Published:Updated:

வேலிருக்க வினையில்லை, மயிலிருக்க பயமும் இல்லை! மகா ஸ்கந்த ஹோமத்தில் நீங்களும் கலந்துகொள்வது எப்படி?

கந்த சஷ்டி நாளின் நான்காவது நாளான (7-11-21) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை மகா ஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் வினைகள் தீரும்; பயங்கள் போகும்.

கந்த புராணம் நம் சொந்த புராணம் என்பார் வாரியார் சுவாமிகள். கந்தனின் புகழைப் பாடும் கந்த புராணத்தில் சூரபத்மாதியரை சம்ஹாரம் செய்யும் இந்த ஆறு நாள்கள் முக்கியமானவை. அவை கந்த சஷ்டி என்ற பெயரில் முக்கிய விரத நாள்களாகவும் அமைந்து விட்டன. கந்த சஷ்டியின் நான்காம் நாள் ஞான கந்தனின் விஸ்வரூபத் திருநாள் எனப்படுகிறது.
மகா ஸ்கந்த ஹோமம்
மகா ஸ்கந்த ஹோமம்

ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் ஒழிக்கும் திருநாளாகவே கந்த சஷ்டி விழாவைக் குறிப்பிடுகிறார்கள் ஆன்றோர்கள். ஆனைமுகச் சூரனை வென்றதன் மூலம் கந்தன் மாயையை ஒழித்தார். சிங்கமுகச் சூரனை வென்று கன்மத்தை ஒழித்தார். சூரபத்மனை வென்று ஆணவத்தையும் ஒழித்தார் முருகப்பெருமான். சூரபத்மனை ஒழிக்கும் முன்னர், சிவபக்தனான அவனை மன்னிக்கும் விதமாக கந்த சஷ்டியின் நான்காம் நாள் ஞான கந்தனின் மகா விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அருளினார் என்று புராணங்கள் கூறுகின்றன.

சூரபத்மனோடு முருகப்பெருமான் போர் புரிந்து வரும் வேளையில் சூரன் அற்ப மாயையின் துணையால் பல பல மாய வடிவங்களை எடுத்து தேவசேனாபதியாம் முருகப்பெருமானின் படை வீரர்களை அச்சமூட்டினான். இதனால் வெகுண்ட முருகப்பெருமான் அவனது மாயைகளை முடக்கி, அவனது ஆயுதங்களை தமது திருப்பாதங்களின் கீழே பணிய வைத்து அவனை நிராயுத பாணியாக்கி தனிமைப் படுத்தினார். அப்போது அவனிடம் 'மாயையில் இறுமாப்பு கொண்ட அசுரனே, மகாமாயை எனும் சக்தியின் புத்திரனான என் ஞான வடிவை உன்னிடம் காண்பிக்கிறேன். அதற்கு உனக்கு ஞானக் கண்ணையும் அருளுகிறேன்' என்று பிரமாண்ட தனது வடிவை அப்போது காண்பித்தார்.

கந்தன்
கந்தன்

அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகனான தனது திருவடிவைக் காட்டிய முருகப்பெருமானின் திருவடியின் கீழ் இமய மலை, மேருமலை, மந்தார மலை, மாலியவான், கந்தமாதனம், நிஷதம், ஏமகூடம், விபுலம், சுபாசுபம், சுவேதம், சிருங்கம், மகாகிரி, குமுதம், குமாரம் போன்ற பலகோடி மலைகள் காணப்பட்டன. புறத் திருவடியினிடத்தில் பாற்கடல், தயிர்க்கடல், கரும்புச்சாற்றுக்கடல், உப்புக்கடல், நெய்க்கடல், தேன்கடல், சுத்தநீர்க்கடல் போன்ற சமுத்திரங்களும், கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, நர்மதை, தபதி, பம்பை, துங்கபத்திரை, குசை, பாலாறு, மணிமுத்தாறு, பவானி, தாமிரபரணி போன்ற அநேக நதிகளும் காணப்பட்டன.

திருவடி விரல்களிடையே இடி மின்னல் முழக்கம், பல்வேறு கிரகங்கள் காணப்பட்டன. சிந்தாமணி, பாதுகாஞ்சனம், ஸ்யமந்தகமணி, சூளாமணி, சூடாமணி, கௌஸ்துபமணி போன்றவையும் காணப்பட்டன.

கந்தனின் முழங்கால்களிலே வித்யாதார், கின்னரர், கிரும்புருஷர், சித்தர், கந்தருவர், கருடர், பூதர் உள்ளிட்ட கணங்களும், அஷ்ட வசுக்களும், பன்னிரு சூரியர்களும், 11 ரூத்திரர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் காணப்பட்டனர். கந்தனின் திவ்ய சரீரத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் சகல புவனங்களும், ருத்திர கோடிகளும், திருந்தோள்களில் பிரும்ம, விஷ்ணுக்களும் காணப்பட்டனர். இப்படி பேரொளி வெள்ளமாய் பரமேஸ்வர ரூபமென்னும் விஸ்வரூபத்தைக் கண்ட அசுரன் சூரபத்மன் வியந்து நின்றான். இத்தனை பெரிய மகாசக்தியை நான் எதிர்ப்பதா! என்று பணிந்தான். எனினும் இந்த அளவில்லாத ஆற்றலாலேயே தன்னுடைய முடிவும் நடைபெற வேண்டும் என்று எண்ணி முருகப்பெருமானை எதிர்க்கவும் தொடங்கினான் என்கின்றன புராணங்கள்.

தணியல்
தணியல்

இந்தப் பிரமாண்ட வடிவைக் காட்டிய கந்த சஷ்டியின் நான்காம் நாள் ஞான தினமாகப் போற்றப்படுகிறது. சிந்தையில் மகிழ்வைத் தரும் ஞான கந்தனின் சிறப்புக்குரிய தலங்களுள் ஒன்று தணியல். சிங்காரபுரம் என்று முதலில் போற்றப்பட்ட இந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. மத்திய திருத்தணிகை என்னும் இந்த ஊரில் தான் அசுரனை அழித்த தேவசேனாபதியாம் முருகப்பெருமான் தந்து சினம் தணிந்தாராம். அதனால் இந்த ஊரும் தணியல் என்று ஆனதாம். இங்கு சினம் தணிந்து தேவியரோடு தனித்திருந்த முருகப்பெருமான், தேவர்களின் குறைகளை எல்லாம் தீர்த்தார் என்றும் கூறப்படுகிறது.

திருச்சி கோயில்கள் - 17: பரவெளி தரிசனம் காட்டும் பாலக்கரை வெளிகண்ட நாதர் ஆலய மகிமைகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புராணப் பெருமைகளும் வரலாற்றுச் சிறப்புகளும் கொண்ட இந்த தலத்தில் வரும் கந்த சஷ்டி விழாவை ஒட்டி உங்கள் சக்தி விகடனும் தணியல் முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து மகாஸ்கந்த ஹோமம் ஒன்றை நடத்த உள்ளது. கந்த சஷ்டி நாளின் நான்காவது நாளான (7-11-21) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை மகா ஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் வினைகள் தீரும்; பயங்கள் போகும். எத்தனை எத்தனை தடைகள் வந்தாலும் அவை கந்தனின் அருளால் விலகி காரிய ஸித்தி உண்டாகும்.

மகாஸ்கந்த ஹோமம்
மகாஸ்கந்த ஹோமம்
சென்ற முறை நடைபெற்ற மகா ஸ்கந்த ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரும் எங்களைத் தொடர்பு கொண்டு பல சிக்கல்களை இந்த ஹோமத்தால் நிவர்த்தி செய்து கொண்டோம் என்று பகிர்ந்து கொண்டார்கள். இந்த முறையும் கந்தனின் அருளால் இது நிகழும். ஆம், வேலிருக்க வினையில்லை; மயிலிருக்க பயமும் இல்லை அல்லவா! அரிதான இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு எல்லோரும் இன்புறுவோம்!

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம் + ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு