Published:Updated:

சிவமயம் - 4

சிவமயம் - மகாசிவராத்திரி
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம் - மகாசிவராத்திரி

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

சிவமயம் - 4

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

Published:Updated:
சிவமயம் - மகாசிவராத்திரி
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம் - மகாசிவராத்திரி

ஓவியம்: ம.செ.,

சைவ அடியார்களுக்கு மகாசிவராத்திரி விரதம் என்பது மிக மிக அற்புதமான வழிபாடு. ஆன்மாக்கள் விழிப்போடு இருந்து கொண்டாடும் விழாவான மகாசிவராத்திரியின் மகிமையை உணர்ந்து, நியமப்படி விரதம் இருந்து எல்லா நலன்களையும் வளங்களையும் பெற வேண்டுமாய் அடியேன் வேண்டிக்கொள்கிறேன்.

மகாசிவராத்திரி
மகாசிவராத்திரி


? மகாசிவராத்திரி விரதத்தின் மகிமைகள் என்ன! எந்த வகையில் அன்று சிவத்தை வழிபடலாம்?

- கே.ராஜராஜன், கடலூர்

சிவராத்திரி என்பது கிருஷ்ண பட்சத்திலிருந்து 14-வது நாள் வரக்கூடிய சதுர்த்தசி புண்ணிய நாள். திரயோதசியில் லோக நன்மைக்காக விஷம் அருந்திய ஈசன் மூர்ச்சையானாற் போல கிடந்தார். அதனால் அவர் நஞ்சுண்டேஸ்வரன் என்று திருநாமம் கொண்டார். இந்த அருள் கோலத்தை சுருட்டப்பள்ளியில் காணலாம். அடுத்த நாளான சதுர்த்தசியில் அநாதியும் அகண்டமுமான தனக்கு அழிவே இல்லை என்று உணர்த்தும் விதமாக நந்தியின் கொம்புகளின் மீது நின்று ஆனந்த தாண்டவம் ஆடினார். அப்போது தேவர்கள் மகிழ்ந்து பூஜை செய்தார்கள். அந்த நாளே மாசி மாத மகாசிவராத்திரி என்கிறது ஒரு புராணம்.

அம்பிகை ஈசனை அடைய தவமிருந்த திருநாளே சிவராத்திரி என்கிறது இன்னொரு புராணம். நமக்கு 18 புராணங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக மகாசிவராத்திரி உண்டான விதத்தைக் குறிப்பிடுகின்றன. உதாரணமாக பழம் கிடைக்காத கோபத்தில் பழநி மலைக்குச் சென்று முருகன் அமர்ந்ததாக நம் புராணங்கள் சொல்லும். ஆனால் வடநாட்டில் புராணங்கள், விநாயகப் பெருமானுக்கு மணம் முடிப்பதில் சர்ச்சை உண்டாகி முருகப்பெருமான் பிரிந்து சென்றதாகக் கூறும்.

இங்கே நைஷ்டிக பிரம்மசாரியான விநாயகர் அங்கே மூன்று திருமணங்கள் புரிந்தவர். வல்லபை என்ற பெண்ணை மணந்து சந்தோஷி மாதா என்ற மகளைப் பெற்றார் என்று சொல்லப்படுகிறது. மேலும் ஸித்தி, புத்தி என்ற இரு பெண்களையும் மணந்து லாப-லட்ச என்ற இரு மகன்களைப் பெற்றெடுத்தார் என்றும் கூறப்படுகிறது. இப்படி புராணங்கள் உலகெங்கும் மாறுபடுகின்றன. இருக்கட்டும்!

பிரதோஷங்கள் நிறைய இருந்தாலும் மகாபிரதோஷம் என்று ஒன்று உண்டு! அமாவாசைகள் நிறைய வந்தாலும் மஹாளய அமாவாசை என்று ஒன்று உண்டு! தேவர்கள் பலர் இருந்தாலும் மகாதேவர் என்று ஒருவர் உண்டு. அவரே நம் ஈசன். அவருக்கு ஒப்புமை சொல்ல ஒருவரும் இல்லை. சைவத்துக்கு மீறிய சமயமும் இல்லை. சிவத்துக்கு மீறிய இறைவனும் இல்லை எனது சைவத்தின் அடிப்படை!

சிவராத்திரி
சிவராத்திரி


அப்படியே சிவராத்திரிக்கு ஈடான விரத நாளே இல்லை என்றும் சொல்லலாம். மகாசிவராத்திரி நாளில் மகா பிரம்மமாகிய சிவம், புவியில் உள்ள அத்தனை சிவலிங்கங்களின் மீதும் நிறைந்து விசேஷத் தன்மையுடன் இயங்குகிறது என்பது ஐதீகம். ஈஸ்வரன், மகாதேவன், சதாசிவம், அதிசதாசிவம், பரம், பராபரம், பரக்ருதி என்று இப்படி படிப்படியாகக் கடந்துதான் சிவத்தை அடைய முடியும் என்பது சைவ தத்துவம். இப்படி யாரும் அடைய முடியாத பிரம்மமான சிவத்தை அடைவது கடினமானது.

சிவமே சிவ வடிவான சிவலிங்கத்தைப் பூஜிப்பதைப் போல நீங்கள் பார்த்திருக்கலாம். அனைத்துக்கும் முதலான மூல வித்து சிவம். அவரே அவரை பூஜிக்கும் அற்புத விரதம்தான் மகா சிவராத்திரி. சிவம் என்ற அந்த பிரம்மத்தை அனைத்து ஜீவன்களும் ஒருசேரக் கொண்டாடும் விழாவே மகாசிவராத்திரி. அந்த பூஜைக்கு பங்கம் வரக்கூடாது என்பதால்தான் அந்த நாளில் காமனை தகனம் செய்தார். ஏதன் மீதும் ஆசை கூடாது என்பதே இந்நாளின் நோக்கம்.

நியமப்படி இந்த நாளில் விரதம் இருப்பது என்றால், திரயோதசி நாள் அதிகாலை தொடங்கி மகா சிவராத்திரி முடியும் வரை இரண்டு நாள்கள் உண்ணாமலும் உறங்காமலும் சிவசிந்தனையோடு இருக்கவேண்டும். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. அதனால் சிற்சில விதி விலக்குகளை மேற்கொண்டு விரதம் இருக்கிறோம். அதாவது மகாசிவராத்திரி அன்று மாலை 6 மணி தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை மட்டுமே உண்ணாமலும் உறங்காமலும் இருக்கிறோம்.

அதிலும் சிலர் அடுப்பில் ஏற்றாத அவல், கனி வகைகள் போன்றவற்றை உண்கிறார்கள். சிலர் ஆலயங்களுக்குச் சென்று பிரசாதங்களை உண்டு விட்டு அதனால் தோஷமில்லை என்று விரதம் இருக்கிறார்கள். சிலர் மூன்றாம் கால பூஜையோடு விரதம் முடித்துக் கொள்வார்கள். இப்படி மனதுக்கு சமாதானம் சொல்லி விதிகளைத் தளர்த்திக் கொண்டே போனால் போகலாம். ஆனால் நியமப்படி விரதம் இருந்தோம் என்ற திருப்தி வரவே வராது.

எனவே கூடுமானவரை உணவு தவிர்த்து, உறக்கம் ஒழித்து, சிவாலய தரிசனமோ, மந்திரப் பாராயணமோ செய்து சிவராத்திரியைச் சிறப்பிக்க வேண்டும். சிவராத்திரி கண் விழிக்கிறேன் என்று சொல்லி டிவியில் சினிமா பார்ப்பது கூடாது. ஆலயம் சென்று இரவில் நடக்கும் நான்கு கால பூஜைகளையும் பார்ப்பது அவசியம். வீட்டில் பூஜிப்பவர்கள் நான்கு காலமும் அனுஷ்டிக்க வேண்டும்.

மறுநாளும் உறங்காமல் இருந்து, மாலை சிவதரிசனம் செய்த பிறகே விரதம் முடிக்க வேண்டும் என்பது ஐதிகம். அம்பிகைக்கு ஒன்பது நாள் என்றால், சிவத்துக்கு ஒரு ராத்திரி. அந்த ஒரு ராத்திரியாவது ஒழுங்காக விரதம் இருப்பது உங்கள் தலைமுறைக்கே நன்மையைச் சேர்க்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வகையில் நீங்கள் எந்த வகையிலும் சிவராத்திரி பூஜையைக் கொண்டாடலாம். சரியைப்படி உடலால் ஆலயத்தில் தொண்டுகள் செய்து செய்து அனுஷ்டிக்க லாம். கிரியைக்குப் பாட வேண்டும், திருமுறைகளை நியமப்படிப் பாடி விரதம் இருக்கலாம். யோக மார்க்கத்தில்... ஆழ்ந்த சிவத் தியானத்தில் அமர்ந்து, மூலாதாரம் தொடங்கி சகல ஆதார சக்திகளையும் இயக்கி... பேரானந்த வெளி, பேரானந்த அகண்டவெளி என நீண்ட பயணம் கொண்டு சிவத்தோடு நிஷ்டையில் கலக்கும் அற்புத ஜாலத்தை அன்று செய்யலாம். இப்படி நிஷ்டையில் ஆழ்பவர்கள் பஞ்ச அவஸ்தையையும் அறுத்தவர்கள். அவர்களை எந்த துன்பமும் அண்டாது.



ஞான மார்க்கத்தில்... சைவத்தின் பெருமைகள் பற்றி பேசி மற்றவர்களை வழிநடத்த வேண்டும். ஞானியர் 4 வகை. பரவித்து, பரவரம், பரவரியன், பிரம்மவசிஷ்டன் என்பவர்களே அவர்கள்.

ஒருவன், தான் மட்டும் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் அவனுக்கு மட்டுமே பலன். மற்றவரை உற்சாகப்படுத்தி ஆலயத் துக்கு அழைத்து வந்து வணங்கச் செய்து வழிகாட்டினால், அனைவருக்குமே நன்மை. அப்படி செய்வதுதான் ஞான மார்க்கம்.

மகாசிவராத்திரியில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்வது, அந்த சிவராத்திரியின் பெருமைகளை உரைப்பது போன்ற ஞான காரியங்களாலும் இந்த மகா சிவராத்திரியை ஆராதிக்கலாம். எனவே வழி எதுவானாலும் மகாசிவராத்திரியில் சிவத்தோடு சிந்தையிலும் செயலிலும் ஒன்றி இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி. இதை மட்டும் விட்டுவிடாமல் கடைப்பிடியுங்கள்.

அறியாமல் இந்நாளில் ஒரு குரங்கு செய்த சிவபூஜைக்கு இரங்கி அதை முசுகுந்த சக்கரவர்த்தியாக மாற்றியவர் அல்லவா அந்த சிவம். மகாசிவராத்திரி நாளில் புலிக்கு பயந்த ஒரு வேடுவன், உயிருக்கு அஞ்சி விடிய விடிய தன்னையும் அறியாமல் செய்த பூஜைக்குப் பலனாக குகனாகப் பிறக்கவில்லையா!

சிவத்தை சிவராத்திரியை அறியாமல் செய்தவருக்கே இப்படியான பலன்கள் என்றால், முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்து சிவத்தைக் கொண்டாடினால் சிவமாகவே மாறி விடலாம்தானே! மகா சிவராத்திரியில், ஒப்புமை சொல்லமுடியாத ஒப்பீடே இல்லாத நம் தேவதேவனைக் கொண்டாடுவோம் வாருங்கள். சிவாயநம!

- பேசுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism