறார் என்பவையெல்லாம் அறியப்பட்டு விட்டால், வழிபாடுகளுக்கே அவசியமில்லை. அதை உணர்ந்து அனுபவிக்கும் வரையில் ஏதோ ஓர் உருவம்மீது நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது” என்றார்.

மகா பெரியவர் தாயார் மணிமண்டபம்
மகா பெரியவர் தாயார் மணிமண்டபம்

1932 ஆண்டு... மகா பெரியவா சித்தூர் மாவட்டம் நகரி என்னும் ஸ்தலத்துக்கு விஜயம் செய்திருந்தபோது, ஒரு நாள் காலை கும்பகோணத்திலிருந்து தந்தி ஒன்று வந்தது.

மகா பெரியவா அவர்களின் தாயார் மகாலக்ஷ்மி அம்மையார், ஆங்கிரஸ வருடம் ஆனி மாதம் முதல் தேதி (14.6.1932) ஏகாதசி தினத்தன்று கும்பகோணத்தில் சிவபதம் அடைந்துவிட்ட சோகமான தகவலைச் சுமந்து வந்த தந்தி அது.

இந்தத் தந்தி வந்த நேரம் மகா சுவாமிகள் பண்டிதர்களுடன் வேதாந்த விவாதம் செய்து கொண்டிருந்தார். தந்தியைக் கையிலேந்தியபடி மடத்தின் நிர்வாகி, சுவாமிகள் வீற்றிருந்த இடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தபோதே, “அந்தத் தந்தி கும்பகோணத்துலேர்ந்து வந்ததா?” என்று கேட்டாராம்.

நிர்வாகி ‘ஆம்’ என்று தலையசைக்க, அவரைத் திரும்பிப் போக உத்தரவிட்டார். அருகிலிருந்த எவரிடமும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. சில விநாடிகள் மௌனம். கூடியிருந்த பண்டிதர் களுக்குத் தந்தியின் விவரம் எதுவும் விளங்கவில்லை. தெரிந்துகொள்ள ஆர்வம் இருப்பினும், பெரியவா வாக்கிலிருந்து எதுவும் வெளிவராத நிலையில் அவர்களும் மௌனமாகவே இருந்தார்கள்.

சற்று நேரம் சென்றது. “தாயாரின் மரண சம்பவத் தைப் பற்றிக் கேட்க நேரிடும் சந்நியாசி உடனே என்ன செய்யவேண்டும்?” என்று வினவினார் மகா பெரியவா. அங்கு கூடியிருந்த பண்டிதர்கள் தர்மசாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தும், விஷயத்தை ஒருவாறு ஊகித்தவர்களாகி, மனக்கவலையடைந்து, எதையும் சொல்லத் தோன்றாதவர்களாக மௌனம் காத்தனர்.

மகா பெரியவா, தாம் அமர்ந்திருந்த இடத் திலிருந்து எழுந்து, இரண்டு மைல் தொலைவிலிருந்த நீர்வீழ்ச்சியை நோக்கிப் புறப்பட்டார். இந்த துக்ககரமான சம்பவத்தை அறிந்த பண்டிதர்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். மிக விரைவில் அந்த ஊர் மக்களுக்கும் சுவாமிகளை தரிசிக்க வெளியூர்களிலிருந்து வந்தவர் களுக்கும் தகவல் எட்டியது. பெரியோர்கள், ஆண் பெண், குழந்தைகள் எல்லோரும் சுவாமிகளைப் பின்தொடர்ந்தார்கள்.

முன்னால் மகா பெரியவா மௌனமாக நடந்துசெல்ல, மற்றவர்கள் பகவான் நாமங்களை உச்சரித்தவாறு பின் சென்றனர். பலர் உள்ளம் உருகிக் கண்ணீர் வடித்தபடியே நடந்தனர்.நீர்வீழ்ச்சியில் ஸ்நானம் செய்தார் மகா பெரியவா. கூட்டத்திலிருந்தவர்களும் அமைதியாக ஸ்நானம் செய்தார்கள்.

அவர்களுக்குப் பெரியவாளின் தாயார் தொடர்பான பழைய சம்பவங்கள் மனக்கண்முன் விரிந்திருக்கும்.

1907, பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் கலவை என்ற கிராமத்தில் காஞ்சி காமகோடி பீடத்தின் 66-வது பீடாதிபதி வைசூரி கண்டு ஸித்தியடைந்தது, அதற்கு முன்னால் மகாலட்சுமி அம்மையாரின் சகோதரியின் மகன் லட்சுமிகாந்தனை பீடத்தில் அமரவைத்தது, மகாலட்சுமி அம்மையார் திண்டிவனத்திலிருந்து கலவைக்குப் புறப்பட்டுப்போனது, சுவாமிநாதனும் (மகா பெரியவா) பிடிவாதமாக உடன் சென்றது, காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகிறவர் காஞ்சிபுரத்திலேயே தாயை விட்டுப் பிரிந்து முதல் வண்டியில் கலவை வந்து சேர்ந்தது, பட்டத்துக்கு வந்த இளைய சுவாமிகளும் குருவைப் பின்பற்றி ஸித்தி அடைந்தது, அவருடைய விருப்பப்படி, தாயார் வந்து சேரும் முன்பே சுவாமிநாதன் துறவறம் பூண்டு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஆனது... எல்லாமே அவர்களது நினைவலைகளில் தோன்றி மறைந்திருக்கவேண்டும்.

‘தாயைக் குடல் விளக்கம் செய்த’ சுவாமிநாதனைப் பத்து மாதம் சுமந்து, பெற்றெடுத்து, பொன்மேனியனாக வளர்த்து, உலகுக்காக வாரித் தந்து விட்டு, தொலைவில் நின்றபடியே கடைசி முறையாகப் பார்த்துவிட்டு, விடைகூடப் பெற முடியாமல் கண்கலங்கி, தியாகத்தின் திருவுருவாக தனியாக வீடு வந்து சேர்ந்த அந்த உத்தமத் தாய், இப்போது இன்னொரு பிறவியற்ற பெரு வீடு சென்றடைந்துவிட்டாள்!

நிகழ்காலத்துக்கு வருவோம்.

காலடியில் ஸ்ரீஆதிசங்கரர் காட்சியருளும் கோயிலில் அவர்தம் தாயார் ஆரியாம்பாளுக்கும் சந்நிதி உண்டு. அதேபோல், திருவண்ணாமலையில் ஸ்ரீரமணருக்குக் கோயிலும் அன்னைக்கு மாத்ருபூதேஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளன. அதேபோல் மகா பெரியவா தமக்கென ஒரு பெருங் கோயில் எழ அனுக்கிரகம் புரிந்ததுடன், தம் தாயார் மகாலட்சுமியின் சந்நிதியோடு கோயிலெழ பேரனுக்கிரகம் பொழிவார் என்று நினைத்தார் ‘மீளா அடிமை’ பிரதோஷம் வெங்கட்ராமன்.

மகாலட்சுமி மாத்ருபூதேஸ்வரர் டிரஸ்ட் அமைக்கப்பட்டதும் அந்த வகையில்தான். கடம் வித்வான்களான டி.ஹெச்.விநாயக்ராம் மற்றும் அவரின் இளைய சகோதரர் டி.ஹெச்.சுபாஷ்சந்திரன் இருவரும் இதில் டிரஸ்டியானார்கள்.

மகா பெரியவா மணி மண்டபம் அமைக்க நிலம் தேடிக்கொண்டிருந்தார் பிரதோஷம் மாமா. தனக்கு நெருக்கமானவர்களைப் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி இடம் பார்த்துவிட்டு வரச்சொல்லி அனுப்பினார். பொருத்தமான இடம் அமையும் பட்சத்தில், ஏதோ ஒரு வகையில் அதற்குப் பெரியவா சம்மதம் தெரிவிப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார் அவர்.

பாலாற்றங்கரையில் அழகாக அமைந்த அமைதியான கிராமம் ஓரிக்கை. மகா பெரியவா இங்கே முகாமிட்டிருக்கிறார். சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்திருக்கிறார். அன்பர்கள் மணி மண்டபத்துக்கு நிலம் பார்த்து விட்டு வந்ததும் இங்கேதான். அன்று இரவு சுமார் ஏழரை மணி இருக்கும். மடத்திலிருந்து வேதபுரி சாஸ்திரிகளை அழைத்திருந்தார் மகா பெரியவா.

“நேத்து எனக்கு ஒரு சொப்பனம்” என்றார்.

“காஞ்சிபுரத்திலேர்ந்து நாலு கிலோமீட்டர் தூரத்துல வந்தவாசி போற வழியில நான் போயிண்டிருந்தேன். அங்கே ஒரு மணல் மேடு. சின்னப் பசங்க விளையாடிட்டு இருந்தா. அங்கே ஒரு பாட்டியம்மாவும் இருந்தா. திடீர்னு இருட்டிடுத்து. அப்புறம் ஒரே பிரகாசமாச்சு. நான் அங்கேயே தங்கிடறேன்” என்று தான் கண்ட கனவை விவரித்திருக்கிறார் மகா பெரியவா.

பின்னர் மீளா அடிமையின் நன்முயற்சியால் அந்த நிலம் வாங்கப் பட்டதும், அங்கே மணி மண்டபம் எழுப்பப்பட்டதும் வரலாறு. இங்கே பெரியவாளின் தாயார் மகாலட்சுமிக்குத் தனி சந்நிதி அமைக்கவேண்டும் என்ற பிரதோஷம் மாமாவின் விருப்பம் ஏனோ நிறைவேறவில்லை.

இப்போது, பிரதான சாலையில் ஓரிக்கை கிராமத்துக்குத் திரும்பும் வழியில், தாயார் மகாலட்சுமிக்குத் தனி கோயில் அமைக்கப்பட்டு வருகிறது. முக்கால்வாசிப் பணி நிறைவடைந்துவிட்டது. விநாயக்ராமும், சுபாஷ் சந்திரனும் முயன்று வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் இங்கே மகா பெரியவா ஜயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது ஹோமங்கள், கச்சேரிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மகா பெரியவாளின் திருவுருவப் படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஜயந்தியை முன்னிட்டு வரும் வைதீகர்களும் மற்ற பக்தர்களும் தங்குவதற்கு முதல் மாடியில் அறை வசதிகள் செய்திருக்கிறார்கள்.

இப்போதைக்கு கோயிலின் கர்ப்பகிரகத்தில் மகாலட்சுமி அம்மை யாரின் போட்டோ வைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும், மீளா அடிமையின் இல்லத்தில் வைத்து பூஜிக்கப்பட்டு வரும் தாயாரின் விக்கிரகம் இங்கே பிரதிஷ்டை செய்யப்படும்.

- வளரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism