Published:Updated:

மகா பெரியவா - 48

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா - 48

ஓவியம்: கேஷவ்

Published:Updated:
மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

கா பெரியவா ஆண்டுதோறும் சில மாதங்கள் மௌன விரதம் இருப்பது வழக்கம். பெரியவா மேற்கொள்ளும் மௌனம் மூன்று வகையானது. பிறருக்குத் தெரிவிக்கவேண்டிய விஷயங்களை சில நேரம் தன் கைகளால் தரையில் எழுதிக் காண்பிப்பார். அந்த நேரங்களில் கை விரலில் ரத்தம் தோய்ந்து புண்ணாகிக்கூடப் போனதுண்டு. சில வேளைகளில் ஜாடைகளால் தம் எண்ணங்களை மற்றவர்களுக்கு உணர்த்துவார். வேறு சில தருணங்களில் எந்தவித ஜாடைகளும் செய்வ தில்லை. எப்பொருளையும் தம் திருஷ்டிகளால் உற்றுநோக்குவதுமில்லை.

மகா பெரியவா
மகா பெரியவா

பூஜை செய்யும் வேளையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்திலோ மட்டும் தரிசனத்துக்காக வந்திருக்கும் பக்தர்களுக்குப் பெரியவா தரிசனம் கிட்டும். அப்போது எவரையும் நேரில் நோக்காமல் தம்மைத் தாமே நோக்குபவராய் பிறர் கூறுவதைத் தன் காதுகளிலோ, புத்தியிலோ, மனசிலோ ஏற்றுக்கொள்ளாத ஒரு நிலையை அடைந்திருப்பார். அவரின் முகக் குறிப்பில் எந்தவிதமான மாறுதலையும் பிறர் காண முடியாது. இந்த மூன்றாவது மௌனநிலைதான் காஷ்ட மௌனம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காஞ்சி மகான் இப்படி மௌன நிலையில் இருந்தபோது பர்மாவிலிருந்து பௌத்த மதம் சார்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தரிசனம் செய்ய வந்திருந்தார். மகா பெரியவாவிடம் உரையாடி ஆன்மிகத்தில் அறிவு வளர்ச்சிக்கு அனுகூலமான விஷயங்களை அறிந்துகொள்ள வந்திருந்தார் அவர். தீவிர மௌன நிலையில் இருந்த பெரியவா கருணைமிக்க பார்வையால் அவருக்கு ஆசி வழங்கினார். மகா பெரியவா எதுவும் பேசாவிட்டாலும் அவருடைய பார்வையாலேயே பெரிய ஆன்மிகப் பயனை தாம் அடைந்ததாக அந்தக் கோடீஸ்வரர் மற்றவர்களிடம் கூறியிருக்கிறார்.

‘நாள்தோறும் பீடிக்கும் பசி என்னும் பிணிக்கு பிக்ஷையாகிற அன்னத்தை மருந்தாக உட்கொள். ருசியுள்ள ஆகாரத்தைத் தேடாதே. தெய்வ சக்தியினால் அதுவாகக் கிடைப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தவனாக இரு’ - இது ஸ்ரீஆதிசங்கரர் ‘சோபனா பஞ்சகம்’ என்னும் தோத்திரத்தில், குறிப்பாகத் தூய நிலையில் உள்ளவர்களுக்கு உபதேசிக்கும் வகையில் அருளியிருப்பதாகும். இந்த உபதேசத்தை மகா பெரியவா மனத்தில் கொண்டிருக்க வேண்டும். சரீரத்தில் பிராணன் நிலைத்திருக்க வேண்டிய அளவுக்கு மட்டும் சிற்சில சமயங்களில் சிறிது உணவை ஏற்று வந்திருக்கிறார் சுவாமிகள்.

பீடத்தில் அமர்ந்த இரண்டொரு ஆண்டுகளில் புளி, மிளகாய், உப்பு விலக்கி, ஒருவேளை மட்டும் உணவை ஏற்கத் தொடங்கினார். இந்த ஏற்பாடும் சில வருடங்களுக்குப் பிறகு மாறியது. அப்போது பால் மட்டும் பச்சையாக அருந்தி வந்தார். சில நேரம் வில்வ இலையையும், வேப்பங்கொழுந்தையும் ஆகாரமாக ஏற்று வந்திருக்கிறார். பின்னர் சில காலம் மூன்று கைப்பிடி அன்னத்தை மட்டும் ஏற்று வந்தார். தொடர்ந்த நாள்களில் அதையும் நீக்கி, எப்போதாவது நெற்பொரியைச் சிறிதளவு ஆகாரமாக ஏற்று வந்தார்.

மகா பெரியவா
மகா பெரியவா

இப்படி தாமாகவே தன் உடல் வலிமையைப் பெரியவா குறைத்து வருவது கண்டு சிஷ்யர்கள் பெருங்கவலை கொண்டார்கள். ஆனால், உடல் வலிமை குறையக் குறைய மனோ வலிமை பெருகி, அவரால் பல சாதனைகளை நிறைவேற்ற முடிந்தது. ஆகாரம் ஏற்றுக்கொள்ளும் நாள்களைவிட ஆசார்ய புருஷருக்கு உபவாச நாள்களே அதிகமாக நேரிட்டது.

சுவாமிகளின் ஆசிரமத்துக்குத் தக்கவாறு ஆகாரம் ஏற்றுக்கொள்வதற்குக் கால நியதிகள் சில உண்டு. அக்காலம் கடந்துவிட்டால் எவ்வித ஆகாரத்தையும் அவர் ஏற்றதில்லை. நவராத்திரி நேரத்தில் பெரியவா தொடர்ந்து ஒன்பது நாள்களும் பூர்ண உபவாசமிருந்து விசேஷ பூஜைகளை மட்டும் எட்டு மணி நேரத்துக்கு மேல் சோர்வின்றி நடத்துவார். உபவாச காலத்தில் ஆசமன தீர்த்தத்தைத் தவிர தண்ணீர்கூட ஏற்றதில்லை.

`சுமார் பத்து மணிக்கு பிரதம சிஷ்யரான ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சர்வ தீர்த்த தடாகத்தில் இறங்கி, இடுப்பளவு தண்ணீரில் நின்று, உலக பாசம் முழுவதையும் களைந்தார்..'

‘மகா பெரியவா’ தொடரின் 23-ம் அத்தியாயத்தில் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசிரம உபதேசம் பெற்ற விவரத்தைச் சுருக்கமாக அனுபவித்தோம். இங்கே சற்று விரிவாக...

தமக்குப் பின்னர் பீடத்தை அலங்கரிக்கத்தக்க தொரு மகானை நியமனம் செய்து, அவருக்குத் தரவேண்டிய பயிற்சிகளையெல்லாம் தாமே கொடுக்க வேண்டுமென்று மகா பெரியவா பல வருடங்களாக விருப்பம் கொண்டிருந்தார். இந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு சிஷ்யனை சில வருடங்களாகவே தன் மனதுக்குள் பெரியவா தேர்ந்தெடுத்து, பின்னர் அவருடைய பெற்றோரின் சம்மதத்தையும் பெற்றிருந்தார்.

தஞ்சை மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவரும் தென்னக ரயில்வேயில் திருச்சியில் உத்தியோகம் பார்த்தவருமான மகாதேவ ஐயர் என்பவரின் தவப் புதல்வரான சுப்பிரமண்யம் என்னும் அந்தணச் சிறுவன்தான் இந்த சிஷ்யர்.

சுமார் 19 வயது நிரம்பிய இவர், இளமைப் பருவம் முதல் மடத்திலேயே வேதம் கற்று, நல்ல சீலமும் நற்குணமும் பெற்று விளங்கி வந்தார். இந்த பாலகருக்கு சந்நியாச ஆசிரமமும் உபதேசமும் தந்தருளும் வைதிகக் காரியங்கள் 1954-ம் வருடம் மார்ச் மாதம் 19-ம் தேதி தொடங்கி 22-ம் தேதிவரை காஞ்சிபுரத்தில் நடைபெற்றன.

மடத்தின் சரித்திரத்திலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடியிருந்தனர். இந்த வைபவங்கள் நடைபெறுவதற்கு பூர்வாங்கமாக, பெரியவா கலவையிலுள்ள தம் குரு, பரமகுரு ஆகியோரின் அதிஷ்டானங்களையும், காஞ்சிக்கு அடுத்த அம்பிகாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பூர்வாசார்யர் ஒருவரின் அதிஷ்டானத்தையும் தரித்துக்கொண்டார்.

மார்ச் மாதம் 22-ம் தேதி அதிகாலையில், அனந்த சாகரம் என்னும் புனித தடாகத்தின் கரையிலுள்ள புராதன அஸ்வத்த மரத்தின் அடியிலிருந்து புனித மண்ணை பிரசாதமாக கிரகித்துக்கொண்டு, பிறகு மடத்திலுள்ள ஸ்ரீசுரேஸ்வராசார்யாரின் பிம்பத்துக்குப் பூஜை செய்தார் மகா பெரியவா.

பின்னர், காமாட்சி அம்பிகை சந்நிதி, அங்குள்ள ஆதி சங்கரரின் சந்நிதி இவற்றை தரிசித்துக்கொண்டு காலையிலிருந்தே குமரகோஷ்டத்தையும், ஏகாம்பரர் ஆலயத்திலுள்ள ஆம்ர(மாமரம்) விருட்சத்தையும் தரிசித்தார். பின்னர் மடத்தின் ஆஸ்தான தெய்வமான ஸ்ரீதிரிபுர சுந்தரி சமேத ஸ்ரீசந்திரமௌளீஸ்வரரையும் பிரார்த்தனை செய்துகொண்டார்.

உபதேசம் பெறும் சீடர் வேதவிதிப்படி தேவர்கள், ரிஷிகள், பித்ருகள் இவர்களுக்குச் செய்யவேண்டிய கிரியைகளெல்லாம் செய்து முடித்து, பின்னர் அந்த நாளுக்கு முதல்நாள் இரவு முழுவதும் மௌனமாகத் தூங்காத நிலையில் உட்கார்ந்தபடியே தியானத்தில் அமர்ந்திருந்தார். மறுநாள் அதிகாலையிலேயே சர்வ தீர்த்தக் கரையிலுள்ள முக்தி மண்டபத்தை அடைந்து, பூர்வாங்கமான வைதிகக் காரியங்களை முடித்துக்கொண்டு, குருநாதரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

அன்று காலையிலிருந்தே காஞ்சி நகரம் பொலிவுடன் விளங்கியது. காலை சுமார் 9 மணிக்கு மகா பெரியவா தம் மடத்திலிருந்து புறப்பட்டு பக்தர்கள் குழுவுடன் எட்டு தண்டி சந்நியாசிகள் பின்தொடர, முக்தி மண்டபத்தை அடைந்தார். அப்போது குளத்தின் நான்கு கரைகளிலும் அதையடுத்த வீதிகளிலும் சுவாமிகளையும், சீடரையும் தரிசிக்க ஏராளமான கூட்டம் கூடியிருந்தது. சுமார் 10 மணிக்குப் பிரதம சிஷ்யரான ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வேத விற்பன்னர்களுடன் தடாகத்தில் இறங்கி, இடுப்பளவுத் தண்ணீரில் நின்று உலகப் பாசம் முழுவதையும் களைந்தார்.

அந்த பாலப் பருவத்தில் அன்னவர் துறவறம் மேற்கொள்வதையும் அதிலும் லோகாசார்யரால் உபதேசம் பெறுவதையும் காண, மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தனர். பின்னர் மகா பெரியவா ஸ்ரீவிஸ்வேஸ்வரர் சந்நிதியில் தம் சிஷ்யருக்கு மகா வாக்கியத்தை உபதேசித்து அருளினார். அப்போது சிஷ்யருக்குக் காவி வஸ்திரத்தை வழங்கினார்.

இந்த வைபவங்கள் முடிவு பெற்றவுடன் சிஷ்யர் பின்தொடர கால்நடையாக மடத்தின் எல்லா விருதுகளுடனும் மேள வாத்தியத்துடனும் லிங்கப்பய்யர் தெரு வழியாகப் பெரிய காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபத்துக்கு எதிரிலுள்ள மடத்தை மகா பெரியவா அடைந்தபோது மணி 12. அங்கே ஆயிரக்கணக்கில் கூடியிருந்த பக்தர்கள் இரு மகான்களையும் ஒருங்கே தரிசித்து புண்ணியம் பெற்றார்கள்.

பெரியவா ஸ்ரீசந்திர மௌலீஸ்வரர் சந்நிதியை அடைந்ததும் தம் சிஷ்யருக்கு ஒரு ருத்ராக்ஷ மாலையையும், ஒரு ஸ்படிக மாலையையும், திருப்பதி தேவஸ்தானத்தில் தமக்கு மரியாதை நிமித்தமாக அளித்த பெரிய பீதாம்பரம் ஒன்றையும் அனுக்கிரகத்துடன் அளித்தார். அதற்குப் பின்னர் 4 மணி முதல் வெளியூர்களிலிருந்து வந்த பக்தர்களுக்கு விபூதி, அட்சதை, குங்குமப் பிரசாதங்களைக் கொடுக்கத் தொடங்கினார் மகா பெரியவா. பிரசாதம் கொடுத்து முடியும்போது விடியற்காலை 3 மணி. ‘ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர...’ கோஷம் விண்ணைப் பிளந்தது.

இந்த வரலாற்று நிகழ்ச்சிக்கு முதல்நாள் சின்ன காஞ்சிபுரத்தில் மடத்தில் பூஜையை முடித்துக் கொண்டு, அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு மடத்துக்கும் சிஷ்யர்களுக்கும் இருக்க வேண்டிய தொடர்பு பற்றி சில உபதேச மொழிகளை அருளினார் மகா பெரியவா.

“எதிர்காலத்தில் இந்த பீடத்தை அலங்கரிக்கத் தக்க ஒரு சுவாமிகளுக்குப் புதிதாக ஆஸ்ரமம் வழங்க ஏற்பாடுகள் செய்துவரும் இந்த நேரத்தில் உங்களுக்கும் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். இப்போதுள்ள நிலையில் மடத்தின் காரியங்களை செவ்வனே நடத்தி வருவதற்கு மடத்தின் சொத்திலிருந்து கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. வருமானத்துக்குமேல் செலவு கிட்டத்தட்ட ஐந்து மடங்காக ஏற்படுகிறது.

புதிதாக சுவாமிகளை நியமனம் செய்வது மட்டும் போதாது. மடத்தின் காரியங்களும் சரிவர நடந்துவர வசதிகள் செய்ய வேண்டும். இங்கு கூடியிருக்கும் நீங்களும் வெளியிடங்களிலுள்ள பக்தர்களும் மடத்தின் விஷயத்தில் ஆழ்ந்த அபிமானம் வைக்க வேண்டும். ஒவ்வொரு சிஷ்யரும் தன் குடும்பத்தை கவனிப்பதுடன் மடத்தையும் தன் குடும்பமாகவே பாவித்து அவரவர்கள் சக்திக்குத் தக்கவாறு மடத்துக்கு திரவிய சகாயம் செய்வதென்று தீர்மானம் செய்துகொள்ள வேண்டும். இக்காலத்தில் குடும்பத்தைக் கவனிப்பதே பலருக்குச் சிரமமாக இருக்கலாம். ஆயினும், மடத்துக்குச் சிறிதளவாவது உபகரிக்க வேண்டுமென்று எண்ணம் கொள்ள வேண்டும்.

மடத்துக்கு திரவிய சகாயம் செய்வதுடன் சரீரத்தினாலும் சேவை செய்ய நீங்கள் முன்வர வேண்டும். மடத்துக்குப் பணம் கொடுப்பதைவிட இவ்வித கைங்கர்யமே மிகவும் விசேஷமாகும். கைங்கர்யத்தில் ஈடுபட விரும்புபவர்கள் முக்கியமான பிராமண தர்மத்தைச் செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

சந்தியா வந்தனாதி நித்திய கர்மானுஷ்டங் களையாவது செய்துகொண்டு, சரீர சுத்தியுடனும், மனச் சுத்தியுடனும் அவர்கள் இருக்க வேண்டும். மதானுஷ்டானத்தில் நம்பிக்கை வைத்து, அதைப் பின்பற்றுவதுடன் மடத்தின் காரியங்கள் நடந்து வருவதிலும் நீங்கள் எல்லோரும் சிரத்தையுள்ளவர்களாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவராவது மடத்தின் காரியங்களில் ஈடுபட வேண்டும். ஸ்ரீதிரிபுர சுந்தரி சமேத ஸ்ரீசந்திர மௌளீஸ்வரரின் அனுக்கிரகம் உங்களுக்கு எக்காலத்திலும் ஏற்படும்” என்றார்.

- வளரும்.

பூ விழுங்கி விநாயகர்!

ஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் உள்ளது திருச்சிற்றம்பலம் எனும் ஊர். இங்குள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் ஒரு பகுதியில், விசேஷமான விநாயகர் அருள்பாலிக்கிறார்.

இவரை ‘பூ விழுங்கி விநாயகர்’ என்கிறார்கள். இந்த விநாயகரின் தோளுக்கும் காதுக்கும் இடைப்பட்ட பகுதியில் இரண்டு ஓட்டைகள் உள்ளன. பக்தர்கள், தாங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறுமா, பெறாதா என்பதை அறிய, மனத்தில் இந்த விநாயகரை பிரார்த்தித்தபடி மேற்குறிப்பிட்ட இரு துளைகளிலும் பூக்களை வைப்பர். அவற்றை விநாயகர் இழுத்துக் கொண்டால், நினைத்த காரியம் வெற்றி பெறும். இல்லையென்றால், காரியம் கை கூடாது என்பது ஐதிகம்.

இப்படி விநாயகருக்குக் காதில் பூ வைத்துப் பார்க்கும் பழக்கம் காலம் காலமாக இருப்பதாக இங்குள்ள பக்தர்கள் சொல்கிறார்கள்!

- ஆர். பரிமளம், திருச்சி-21