Published:Updated:

மகா பெரியவா - 42

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

வீயெஸ்வி, ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா - 42

வீயெஸ்வி, ஓவியம்: கேஷவ்

Published:Updated:
மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

கா சுவாமிகளின் பயணம் தொடர்ந்தது. கொல்கத்தா விஜயத்துக்கு முன்பாக மகா சுவாமிகளின் பீகார் மாகாண விசிட் குறித்துப் பார்ப்போம்...

1935 ஏப்ரல் 24-ம் தேதி புதன்கிழமை மாலை நேரம். ‘பாடலிபுத்ரம்’ என்று சரித்திரப் புகழ் பெற்றதும் பீகார் மாகாணத்தின் தலை நகருமான பாட்னாவுக்குள் நுழைந்தார் மகாபெரியவா. அந்த நகரத்தின் வழியே ஓடும் கங்கை, பூமியைக் குளிர்வித்துக்கொண்டிருந்தது.

அத்வா மகாராஜா, அமாவான் மகாராஜா உள்ளிட்ட நகரத்தின் பிரமுகர்கள் சுவாமிகளுக்குப் பெரியதொரு வரவேற்பை அளித்தனர். நகர எல்லையில் அலங்காரமான கொட்டகை. அதில் உயர்ந்த மேடை. மேடையின்மீது சிம்மாசனத்தில் அமர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார், மகா பெரியவா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் அங்கிருந்து இரண்டு மகா ராஜாக் களின் துருப்புகள், பரிவாரங்கள், குதிரைப் படைகள் முன்செல்ல, பெரியதோர் ஊர்வலம் புறப்பட்டது. வீதியின் இருபுறங்களிலும் கூட்டம் கூட்டமாக நின்றிருந்த மக்களுக்கு, தந்தச் சிவிகையில் அமர்ந்தபடி தரிசனமும் ஆசியும் வழங்கியவாறு பயணித்தார்.

மகா பெரியவா
மகா பெரியவா

வழக்கம்போல் பாதபூஜை, பூர்ண கும்பம் என அமர்க்களப்பட்டது வரவேற்பு. அந்த வருட சங்கர ஜயந்தியை, பாட்னாவிலுள்ள அத்வா மகாராஜாவின் அரண் மனையில் நடத்தினார் மகா பெரியவா.

ஆதிசங்கரரின் பிறந்த நாளாம் மே 7-ம் தேதி கங்கைக்கரையிலுள்ள பாகீரதி கட்டத்தை அடையும்படியாக ஓர் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மடத்தின் கம்பீரமான ஆண் யானை மீது ஆதிசங்கரரின் திருவுருவப் படத்தையும் ஆசார்ய பாதுகைகளையும் வைத்து, வேத கோஷமும் நாகஸ்வர நாதமும் ஒலிக்க ஊர்வலம் புறப்பட்டது.

மகா பெரியவா ஊர்வலத்துடன் நடந்து வந்தார். கங்கைக் கரையை அடைந்ததும் ஆசார்ய பாதுகைகளுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர், இருப்பிடம் திரும்பியதும் ஆதிசங்கரரின் திருவுருவப் படத்துக்கும் பாதுகைகளுக்கும் பூஜை, ஆராதனைகள் செய்விக்கப்பட்டன. ‘ஹர ஹர சங்கர’ கோஷம் எங்கும் எதிரொலித்தது.

பீகாரிலிருந்து கொல்கத்தா நோக்கிப் பயணிக்கையில் வைத்தியநாதர் ஆலயத்துக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா. அங்கிருந்து 250 மைல் தொலைவில் இருக்கும் கொல்கத்தாவில் வியாச பூஜையை நடத்துவது என்று தீர்மானம். இடையில் 23 நாள்கள்தான் இருந்தன. நாள் ஒன்றுக்கு 20 மைல் தொலைவுக்கு மேல் யாத்திரை செய்தால் மட்டுமே குறித்த காலத்துக்குள் கொல்கத்தாவை அடைய இயலும். அதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் செய்யப்பட்டன. அதன்படி எந்த ஊரிலும் ஒரு நாள்கூட முழுவதும் தங்க முடியவில்லை. ஆங்காங்கே மக்கள் கொடுத்த வரவேற்பையும் ஏற்க இயலவில்லை. அன்றாடம் பூஜைக்கு மட்டும் ஒவ்வோர் இடத்தில் தங்கி பூஜையை முடித்துக்கொண்டு, பயணத்தைத் தொடர்ந்தார் மகா பெரியவா.

1935 ஜூலை 16 செவ்வாய்க்கிழமை (யுவ வருடத்திய ஆஷாட சுக்ல பூர்ணமி) அன்று நிகழ்ந்த வியாச பூஜையைக் கொல்கத்தா காளி கட்டத்திலுள்ள நகரத்தார் சத்திரத்தில் நடத்தினார் மகா பெரியவா.

1937 ஜனவரி 29. காக்கிநாடாவுக்குள் மகா பெரியவா பிரவேசித்த நாள். மிகச் சரியாக ஒரு மாத காலம் அங்கே முகாமிட்டிருந்தார். பிப்ரவரி 10-ம் தேதி அமாவாசை அன்று `துல்ய கோதாவரி' நதி, அந்த ஊருக்கருகில் கடலில் சேருமிடத்தில் சங்கம ஸ்நானம் செய்தார்.

அந்தப் பகுதியில் அன்றைய அமாவாசைக்கு `சோளங்கி அமாவாசை' என்று பெயர். நம் பகுதிகளில் `மஹாளய அமாவாசை' போல் அங்கே அது ஒரு புனித நாள். ஒரு லட்சம் மக்கள் அன்று அதில் ஸ்நானம் செய்தார்களாம். கோதாவரி நதி ஏழு ரிஷிகளின் பெயர்களால் ஏழு கிளைகளாகப் பிரிந்து `ஸப்த கோதாவரி' எனும் பெயர்கொண்டு அங்கே ஓடுகிறது. அவற்றில் ‘துல்ய கோதாவரி’ என்கிற கிளை நதி மிகவும் புனிதம் வாய்ந்தது. அதன் கரையில் சிறப்பு ஸ்நானத்தை ஏற்றார்.

அந்த அமாவாசை அன்றே துவாதச ஜோதிர் லிங்க க்ஷேத்திரமான பீமாவரத்துக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா. அங்கே பீமேஸ்வர ஜோதிர் லிங்கத்தையும் மாணிக்க அம்பிகையை யும் தரிசித்தார். அன்று சுவாமிகள் அளித்த பட்டு, பீதாம்பரங்களை அலங்காரமாக அணிவித்து லிங்கத்துக்கு விசேஷ அபிஷேகமும் அர்ச்சனை களும் நடைபெற்றன.

காக்கிநாடாவிலிருந்து புறப்பட்டு கோடி பல்லிக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா. அங்குள்ள கோடீசுவர லிங்கம் இந்திரனாலும், சோமேசுவர லிங்கம் சந்திரனாலும் பிரதிஷ்டை செய்யப்பட்டவையாம். ஸ்ரீசந்திரசேகர இந்திர சரஸ்வதி என்னும் திருநாமம் தாங்கிய மகா பெரியவா, இந்த இரண்டு லிங்கங்களையும் ஒருங்கே தரிசித்தது விசேஷம்!

கோதாவரி நதியின் கீழ் டெல்டா பிரதேசமாகத் திகழ்வது கோனசீமா. செழிப்புமிக்க பிராந்தியம். அங்கே, ஏராளமான அக்ரஹாரங்கள் அமைந் துள்ளன. ஒவ்வோர் அக்ஹாரத்திலும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமிகளை வரவேற்று உபசரித்தார்கள்.

1937 அக்டோபர் முதல் ராஜமகேந்திரபுரத்துக்கு விஜயம். அங்கே நான்கு மாதங்கள் தங்கியிருந்த மகா பெரியவா, அவ்வப்போது பக்கத்து ஊர்களுக்கும் பயணித்தார். ராஜமகேந்திரபுரத்துக்கு வடக்கில் 27 மைல் தொலைவில் ஓர் இடம் உண்டு.

அங்கே அகண்ட கோதாவரி சுமார் 2,000 அடி உயரமுள்ள இரண்டு மலைகளுக்கு நடுவில் பாய்ந்து வரும் காட்சியைக் காண்பதற்காக, பிரத்யேகமான ஒரு நீராவிப் படகில் சென்று வந்தார் சுவாமிகள்.

அந்த இடத்துக்கு ‘பப்பி குன்றுகள்’ என்று பெயர். சுமார் 100 கஜம் அகலத்தில் கோதாவரி அங்கே ஓடுகிறது. ரம்மியமான அந்த இயற்கைக் காட்சியைக் கண்டு மகிழ்ச்சியுற்று, புனித கோதாவரியில் நீராடினார். அங்கு கோயில் கொண்டுள்ள மஹா நந்தீசுவரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்துகொண்டார்.

1938 ஜனவரி 31-ம் தேதி நிகழ்ந்த மகோதய புண்ணிய காலத்தில் சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டுமென விரும்பிய மகா பெரியவா, ராஜ மகேந்திரபுரத்திலிருந்து 40 மைல் தொலைவிலுள்ள காக்கிநாடாவுக்குப் பயணம் செய்து அங்கு விதிப்படி சங்கல்பம் செய்துகொண்டு சமுத்திர ஸ்நானம் செய்தார்.

கோதாவரி தீர யாத்திரையை முடித்துக் கொண்டு மகா பெரியவா அடுத்தபடியாக விஜயம் செய்தது கிருஷ்ணா நதி தீரம். இது, 1938 மார்ச் மாதத்தில் நடந்தது. விஜயவாடாவிலிருந்து ஆறு மைல் தொலைவிலுள்ளது மங்களகிரி. அந்த க்ஷேத்திரத்தில் ஒரு குன்றின் மீது நரசிம்ம ஸ்வாமி ஆலயம் உள்ளது. சுவாமிக்குப் பாகை நரசிம்மர் என்று பெயர். அவருக்குச் சமர்ப்பிக்கப்படும் பானகத்தில் ஒரு பகுதி குறைந்துவிடுவதாகவும் அது நரசிம்ம சுவாமியால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றும் அந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள்.

மகா பெரியவா
மகா பெரியவா

தொடர்ந்து குண்டூர், நெல்லூர் மாதிரியான நகரங்களுக்குப் பயணம் செய்துவிட்டு, இரண்டா வது முறையாக காளஹஸ்திக்கும் திருப்பதிக்கும் விஜயம் செய்தார் மகா பெரியவா. அந்த வருடத்திய (1939) சங்கர ஜயந்தி உற்சவம் நகரியை அடுத்த புக்கை க்ஷேத்திரத்தில் நடைபெற்றது.

பின்னர் புக்கையிலிருந்து புறப்பட்டார். திருத்தணி முருகனை தரிசித்தார். மே மாதம் முதல் தேதி திருமால்பூரில் தங்கி, அடுத்த நாள் காஞ்சிபுரம் அடைந்தார். அங்கு ஏகாம்பர நாதரையும் காமாட்சி அம்மனையும் தரிசித்துக் கொண்டு ஆரணி, செஞ்சி, விழுப்புரம், பண்ருட்டி, திரிப்பாதிரிப்புலியூர், பறங்கிப்பேட்டை மார்க்க மாகச் சிதம்பரத்தை அடைந்தார் மகா பெரியவா.

