Published:Updated:

`வேண்டுதலை நிறைவேற்றும் நெல்லிக்கனி பிரார்த்தனை!'

ஜலநாராயணர்
பிரீமியம் ஸ்டோரி
ஜலநாராயணர்

இனிதே நடந்தேறியது மகா சுதர்சன ஹோமம்!

`வேண்டுதலை நிறைவேற்றும் நெல்லிக்கனி பிரார்த்தனை!'

இனிதே நடந்தேறியது மகா சுதர்சன ஹோமம்!

Published:Updated:
ஜலநாராயணர்
பிரீமியம் ஸ்டோரி
ஜலநாராயணர்

அரியும் அரனும் ஒருவரே என்பதை உணர்த்தும் வண்ணம் இறைவன் ஏற்ற திருவடிவம்தான் சங்கர நாராயணர் திருவடிவம். பெருமாளைப் பாட வந்த பேயாழ்வார், ‘தாழ் சடையும் நீண்முடியும் ஒண் மழுவும் சக்கரமும் சூழரவும் பொன்னாணும் தோன்று மால்’ என்று பாடியுள்ளார்.

சைவ வைஷ்ணவ ஒற்றுமைக்காக மகா விஷ்ணுவும் சிவபெருமானும் ஒரே ஆலயத்தில் தனித்தனிச் சந்நிதி கொண்டிருக்கும் தலங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் திருவள்ளூருக்கு அருகிலுள்ள காக்களூரில் (பூங்காநகர் பகுதியில்) அமைந்திருக்கும் அருள்மிகு சிவா விஷ்ணு ஆலயம். இந்தக் கோயிலில்தான் வாசகர்களின் குடும்ப நன்மையை வேண்டி மிக விசேஷமான மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது.

எழிலுற அமைந்துள்ளது இந்த ஆலயம். புண்ணியம் கோடி அருளும் ராஜகோபுர தரிசனத்தைத் தொடர்ந்து ஆலயத்துக்குள் செல்கிறோம். சுதர்சன மகா ஹோமத்தையொட்டி முகப்பு வாயிலும் முகப்பு மண்டபமும் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டிருந்தது ஆலயம்.

ஆலயத்தில் சிவபெருமான் சந்நிதிக்கும் விஷ்ணுவின் சந்நிதிக்குமாக இரண்டு கொடி மரங்கள் அமைந்துள்ளன. அதேபோல் சிவன் சந்நிதியின் வலப்புறத்தில் ஒருவர் விஷ்ணு சந்நிதியின் இடப்புறத்தில் ஒருவர் என இரண்டு துவாரபாலகர்களைக் காண்கிறோம்.

பிராகாரத்தில் கன்னிமூலை கணபதி, செல்வகணபதி, ஐயப்பன், ராதா ருக்மிணி சமேத வேணுகோபாலர், வள்ளி தெய்வானை சமேதராக அழகு முருகன், கன்னிகா பரமேஸ்வரி, ஆஞ்சநேயர், சீதாபிராட்டி மற்றும் லட்சுமணன் ஆகியோருடன் கோதண்டராமர், மகாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம்.

வேங்கடேசப் பெருமாளின் சந்நிதிக்கு வருகிறோம். சங்கு-சக்ர தாரியாக, அபயம் மற்றும் கடி ஹஸ்தம் காட்டியபடி, நவமணிகளால் இழைக்கப்பட்ட தங்கக் கவசம் தரித்துக் காட்சி தருகிறார் பெருமாள். அவருக்கு எதிரில் கருடாழ்வார் தரிசனம்.

சிவனார் சந்நிதியில், திருமுகம் தெரியும் வண்ணம் திருமேனியில் கவசம் தரித்து, திருமுடியில் ஐந்தலை நாகம் குடை பிடிக்க அழகிய திருக்கோலத்தில் அருள்கிறார் புஷ்பவனேஸ்வரர். இவரின் சந்நிதிக்கு எதிரில் நந்திதேவர் தரிசனம். சந்நிதிக்கு இடப்புறத்தில் அருள்மிகு பூங்குழலி அம்பிகை சந்நிதி கொண்டிருக்கிறாள். பூக்கள் சூடப்பெற்ற கூந்தலை உடையவள் என்பதால் ‘பூங்குழலி’ என்னும் திருப் பெயராம்!

அனைத்து தெய்வங்களையும் கண்ணார தரிசித்து, உள்ளம் உருகப் பிரார்த்தித்துவிட்டு, ஆலயத்தின் பிரதான மூர்த்தியாகவும், வரப் பிரசாதியாகவும் விளங்கும் அருள்மிகு ஜலநாராயணர் சந்நிதிக்கு வருகிறோம்.

`வேண்டுதலை நிறைவேற்றும் நெல்லிக்கனி பிரார்த்தனை!'
`வேண்டுதலை நிறைவேற்றும் நெல்லிக்கனி பிரார்த்தனை!'

ஶ்ரீஜல நாராயணர் தரிசனம்

சில அடிகள் ஆழமுள்ள தண்ணீர் நிரம்பிய தொட்டி போன்ற அமைப்பில், பதினோரு தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது, கால்களை மடக்கி விண்ணைப் பார்த்தபடி சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஜலநாராயணர்.

இவர் தமது இடது மேல்கரத்தில் கதாயுதமும், இடது கீழ்க்கரத்தில் சங்கும், வலது மேல் கரத்தில் சுதர்சன சக்கரமும், வலது கீழ்க்கரத்தில் வேண்டிய வரங்களை வேண்டியபடியே அருள் வதற்கு அட்சய பாத்திரமும் ஏந்தியிருப்பதைக் காண்கிறோம். ஜலநாராயணரை தரிசிக்க தரிசிக்க மனத்தில் அவ்வளவு ஆனந்தம்.

நேபாள நாட்டின் காட்மாண்டு நகரில் உள்ளது போலவே இந்தக் கோயிலிலும் காட்சி அருள்கிறார் ஜலநாராயணர். ஆனால், நேபாளத்தில் தாயார் கிடையாது. இந்தக் கோயிலில் ஜலநாராயணரின் திருவடிகளுக்கு அருகில், தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்மிகு ஜலநாராயணி தாயாரையும் தரிசிக்கக் கிடைக்கும் வாய்ப்பு, இக்கோயிலின் தனிச் சிறப்பு!

ஜலநாராயணருக்கும் தாயாருக்கும் ஏகாதசி நாள்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. அப்போது, தண்ணீர் முழுவதையும் வெளியே எடுத்துவிட்டு புதுத் தண்ணீர் நிரப்புகின்றனர்.

பிறகு பெருமாளுக்குப் பன்னீர், சந்தனம் போன்ற வாசனை திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் மற்றும் சிறப்பு வழிபாடு நடை பெறுகிறது.

இந்தக் கோயிலில் ஜலநாராயணர் சந்நிதி அமைந்திருப்பதன் பின்னணி பற்றி ஆலய நிர்வாகி பசுபதி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘`பத்து வருடங்களுக்கு முன்பு ஆலயம் கொஞ்சம் கொஞ்சமாக சாந்நித்தியம் குறையத் தொடங்கியது. பிரச்னம் பார்த்தபோது ராஜகோபுரத்துக்கு நேரெதிரில் நீர்க்குத்து இருப்பதால்தான் அப்படி நடக்கிறது என்று தெரிய வந்தது.

ஆன்மிகப் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டோம். அவர்கள் கூறியபடி இக்கோயிலில் அருள்மிகு ஜலநாராயணரைப் பிரதிஷ்டை செய்தோம். அதன்பிறகு பெருமாளின் அருள் கடாட்சம் பொங்கிப் பெருகியது ஆலயத்தில். அவரை பிரதிஷ்டை செய்த சில நாள்களிலேயே, நீண்டகாலமாக பூக்காமல் இருந்த கோயிலின் நாகலிங்க மரம் பூக்கத் தொடங்கிவிட்டது!’’ என்று பூரிப்பும் சிலிர்ப்புமாகக் கூறினார்.

`வேண்டுதலை நிறைவேற்றும் நெல்லிக்கனி பிரார்த்தனை!'

நெல்லிக்கனி பிரார்த்தனை!

ஏகாதசி தினத்தில் அருள்மிகுஜலநாராயணர் சந்நிதியில் நெல்லிக்கனி பரிகார பூஜை நிகழ்கிறது. சுதர்சன மகா ஹோமம் நிகழ்ந்த அன்றைய தினமும் ஏகாதசித் திருநாள். ஆகவே, அன்றும் வழிபாட்டுக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, உத்தியோகத்தில் பிரச்னைகள் என்று பல பிரச்னைகளால் துன்பப்படுபவர்கள், ஜல நாராயணர் சந்நிதிக்கு வந்து, தங்கள் கோரிக்கையை சங்கல்பம் செய்து கொள்கின்றனர்.

பின்னர் ஒரு வலம்புரிச் சங்கில் பன்னீர் நிரப்பப்பட்டு, மகாலட்சுமியின் அம்சமான நெல்லிக்கனியை அதனுள் வைக்கிறார்கள். பின்னர் மலர்களால் அலங்கரித்து, ஜல நாராயணர் சந்நிதியை மூன்று முறை வலம் வந்த பிறகு, வலம்புரிச் சங்கில் உள்ள பன்னீரைப் பெருமாளின் திருவடிகளில் அபிஷேகம் செய்கிறார்கள். இதன் மூலம் சகல பிரச்னைகளும் நீங்கும்; நம் விருப்பங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

அதன்படி ஜலநாராயணருக்கான வழிபாடுகள் நிறைவேறியதும், திருக்கோயில் நிர்வாகமும் சக்தி விகடனும் இணைந்து நடத்திய சுதர்சன மகா ஹோமம் தொடங்கியது.முன்பதிவு செய்துகொண்ட வாசகர்களின் பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்து - சிறப்பு சங்கல்பத்துடன் தொடங்கி, மகா சுதர்சன ஹோமம் மிக அற்புதமாக நடந்தேறியது. வணங்கி வழிபட்டுச் சிலிர்த்தோம்.

சுடராழி கைக்கொண்ட சுந்தரரூபமான ஜலநாராயணப் பெருமாளின் திருவருளாலும் ஶ்ரீசுதர்சனரின் அனுக்கிரகத்தாலும் வாசகர் களின் பிரார்த்தனைகள் விரைவில் கைகூடும்; அவர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும் எனும் நம்பிக்கையோடும் மலர்ச்சியோடும் விடைபெற்றோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism