Published:Updated:

தோஷங்கள் நீக்கும் மகா சுதர்சன ஹோமம்!

சுதர்சன ஜயந்தி திருநாளில் இறையானூர் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் சிறப்பு ஹோமம்!

பிரீமியம் ஸ்டோரி

ஶ்ரீமந் நாராயணனின் திவ்ய நாமங்களில் ஒன்று ‘கேசவன்’. பன்னிரு நாமங்களில் இதுவே முதன்மையானது. ஶ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இது 23-வது திருநாமம். இந்தத் திருநாமத்துக்கான பொருளை, பெருமைகளை நான்கு ஐந்து பக்கங்களில் எல்லாம் கூறிவிட முடியாது.

‘கருத்த குழலழகன்’ என்று இனிய தமிழ் கூறும். வால்மீகி, ஆதிசங்கரர், விஸ்வாமித்திரர், மாரீசன், ஆண்டாள், பராசர பட்டர் முதலான பெரியோர் பலரும் கேசவா எனும் திருநாமத்தில் மூழ்கித் திளைப்பதைக் காவியங்களில் காண்கிறோம். கேசி அல்லது கேஸிஹா என்ற அசுரனைக் கொன்றதால் விஷ்ணு பகவான் கேசவன் என்றானார் என்று விஷ்ணு புராணம் சொல்லும். க-பிரம்மா, அ- விஷ்ணு, ஈச - சிவன் ஆகிய மூவரின் அம்சமே கேசவன் என்றும் ஆன்மிகம் சொல்கிறது.


‘கெடுமிடராய வெல்லாம் கேசவாவென்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்’

- என்று திருவாய்மொழி கேசவனைக் கொஞ்சி மகிழும்.

ஶ்ரீஆதிகேசவ பெருமாள்
ஶ்ரீஆதிகேசவ பெருமாள்

ழகிலும் அருள்வதிலும் நிகரில்லாத பெருமை கொண்ட கேசவன், தன்னுடைய பக்தர்களைக் காப்பதற்காகக் கோபம் கொள்வதிலும் சமர்த்தன் என்று போற்றப்படுகிறார். ஆம், அவதாரங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன்பே தோன்றியவர் கேசவன். அதனாலே அவர் ஆதிகேசவன் என்ற அடைமொழியால் இந்தப் புண்ணிய பூமியில் பல தலங்களில் எழுந்தருளி உள்ளார்.

அப்படியான தலங்களில் ஒன்று திண்டிவனம் அருகிலுள்ள இறையானூர் (இறைவனூர்). இங்கே கோயில் கொண்டிருக்கும் ஶ்ரீஆதிகேசவ பெருமாள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறார். ஏன் அப்படி?

தோஷங்கள் நீக்கும் 
மகா சுதர்சன ஹோமம்!

திருமாலின் மீது அர்த்தமின்றி அசூயை கொண்டிருந்த நான்முகன், திருமாலைப் புறக்கணித்துவிட்டு சரஸ்வதி நதிக்கரையில் ஒரு யாகம் செய்தார். அதனால் கோபமுற்ற கலைவாணி, நான்முகனுக்கு உண்மையை உணர்த்த, அவர் நாவில் எழுந்து மந்திரத்தின் உச்சரிப்பை மாற்றிவிட்டார்.

மாறிய மந்திரச் சொல்லின் விபரீதத்தால் யாகத் தீயிலிருந்து `கேசன் - கேசி’ என்ற அரக்கனும் அரக்கியும் தோன்றினர். இதனால் யாகம் அழிந்து நான்முகன் மறைந்து வாழும் நிலை உண்டானது.

எவராலும் அழிக்க முடியாத வரம் பெற்ற இருவரும் சகலரையும் வாட்டி வதைத்துத் துன்புறுத்தினர். இந்திரனும் தப்பவில்லை. சகலரும் திருமாலைச் சரணடைந்தனர். அசுரரை ஒழிக்க எண்ணிய திருமால், போர்க் களத்துக்கு வந்தார். அப்போது அங்கே பிரசன்னமான ராஜ ராஜேஸ்வரி அன்னை, ``கேசனும் கேசிகையும் எவராலும் அழிக்க முடியாதவர்கள். எனவே, கேசனை மடக்கி அவன்மீது ஆதிசேஷனை அமர்த்தி பாம்பணையாக்கிக் கொண்டு நீங்கள் சயனித்துவிடுங்கள்’’ என்றாள்.

