Published:Updated:

மகா பெரியவா - 34

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

`சிவ தருமம்... சிவ தருமம்!'

மகா பெரியவா - 34

`சிவ தருமம்... சிவ தருமம்!'

Published:Updated:
மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

க்கட்டான சூழ்நிலைகளில், வர்க்கபேதமின்றி பலரும் மகா சுவாமிகளை அணுகி அறிவுரையும், ஆசியும் பெறுவது உண்டு. ஒவ்வொருவரின் பிரச்னையையும் அழகாகக் கேட்டறிந்து தீர்த்து வைப்பார் மகா பெரியவா.

மகா பெரியவா - 34

1920-களில் நடந்த சம்பவம் இது. கும்ப கோணத்தில் இல்லறத்தை விட்டுத் துறவு பூண்ட பெரியவர் ஒருவர் அடிக்கடி எல்லா வீதிகளிலும் காணப்படுவார். பாடகச்சேரி சுவாமிகள் என்று பரவலாக அறியப்பட்ட அவருக்கு அப்போது 30 வயது இருக்கும். தூய வெள்ளை வேஷ்டி ஒன்றை இடுப்பிலும் கழுத்திலுமாகச் சுற்றிக்கொண்டு, நெற்றியில் விபூதி அணிந்து, சிறிய பித்தளைச் சொம்பைக் கயிற்றில் கோத்து, அதைத் தன் இடுப்பின் முன்புறம் தொங்கவிட்டுக் கொண்டிருப்பார். கண்களில் ஒளி வீசும். கையில் சிறியதொரு தடியையும் ஏந்தி வருவார். இரண்டொரு வார்த்தைகள் மட்டுமே பேசுவார். வேளாள வகுப்பைச் சேர்ந்தவர். அவருக்குக் காலபைரவர் உபாசனை உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாடகச்சேரி சுவாமிகள் கொண்டுவரும் சொம்பில் பொதுமக்கள் தாராளமாக நாணயங் களைப் போடுவார்கள். தொழிலாளர்களும் வியாபாரிகளும் தவறாமல் அந்தச் சொம்பைச் சிறு நாணயங்களால் ஒவ்வொரு நாளும் நிரப்பி விடுவார்கள். அவர் எவரையும் வற்புறுத்தி எதையும் கேட்கமாட்டார். கும்பகோணத்தில் ஒற்றை மாட்டு வண்டிகளை வாடகைக்கு விடும் சொந்தக்காரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு காலணாவையாவது அந்தச் சொம்பில் போடாமல் இருக்கமாட்டார்கள். ‘இவர் எதற்காக நிதி வசூல் செய்கிறார்’ என்பது பற்றி ஒருவரும் கவலைப்பட்டதில்லை. நாணயமாகச் சிறிது சிறிதாகச் சேர்ந்த தொகை, முடிவில் ஒரு பெரிய நிதியாகத் திரண்டது. பாடகச்சேரி சுவாமிகளின் பார்வையையும் மனத்தையும் அந்த ஊரில் மிகப் பழைமையான ஸ்ரீநாகேஸ்வர ஸ்வாமி ஆலயத் தின் பழுதடைந்த கோபுரம் ஈர்த்திருந்தது.

