Published:Updated:

மகா பெரியவா - 33

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

வாழ்க்கையில் தாங்க முடியாத அளவுக்குத் துயரங்கள் நேரிடும்போது, ‘பகவான் எனக்கு மட்டும் ஏன் இப்படி அடுக்கடுக்கா கஷ்டங்களைக் கொடுக்கிறார்.

மகா பெரியவா - 33

வாழ்க்கையில் தாங்க முடியாத அளவுக்குத் துயரங்கள் நேரிடும்போது, ‘பகவான் எனக்கு மட்டும் ஏன் இப்படி அடுக்கடுக்கா கஷ்டங்களைக் கொடுக்கிறார்.

Published:Updated:
மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

நான் யாருக்கும் எப்போதும் எந்தக் கெடுதலும் நினைப்பது கிடையாதே. அப்புறம் என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறார். கடவுளுக்குக் கண்ணே இல்லியா...’ என்று நிறைய பக்தர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் புலம்புவது உண்டு.

ஒருமுறை, இப்படிக் கஷ்டதிசையில் தெய்வத்தை நிந்தனை செய்த ஒருவர் சுவாமிகளை தரிசிக்க வந்தார். இவர் ‘ரெகுலர்’ பக்தர் கிடையாது. எப்போதாவது மடத்துக்குள் எட்டிப்பார்க்கும் ரகம். மகா பெரியவரை நமஸ்கரித்துவிட்டு எழுந்து நின்றார். முகத்தில் வேதனை நிரம்பியிருந்தது.

“என்ன, சுவாமியைத் திட்டறதுலேர்ந்து ஒருவழியா ஓய்ஞ்சுட்டே போலிருக்கு. திட்டியும் பிரயோஜனம் இல்லைன்னு உனக்குத் தோணிடுத்து... அதனாலே, நித்யபடி நீ பண்ணிண்டு இருந்த பூஜையைக்கூட நிறுத்திட்டே இல்லையா” என்று அந்த பக்தரிடம் கேட்டார் பெரியவா.

மகா பெரியவா - 33

“பெரியவா! குடும்பம் நடத்தறது ரொம்ப கஷ்டமாயிடுத்து. சரியா வேலையும் கிடைக்கறதில்லை. பகவானை வேண்டிண்டு ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு புரிஞ்சுத்து! மத்தவாளுக்கெல்லாம் கேட்கறதுக்கு முன்னாடி கொடுக்கற சுவாமி, எனக்கு மட்டும் ஏன் இப்படிப் பண்றார். அதுதான் பண்ற பூஜை எல்லாத்தையும் நிறுத்திட்டேன்...” என்ற பக்தருக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. இடுப்பில் கட்டியிருந்த துண்டையெடுத்து வாய்பொத்திக் கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கனிவுடன் அவரை நோக்கினார் மகா பெரியவா.

“ஒரு விஷயம் சொல்றேன்... நன்னா கேட்டுக்கோ” என்று ஆரம்பித்தார்:

“ஆஸ்பத்திரிக்குத் தினமும் எத்தனையோ நோயாளி வருவா. சிலருக்குக் காய்ச்சல் இருக்கும். சிலர், பல் வலில அவஸ்தைப்பட்டுண்டிருப்பா. வயிற்றுவலின்னு கொஞ்சம்பேர் இருப்பா. இவாளெல்லாம் இங்கே காத்துண்டு இருக்கறச்சே, பாம்பு கடிச்சு உடம்புல விஷம் ஏறிடுத்துன்னு ஒருத்தரைக் கூட்டிண்டு வருவா... மாடிலேர்ந்து விழுந்து நினைவு தப்பிடுத்துன்னு வேறொருத்தரை ஸ்டெச்சர்ல படுக்கவெச்சு தள்ளிண்டு வருவா... இந்த மாதிரி சந்தர்ப்பத்துல டாக்டர்களெல்லாம் என்ன பண்ணுவா? யாருக்கு உடனடியா சிகிச்சை பண்ணனுமோ, யாருக்குச் சட்டுன்னு சிகிச்சை கொடுக்கலேன்னா அது அப்புறம் பிரயோஜனப் படாதோ, யாருக்கு மரண அவஸ்தை உடனே தீரணுமோ... அவாளைப் பார்க்கப் போயிடுவா.

அதுக்காக சாதாரண காய்ச்சல், தலைவலி, பல்வலின்னு வந்தவாளை டாக்டர்கள் அலட்சியம் பண்றதா அர்த்தம் இல்லே. அவாளுக்குக் கொஞ்சம் தாமதமா சிகிச்சை தந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டுடாது. ஆனா, பாம்புக் கடிபட்டவருக்கும் விபத்துல சிக்கினவருக்கும் உடனடியா மருத்துவம் பார்த்தாகணும்...” - மகா பெரியவா விளக்கிக்கொண்டிருந்ததை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தார் அந்த பக்தர்.

“நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கற டாக்டர்களுக்கே யாருக்கு எப்போ உதவணும்கறது தெரியறதுன்னா, பிறவிப் பிணிக்கே சிகிச்சை பண்ணி, அதனால வரக்கூடிய சங்கடங்களைப் போக்கக்கூடிய பகவானுக்கு யாரோட பிரச்னையை எப்போ, எப்படி தீர்க்கணும்கறது தெரியாதா? உனக்குச் சுவாமியோட கடாட்சம் கிடைக்கக்

கொஞ்சம் தாமதமாறதுன்னா, உன்னைவிட அதிகமா அவஸ்தைப்பட்டுண்டு இருக்கற யாருக்கோ உதவறதுக்காக சுவாமி ஓடியிருக்கார்ன்னு அர்த்தம். அதனால நீ கவலைப் படாம போ. சுவாமியை நிந்திக்காம, அவருக்குப் பண்ற பூஜையை நிறுத்திடாம உன் வேலையைக் கவனி. இன்னிக்கு இல்லேன்னாலும் ஒரு நாள் நிச்சயமா உன்னோட கஷ்டங்களை அவர் நிவர்த்தி பண்ணிடுவார்” என்று நம்பிக்கை அளித்த மகா பெரியவா, அந்தப் பக்தருக்குப் பிரசாதம் கொடுத்து அனுப்பிவைத்தார்.

மகா பெரியவா - 33

ருடம் 1918. கதராடைகள் விற்பனைக்கு வந்த இந்த ஆண்டு முதல், கதர் வஸ்திரத்தையே உடுத்தத் தொடங்கினார் பெரியவா. எவ்வளவு முரட்டுத் துணியாக இருப்பினும், கதர் அணிவதில் அவருக்கு அலாதிப் பிரியமும் மகிழ்ச்சியும் உண்டு.

தனுஷ்கோடியில் சுவாமிகள் நீராடியபோது, மடத்தின் சிப்பந்திகள் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஜோடி கதர்வேஷ்டிகள் வழங்கினார். மில் நூல் ஆடைகளை அணிந்திருந்தவர்களை அழைத்து, அந்த ஆடைகளைக் கடலில் எறிந்துவிடும்படி கட்டளையிட்டார். சிப்பந்திகளுக்குக் கொடுப்பதற்கென எட்டு முழம் வேஷ்டிகளில் சுமார் 200 ஜோடிகள் மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்டன.

காந்தியடிகளின் திட்டங்களில் கதர் உற்பத்தியும் முக்கியமான அம்சமாக விளங்கி வந்த அந்த நாளில், வெளிநாட்டு உடைகளை நெருப்பில் எரிப்பது தேசபக்தர்களின் பணிகளில் ஒன்றாக அமைந்திருந்தது. ‘அந்நியநாட்டுத் துணிகளை மக்கள் இந்நிலையில் எரிப்பதைவிட, கடலில் எறிவது ஒரு சாவதானமான முறையாகவும் சாத்விகமான முறையாகவும் இருக்கும்’ என்பது மகா பெரியவாளின் எண்ணமாக இருந்தது. மடத்தின் சிப்பந்திகள் பலர் அன்று முதல் கதராடையையே அணிவதென்று தீர்மானித்தார்கள்.

ஒருநாள், மகா பெரியவா கோடியக்கரையில் நீராடிவிட்டு கடற்கரை ஓரமாக நடந்து வந்தபோது, அடியார்கள் கூட்டம் அவரைப் பின்தொடர்ந்து வந்தது. மடத்தில் நெருங்கிய தொடர்புள்ள மிராசுதார்கள் பலர் சுவாமிகளுடன் வந்தார்கள். வழியில் அவர்கள் ஏழை மக்களுக்குப் பணமும், துணியும் கொடுத்து வந்தார்கள். வழக்கம்போல் பிச்சை வாங்குவோரின் கூட்டத்தில் ‘நான் முந்தி, நீ முந்தி’ என்ற போட்டியுடன் சிறு குழப்பமும் நேர்ந்தது. கூட்டத்தில் ஒருவர் தனக்கே தெரியாமல் சுவாமிகளை வழிமறித்து நின்றுவிட்டார். உடன்வந்த மிராசுதார் ஒருவருக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. அந்த ஏழையை தன் கைத்தடியால் ஓங்கி அடித்துவிட்டார். ஏழையின் உடலிலிருந்து ரத்தம். கருணையே உருவான காமகோடி பெரியவா அதைக் கண்டு மனம் வெதும்பினார்.

அந்த மிராசுதாரை அருகில் அழைத்து, “நீங்க சாஸ்திரங்கள் நிறைய படிச்சவர். கடவுள் உங்களுக்கு வேண்டிய அளவு பொருளும் நல்ல அறிவும் கொடுத்திருக்கார். சாந்தமும், ஜீவகாருண்யமும், எல்லா பிராணிகளிடத்தும் தயையும், உங்களுக்கு சாஸ்திரங்களிலிருந்து ஏற்பட்டிருக்க வேண்டும். மனிதன் எல்லாவற்றிலும் முதன்மையாகச் சினத்தை அடக்கவேண்டும்...” என்று அறிவுறுத்தினார். அடிப்பட்டவருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அவரின் இடத்துக் குத் துணையுடன் அனுப்பிவைத்தார். தன் தவற்றை உணர்ந்து வருந்தினார் மிராசுதார். அன்று முதல் தன் கோபத்தை அடக்கப் பழகினார். வாழ்நாளின் பிற்பகுதியில் முறைப்படி சந்நியாச ஆசிரமம் புகுந்து ஆத்மஞானியாக விளங்கினார்.

நேர்மை தவறாத நாய் அது. நன்றியும் விசுவாசமும் உடையது. மகா பெரியவா 1927-ம் வருடத்தில் யாத்திரை மேற்கொண்டபோது, இந்த நாயும் மடத்துப் பரிவாரங்களைப் பின்தொடர்ந்து சென்றது. மடத்திலிருந்து கொடுக்கப்படும் உணவை மட்டுமே சாப்பிடும். ‘மடத்து நாய் சாப்பிட்டுதா’ என்று தினமும் மறக்காமல் விசாரிப்பார் பெரியவா. ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு முகாம் மாறும்போது, இந்தப் பிராணியும் பல்லக்கின் கீழ் நடந்து செல்லும். போகிற வழியில் கிராமத்து ஜனங்கள் சுவாமிகளை தரிசிப்பதற்காக ‘ஊர்வலம்’ நிற்கும். இந்த நாய் சற்று முன்னேறிச் சென்று நிற்கும். அங்கிருந்தபடியே பயபக்தியுடன் பார்த்துக்கொண்டிருக்கும். பயணக்குழு புறப்பட்டதும் இந்த நாய் பழையபடி பல்லக்குக்கு அடியில் வந்து நடக்கத் தொடங்கும்.

ஒருநாள், சிறுவன் ஒருவன் இதன் மீது கல்லெறிந்து விட்டான். பதிலுக்கு அவனைத் துரத்திச் செல்ல ஆரம்பித்தது நாய். மடத்து நிர்வாகிகள் பயந்துவிட்டார்கள். நாயின் கண்களைக் கட்டி, இருபத்தைந்து மைல்களுக்கு அப்பால் இருந்த கிராமம் ஒன்றில் கொண்டுவிட்டுவிடுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஆனால், கொண்டுவிட்ட நபர் திரும்பி வருவதற்குள் மகா பெரியவா இருக்குமிடத்துக்கு அந்த நாய் வந்துவிட்டது! அன்று முதல் மகா சுவாமிகளை தரிசித்தப் பிறகுதான், தான் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டது. பின்பு, தான் இறக்கும் வரை மடத்திலேயே இருந்தது அந்த நாய்.

‘சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரை தரிசிக்க வேண்டும்’ என்பது மகா பெரியவாளின் நீண்ட நாள் விருப்பம். ஆனால், நூறு வருடங்களாக ஆசார்யர் எவரும் அந்தக் கோயிலுக்குச் சென்றதில்லை. காரணம், கோயிலின் தீட்சிதர்கள், பீடாதிபதிகளைக்கூட விபூதியை நேரடியாகக் கிண்ணத்திலிருந்து எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல் இருந்துவந்தார்கள். மற்ற அனைத்துக் கோயில்களிலும், ஒரு கெளரவமாகக் கருதி மடாதிபதிகளுக்கு இந்தச் சலுகை அளிக்கப் படுவதுண்டு. சிதம்பரத்திலிருந்த பக்தர்கள் ‘மகா பெரியவா தங்கள் மண்ணை மிதிக்கவேண்டும்’ என்று பெரிதும் விரும்பினார்கள். சுவாமிகள் மனதிலும் ஸ்ரீநடராஜரை தரிசிக்கும் எண்ணம் இருக்கவே, 1933-ம் வருடம், மே மாதம் 18-ம் தேதி சிதம்பரத்துக்குச் சென்றார். தீட்சிதர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு அமோக வரவேற்பு அளித்து மகிழ்ந்தார்கள்.

மறுநாள் காலை நான்கு மணிக்கெல்லாம் கோயில் குளத்தில் ஸ்நானம் செய்தார் மகா பெரியவா. அனுஷ்டானங்களையும் முடித்துக் கொண்டார். கர்ப்பக்கிரக, வாசலில் நின்றார். மணி அடித்தது கதவுகள் திறந்தன. இடது பதம் தூக்கி நிற்கும் நடராஜரை மோன நிலையில் தரிசித்தார். உள்ளே காலை வேளை பூஜையிலிருந்த தீட்சிதருக்கு மகானைக் கண்டதில் இன்ப அதிர்ச்சி. மற்ற தீட்சிதர்களுக்குத் தகவல் அனுப்பினார். அனைவரும் ஓடோடி வந்தார்கள்.

“நாங்கள் அனைவரும் சேர்ந்து தங்களுக்குக் கோயிலுக்குள் சம்பிரதாய வரவேற்பு கொடுக்க எண்ணியிருந்தோம். தாங்கள் வந்த நேரம் நாங்கள் ஒருவருமே இங்கு இல்லாமல் போய்விட்டதில் எங்களுக்கு வருத்தம்” என்று மருகினார்கள் தீட்சிதர்கள். “பரவாயில்லை... ஸ்ரீநடராஜரின் விஸ்வரூப தரிசனத்துக்காகத்தான் அத்தனை சீக்கிரம் வந்தேன். மத்தபடி, சிதம்பரத்தில் இருக்கும் நாள்களில் நான் நிறைய தடவை கோயிலுக்கு வருவேன்” என்றார் பெரியவா. தீட்சிதர்களின் வேண்டுகோளுக்கிணங்கி கோயிலில் சில நாள்கள் தங்கியிருந்தார். ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீசந்திரமெளலீஸ்வரர் பூஜைகளைச் செய்தார்.

- வளரும்...

அம்பிகையே அனைத்துமாய்...

டியில் அம்மனே சகல தெய்வங்களின் அம்சமாக விளங்குகிறாள் என்பார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். அதற்குச் சான்றாக பல ஆலயங்கள் தமிழகத்தில் உள்ளது. இருக்கன்குடி மாரியம்மன் சிவாம்சம் கொண்டவள் என்பதால் அங்கு அம்மனுக்கு எதிரே சிம்மத்துக்கு பதிலாக நந்தி வீற்றிருக்கிறார். இந்த மாரிக்கு நெற்றிக்கண்ணும் இருப்பதாக தல வரலாறு கூறுகிறது. வீரபாண்டி கௌமாரியம்மன் குமரக்கடவுளைத் தன்னுள் ஐக்கியப்படுத்திய மகாசக்தி. இதனால் இவள் செவ்வாய் தோஷம் நீக்கும் அன்னையாக வழிபடப்படுகிறாள்.

மகா பெரியவா - 33

திருப்பூர் கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு இருபுறமும் திருமகளும் கலைமகளும் சுயம்புவாக எழுந்தருளியுள்ளனர். இதனால் இங்கு அம்மன் முப்பெரும் தேவியராக அருள்பாலிக்கிறார். பெரியபாளையம் பவானி அம்மன் விஷ்ணு துர்க்கையாகவே பாவிக்கப்படுகிறாள். இதனால் இங்கு கூடும் பக்தர்கள் வித்தியாசமாக 'கோவிந்தா கோவிந்தா' என கோஷமிடுவதைக் காணலாம். கண்ணனின் தங்கையான விஷ்ணு துர்க்கை மகாவிஷ்ணுவின் அம்சமானவள் என்கிறார்கள்.

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் 18 சித்தர்களின் அம்சமானவள் என்பதால் தீராத நோயெல்லாம் தீர்க்கும் மகமாயி என்று போற்றப்படுகிறாள். வேப்ப மரத்தடியே வீற்றிருக்கும் கணபதி மூர்த்தமெல்லாம் பராசக்தியின் அருளோடு ஆசி வழங்குவதாக ஐதீகம்.