திருமாலும் அதன்படியே செய்தார். கேசனைக் காணாத அவன் சகோதரி கேசி, திருமால் சயனித்திருந்த இடத்தை அழிக்க ஓடி வந்தாள். தாயார் பூதேவியின் அருளால் அந்த இடம் உயர்ந்துவிட, திருமால் கேசியையும் ஒடுக்கித் தன் பாதக் கமலத்துக்குள் அடங்கச் செய்தார்.

இவ்வாறு திருமால் கேச அசுரர்களை அடக்கி அருள் செய்த கோலமே ஆதிகேசவர் என்று சிறப்புப்பெற்றது. அசுரர்களுக்கு அஞ்சி தேவர்கள் ஒளிந்திருந்த திந்திரிவனத்துக்கு (திண்டிவனம்) வந்து காட்சி தந்தார் கேசவர். இவ்வாறு இறைவன் தேவர்களுக்கு முதன்முதலில் அருளிய தலம் என்பதால் அது இறைவனூர் என்றானது.

திண்டிவனத்துக்கு அருகே சென்னை - விழுப்புரம் தேசிய நெடுஞ் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது இறையானூர். இங்குஶ்ரீதேவி பூதேவி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் ஶ்ரீஆதிகேசவ பெருமாள். தோன்றிய தொன்மை அறியமுடியாத ஆலயம் என்கிறார்கள். எனினும் அந்நியர் படையெடுப்பில் ஆலயம் சிதைக்கப்பட்டது.

முன்னதாக ஆலயத்தின் தெய்வ மூர்த்தங்கள் அந்நியரின் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதால், அவை இங்குள்ள கிணற்றில் ஒளித்து வைக்கப்பட்டனவாம். பலநூறு ஆண்டு காலம் ஜலவாசம் செய்த பெருமாள், மீண்டும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள சித்தம் கொண்டார். 1988-ம் ஆண்டு கிணற்றைத் தூர்வாரிய போது பெருமாள் வெளிப் பட்டார். அது முதல் சகலருக்கும் இங்கே அருளாசி வழங்கி வருகிறார்.

சிறிய அழகிய ஆலயத்தில் உபநாச்சியார்களுடன் அருள்கிறார் ஶ்ரீஆதிகேசவர். ஶ்ரீமரகதவல்லி நாச்சியார், ஶ்ரீஆண்டாள் நாச்சியார், ஶ்ரீஹயக்ரீவர், ஶ்ரீமகா சுதர்சனர், ஶ்ரீவராகர், ஶ்ரீயோக நரசிம்மர், ஶ்ரீஅனுமன், ஶ்ரீகருடபகவான் ஆகியோரும் தனித் தனிச் சந்நிதிகளில் எழுந்தருளி உள்ளார்கள். இங்கு வந்து ஆதிகேசவரை வழிபட சகல பிரச்னைகளும் தோஷங்களும் நீங்கும்; கல்யாணம் முதலான சுபகாரியங்கள் விரைவில் கூடிவரும் என்பது ஐதிகம்.

தோஷங்கள் நீக்கும் 
மகா சுதர்சன ஹோமம்!

மகா சுதர்சன ஹோமம்!

கேச - கேசிகை அசுரரை அடக்கியதில் பெரும் உதவி செய்த மகா சுதர்சனருக்குப் பெருமாள் இங்கு அருளாசி வழங்கினாராம். ஆகவே இங்கே விசேஷமாக ஆராதிக்கப்படுகிறார் மகா சுதர்சனர்.

திருமாலின் அம்சமாகவே போற்றப்படும் சுதர்சனரை வழிபடுவோருக்கு எவ்வித அச்சமும் உண்டாகாது என்கிறது ஆன்மிகம். அதேபோல் நோய்நொடி அண்டாமல் வாழ சுதர்சனரைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்கிறது சுதர்சன அஷ்டகம். இவரை வழிபட்டால் கடன் பிரச்னை, எதிரிகள் பயம், காரியத் தடைகள் யாவும் விலகும் என்பது நிச்சயம்.

அதிலும் குறிப்பாக மகா சுதர்சனர் அவதரித்த ஆனி மாத சித்திரை நட்சத்திர நாளில் அவரை வழிபடுவது மிகவும் விசேஷம் என்கின்றன ஞான நூல்கள். இந்த ஆண்டு வரும் 20.6.2021 ஞாயிற்றுக் கிழமை மகா சுதர்சன ஜயந்தி.

அற்புதமான இந்தத் திருநாளில் ஶ்ரீஆதிகேசவர் மற்றும் ஶ்ரீசுதர்சனரின் திருவருளுடன், உலக நன்மைக்காகவும் கொடுந்தொற்று பாதிப்புகள் விரைவில் நீங்கி மக்கள் சுபிட்சம் பெறவும், வாசகர்களின் குடும்ப நலன் ஓங்கவும் அவர்களின் உற்றார் உறவுகள் அனைவரும் நன்மைகள் அடையவும் வேண்டி, மகா சுதர்சன ஹோமம் நடைபெறவுள்ளது.

இறையானூர் ஶ்ரீஆதிகேசவர் திருக்கோயிலில், சக்திவிகடனும் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து வழங்கும் ஶ்ரீமகா சுதர்சன ஹோம வைபவம், ஜூன் 20 அன்று காலையில் நடைபெறவுள்ளது.

தோஷங்கள் நீக்கும் 
மகா சுதர்சன ஹோமம்!

மகா சுதர்சன ஹோமத்தின் பலன்கள்

பொதுவாக இந்த ஹோமத்தில் ஶ்ரீசுதர்சன சடாக்ஷரி, ஶ்ரீசுதர்சன காயத்ரீ, ஶ்ரீசுதர்சன மாலா மந்திரம், ஶ்ரீநரசிம்ம மந்திரம், ஶ்ரீநரசிம்ம காயத்ரி, ஶ்ரீவிஷ்ணு காயத்ரி, ஶ்ரீலட்சுமி காயத்ரி, ஶ்ரீலட்சுமி மந்திரம், ஶ்ரீதன்வந்திரி மந்திரம், ஶ்ரீபாஞ்சஜன்ய காயத்ரி போன்ற பல மந்திரங்களையும் சொல்லிச் செய்வது உண்டு. இதனால் இந்த ஹோமத்தின் பலன் அளவிடற்கரியதாக விளங்குகிறது.

ஶ்ரீசுதர்சன ஹோமம் ஆபத்துகளிலிருந்து நம்மைக் காக்கும். பயணம், நெருப்பு தொடர்பான பணிகள், போர்ச் சூழல், காட்டுப் பணிகள் முதலான சூழலில் நம்முடன் இருந்து ரக்ஷிக்கும் சுதர்சனமூர்த்தியின் துணையை இந்த ஹோமம் பெற்றுத் தரும்.

பூர்வஜன்ம வினைப் பயனால் சிலர் தீவினை களுக்கும் தீய சக்திகளின் பாதிப்புகளுக்கும் ஆளாக நேரிடும். இதுபோன்ற பாதிப்புகள் நம்மை அணுகவிடாமல் காக்கும் வல்லமை கொண்டது இந்த ஹோமம்.

மேலும் மகா சுதர்சன ஹோமத்தில் சங்கல்பித்து வழிபடுவதால், எளிதில் கிரஹிக்கும் ஆற்றல் கிடைக்கும், வீட்டில் கால்நடைச் செல்வங்கள் நிறைய பலனளிக்கும், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமாவார்கள்,

கண்ணுக்குத் தெரியாத நோய்கள் குணமாகும். அத்துடன், சகல சாப தோஷங்களுக்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

உன்னதமான இந்த ஹோம வைபவத்தில் வாசகர்களும் தங்களுக்காகவும் குடும்பத்தினருக்காகவும் உற்றார் உறவுகளுக்காகவும் சங்கல்பம் செய்து இறையருள் பெறலாம்!

வாசகர்களின் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 97909 90404

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு