மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 47

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா

ஓவியம்: கேஷவ்

காஞ்சிக்கு நான்கு மைல் தொலை விலுள்ள அம்பி என்னும் கிராமத்துக்கு 1944-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி விஜயம் செய்தார் மகா பெரியவா. இந்தச் சிற்றூர் வேகவதி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. காமகோடி பீடத்தின் குருபரம்பரையை அலங்கரித்த ஆசார்ய சுவாமிகள் ஒருவரின் பிருந்தாவனம் இவ்வூரில் உள்ளது. இந்தப் பிருந்தாவனம் அமைந்துள்ள விசாலமான ஓர் இடத்தை `சந்நியாசி மேடு' என்று அழைத்து வந்தனர்.

மகா பெரியவா
மகா பெரியவா

பல ஆண்டுகள் கம்ப காவியத்தை ஆய்வு செய்து உரைகள் நிகழ்த்திவந்த முதிர்ந்த புலவர் ஒருவர், இந்தக் கிராமத்தைக் கம்பருடன் தொடர்புபடுத்தி ஒரு நூதன ஆராய்ச்சியை, மகா சுவாமிகளிடம் சமர்ப்பித்தார். அந்த ஆராய்ச்சியின் கருத்து கீழே...

`காஞ்சிபுரத்தில் கோயில்கொண்டிருக்கும் ஏகாம்பரநாதர், கம்பநாடர் என்றும் குறிக்கப் படுவதால், கம்பர் காஞ்சி மண்டலத்தில் பிறந்தவராகவே இருக்க வேண்டும். ஏகம்பன் என்னும் சொல், கம்பன் என மருவியது. காஞ்சி மண்டலத்தில் `கம்பா' என்னும் ஆறு பாய்வதால், அந்நாட்டுக்கு `கம்ப நாடு' என்று பெயர். அம்பிகாபுரத்தின் சிவாலயத்தில் அமைந்துள்ள ஈசனது திருநாமம் அம்பிகாபதி என்றிருப்பதால், அத்திருநாமத்தையே கம்பர் தன் மைந்தனுக்கு இட்டிருக்கலாம்.

கம்ப நாட்டவாழ்வார் என ஒரு நாட்டின் பெயரால் அவர் அழைக்கப்படுவதால், காஞ்சிக்கு அப்பாற்பட்ட மற்ற பகுதியைச் சேர்ந்தவர்களே அவரை அப்பெயர்கொண்டு அழைத்திருத்தல் வேண்டும். திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல் அவரைப் போற்றி அவருக்கு ஆதரவு அளித்து வந்தார். கம்பர் அவருக்கு உயிர்த் தோழராகப் பல வருடங்கள் அவ்வூரிலேயே வாழ்ந்து வந்திருக்கிறார்.

தேரழுந்தூர், நாட்டரசன் கோட்டை ஆகிய இடங்கள் கம்பரது வாழ்க்கையில் இணைக் கப் பெற்றிருப்பதால், இந்த இடங்களிலும் கம்பர் சில காலம் தங்கியிருக்கக் காரணமுண்டு. இந்தப் பகுதியினர் யாவரும் கம்பரை `கம்பநாடர்' என்று அவரது நாட்டின் (காஞ்சி மண்டலத்தின்) பெயரைக் குறித்து அழைத்திருப்பார்கள்.'

மகா பெரியவா
மகா பெரியவா

புதுமையான இந்த ஆராய்ச்சியை அந்தப் புலவர் மகா சுவாமிகளிடம் தெரிவிக்க, இந்தக் கருத்துகள் யாவும் மிகப் பொருத்தமாக அமைந்திருப்பதாகவும் இவற்றை மற்ற புலவர்களின் ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு விட வேண்டுமென்றும் அபிப்பிராயம் தெரிவித்தார் மகா பெரியவா.

“அவாளோட ஆராய்ச்சியின் முடிவு எப்படி அமைஞ்சாலும், மடத்தின் ஊராக கம்பரின் ஊர் அமைஞ்சிருந்தா, அது மடத்துக்கு ஒரு பெருமையைத் தரும்” என்றார் சுவாமிகள்.

டுதுறைக்கு அடுத்த மேலூர் என்ற கிராமத்தில் மகா பெரியவா முகாமிட்டிருந்த காலம். (1945 அக்டோபர் - 1946 ஏப்ரல்). முத்ராதிகாரிகளுக்குக் கீழ்க்காணும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார் மகா பெரியவா.

அதில், `ஒவ்வொரு ஜீவனும் உடலைவிட்டுப் பிரிந்து செல்லும் காலத்தில் எந்த எண்ணத்துடன் செல்கிறதோ... அது நல்லதாயினும் கெட்ட தாயினும் எந்த எண்ணமே அந்த ஜீவனுக்கு மறுஜன்மமாகிவிடுகிறது.

இறுதிக் காலத்தில் ஈசனுடைய நாமத்தைக் காதினால் கேட்பவனுக்கு மோட்சம் என்னும் மேல் பதவி கிட்டும். ஒருவன் தனது ஜன்மத்தின் நடுவில் எவ்வளவு பாவியாயிருந்திருப்பினும் கடைசி விநாடியில் பகவானது நாமத்தைக் கேட்பதால், அவன் பரிசுத்தனாகிவிடுகிறான். அவனுக்கு நற்கதியும் ஸித்திக்கிறது. ஒவ்வொரு ஜீவனும் இவ்விதம் நற்கதியை அடைய மக்கள் உதவிபுரிவது அவசியம்' எனக் குறிப்பிட்டு, `யார் மரண அவஸ்தையில் இருப்பினும், அவர்களுக்குப் பிரக்ஞை தப்புவதற்குமுன், அவர் அருகில் சென்று, 1008 தடவை இறை நாமத்தை உரக்க உச்சாடனம் செய்துவர வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார்.

ந்திய நாடு சுதந்திரம் அடைந்ததையொட்டி தேச மக்களுக்கு மகா பெரியவா விடுத்த செய்தி:

`நமது பாரத நாடு விடுதலை அடைந்திருக்கும் இத்தருணத்தில் இந்தப் புராதன நாட்டு மக்கள் யாவரும் ஒரே மனதுடன் ஸ்ரீபகவானை மனமுருகித் துதிக்க வேண்டும். நமக்கு மேன்மேலும் மனோ பலத்தையும் ஆன்மிகத் துறையில் இறங்க சக்தியையும் கொடுத்தருளு மாறு வேண்டுவோம். அவரது அருளால்தான் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த சுதந்திரத்தை நாம் காப்பாற்றிக் கொள்ளவும் உலகிலுள்ள எல்லா ஜீவன்களும் ஆனந்த வாழ்க்கையைப் பெற உதவி செய்யவும் முடியும்.

பாக்கியவசமாக நமது நாட்டின் கொடியின் நடுவில் தர்ம ஸ்வரூபியான பகவானின் சக்கரம் அமைக்கப்பெற்றிருப்பது போற்றத்தக்கதாகும். சரித்திரப் பிரசித்திபெற்ற `தேவானாம் பிரியன்' என்னும் அசோகச் சக்ரவர்த்தியால் வகுக்கப்பட்ட நீதிகளோடு அந்தச் சக்கரம் நம்மைச் சம்பந்தப்படுத்துகிறது. பகவத் கீதையில் பகவானால் உபதேசிக்கப்பட்ட ஆன்மிகத் துறையில் அது நம்மை ஈடுபடச் செய்கிறது. கீதை 3-வது அத்தியாயம், 16-வது ஸ்லோகத்தில் `ஏவம் பிரவர்த்திதம் சக்ரம்' என்று பகவான் கூறியிருப்பதால், தர்மம் சக்கரத்தின் உருவத்தி லேயே பிரகாசித்து விளக்கமாகிறது.

மேலும் அந்த அத்தியாயத்தின் 14, 15-ம் ஸ்லோகங்களில்... உணவிலிருந்து உடல் உண்டாகிறது என்றும், மழையிலிருந்து உணவு விளைகிறது என்றும், யாகங்கள் செய்வதால் மழை பொழிகிறதென்றும், கர்மத்தினால் யாகங்கள் செய்யப்படுகின்றதென்றும், கர்ம மானது வேதங்களிலிருந்து பிரதிபாதிக்கப் படுவதென்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் காரணங்களைக் கொண்டு பிரும்மம் வேதங்களில் அடங்கியுள்ளதாக இந்த தர்ம சக்கரம் நமக்கு விளக்குகிறது. அசோகச் சக்ரவர்த்தியின் உயரிய நினைப்புடன் தொடங்கும் இந்தச் சுதந்திரம் கடவுள் அருளால் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அரிய பயன்களை அளிக்கட்டும்.

வெகு காலமாக நாடு சுதந்திரத்துக்காகப் பாடுபட்டுள்ளது. கடவுள் அருளாலும், மகான்களின் ஆசியினாலும், மக்களின் ஒப்பற்ற தியாகத்தினாலும் கிடைத்த இந்தச் சுதந்திரத்தினால் நம்நாடு செழித்தோங்கி, பஞ்சம் விலகி, தேசமக்கள் சமூக சச்சரவுகள் எதுவுமின்றி, ஒற்றுமையுடன் அன்பு கொண்டு வாழ அருள்பொழிய வேண்டுமென எங்கும் நிறைந்த கடவுளைப் பிரார்த்திப்போமாக.

நம்நாடு சுதந்திரம் அடைந்ததையொட்டி நாமும் சுதந்திரம் அடைய முற்பட வேண்டும். நம்மை நாம் முற்றிலும் அறிந்து கொண்டால்தான் நாம் சுதந்திரம் அடைந்தவர்களாவோம். நம் மனமோ, நம் இந்திரியங்களுக்கு வசப் படுவதில்லை. ஆசையையும் கோபத்தையும் நம்மால் அடக்க முடிவதில்லை. இவை இரண்டுமே நம்மை எப்போதும் துன்புறுத்தி வருகின்றன.

எந்தப் பொருளை எவ்வளவு அடைந்த போதிலும், `போதும்' என்ற மன நிம்மதி நமக்கு ஏற்படுவதில்லை. உலகத்துயரம் நம்மை விட்டபாடில்லை. துயரத்தைக் கண்டு மனமும் கலங்கத்தான் செய்கிறது. இவற்றிலிருந்து கரை ஏற என்ன வழி?

நம் மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாகத் தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்த இந்த மனத்தைத் தன்னுள் அடக்கச் சிறிது சிறிதாக முயற்சி செய்ய வேண்டும். மனம் அடங்கிவிட்டால் நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அதுதான் நாம் பெற வேண்டிய பூர்ண சுதந்திரமாகும்.

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனத்தைச் சாந்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வேறு நினைவுகளை மனத்தில் செலுத் தாமல் கடவுள் தியானத்தில் அமர வேண்டும். ஆசையையும் கோபத்தையும் அடக்குவதற்கு இது ஒரு சாதனமாகும். இவ்வித சாதனையைப் படிப்படியாக மேற்கொண்டவனுக்குச் சீக்கிரமாக ஆத்மஞானம் உண்டாகும். குறைவில்லாத ஞானத்தைப் பெறுபவன்தான் உண்மையான சுதந்திரனாகின்றான்.

பிற ஸ்திரீகளைத் தாயார்களாக மதிக்க வேண்டும். பிற உயிரைத் தன்னுயிர் போல் மதிக்க வேண்டும். உயிர் போவதாயிருந்தாலும் உண்மையையே பேச வேண்டும்.

சமூகச் சச்சரவுகள் செய்வதை அறவே ஒழிக்க வேண்டும். ஆத்ம முன்னேற்றத்துக்கும் பாடுபட வேண்டும். எல்லோரிடமும் சம அன்பு கொள்ள வேண்டும். மக்களெல்லாம் சுகமாக வாழ வேண்டும் என்று ஒவ்வொருவனும் நினைக்க வேண்டும்' என்று அருளியுள்ளார்.

- வளரும்...

கிளிக்குப் பெயர் கைகேயி!

மிதிலையிலிருந்து திருமணம் முடிந்து சீதாதேவி அயோத்தி வந்தபோது, அவளுக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருள்களில் ஒன்றுதான் அவள் வளர்த்துவந்த சின்னஞ்சிறு கிளி.

கிளி
கிளி

அயோத்தி வந்ததும், தான் வளர்க்கும் கிளிக்குப் பெயர் சூட்டும்படி ஸ்ரீராமனிடம் வேண்டுகிறாள் சீதை. `நான் பெரிதும் நேசிக்கும் ஒரு பெண்ணின் பெயரைச் சூட்டுகிறேன்!’ என்று சொல்லிச் சிரிக்கிறான் ஸ்ரீராமன். தன் பெயர்தான் சூட்டப்படுமோ என்று சீதை நாணித் தலைகுனிகிறாள். ஸ்ரீராமனோ, கிளியின் சிறகுகளைத் தடவிக்கொடுத்து, அதைக் `கைகேயி’ என அழைக்கிறான்.

கிளிப்பிள்ளை, சொன்னதைச் சொல்லும் அல்லவா? கைகேயியும் எதிர்காலத்தில் மந்தரை சொன்னதையெல்லாம் தன் சொற்களாகத் திருப்பிச் சொல்லப் போகிறாள் என்பதை உணர்ந்துதான் ஸ்ரீராமன் அவள் பெயரைக் கிளிக்கு வைத்தானோ?