மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 50

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா

ஓவியம்: கேஷவ்

கா பெரியவா, தன்னை நாடி வந்தவர்களுக்குப் பெரிய உபதேசங்கள் செய்ததில்லை. மந்திரித்து விபூதி தந்ததில்லை. அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டியதில்லை. பக்தர்கள் கூறுவதை மௌனமாகக் கேட்டுக்கொள்வார். அகமும் முகமும் மலர கரம் உயர்த்தி ஆசீர்வதிப்பார். சிலநேரங்களில், மிக மெல்லிய குரலில் ஓரிரு வார்த்தைகள் பேசுவார். புன்முறுவலுடன் நலம் விசாரித்துப் பழைய சம்பவங்களை நினைவுபடுத்துவார்.

சத்தியத்தை நேருக்கு நேர் தரிசித்தவர் மகா பெரியவா. அவர் பற்றெல்லாம் துறந்த மகா யோகியாக, பிரபஞ்சம் முழுவதும் நலமுடன் வாழ வேண்டும் என்ற நல்லெண்ணமே மூச்சாக வாழ்ந்தவர். 13-வது வயதில் பெற்றவர்களைப் பிரிந்து, உற்றார் உறவினரைத் துறந்து, உலக பந்தங்களை நீத்து துறவுக் கோலம் பூண்டவர்.

மகா பெரியவா
மகா பெரியவா

அப்போது மேற்கொண்ட தியாக வாழ்வு அறப்பணியெனும் வேள்வித் தீயில் இடப்பட்டு, புடம்போட்ட பத்தரைமாற்றுத் தங்கமாய் மெருகேறி மகிமை பெற்றது. நாம், இதிகாசத்திலும் புராணத்திலும் படித்தறிந்த மகரிஷி ஒருவர் வாழ்ந்த காலத்திலேயே வாழும் நல்வாய்ப்பைப் பெற்றவர்கள் ஆனோம்!

பாரதமெங்கும் பாத யாத்திரையாய் பயணம் செய்து, பக்தர்களுடன் பேசி, ஆசி வழங்கி, ஞான ரதமாய் பவனி வந்து கொண்டிருந்தவர் மகா பெரியவா. தியாகத்துக்கொரு கலங்கரை விளக்கமாய், பக்திக்கோர் இலக்கணமாய், தூய்மைக்கோர் ஆலயமாய், ஜீவன் முக்தராய், காமதேனுவாய், கற்பகத் தருவாய், வற்றாத ஜீவநதியாய், வள்ளல் பெருநிதியாய் அருட்செல்வத்தை நமக்கெல்லாம் வாரி வாரி வழங்கினார் அவர்.

சிந்தையிலோ, செயலிலோ அணுவளவும் சுயநலமின்றி ஒவ்வொரு நொடியும் பொது நலத்துக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, மனித குலத்துக்காகவே வாழ்ந்த மகான் மகா பெரியவா!

ஆனந்த விகடனில் பரணீதரன் பதிவுசெய்திருக்கும் உணர்வுபூர்வமான வரிகள் இவை.

ன்றைய காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அவருடைய 14–வது வயதில் (29.5.1983) முறைப்படி சந்நியாசம் வழங்கியவர், 69-வது மடாதிபதியாக பீடத்தை அலங்கரித்த ஶ்ரீஜயேந்திரர். மேலும் மகா சுவாமிகளிடம் நிரம்ப பாடம் பயின்று தம்மை மெருகேற்றிக் கொண்டவர் ஶ்ரீவிஜயேந்திரர்.

முக்காலமும் அறிந்த ஞானி என்று மகா சுவாமிகளை வர்ணிக்கிறார் ஶ்ரீவிஜயேந்திரர். கடந்தகாலப் பாடங்களை அலட்சியம் செய்யாமல், நிகழ்காலச் சூழலை முழுவதுமாக உணர்ந்தவராக எதிர்காலத்துக்குத் திட்டமிட்டவர் என்று அன்னாருக்கு பக்திப் பெருக்குடன் புகழாரம் சூட்டுகிறார்.

மகா பெரியவருடனான முதல் சந்திப்பு சதாராவில் நிகழ்ந்திருக்கிறது விஜயேந்திர சுவாமிகளுக்கு. சதஸ் நடந்துகொண்டிருந்த நேரம் அது. மையமாக மகா பெரியவா அமர்ந்திருக்க, இரு பக்கங்களிலும் அறிஞர்கள். விவாதம் நடந்துகொண்டிருக்க, நடுநடுவே மகா சுவாமிகளின் கருத்தைக் கேட்டுக் கொள்வார்கள்.

முக்காலமும் அறிந்த ஞானி
பால சுவாமிகளுக்கு பாஷ்ய பாடம்...
பால சுவாமிகளுக்கு பாஷ்ய பாடம்...

காஞ்சிபுரத்தில் காமாட்சி கோயிலின் பஞ்ச கங்கை குளத்தில் சந்நியாசாஸ்ரமம் ஏற்றதும் ஶ்ரீஜயேந்திரருடன் தேனம்பாக்கம் சென்றார் இளைய சுவாமிகள். சில நாள்களில் ஆந்திராவுக்கு யாத்திரை புறப்பட்டுவிட்டார் மகா பெரியவா. இரண்டு வாரங்கள் கழித்து கர்நூலுக்கு வந்து இணைந்து கொள்ளும்படி உத்தரவு வந்தது. மடத்தில் சுவாமிகளுக்குப் பலவிதங்களில் உதவியாக இருந்துவந்த பெரியவர்களில் சிலர் விஜயேந்திரருக்குத் துணையாகச் சென்றார்கள்.

கர்நூலில் இரண்டு மாதங்கள் மகா பெரியவா கூடவே இருந்தார். சுவாமிகள் தங்குவதற்காகக் கதவுடன் கூடிய டென்ட் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே செல்ல யாருக்கும் அனுமதியில்லை. பெரியவா வெளியே வரும்போது மட்டுமே தரிசனம். பி‌க்ஷைகூட சிறு ஜன்னல் வழியாகத்தான் உள்ளே அனுப்பிவைக்கப்பட்டது. பாஷ்ய பாடத்துக்காக அழைக்கப்பட்டால் மட்டும் உள் செல்வார் ஶ்ரீவிஜயேந்திரர்.

ருமுறை தமது 85-வது வயதில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவுக்கு, யாத்திரை புறப்பட்டார் மகா பெரியவா. `ஐந்து பேர் மட்டும் என்னுடன் வந்தால் போதும்' என்று அப்போது சொல்லிவிட்டாராம் அவர்.

வயது காரணமாக ஒரு ரிக்‌ஷா தன்னுடன் வர அனுமதித்திருக்கிறார். வாகனத்தின் முன்பக்கம் இருவர் ரிக்‌ஷாவை இழுத்துக்கொண்டு போக, ரிக்‌ஷாவின் பின்பக்கம் அதைப் பிடித்துக் கொண்டே நடந்திருக்கிறார். 1984-ல் யாத்திரை முடிந்து காஞ்சி மடம் திரும்பியதும் அந்த ரிக்‌ஷா பழுதாகிவிட்டதாம்!

உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. எனினும், தம்முடைய நித்ய அனுஷ்டானங்களில் எந்தவித சமரசங்களும் செய்து கொள்ளாமல் இருந்தார் மகா பெரியவா. பலநேரங்களில் மௌனமும் உபவாசமும் தொடர்ந்தன.

சுட்டெரிக்கும் வெயிலில் நடப்பார். வீங்கிவிடும் கால்களுக்கு, கல்லும் முள்ளும் மெத்தையாகும். போகும் வழியில் நீர்த்தேக்கம் தென்பட்டால், அனுஷ்டானம் மேற்கொள்ள ஸ்நானம் செய்துகொள்வார். தொண்டர்கள் முன்னே சென்று ஆழம் குறைவாக உள்ளதா, வழுக்காமல் இருக்கிறதா என்பதையெல்லாம் பார்த்துக்கொள்வார்கள்.

இந்த மாதிரிதானே சேஷாத்ரி சுவாமிகள் உட்கார்ந்திருக்கார்..?
இந்த மாதிரிதானே சேஷாத்ரி சுவாமிகள் உட்கார்ந்திருக்கார்..?

1974–ல் காட்ராக்ட் அறுவைசிகிச்சை செய்துகொண்டார் மகா பெரியவா. கண்கண்ட தெய்வமான காஞ்சி மகானுக்கு மடத்துக்கு அருகிலுள்ள கல்யாண மண்டபம் ஒன்றில் ஆபரேஷன் செய்தார், அப்போது விஜயா மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்த கண் மருத்துவர் என்.எஸ்.பத்ரிநாத்.

பின்னர் சிறிது நாள்களுக்குத் தினமும் காஞ்சி மடத்துக்குச் சென்று மகா சுவாமிகளைச் சோதித்துவிட்டு வந்தார் அவர். மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டருக்கு ஒப்பாகத் திருமண மண்டபம் ‘ஸ்டெரிலைஸ்’ செய்யப்பட்டதாம். டாக்டருடன் நர்ஸ் உட்பட இருவர் உதவிக்குச் சென்றனர். சர்ஜரிக்கு அடுத்தடுத்த நாள்களில் மகா சுவாமிகளின் கண்ணுக்குத் தேவையான மருத்துவக் கண்காணிப்புக்காக அணுக்கத் தொண்டர்கள் இருவருக்குப் பயிற்சி யளித்திருக்கிறார் டாக்டர் பத்ரிநாத்.

ஒரு நாள் விடியற்காலை சென்னையிலிருந்து புறப்பட்டு காஞ்சி மடம் சென்றார் டாக்டர் பத்ரிநாத். அங்கே பெரியவா தரிசனத்துக்காக உத்தரவு வேண்டிக் காத்திருக்கிறார். அழைப்பு வந்ததும் அறைக்குள் சென்று மகா பெரியவா பாதம் பணிந்து வணங்கினார் டாக்டர்.

“என்ன... குளிச்சிடுவேன்னு பயந்துட்டியா?” என்று மெலிதான புன்முறுவலுடன் கேட்டார் மகா பெரியவா.

“பெரியவா இன்னிக்கு கிரகணம்… பெரியவா ளுக்குக் கண்ணுல ஆபரேஷன் பண்ணியிருக்கு. பெரியவா ஸ்நானம் பண்ணிண்டா, ஆபரேஷன் ஆன கண்ணுக்கு பிராப்ளம் வந்துடும். அதனால பெரியவா ஸ்நானம் பண்ணிக்கவேண்டாம்னு பிரார்த்தனை பண்ணிக்க வந்தேன்'' என்றார் மருத்துவர் பணிவுடன்.

மறுபடியும் மகானின் வதனத்தில் மந்தகாசப் புன்னகை.

“கிரகணம் பூர்த்தியான உடனே ஸ்நானம் பண்ணணும்னுதான் சாஸ்திரம் சொல்றது. ஆனா, நான் ஸ்நானம் பண்ணப் போறதில்லே. என் கண்ணு போயிடுமேன்னு இல்லே. நீ ஒரு budding (வளர்ந்து வரும்) டாக்டர். உன்னோட கரியர் ஸ்பாயில் ஆயிடக்கூடாதேன்னுதான்… மந்திர ஸ்நானம்னு இருக்கு... அந்த ஸ்நானம் பண்ணிக்கிறேன். நீ கவலைப்படாம போயிட்டு வா” என்று டாக்டருக்குப் பிரசாதம் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பினார் கருணைக் கடலான மகா பெரியவா.

`திருவண்ணாமலையில் மொத்தம் மூன்று சிவலிங்கங்கள் இருக்கின்றன. ஒன்று ஜோதிர் லிங்கமான அருணாசல மலை. இரண்டாவது, ரமண ஸ்வாமி, மூன்றாவது சேஷாத்ரி...” என்று மகாபெரியவரால் குறிப்பிடப்பட்டவர் மகான் சேஷாத்ரி சுவாமிகள்.

இவருடைய வரலாற்றில் காஞ்சிபுரத்தில் தமது வீட்டில் பூட்டியிருந்த அறையிலிருந்து மாயமாய் மறைந்த நிகழ்வினைப் பற்றி படிக்கும் எவருக்கும் உள்ளம் சிலிர்க்கும்.

இந்த இல்லத்தைக் கண்டறியப் பிரயத்தனப் பட்ட பரணீதரனுக்கு வழிகாட்டியாக இருந்து வழிநடத்தியவர் மகா பெரியவா.

“சேஷாத்ரி சுவாமிகள் வாழ்ந்த வீட்டை நாம் வாங்கிவிடலாமா?” என்று கேட்டு, அதற்காக ஒரு கமிட்டி நிறுவப்பெற்று, தெற்கு வீதி 6–ம் நம்பர் இலக்கமுள்ள அந்த வீடு வாங்கப்பட்டது தனி வரலாறு. ‘ஶ்ரீகாமகோடி சேஷாத்ரி சுவாமிகள் நிவாஸம்’ என்று அந்த வீட்டுக்குப் பெயர் சூட்டினார் மகா பெரியவா.

ஶ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் பெரிய திருவுருவப்படம் சென்னை வந்து சேர்ந்ததும் அதை மகா சுவாமிகளிடம் காட்டுவதற்காக தேனம்பாக்கம் எடுத்துச் சென்றார்கள்.

படத்தின் மிக அருகில் சென்று உட்கார்ந்து அதை உன்னிப்பாக உற்றுப் பார்த்தார் மகா பெரியவா. படத்தில் உள்ளது போலவே கால்களை மடித்து, இடக்கையை முகவாயில் வைத்துக்கொண்டு புன்முறுவலுடன், “இந்த மாதிரிதானே சுவாமிகள் உட்கார்ந்திருக்கார்?” என்று கேட்டாராம் பெரியவா!

பின்னொரு நாள், “டேய்… நான் சேஷாத்ரி சுவாமிகளைப் போல ஆவேனா... அந்த நிலை எனக்கு வருமா?” என்று கேட்டிருக்கிறார் மகா சுவாமிகள்!

ப்போது சென்னையில் முகாமிட்டிருந்தார் மகா பெரியவா. பக்த கோடிகளுக்கு திவ்ய தரிசனம் தந்து பொன்மாரி பொழிந்து வந்த ஆசார்ய சுவாமிகளுக்குப் பொன்னால் அபிஷேகம் செய்து காண வேண்டுமென்று சென்னைவாசிகள் விரும்பினார்கள். மகா சுவாமிகள் மடாதிபதி பதவியேற்று 51 வருடங்கள் ஆனதையொட்டி விழா எடுக்கப்பட்டது.

மகா சுவாமிகளுக்குக் கனகாபிஷேகம்...
மகா சுவாமிகளுக்குக் கனகாபிஷேகம்...

1958–ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை தி.நகர் ராமேஸ்வரம் சாலையில் சுவாமிகள் தங்கியிருந்த இடம் விழாக் கோலம் பூண்டிருந்தது. காலை ஏழு மணியிலிருந்தே பக்த கோடிகள் பந்தலில் வந்து கூட ஆரம்பித்தார்கள்.

சரியாக ஒன்பது மணிக்கு, மேடைக்குப் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த தமது குடிலிலிருந்து மங்கல வாத்தியம் முழங்க, உபநிடத பாராயணம் பின்னே ஒலிக்க, இருவர் வெள்ளிப் பிரம்பை ஏந்தி முன் செல்ல, ஊர்வலமாகப் புறப்பட்டு வந்தார் மகா பெரியவா. அன்று பிரத்யட்ச தெய்வம், பக்தர்களைப் பிரதட்சணம் வந்த கோலம், காணக் கிடைக்காத ஒரு பரவசக் காட்சி.

ஞான மூர்த்தியான ஜகத்குரு மேடையில் வந்து அமர, ‘சம்போ சங்கரா, மகாதேவா, கோவிந்தா’ என்று பக்தர்கள் பக்தியுடன் பரவசக் கோஷமிட்டார்கள். பத்து நிமிடங் களுக்கெல்லாம் பிரதம சீடரும், பட்டத்து இளவரசுமான ஶ்ரீஜயேந்திரர் மேடைக்கு வந்து, ரோஜா மாலையையும் துளசி மாலையையும் எடுத்து உள்ளடங்கிய உற்சாகத்துடன் சுவாமி களுக்கு அணிவித்தார்.

வேத கோஷங்கள் முழங்கின. சுவாமிகளுக்கு கனகாபிஷேகம் செய்தார் ஜயேந்திரர். முதலில் புஷ்பங்களுடன் கலந்த சவரன்களை திருமுடியில் பொழிந்தார். பிறகு சுவர்ணத்தால் ஆன வில்வ தளங்களையும் பொற்காசுகளையும் யாவரும் காணும் வகையில் கையை உயர்த்தி அபிஷேகம் செய்தார். அந்தக் காட்சியைக் கண்டவர்கள், தங்கள் மீது அமிர்தாபிஷேகம் ஆவதாகவே ஆனந்தப்பட்டார்கள்.

கடைசியில் தேவபாஷையில் தேன்மாரிப் பொழிந்தார் மகா பெரியவா.

‘சுருதி ஸ்மிருதி புராணானாம்

ஆலயம் கருணாலயம்

நவாமி பகவத் பாத சங்கரம்

லோக சங்கரம்’ - என்ற குருவணக்க ஸ்லோகத்துடன் ஆரம்பித்தார்.

“தினந்தோறும் பக்தர்கள் புஷ்ப மாலை, துளசி மாலை, வில்வ மாலை முதலியவற்றால் எனக்கு ‘அபிஷேகம்’ செய்கிறார்கள். இன்று கனகாபிஷேகம் செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன?

ஶ்ரீபகவத் பாதாளின் நாமத்தை நான் தாங்கிக்கொண்டிருக்கிறேன் என்பதற்காகவே இத்தனையும் நடைபெறுகின்றன. பகவத்பாதாளுடைய திவ்ய நாமத்தை வைத்துக்கொண்டிருப்பதாலேயே இத்தனை விசேஷங்களும் நடைபெறுகின்றன என்றால், அவருடைய ஆக்‌ஞையைச் சரியாக பரிபாலனம் செய்தால் நிச்சயம் உலகம் பூராவும் பொன்மாரி பொழிந்து, எல்லோருக்கும் க்ஷேமம் உண்டாகும்.

ஶ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு கனகாபிஷேகம்

இந்தக் கனக தாரையினால் பொருள் மட்டுமன்றி தர்ம, அர்த்த, காம, மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களும் சம்பவிக்கும். ஈஸ்வர பூஜை செய்ய வேண்டும் என்பதே, ஶ்ரீபகவத் பாதாளின் ஆக்ஞை. கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம் ஆகிய பஞ்சோபசாரங்களை பகவானுக்குச் செய்ய வேண்டும். ஷோடசோபசார பூஜை, சதுஸ்சஷ்டி உபசார பூஜைகளும் செய்யப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் மேலான பூஜை ஒன்று இருக்கிறது. வேதத்தில் சொல்லியிருக்கிற கர்மானுஷ்டானங்களைச் செய்வதன் மூலம் பரமேஸ்வரனை ஆராதனை செய்ய வேண்டுமென்று ஆதிசங்கரர் கூறியிருக்கிறார்.

எல்லோரும் சந்நியாசிகளுக்கு நமஸ்காரம் செய்கிறார்கள். உண்மையான சந்நியாசிகள் அவற்றை ஶ்ரீநாராயணனுக்கே அர்ப்பணிக்க வேண்டும். சந்நியாசிகளுக்குக் கிடைக்கும் உபசாரங்களும், நமஸ்காரங்களும் ஶ்ரீகேசவனைத்தான் போய்ச் சேர்கின்றன.

