மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 40

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா

வீயெஸ்வி, ஓவியம்: கேஷவ்

கா பெரியவா, 1935-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டார். ஆதிகங்கையில் சேரும் தாமோதர், ரூப்நாராயண் நதிகளைச் சாலை மார்க்கமாகக் கடக்க அதிக தூரம் சுற்றி வர வேண்டும்.

எனவே, சுவாமிகளின் பயணத்துக்கென்று சிறு நீராவிக் கப்பல் ஏற்பாடு செய்யப்பட்டது. அவரின் பரிவாரங்களான யானை, குதிரைகள், மாடுகள், வண்டிகள், பல்லக்குகள் ஆகிய அனைத்தும் அந்தக் கப்பலில் ஏற்றப்பட்டு பயணம் தொடங்கியது. துறைமுகத்துக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் மகா சுவாமிகளை வழியனுப்ப வந்திருந்தார்கள். ‘பெரியவா தரிசனத்தையும் மகான் பூஜை செய்யும் புனிதக் காட்சியையும் இனி எப்போது காணப்போகிறோமோ’ என்ற ஏக்கம் அவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் பிரதிபலித்தது.

மகா பெரியவா
மகா பெரியவா

கொல்கத்தாவுக்கு மேற்கே சுமார் 70 மைல் தொலைவிலுள்ளது, மிட்னாபூர். அது ஒரு ஜில்லாவின் தலைநகரம். வங்காளத்தின் சுதந்திர இயக்கத்துக்கு அஸ்திவாரமாகத் திகழ்ந்த ஊர்.

இரண்டு நாள்களுக்குமுன் ஜனார்தன்பூரில் மகா பெரியவா தங்கியிருந்த தகவலை அறிந்த மிட்னாபூர் பக்தர்கள், எப்படியாவது சுவாமிகள் தங்கள் ஊருக்கும் விஜயம் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அப்படி, தீர்மானித்த சில மணி நேரத்தில் வரவேற்புக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அந்த ஊரில் எந்தவித ஊர்வலமோ, பொதுக்கூட்டமோ நடைபெறக் கூடாது என்பதும், இரவு ஒன்பது மணிக்கு மேல் வீதிகளில் யாரும் நடமாடக் கூடாது என்பதும் அரசாங்கம் விதித்திருந்த நிபந்தனைகள். ஆனாலும் அங்குள்ள மக்களின் மனத்திலும் உடலிலும் ஊறியிருந்த சுதந்திர தாகம், எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் அடங்காமல் எல்லையற்ற தாக இருந்தது.

வரவேற்புக் கமிட்டியின் அங்கத்தினர்கள் சிலர், ஜனார்தன்பூருக்குச் சென்று சுவாமிகளை நேரில் தரிசித்தார்கள். மிட்னாபூர் நெருக்கடி நிலைமையை விளக்கினார்கள். சுவாமிகளைத் தங்கள் ஊருக்குத் தயக்கத்துடன் அழைத்தார்கள்.

“பரவாயில்லே... நான் எப்படியும் உங்க ஊருக்கு வரேன்” என்றார் மகா பெரியவா. பக்தர்கள் குளிர்ந்தார்கள்.

தகவல், கலெக்டருக்கும் கொல்கத்தாவிலுள்ள மேல்மட்ட அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. மகா பெரியவா மிட்னாபூருக்கு விஜயம் செய்த நாளன்று, ஊரடங்கு சட்டத்தின் சில பிரிவுகளை அதிகாரிகள் தளர்த்த, மக்கள் மகிழ்ந்தார்கள். பல வருடங்களாகக் கிடைக்கப்பெறாத இந்நாளை ஒரு சுதந்திரத் திருநாளாகவே அவ்வூர் மக்கள் கொண்டாடினார்கள். மேலும், மதத் தலைவர் ஒருவரை வரவேற்பதில் அவர்களது உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

ஊர் முழுவதையும் தோரணங்களாலும், வரவேற்பு வளைவுகளாலும் அலங்கரித்தார்கள். முக்கியமான தெருக்கள் வழியே சுவாமிகளை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.

12 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆங்கங்கே பாத பூஜை செய்யப்பட்டது.

மகா பெரியவா மிட்னாபூருக்கு விஜயம் செய்திருக்கும் தகவல், அவ்வூர் சிறைச்சாலைக் குள்ளும் பரவியது. நாட்டின் சுதந்திரத்துக்காக, தங்கள் வாழ்வையே தியாகம் செய்துவிட்ட தேச பக்தர்கள் பலர் அந்தச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். தேச பக்தியுடன் மத பக்தியும் அவர்கள் ரத்தத்தில் தோய்ந்திருந்தது. கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், வக்கீல்கள், டாக்டர்கள் போன்ற பலரும் அந்தச் சிறையில் இருந்தார்கள். அவர்களில் சிலருக்கு, மகா சுவாமிகளை எப்படியாவது தரிசித்துவிட வேண்டும் என்ற விருப்பமிருந்தது. சிறைச்சாலை அதிகாரி ஓர் ஆங்கிலேயர். அவரிடம் தங்கள் விருப்பத்தை விண்ணப்பித்துக்கொண்டனர்.

சில நிபந்தனைகளின்பேரில் அந்த அதிகாரி, அவர்களை வெளியில் சென்று வர அனுமதித்தார். கூண்டில் அடைக்கப்பட்டிருந்த அந்தக் கிளிகள் பறந்து போய்விடாமல் இருக்க, துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தனர். மாலை 6 மணிக்குள் ஜெயிலுக்குத் திரும்பிவிட வேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று. இதுபோன்ற நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு இளைஞர்களான சில காவல் கைதிகள், மகா பெரியவா தங்கியிருந்த இடத்துக்கு வந்தார்கள்.

“பெரியவா இன்னும் பத்து நிமிஷத்துல வெளியே வந்துடுவா. அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்” என்றார் மடத்துப் பிரதிநிதி.

“மன்னிக்கணும்... நாங்க 6 மணிக்குள் சிறைக்குத் திரும்பணும். காலம் கடந்துவிட்டால் காவலாளிகளின் கைகளிலுள்ள துப்பாக்கிகள் எங்கள்மீது சீறும். உயிர்போவது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால், மகா சுவாமிகளை தரிசிக்காமல் உயிரைவிட எங்களுக்கு விருப்பமில்லை” என்று சொல்லிவிட்டு, மிகுந்த ஏமாற்றத்துடன் அவர்கள் மீண்டும் சிறைச் சாலைக்குச் செல்ல புறப்பட்டுவிட்டார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக மகா பெரியவா தாமாகவே வெளியே வந்தார்.

“தரிசனத்துக்கு யாராவது காத்துண்டிருக்காளா?” என்று கேட்டார். கைதிகள் சிலர் வந்திருக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

“அவாளெல்லாம் சிறைக்குப்போய் சேர்ந்திருப் பாளா?”

“இல்லை பெரியவா... கொஞ்சம் தூரம்தான் போயிருப்பா...”

“அப்படின்னா யாராவது ஒருத்தர் உடனே போய் அவாளை அழைச்சுண்டு வாங்கோ...” என்றார் மகா பெரியவா.

அனைவரும் அழைத்து வரப்பட்டனர். வந்தவர்கள், சுவாமிகளை வணங்கினார்கள். அந்நிய ஆட்சியால் தேச மக்கள் பலவகையிலும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும், நாடு சுதந்திரமடைந்து மக்கள் யாவரும் இன்பமுற வாழ சுவாமிகள் அனுக்கிரகம் புரிய வேண்டும் என்றும், அதுவே தங்களின் கோரிக்கை என்றும் கூறிவிட்டு, சுவாமிகளை வணங்கி பிரசாதம் பெற்றுக்கொண்டு சிறைக்குத் திரும்பினார்கள், அவர்கள். அவர்களின் தேசபக்தியைக் கண்டு மகிழும்விதமாக சன்னமாகப் புன்முறுவலித்தார் மகா பெரியவா.

ஒடிசா மாகாணம், கட்டாக் மாவட்டத்திலுள்ள ஜாஜ்பூருக்குள் 1936 ஏப்ரல் 4-ம் நாள் பிரவேசித் தார் மகா பெரியவா. ஒடிசாவின் புராதனக் கலைகளின் மையமாக விளங்கும் நகரம் இது.

இந்த ஊரில் வைதரணீ நதி, உத்தரவாகினியாக வடக்கு நோக்கிச் செல்கிறது. வருடம் முழுவதும் யாத்திரை தலமாக விளங்கிவரும் புண்ணிய நகரம். மகாபாரதத்தில் கூறப்பட்ட பதினெட்டு சக்தி பீடங்களில் விராஜபீடம் எனப்பெயர் பெற்றுத் திகழ்வது.

கயாசுரனது தலை கயையிலும், நாபி (தொப்புள்) இந்த ஜாஜ்பூர் க்ஷேத்திரத்திலும் இருப்பதாகப் புராணம் கூறுகிறது. விராஜ பீடத்துக்கு அருகில் உள்ள நாபி கயாவில் பித்ருக்களின் பொருட்டு இன்றும் மக்கள் பிண்டம் போட்டு வருகிறார்கள்.

மகா பெரியவா
மகா பெரியவா

ஜாஜ்பூரைச் சுற்றிலும் புகழ்பெற்ற 12 ஆலயங்களும் தீர்த்தங்களும் உள்ளன. அந்த ஆலயங்கள் மிகப்பெரிய கோபுரங்கள் கொண்டவையாகவும் சிற்ப - சித்திர வேலைப் பாடுகள் மிகுந்ததாகவும் திகழ்கின்றன.

இந்த தலத்தில் மகா பெரியவா ஐந்து நாள்கள் தங்கியிருந்தார். அங்குள்ள 12 பெரிய ஆலயங்களையும் தரிசனம் செய்தார். மகா பிரதோஷ நாளன்று வைதரணீ நதியில் ஸ்நானம் செய்து, ஸ்ரீவித்யாதரபதி எனும் புகழ்பெற்ற பண்டாவுக்குக் கறவைப் பசு ஒன்றை தானமாக அளித்தார். அத்துடன், பால் கறக்க வெள்ளிப் பாத்திரங்களையும் விலையுயர்ந்த பட்டு வஸ்திரங் களையும் அவருக்குப் பரிசாகக் கொடுத்து நல்லாசி வழங்கினார்.

1936 ஆண்டு, மே மாதம் 3-ம் தேதி, சாக்ஷி கோபால் எனும் பழைமையான புகழ்பெற்ற தலத்துக்குச் சென்றார் மகா பெரியவா.

சாக்ஷி கோபாலனைப் பற்றிய சுவையான கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. காஞ்சியிலிருந்து இரண்டு அந்தணர்கள் கங்கைக்கு யாத்திரை சென்றனர். அவர்களில் ஒருவர் முதியவர். மற்றொருவர் திருமணமாகாத இளைஞர். போகும் வழியில் முதியவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட, இளைஞர் அவரைத் தூக்கிச் சென்று குணப்படுத்தி யாத்திரை பாதிக்கப்படாமல் கவனித்துக் கொண்டார்.

கிழவருக்கு ஆனந்தம். அந்த இளைஞருக்குத் தன் பெண்ணை மணம்செய்து வைப்பதாக வடமதுரையில் உள்ள கோபாலன் சந்நிதானத்தில் வாக்களித்தார். பின்னர் ஊர் திரும்பிய இளைஞர், கிழவர் வாக்களித்தபடி அவருடைய பெண்ணைத் தனக்குத் திருமணம் செய்துவைக்கக் கேட்டுக் கொண்டார்.

ஆனால் அந்த முதியவரோ, அவன் சார்ந்த சாதியைக் காரணம் காட்டி மறுத்துவிட்டார். இளைஞர், இந்த வழக்கை அந்த ஊர் அரசனிடம் கொண்டுசென்றார்.

“முதியவரின் வாக்குறுதிக்கு என்ன சாட்சி” என்று மன்னர் கேட்க, மதுராபுரியில் வீற்றிருக்கும் கோபாலனே தனக்கு சாட்சி என்று இளைஞர் சொன்னார்.

“அழைத்து வாருங்கள் அந்தக் கோபாலனை” என்று மன்னர் கட்டளையிட்டார்.

அதை ஏற்று அந்த இளைஞர் மீண்டும் மதுரா நகரத்துக்குச் சென்றார். நடந்தவற்றை கோபாலனிடம் சொல்லி முறையிட்டார்.

அப்போது, ‘நேரில் வந்து அரசனிடம் சாட்சி சொல்கிறேன்' என்று கோபாலன் அருளிய அசரீரி வாக்கு இளைஞரின் காதில் கேட்கிறது.

இளைஞர் ஊருக்குப் புறப்பட்டார். அவரைப் பின்தொடர்ந்தார் கோபாலன். ‘இளைஞர் பின்புறம் திரும்பிப் பார்க்கக் கூடாது. ஒருவேளை அவர் திரும்பிப் பார்த்தால்... அந்த இடத்திலேயே தங்கிவிடுவேன்...’ என்று அருளியிருந்தது அசரீரி வாக்கு. அதன்படியே திரும்பிப்பார்க்காமல் பயணத்தைத் தொடர்ந்தார் இளைஞர்.

பல நகரங்களைக் கடந்து காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார் இளைஞர். சொந்த ஊரை அடைந்து விட்ட மகிழ்ச்சி, சாட்சியை அழைத்து வந்து விட்டதால் வழக்கு தனக்குச் சாதகமாகும் என்ற எண்ணத்தால் ஏற்பட்ட உற்சாகம் ஆகியவற்றின் விளைவாக, தன்னையுமறியாமல் திரும்பிப் பார்த்துவிட்டார் இளைஞர். அக்கணமே, அங்கேயே சிலையானார் கோபாலன்.

தகவல் ஊர் முழுக்க பரவியது அரசனும் நேரில் வந்து சாட்சி கோபாலனைத் தரிசித்தார்.முதியவரும் மனம்மகிழ்ந்து தன் பெண்ணை இளைஞருக்கு மணம் செய்து வைத்தார்.

பின்னர் ஒரு தருணத்தில், பூரி மன்னர் காஞ்சி மன்னரின் பெண்ணை மணம் செய்ய வேண்டி காஞ்சிபுரம் வந்தார். பத்மாவதி எனும் ராஜகுமாரியைக் கல்யாணம் செய்துகொண்டார். அவளுடன் அவர் பூரிக்குத் திரும்பும்போது கோபால விக்கிரகத்தையும் காஞ்சி மன்னரிடம் கேட்டு வாங்கிச் சென்றார் என்பது வரலாறு.

மகா பெரியவா இந்தத் தலத்தில் தங்கியிருந்த போது, சாக்ஷி (சாட்சி) கோபாலனை தரிசித்தார். தேவஸ்தான பண்டாக்களும் நிர்வாகிகளும் சுவாமிகளை வரவேற்று, சகலவித மரியாதைகளும் செய்து மகிழ்ந்தார்கள்.

- வளரும்