மகா பெரியவா - 34

அப்பர் சுவாமிகள் பாடிய தலங்களில் ஒன்றான இந்த ஆலயத்தின் கோபுரம், மரம் செடிகள் முளைக்கப்பெற்றும் அநேக இடங்களில் பிளவு கண்டும், பொதுமக்களுக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய நிலையில் இருந்தது. கோபுரத்தைச் சீர்படுத்த நிறைய நிதி தேவைப்பட்டது. அந்த ஆலயத்தின் மற்ற பகுதிகளும் சீர்படுத்தப்பட வேண்டிய நிலையில்தான் இருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாடகச்சேரி சுவாமிகள், தாம் சேர்த்த பொருளைக்கொண்டு அந்த ஆலயத்தைச் சீர் செய்யும் பணியில் சில வருடங்கள் ஈடுபட்டுத் திருப்பணியைச் சீரிய முறையில் செய்து முடித்தார். பின்னர் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. அப்போது அவர் மனதுக்குக் கவலைத் தரக்கூடிய ஓரு நிகழ்ச்சி நடந்தது.திருப்பணியில் ஈடுபட்டிருந்த விஸ்வகர்ம வகுப்பினர், ‘அபிஷேகத்தைத் தாங்களே முதலில் செய்யவேண்டும்’ என்றும், ‘அதன்பிறகே ஆதிசைவர்களின் அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்யவேண்டும்’ என்றும் கூறினர். இதில் அபிப்ராயபேதம் ஏற்படவே, விஸ்வகர்ம வகுப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ‘உள்ளன்புடன் செய்து வந்த இறைவன் திருப்பணி பூர்த்தியடையாமல் போய்விடுமோ’ என்ற கவலை பாடகச்சேரி சுவாமிகளுக்கு ஏற்பட்டது. கும்பாபிஷேகத்துக்கு நாள் நெருங்கிவிடவே பொதுமக்களும் ஒருவித பதற்றத்தில் இருந்தனர்.

அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணுபுரத் தில் முகாம் கட்டியிருந்த மகா பெரியவரை தரிசிக்கச் சென்றனர். பாடகச்சேரி சுவாமிகள், ஸ்ரீநாகேஸ்வர ஸ்வாமி ஆலய கும்பாபிஷேகத்துக்கு ஏற்பட்ட தடங்கல்களை எடுத்துரைத்தார்.

‘பெரியவாதான் இதற்கு ஒரு முடிவு ஏற்பட வழி கண்டறிந்து, குறித்த காலத்தில் கும்பாபிஷேகம் நடக்க அனுக்கிரகம் செய்யணும்’ என்று வேண்டிக் கொண்டார். பெரியவா அதற்குச் சம்மதித்து, சிற்பிகளையும் ஆதிசைவர்களையும் தனித்தனியே வரவழைத்து, அவர்களின் நிலைகளையும் ஆதாரங்களையும் கேட்டறிந்தார். மடத்திலிருந்து கூறும் முடிவை இருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர்களிடம் தனித்தனியே ஓர் ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்டார்.

இரு தரப்பினரும் நீதிமன்றத்திலும் அதுபோலவே மனுவையும் தாக்கல் செய்தார்கள். மகாபெரியவாவின் முடிவையே இதில் தீர்ப்பாகக் கூறுவதென்று நீதிபதியுடன் முடிவு செய்து கொண்டனர். விக்கிரகங்களை அமைக்கும் விஸ்வகர்ம வகுப்பினர் கும்பாபிஷேகக் காலங் களில் முதலில் அபிஷேகம் செய்வதை சாஸ்திரங் கள் குறிப்பாகத் தடைசெய்யவில்லை என்றும், அவ்விதம் செய்வதால் மூர்த்திகளின் பெருமை பாதிக்கப்படாது என்றும், கும்பாபிஷேகத்துக்கு முன் அவர்கள் அபிஷேகம் செய்வதை அனுமதிக்க லாம் என்றும் மகா பெரியவா தெரிவித்திருந்த அபிப்பிராயத்தை ஆதாரமாகக்கொண்டே நீதிபதியின் தீர்ப்பு அமைந்தது. பின்னர், இரு தரப்பினரும் மனத்தாங்கல் எதுவுமில்லாமல் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை 1923-ம் வருடம் ஜூன் மாதம் வெகு விமரிசையாக நடத்தி வைத்தார்கள்.

மகா பெரியவா - 34

பாடகச்சேரி சுவாமிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்படி, ஆலயங்கள் தொடர்பாக அந்த நாள்களில் ஏற்பட்ட எத்தனையோ பிரச்னைகளுக்குச் சுமுகமாகத் தீர்வு கண்ட மகான் மகா பெரியவா.

கும்பகோணத்தில் புகழ்மிக்க நாகஸ்வர வித்வானாக விளங்கியவர் சிவக்கொழுந்து. அவரின் இளைய சகோதரர் ஒருவர் வாழ்வின் பெரும் பகுதியை, தர்ம காரியங்களிலேயே ஈடுபடுத்தி வந்தவர். கும்பகோணம் சங்கர மடத்துக்குப் பின்புறம் காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்

அமைந்திருந்தது. அந்த நாளில் அந்த ஆலயத்துக்குக் கோபுரம் இல்லாமலிருந்தது. இந்தக் குறையை உணர்ந்தார் சிவக்கொழுந்துவின் சகோதரர்.

பித்தளைச் சொம்பினால் ஓர் உண்டியலைத் தயாரித்து, ஒவ்வொரு நாளும் அதை ஆலயத்தின் எதிரில் சாலையின் ஓரமாக ஒரு நாற்காலிமீது காலை ஐந்து மணிக்கே வைத்துவிடுவார் அவர்.

விடியுமுன் காவிரியில் நீராடி, விபூதி ருத்திராக்ஷம் தரித்து, அந்த உண்டியல் அருகே சில மணி நேரம் ‘சிவதருமம் சிவதருமம்’ என்று கூறிக்கொண்டே நிற்பார். அவருடைய தோற்றமும் குரலும் அந்த வழியே காவிரிக்கு நீராடச் செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கும். வேறு அலுவலுடன் செல்பவர்களும் சிவபக்தரின் குரல் கேட்டு நிற்பார்கள். அந்தச் சொம்பில் ஒரு தம்பிடியையாவது போடாமல் அவரைத் தாண்டி யாரும் போகமாட்டார்கள். ஒவ்வொரு நாளும் இவர் மடத்துக்கு வந்து வெகு தொலை வில் நின்று மகா பெரியவரை தரிசனம் செய்து விட்டு வருவது வழக்கம்.

சுமார் ஐந்தாறு வருடங்கள் நாணயமாகச் சேமித்த தொகையைக் கொண்டு காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்துக்குக் கோபுரம் அமைத்துவிட்டார் அந்தச் சிவபக்தர். அவரின் கைங்கர்யத்தைக் கேள்விப்பட்டு அவரை மடத்துக்கு அழைத்தார் மகா பெரியவா. சுயநலமற்ற அவரின் சேவையைப் பாராட்டி, பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

கும்பகோணம் அரசுக் கல்லூரியின் பெளதிகப் பேராசிரியராகவும் பின்னர் அந்தக் கல்லூரியின் முதல்வராகவும் விளங்கியவர் பி.ராஜகோபால் ஐயர். இவர் மகா சுவாமிகளின் கலையறிவையும் புலமையையும் நண்பர்கள் மூலம் கேள்வியுற்று அவரை தரிசனம் செய்து உரையாட வேண்டுமென விரும்பினார்.

இருப்பினும், ‘வைதீக ஆசார நியமங்களுடன் விளங்கும் ஒரு சந்நியாசியும் பீடத்துக்கு அதிபதியுமான சுவாமிகள், தன்னைச் சந்தித்து பேசுவாரா’ என்ற ஐயப்பாடு காரணமாக பெரியவா தரிசனத்தை ஒத்திப் போட்டுக் கொண்டேயிருந்தார்.

ஒருநாள் மடத்துக்குச் சென்றார் ராஜகோபால் ஐயர். ஆசார்ய ஸ்தானத்தில் உள்ள சுவாமிகளுக்கு எவ்வித வந்தனை வழிபாடுகளைச் செய்யவேண்டும் என்பதை ஐயர் அறிந்திருக்கவில்லை. இருந்தாலும் அவரது உள்ளத்திலிருந்த அன்பை மட்டும் உணர்ந்துகொண்டார் மகா பெரியவா.

அவரிடம் முதலில் கல்லூரியைப் பற்றியும் பொதுவான விஷயங்கள் பற்றியும் பேசினார். பின்னர் பெளதிக சாஸ்திரத்தின் நுட்பங்கள் குறித்து விரிவாக அலசினார்.

அந்த நேரம் பி.வி.மாணிக்க நாயக்கர் என்பவர் சுவாமிகளை தரிசிக்க வந்தார்; மராமத்து இலாகா கண்காணிப்பு பொறியாளராக இருந்தவர். மடத்துக்கு அடிக்கடி வருவார். பெரியவாவிடம் ஆழ்ந்த பக்தியும் மதிப்பும் கொண்டவர்.

கணித சாஸ்திரத்தில் எம்.ஏ பட்டம் பெற்ற நாயக்கருக்கு ஐயரை அறிமுகப் படுத்தினார் மகா சுவாமிகள். மூவரும் வான சாஸ்திரம் பற்றி உரையாடினர்.

இந்தக் கலையில் நமது புராதன வழிக்கும், மேல்நாட்டினர் வழிக்கும் உள்ள ஒற்றுமைகளை விளக்கினார் பெரியவா. கல்லூரியிலிருந்து தூரதிருஷ்டி கண்ணாடி ஒன்றை வரவழைத்து தனது விளக்கங்களை மேலும் தெளிவுபடுத்தினார்.

‘சர்வ கலாசாலைப் படிப்பு எதுவும் இல்லாமலேயே இப்பயிற்சி களெல்லாம் சுவாமிகளுக்கு ஏற்பட்டது எப்படி’ என்பதில் இரண்டு பேராசிரியர்களுக்கும் வியப்பு!

பி.வி.மாணிக்க நாயக்கர் சம்ஸ் கிருதத்தையும் பிற மொழிகளையும் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எளிதாக உச்சரிக்கவும் எழுதவும் நூதன முறையைக் கண்டுபிடித்து, அதை ஒரு புத்தக வடிவில் வெளியிட்டிருந்தார். மகா பெரியவா, அவரது அந்த முயற்சியைப் பெரிதும் பாராட்டிப் புத்தகத்துக்கு ஓர் ஸ்ரீமுகமும் கொடுத்திருக்கிறார்!

- வளரும்...

உணவு உண்டால் பாவம்?

ஸ்ரீகிருஷ்ணர் ஒருமுறை பாண்டவர்களின் தூதுவனாக துரியோதனின் அரண்மனைக்குச் சென்றார். அப்போது துரியோதனன், ‘‘கிருஷ்ணா! உனக்காக விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். இங்கேயே உணவு உட்கொள்ள வேண்டும்!’’ என்றான்.

மகா பெரியவா - 34

அதற்கு பகவான், ‘‘துரியோதனா! என் மேல் பக்தி கொண்டு அன்பு செலுத்தும் பாண்டவர்களையும் என்னையும் துவேஷித்த நீ தரும் உணவை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. மட்டுமின்றி, நீ தர்மம் தவறி நடந்து, பெரியோர்களை அவமதிப்பவன். அதர்மமான வழியில் நடக்கும் நீ அளிக்கும் அன்னத்தை நான் ஏற்க முடியாது. மூன்றாவதாக, நான் இப்போது பாண்டவர்களின் தூதுவன். ஒரு தூதுவன், தான் வந்த காரியத்தை முதலில் கவனிக்க வேண்டும். அதன் பிறகே விருந்து, வைபவம், கேளிக்கை எல்லாம். அதனால், நான் வந்த காரியம் முடியுமுன் நீ அளிக்கும் இந்த விருந்தை ஏற்க முடியாது!’’ என்று கூறினார்.

இங்கு சில தர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன அவற்றை முறையாக நாம் பின்பற்ற வேண்டும்.

‘அதர்மமான வழியில் நடக்கும் ஒருவன் அளித்த உணவைப் புசித்தால், அவனது பாவங்களில் பாதி, உணவு உண்பவரைச் சேரும்’ என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே, எப்போது, எங்கு, எவர், எப்படிக் கொடுத்தாலும் சாப்பிடுவது என்பதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

- பாலா, சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism