Published:Updated:

மகா பெரியவா - 49

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா

ஓவியம்: கேஷவ்

கா ஸ்வாமிகளின் ஒவ்வொரு தினமும் எப்படிக் கழிந்தது தெரியுமா... ஒவ்வொரு நாளும் விடியற்காலை பிரம்ம முகூர்த்தம் என்று கூறப்படும் வேளையான 4.30 மணிக்கு மடத்தில் நகரா என்னும் முரசொலி முழங்கும். அதையடுத்து டங்கா என்னும் வாத்தியமும் வாசிக்கப்படும். இவ்வொலிகளைக் கேட்டதும் மடத்தின் சிப்பந்திகள் யாவரும் விழித்துக்கொண்டு, பக்கத்திலுள்ள குளங்களிலோ, நதிகளிலோ நீராடி அவரவருக்கு உரிய அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, தம் வேலைகளுக்குத் தயாராக வந்துவிடுவார்கள்.

மகா பெரியவா
மகா பெரியவா

அவர்களுக்கு முந்தியே மகா சுவாமிகளும் விழித்தெழுந்து சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்திருப்பார். பின்னர் அவரும் நீராடித் தாம் உபாசிக்கும் தெய்வமான ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் சந்நிதியில் கோ பூஜை நடைபெறுவதைக் காண வருவார். அந்த பூஜைக்கென மடத்தில் காராம்பசு எப்போதும் வளர்க்கப்பட்டு வருகிறது. கோ பூஜையை ஒட்டி கஜ பூஜையும் நடைபெறும்.

மகா பெரியவா காலை நிஷ்டை, அனுஷ்டானம் ஆகியவை முடிந்தவுடன் அன்றைய திதி, வாரம், யோகம், நட்சத்திரம், கரணம் என்னும் பஞ்சாங்க சிரவணம் நடைபெறும். பின் காலை சுமார் 7.30 மணி முதல் வேதாந்த சாஸ்திர பாடங்கள். குறிப்பிட்ட சில சிஷ்யர்களுக்கென பிரம்ம சூத்திர பாஷ்ய பாடத்தை மகா பெரியவா நேர்முகமாக உரைப்பார். (மகா பெரியவா விஜயம் செய்யும் இடங்களுக்கெல்லாம் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அடங்கிய நடமாடும் நூல் நிலையம் ஒன்றும் போய்க்கொண்டே இருக்கும்).

காலை சுமார் ஒன்பது மணிக்கு மகா பெரியவா பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதற்கென தாம் வசிக்கும் தனிமையான கூடத்திலிருந்து வெளியே வருவார். பக்தர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் விவரமாக விசாரித்து, அவரவரின் சந்தேகங்களையோ, குறைகளையோ கேட்டு அவற்றைப் போக்கும் வகையில், அவர்களுக்குத் தக்கவாறு உபதேச மொழிகளைக் கூறுவார் மகா பெரியவா.

பின்னர் தம் மத்தியான ஸ்நானத்தையும் அனுஷ்டானத்தையும் முடித்துக்கொண்டு நித்ய பூஜைக்கென ஸ்வாமி சந்நிதிக்கு எழுந்தருளுவார். அப்போது பக்தர்களில் ஒருவர் மகா சுவாமிகளுக்குத் தாம் செய்ய உத்தேசித்திருக்கும் பிக்ஷையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென விண்ணப்பித்துக்கொள்வார். அவ்வாறு வேண்டிக்கொள்பவர்கள் பந்துக்களுடனும், மித்திரர்களுடனும் அங்கு வந்து பூர்ண கும்பம், வேத கோஷம் சகிதம் பக்தியுடன் பிக்ஷா வந்தனம் செய்வது கண்கொள்ளாக் காட்சி.

பகல் சுமார் 12.30 மணிக்குப் பூஜை தொடங்கி 3 மணிவரை நடைபெறும். அது முடிந்தவுடன் யாவருக்கும் விபூதி, குங்குமம், அட்சதை பிரசாதம் வழங்கப் பெறும். காலை முதல் எவ்வித ஆகாரமும் உட்கொள்ளாதவர்களுக்குப் புனிதமான அபிஷேக தீர்த்தத்தைப் பெரியவா தமது திருக்கரத்தினாலேயே வழங்குவார்.

15 நிமிட ஓய்வுக்குப் பிறகு - அந்த நேரத்தில் மனமிருந்தால் சிறிது சாத்விக உணவு பிக்ஷையாக ஏற்பது உண்டு.

மடத்தின் நிர்வாகிகள் அன்று வந்த தபால்களை எடுத்து வந்து பெரியவா முன்னிலையில் வாசிப்பார்கள். அப்போதே அவற்றுக்கு அனுப்பவேண்டிய பதில்களைப் பற்றிக் கூறிவிடுவார் பெரியவா.

இவை முடிந்தவுடன் மடத்தின் நிர்வாக விஷயங்களைப் பற்றி ஆலோசனைகள் நடைபெறும். பிறகு, அன்று பத்திரிகைகளில் வந்திருக்கும் முக்கியமான உலக விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வார்.

மகா பெரியவா
மகா பெரியவா

மாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு மறுபடியும் தரிசனம் அளிப்பதற்காக வெளியே வருவார் மகா பெரியவா. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற பக்தர்கள் சுவாமிகளை தரிசிக்க வந்திருப்பார்கள். அந்தந்தப் பகுதி மொழிகளில் அவர்களுடன் பேசி அவர்களுக்கெல்லாம் உபதேச வார்த்தைகளைக் கூறி விடை கொடுத்தனுப்புவார்.

பின்னர் தமது மாலைநேர ஸ்நானத்துக்குச் சென்று மாலை ஜபம், தியானம் முதலியவற்றை முடித்துக்கொள்வார். பெரியவா ஸ்நானத்துககுச் செல்லும் முன்னர் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் சந்நிதியில் கஜ பூஜை நடைபெறும். அப்போது மடத்தின் பணியாளர்கள் யாவரும் அங்கு கூடியிருக்க வேண்டும் என்பது நியதி. மடத்தின் பொக்கிஷத்தார் அன்று மடத்துக்கு வந்த வருமானத்தையும் ஏற்பட்ட செலவையும் கணக்குப் புத்தகத்திலிருந்து ஸ்வாமி சந்நிதியில் வாசிப்பார். கஜ பூஜை முடிவுற்றதும் பக்தர்கள் அவரவருக்குரிய சந்தியா வந்தனம், பிரார்த்தனை முதலிய வழிபாடுகளைச் செய்ய வெளியிடங்களுக்குச் சென்று வருவார்கள். இந்த நேரத்தில் மகா பெரியவா சுமார் ஒரு மணி நேரம் தியானத்தில் அமர்ந்திருப்பார்.

மறுபடியும் இரவு 8 மணிக்கு ஸ்வாமி சந்நிதானத்தில் பக்தர்கள் கூடியிருக்க, இரவு பூஜையைத் தொடங்குவார் மகா பெரியவா. சாதாரண நாள்களில் இரவு பூஜை ஒரு மணி நேரம் நடைபெறும். வெள்ளிக்கிழமை, நவராத்திரி, பிரதோஷம், பௌர்ணமி போன்ற விசேஷ நாள்களில் பூஜை நான்கு மணி நேரம் நடைபெறும். காத்திருந்தவர்கள் தரிசனம் முடிந்து பிரசாதம் பெற்று விடை பெறும்போது நள்ளிரவு கடந்துவிடும்.

மகா சுவாமிகளைத் தனிமையில் காண முன்னேற்பாட்டுடன் சில பக்தர்கள் அந்த நேரத்தில் காத்திருப்பார்கள். அவர்களுக்குத் தனித்தனியே தரிசனம் தருவார். இரவு ஒரு மணி வரையில் ஆலோசனைகள் தொடரும்.

அதன்பின்னர், தாம் அணிந்துள்ள ஒரே வஸ்திரத்தின் ஒரு பாகத்தை வெறும் தரையிலோ அல்லது ஒரு பலகையிலோ விரித்து சுமார் ஓரிரண்டு மணிநேரம் கண்ணயர்வார் மகா பெரியவா. மறுபடியும் யாவரும் வியக்கும் வண்ணம் காலை 4 மணிக்கே விழித்தெழுந்து விஸ்வரூப தரிசனம் தருவார், கண்கண்ட தெய்வமான காஞ்சி மகான்!

னந்த விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசனும், அவர் மகன் எஸ்.பாலசுப்ரமணியனும், பேரன் பா.சீனிவாசனும் மகா சுவாமிகளை தரிசனம் செய்து ஆசிபெற்ற தருணங்களைத் தனது ‘அன்பே… அருளே...’ நூலில் பதிவு செய்திருக் கிறார், அண்மையில் மறைந்த பரணீதரன்.

காளஹஸ்தியில் வியாச, பாரத, ஆகம, சில்ப புராணக்கலைகள் நடைபெற்ற தருணம் (1966) அது. ஒருநாள் பரணீதரனை அழைத்து, “நீ கூப்பிட்டா வாசன் இங்கே வருவாரா?” என்று கேட்டிருக்கிறார் மகா பெரியவா.

“போய் ‘பெரியவா வரச்சொன்னா’ன்னு சொல்றேன்.”

“இப்பவே மெட்ராஸ் போய் இங்கே வந்துட்டுப் போகச் சொன்னேன்னு வாசன் கிட்டே சொல்லு” என்றார் மகா பெரியவா.

அன்று மாலையே சென்னைக்குத் திரும்பி ஆசிரியர் வாசனிடம் தகவல் சொன்னார் பரணீதரன்.

“என்ன விஷயமா என்னை வரச் சொல்லியிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா?”

மகா பெரியவா
மகா பெரியவா

“தெரியாது சார்… ‘வரச் சொல்’ என்று மட்டும்தான் சொன்னார்.”

“எப்போ வரணும்னு சொன்னாரா?”

“அதுவும் சொல்லலே… உங்களுக்கு எப்போ சௌகர்யமோ…”

“ நோ… நோ… என் சௌகர்யம் இல்லே… பெரியவா சௌகர்யம்தான் முக்கியம். நாளை கார்த்தாலே நீ காளஹஸ்திக்குப் போய் பெரியவா சௌகர்யத்தைக் கேட்டு எனக்கு போன் பண்ணு. நான் புறப்பட்டு வர்றேன்” என்றார் ஆசிரியர் வாசன்.

மறுநாள் காளஹஸ்தி சென்று விண்ணப்பித்த போது, ‘இன்னிக்கு சாயந்திரம் வரச் சொல்’ என்று உத்தரவாயிற்று. தகவல் கிடைக்கப் பெற்றதும் உடனே புறப்பட்டு வந்தார் வாசன்.

அது ஒரு சிறு ஓலைக்குடில். அதன் வெளிப்புறம் வைக்கோல் பரப்பி, அதன் மீது சாக்குப்பைகளைப் போர்த்தி மெத்தென்ற ஆசனம் ஒன்று அமைக்கப்பட, அங்கு சென்று அமர்ந்தார் வாசன். சுவாமிகள் வந்ததும் எழுந்து நமஸ்கரித்தார். அவரை அமரச் சொல்லிவிட்டு தானும் எதிரில் அமர்ந்தார் பெரியவா. இருவரும் சுமார் முக்கால் மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். வேறு ஒருவரும் அருகில் இல்லை.

“எனக்கு என்ன வேணும்னு இவனுக்குத் (பரணீதரனுக்கு) தெரியும். அவன் என்ன சொல்றானோ அப்படிச் செய்” என்றார் மகா பெரியவா, வாசனிடம்.

மறுநாள் அலுவலகத்தில் வாசனிடமிருந்து அழைப்பு வந்தது பரணீதரனுக்கு.

“நேத்து உன்கிட்டே சுவாமிகள் கேட்கக் சொன்னாரே... நான் என்ன செய்யணும்னு சொல்லு.”

சற்று தயங்கிவிட்டு, “நேத்து திடீர்னு பெரியவா உங்களிடம் அப்படிச் சொல்லி விட்டதைப் பற்றி பிறகு அவரிடம் நான் எதுவும் பேசவில்லை. இன்று காலை பிரசாதம் வாங்கிக்கொண்டபோதுகூட, இதைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. சுவாமிகளும் எதுவும் கூறவில்லை” என்றார் பரணீதரன். தொடர்ந்து, “மறுபடியும் காளஹஸ்திக்குப் போய் பெரியவாகிட்டே விவரமா கேட்டுண்டு வர்றேன்” என்று கூறியிருக்கிறார்.

மறுநாள் மகா சுவாமிகளை தரிசித்து நடந்தது எல்லாவற்றையும் கூறி, “எடிட்டர் என்ன செய்யணும்னு கேக்கறார். என்ன கேக்கறது, எவ்வளவு கேக்கறதுன்னு எனக்கு ஒண்ணும் தெரியலே. பெரியவாளுக்கு வேணும்கறது என்னன்னு எனக்கு எப்படித் தெரியும்...” என்றார் பரணீதரன்.

மகா பெரியவா சிரித்துக்கொண்டே, “உனக்குத் தோண்றது எதையாவது கேளேன்” என்றார் - பரணீதரன் மௌனம்.

“உனக்கு ஒண்ணுமே கேட்கத் தோணலையா?”

“இல்லே பெரியவா...”

“சரி… ஒண்ணு பண்ணு… மேனேஜர்கிட்டே போய் மடத்துலேர்ந்து தர்ம பிரசாரத்துக்காக ஃப்ரீயா சின்னச் சின்ன புஸ்தகங்கள் அனுப்பிச்சிண்டிருக்காளே, அதுக்கு மாசா மாசம் எத்தனை ரூபாய்க்கு ஸ்டாம்பு செலவாறதுன்னு கேட்டுண்டு வா” என்று உத்தரவிட்டார் மகா பெரியவா.

பிறகு, “ஸ்டாம்புக்காக சுமாரா நூறு ரூபாயை மாசா மாசம் வாசனைக் கொடுக்கச் சொல்லு...” என்று அருளாணையிட்டார் மகா பெரியவா. இது சொல்லப்பட்டதும், “பெரியவா லட்ச ரூபாயாவது கேட்பார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்கு ஏற்பாடும் செய்துவைத்திருக்கிறேன். மாசம் நூறு ரூபாய் கொடுக்கச் சொல்றாரே” என்று வியந்தாராம் எஸ்.எஸ்.வாசன்.

1966–ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த மாதாந்தரக் காணிக்கை இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தந்தையை காளஹஸ்திக்கு வரும்படி பரணீதரனிடம் சொல்லியனுப்பிய மகா பெரியவா, அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு (1958) மகன் எஸ்.பாலசுப்ரமணியனை தரிசனத்துக்கு அழைத்து வரும்படி பணித்திருக் கிறார். அப்போது மயிலை சித்திரக்குளம் தெரு சங்கராலயத்தில் தங்கியிருந்தார் மகா பெரியவா. சிறு அறையில் ஒரு மூலையில் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்.

தரிசனம் செய்யவந்திருந்த பாலசுப்ரமணி யனிடம் ஆனந்த விகடனைப் பற்றிப் பொதுவாக இரண்டொரு கேள்விகள் கேட்டு விட்டு, இளவயதில் ஓரிரு முறை அப்பா அம்மாவுடன் அவர் தரிசனத்துக்கு வந்திருந் ததை நினைவுபடுத்திவிட்டு, “உனக்கு ஞாபகம் இருக்கோ?” என்று தமக்கே உரிய வாஞ்சையுடன் அவரிடம் வினவியிருக்கிறார் பெரியவா.

எதிர்காலத்தில் விகடனின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணிபுரிய வேண்டிய நல்வாய்ப்பு வரும்போது அதை எதிர்கொள்வதற்கான மனவளத்தையும் மதிநுட்பத்தையும் மனப்பண்பையும் அப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டியதற்கான அவசியத்தை மகா பெரியவா வலியுறுத்தினார். நல்லது கெட்டதையும் தர்ம நியாயங்களையும் நம் பண்டைய சிறப்புப் பண்புகளையும் அறிந்துகொள்ளும் பொருட்டு கீதோபதேசக் கதைகள், நீதி சாரம், நன்னெறி நூல்கள் போன்றவற்றைக் கற்றுணரும்படி அறிவுரை வழங்கினார்.

இறுதியாக, “என் பக்தாள் ரொம்ப பேர் ஆனந்த விகடனைப் படிக்கிறா. அவாள்லாம் நல்ல சிந்தனைகளோட இருக்கணும்னு நான் ஆசைப்படறேன். அவா நல்லவாளா இருக்கணும்னா அவா படிக்கற பத்திரிகை நல்லதா இருக்கணும். அதனாலதான் தீபாவளி அன்னிக்கு உன்னைக் கூப்பிட்டு வரச்சொல்லி இத்தனையும் சொன்னேன். க்ஷேமமா இருப்பா” என்று அருளாசி வழங்கினார் மகா பெரியவா.

இன்னொரு சம்பவம்.

1991 ஏப்ரல் மாதம். மடத்தின் சார்பில் காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள ஏனாத்தூரில் தொடங்கப்பட்டிருந்த மகா வித்யாலயாவுக்கு வாசன் அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்ச ரூபாய் நன்கொடை வழங்க விரும்பினார் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன். ஸ்ரீஜயேந்திர சுவாமிகளிடம் ஒப்படைக்கச் சொல்லி, தன் மகனும், விகடன் குழுமத்தின் இன்றைய நிர்வாக இயக்குநருமான பா.சீனிவாசனிடம் டிராஃப்ட்டைக் கொடுத்தனுப்பினார். பரணீதரனும் உடன் சென்றார்.

ஸ்ரீஜயேந்திரரிடம் ஆசி பெற்றபின் இருவரும் மகா சுவாமிகளின் தரிசனத்துக்குச் சென்றார்கள். பெரியவா அங்க அசைவுகளற்ற காஷ்டமௌன நிலையில் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

“வாசன் பேரன் சீனிவாசன், ஏனாத்தூர் மகா வித்யாலயத்துக்கு லட்ச ரூபாய் கொண்டு வந்திருக்கார்… அப்பாவின் அறக்கட்டளையி லிருந்து பாலசுப்ரமணியன் கொடுத்து அனுப்பி யிருக்கிறார்” என்று கூறி அந்த டிராஃப்டைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார் பரணீதரன்.

மகா பெரியவா அதை வாங்கிப் பார்த்தார். உள்ளத்தில் பூரித்த மகிழ்ச்சி ஆனந்தச் சிரிப்பாய் மலர்ந்து மங்கலமாய் விரிய, திருக்கரங்களை உயர்த்தி வாழ்த்தியருளினார்.

‘இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் காளஹஸ்தியில் தரிசனம் செய்து திரும்பிய வாசன் அவர்கள், ‘பெரியவா லட்ச ரூபாய் கேட்பார் என்று எதிர்பார்த்தேன்’ என்று என்னிடம் கூறினாரே, அன்று வாசன் அவர்கள் எதிர்பார்த்தபடி, இப்போது வாசன் அறக்கட்டளையிலிருந்தே, பேரன் மூலமாகவே பெரியவா அந்த லட்ச ரூபாயை ஏற்றுக்கொண்டு விட்டார்!’ என்று தனது நூலில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார் பரணீதரன்.

- அடுத்த இதழில் நிறைவு பெறும்.