நினைத்தாலே பிரமிக்கவைக்கும் பயணம் இது. 1922-ல் செப்டம்பர் மாதம் ராமசேதுவில் மணல் எடுத்து, கங்கா யாத்திரைக்கு மகா பெரியவா சங்கல்பம் செய்துகொண்டது நினைவுக்கு வருகிறது. கங்கா யாத்திரையை மேற்கொள்ள வேண்டிய நியதிப்படி, அப்போது எடுத்த மணலை 1934-ம் வருடம் ஜூலை மாதம் 25-ம் தேதி அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் சேர்த்தது கண்முன் நிழலாடுகிறது.

சிதம்பரத்திலிருந்து புறப்பட்ட மகா பெரியவா, சேத்தியாதோப்பு, அணைக்கரை, ஒழுகுசேரி, கோனேரிராஜபுரம், முடிகொண்டான், திருவாரூர், மூலங்குடி, தண்ணீர் குன்னம், சாத்தனூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், உப்பூர், தேவிபட்டணம் ஆகிய ஊர்களின் வழியாக 1939 ஜூன் மாதம் 10-ம் தேதி ராமேஸ்வரத்தை அடைந்தார்.

தேவஸ்தான அதிகாரிகளும் பண்டாக்களும் மற்ற பொதுமக்களும் அளித்த விசேஷமான வரவேற்பை ஏற்றுக்கொண்டார். காலையில் சர்வ தீர்த்தத்தில் சமுத்திர ஸ்நானம் செய்தார். பின்னர் ராமநாதசுவாமி ஆலயத்துக்கு விஜயம் செய்தார். அங்கே சுவாமிக்கு முறைப்படி ஏகாதச ருத்திரத்துடன் மகா பெரியவா கொண்டுவந்த கங்கை அபிஷேகம் செய்விக்கப்பட்டது.

மறுநாள் முதல் மௌன விரதம் மேற்கொண் டார் மகா சுவாமிகள். இந்த மௌனம் ஆறு மாதங் களுக்கு மேல் நீடித்தது. விரதம் மேற் கொண்ட தினத்தன்றே தனுஷ்கோடியில் நீராடினார்.

பின்னர் தர்ப்பசயனம், நவ பாஷாணம் முதலிய க்ஷேத்திரங்களை தரிசித்துக்கொண்டு, அந்த வருட வியாச பூஜையைக் கும்பகோணத்தில் நடத்த வேண்டும் எனும் தீர்மானத்துடன் வழியில் அதிகம் தங்காமல் யாத்திரையை விரைவாக மேற்கொண்டார் மகா பெரியவா.

- வளரும்

சொந்தம் இல்லாத கோபம்!

ஜென் மாணவன் ஒருவன் தன் குருவிடம் வந்து, ‘‘குருவே, எனக்குக் கட்டுக்கடங்காமல் கோபம் வருகிறது. அதிலிருந்து விடுபட ஒரு வழி சொல்லுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டான்.

குரு அவனிடம், ‘‘எங்கே... உனது கோபத்தை எனக்குக் காட்டு பார்க்கிறேன்’’ என்றார்.

குரு
குரு

‘‘உடனே என்னால் காட்ட முடியாது’’ என்றான் அவன்.

‘‘ஏன்?’’

‘‘அது திடீரென்றுதான் வரும்.’’

‘‘அப்படியானால் அது உனது இயல்பான குணம் அல்ல. கோபம் உனது இயல்பான குணமாக இருந்திருந்தால், அதை உன்னால் எப்போது வேண்டுமானாலும் காட்ட முடியும். உனக்குச் சொந்தம் இல்லாத ஒன்று உனது வாழ்க்கையைக் கெடுக்க ஏன் அனுமதிக் கிறாய்’’ என்று கேட்டார் குரு.

அதன் பிறகு அந்த மாணவனுக்குக் கோபம் வரும்போதெல்லாம் குரு சொன்னதே நினைவுக்கு வந்தது. காலப்போக்கில் அவன் அமைதி நிரம்பியவனாக மாறினான்.

- ஆர்.பழனியப்பன், சேலம்