அதேபோல் இப்போது செய்யப்பட்ட கனகாபிஷேகத்தை நான் ஶ்ரீபகவத்பாதாளுக்கு மானசிகமாக சமர்ப்பித்துவிடுகிறேன். அவருடைய ஆக்ஞையை நிறைவேற்றினால் பிரதி தினமும் அவருக்குக் கனகாபிஷேகம் செய்த புண்ணியம் நமக்குக் கிடைக்கும்” என்று தன் நன்றி உரையை முடித்தார் சுவாமிகள்.

காஞ்சிபுரத்தில் 1993–ம் வருடம் மே மாதம் 26-ம் தேதி பரமாச்சார்யர் ஶ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு கனகாபிஷேகம் நடந்தது. இந்த முறை ஶ்ரீஜயேந்திரரும் ஶ்ரீவிஜயேந்திரரும் முன் நின்று நிறைவேற்றினார்கள்.

காலை ஒன்பதரை மணியளவில் நடந்த இந்த மகா வைபவத்தைக் காண அதிகாலை மூன்று மணியிலிருந்தே மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதற்கென பிரத்யேகமாகச் செய்யப்பட்ட ‘தக தக’ வென ஜொலிப்போடு வெள்ளியினால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்தார் மகா பெரியவா. ஶ்ரீஜயேந்திரர் கனகாபிஷேகம் செய்திருக்கிறார். முதுமை காரணமாக மகா சுவாமிகளால் சிம்மாசனத்தில் நெடுநேரம் அமர முடியவில்லை.

சரியாக 20 நிமிடங்களில் கனகாபிஷேகம் முடிய, மகா பெரியவா பக்த கோடிகளைப் பார்த்து இரு கரங்களையும் தலைக்கு மேல் உயர்த்திக் கூப்பினார். மொத்தக் கூட்டமும் உணர்ச்சிவசப்பட்டது. பலர் தாரை தாரையாய்க் கண்ணீர் வழியக் கைகளை மேல் நோக்கி உயர்த்தினார்கள். மகா பெரியவா தமது அறைக்குச் சென்று விட்ட பிறகும், அந்த வெற்றுச் சிம்மாசனத்தைப் பயபக்தியோடு வலம்வந்த பக்தர்களின் வழிபாடு முடிய மேலும் இரண்டு மணி நேரமானது!

கா சுவாமிகளின் உடல் நிலையில் அக்டோபர் (1993) மாதத்திலிருந்தே சரிவு ஏற்படத் தொடங்கிவிட்டது. மருத்துவர்களின் கண்காணிப்பு தீவிரமாக இருந்தது. ஜனவரி (1994) முதல் தேதியன்று பத்து நிமிடங்கள் மட்டுமே பக்தர்களுக்கு மகா பெரியவா தரிசனம் கிடைத்தது.

அதற்குப் பிறகு பொது தரிசனமே இல்லை. உடல்நிலை மேலும் மோசமாகத் தொடங்கியது. மருத்துவர்கள் அருகிலேயே இருந்து தேவையான சிகிச்சைகள் அளித்துக்கொண்டிருந்தார்கள்.

8-ம் தேதி, சனிக்கிழமையன்று உடல்நிலை சற்று தேறியது. ஈச்சங்குடியில் வாங்கியுள்ள சுவாமிகளின் பூர்வாசிரம தாயாரின் இல்லத் தில் வைப்பதற்காகத் தயாரான அப்பா அம்மா படங்கள் அவரிடம் காண்பிக்கப்பட்டன.

அவற்றைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந் தார். அணுக்கத் தொண்டர் பாலுவிடம், “நீ கலவையைப் பார்த்திருக்கியோ… அங்கே போயிருக்கியோ'' என்று கேட்டிருக்கிறார்.

பக்தர் ஒருவர் தரிசனத்துக்கு வர அவரிடம், “சௌக்கியமா இருக்கேளா?” என்று உரத்த குரலில் கேட்டிருக்கிறார் மகா பெரியவா. அது சுவாமிகளின் பழைய குரல் மாதிரி இருக்க, அருகிலிருந்தவர்களுக்கு ஆச்சர்யம்.

‘பிரும்மஶ்ரீ சாஸ்திரிகள்’ என்று மகா பெரியவா பெயரிட்ட வேதபுரி என்ற அன்பரைப் பார்த்து, “கையில் என்ன?” என்று கேட்டிருக்கிறார். “பெரியவாளோட மரக் குவளை… அலம்ப எடுத்துண்டு போறேன்” என்று பதில் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் வேதபுரி.

நெஞ்சம் குமுறிக் கண்ணீர் வடித்தார் ஶ்ரீஜயேந்திரர்

மகா பெரியவா சகஜ நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதை அறிந்து அனைவருக்கும் மகிழ்ச்சி. பிக்ஷையை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அவரைப் படுக்கவைத்தார்கள். அரை நொடிதான்… அநாயாசமாக ... ஸித்தியடைந்து விட்டார் ஜகம் புகழும் மகா பெரியவா. அப்போது மதியம் மணி 2:58.

அன்று நண்பகலில் மகா பெரியவாவிடம் உத்தரவு பெற்று தாம்பரம் நிகழ்ச்சி ஒன்றுக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள் ஶ்ரீஜயேந்திரரும் ஶ்ரீவிஜயேந்திரரும். இவர்கள் தாம்பரம் அடைவதற்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட, இரு சுவாமிகளும் மாலை ஐந்து மணியளவில் மடத்துக்குத் திரும்பிவிட்டார்கள்.

துறவியேயாயினும் நாற்பது ஆண்டுத் தொடர்பு. அந்தப் பின்னணியும், பல்வேறு சம்பவங்களும் நினைவில் அலைமோதியிருக்க வேண்டும். நெஞ்சம் குமுறிக் கண்ணீர் வடித்தார் ஶ்ரீஜயேந்திரர்.

“ஏமாந்து போயிட்டோம். இன்னிக்கு நன்னாத்தான் இருந்தா… பேசினா… சிரிச்சா, பிக்ஷை பண்ணினா… தைரியமாயிருந்தது. தாம்பரம் போயிட்டு வந்துடலாம்னு புறப்பட் டோம்… எதிர்பார்க்காம சேதி வந்தது” என்ற விஜயேந்திரருக்குக் குரல் கம்மியது.

பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தார் அவர். பிருந்தாவன வேலை நடந்துகொண்டிருக்கிறதா என்று மேற்பார்வையிட்டார். பக்தர்கள் கூட்டம் பெருகிக் கொண்டேயிருந்தது. இரண்டு கிலோ மீட்டர் வரை நீண்டது வரிசை.

“எனக்கு மூணு வயசு இருக்கிறப்போ பெரியவா கல்கண்டு கொடுத்தா. அதுக்கப்புறம் நான் பெரியவாளைப் பார்க்கவேயில்லை. அழைச்சுண்டுபோன்னு அப்பாகிட்ட எத்தனையோ தரம் சொன்னேன். அழைச்சுண்டே போகல… இப்போ சாமிகிட்ட போயிட்டாரே… நான் இனிமே பெரியவாளை எப்படிப் பார்க்கறது?” என்று கண்கலங்கினாள் ஒரு சிறுமி.

மறுநாள்... மேடையில் மகா சுவாமிகளின் திருமேனி ஒளிர்ந்துகொண்டிருந்தது. மூலவராகி விட்ட நிலையில், தெய்விக சாந்நித்தியம் நிலவியது. அன்று பன்னிரண்டு மணிக்கு மேல் மகாபிஷேகம் தொடங்கியது. ஶ்ரீஜயேந்திர சுவாமிகள், குருவின் திருமேனிக்கு முறைப்படி அபிஷேகம், அர்ச்சனைகள் செய்வித்து, தூப, தீப, கற்பூர ஆரத்தியெடுத்து வழிபட்டார்.

இறுதியாக, நான்கு மணியளவில் பிருந்தாவன ஊர்வலம் புறப்பட்டது.

ஹர ஹர சங்கர

ஜய ஜய சங்கர!