Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்

ஶ்ரீவீரபிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீவீரபிரம்மேந்திரர்

`பாபா மாமி' ரமாசுப்ரமணியன் ஓவியங்கள்: ஜீவா

மகாயோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்

`பாபா மாமி' ரமாசுப்ரமணியன் ஓவியங்கள்: ஜீவா

Published:Updated:
ஶ்ரீவீரபிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீவீரபிரம்மேந்திரர்

`அதோ பாருங்கள் உங்களின் கர்மவினை உங்கள் வாழ்வை எரித்துக் கொண்டிருக்கிறது’ என்று ஸ்வாமி வீரபிரம்மேந்திரர் சுட்டிக்காட்டிய திசையை நோக்கிய பண்டிதர்கள் அதிர்ந்து போனார்கள். அங்கே அவர்களின் வீடுகள் இருந்த பகுதி தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது!

மகாயோகி காலக்ஞானி
வீரபிரம்மேந்திரர்

நெருப்பின் ஜூவாலைகள் மிகப் பெரியதாக நான்குபுறமும் பரவி சுட்டெரித்தன. பண்டிதர்கள் நடுநடுங்கிப் போனார்கள். ஸ்வாமியின் மகிமையை உணர்ந்து அவரின் பாதங்களைப் பற்றிக் கொண்டார்கள்.

``ஸ்வாமி! எங்களைக் காத்தருளுங்கள். தாங்கள் கூறியது உண்மைதான்... இவ்வளவு காலமும் பகட்டுக்காகவே வாழ்ந்துள்ளோம். வினையின் விளைவைப் பார்க்கும்போதுதான், தவறு புத்தியில் உறைக்கிறது. எங்களை மன்னியுங்கள். சத்குருவைச் சரண் அடைந்தவர்களுக்குத் தீங்கில்லை என்பார்கள். நாங்கள் உங்களைச் சரணடைகிறோம். இறையின் அவதாரமாகவே தங்களைக் கருதுகிறோம். தயைகூர்ந்து எங்களை மன்னித்து எங்கள் வீடுகளையும் ஆடு-மாடுகளையும் காப்பாற்றுங்கள். இனி நாங்கள் நல்ல வழியில் நடப்போம் என்று உறுதியளிக்கிறோம்’’ என்று மன்றாடினார்கள்.

வீரபிரம்மேந்திரரின் கருணை உள்ளம் இரங்கியது. ``குழந்தைகளே! இனியாவது உங்களின் சிந்தையை தூய்மையாக வைத்திருங்கள். தவறை உணர்ந்தவர்களுக்கு மன்னிப்பு நிச்சயம் உண்டு. கவலை வேண்டாம்’’ என்றவர், தண்ணொளி பொருந்திய தனது கருணை விழிகளால் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தீயை ஒருமுறை பார்த்தார்.

என்ன ஆச்சர்யம்... நெருப்பின் ஆவேசம் சட்டென்று தணிந்தது. அடுத்த சில நொடிகளில் முழுவதுமாக அணைந்து, அங்கே நெருப்பு பரவிய சுவடுகூட தெரியாமல் போனது. இந்த அதிசயத்தைக் கண்டு வியந்த பண்டிதர்கள் ``வீரபிரம்மேந்திர ஸ்வாமிக்கு ஜே!’’ என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினார்கள்.

இதுவே ஞானியரின் பண்பு. தன் மேல் தாக்குதல் நடத்தியவர்களையும் கருணையுடன் மன்னிக்கும் தெய்வக்குணம் மகான்களிடமும் ஞானிகளிடமும் மட்டுமே காணப்படும். புஷ்பகிரியின் பண்டிதர்கள் பசுவைத் தேடி ஓடும் கன்றினைப் போல ஸ்வாமியின் பாதங்களின் அருகில் வந்து அமர்ந்துகொண்டனர். பலவித நாமங்களால் அவரைப் போற்றினர். வேதங்களைப் பாராயணம் செய்தனர்.

பின்னர் ஸ்வாமியை அழகிய பல்லக்கு ஒன்றில் அமர்த்தி, தங்களில் பல்லக்கைச் சுமந்துசென்று ஊரைச் சுற்றி வலம் வந்தனர். வீரபிரம்மேந்திரர் அந்தப் பண்டிதர்களின் வேண்டுகோளை ஏற்று புஷ்பகிரி கிராமத்தில் மூன்று தினங்கள் தங்குவதற்குச் சம்மதித்தார். அந்த மூன்று தினங்களும் விழாக்கோலம் பூண்டது புஷ்பகிரி. தினமும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்ளவும், ஸ்வாமியின் உபதேசத்தைக் கேட்கவும் திரளான மக்கள் கூடினார்கள்.

மகாயோகி காலக்ஞானி
வீரபிரம்மேந்திரர்

மூன்றாவது நாளில் உபதேசம் கேட்க வந்த முதியவர் ஒருவர் வீரபிரம்மேந்திரரிடம், ``ஸ்வாமி! நீங்கள் காலக்ஞானி என்று கேள்விப்பட்டோம். பலநூற்றாண்டுகளுக்குப் பின்னால் நடக்கவுள்ள சம்பவங்கள் அனைத்தையும் கூறும் ஆற்றல் பெற்ற தாங்கள், எங்களுக்கும் காலக்ஞானத்தைப் பற்றி விளக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். அங்கே கூடியிருந்த மற்றவர்களும் முதியவரின் கருத்தை ஆமோதித்தனர்.

உடனே விரபிரம்மேந்திர ஸ்வாமி புன்னகையுடன், ``நல்லது இன்று மாலை உங்களுக்கு காலக்ஞானத்தின் சில குறிப்புகளைக் கூறுகிறேன். அனைவரும் சென்று அவரவர் பணிகளை முடித்துக் கொண்டு மாலையில் வாருங்கள்’’ என்றார்.

அதன்படியே மாலை வேளையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வந்தார்கள். அவர்களின் மத்தியில் ஓர் ஆதவன் போல் வந்து அமர்ந்த வீரபிரம்மேந்திர ஸ்வாமிகள், ``குழந்தைகளே! நான் எழுதிய காலக்ஞானம் எனும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நடக்கப்போகும் சில நிகழ்வுகளை உங்களுக்குக் கூறுகிறேன். கேளுங்கள்...’’ என்று காலக்ஞான உபதேசத்தை வழங்கினார்.

``சூரியன் மீன ராசிக்கு இடம்பெயரும்போது நான் ஶ்ரீசைலத்துக்கு வீரபோக வசந்தராயராக வருவேன். அறநெறியில் செல்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் அனைத்து செல்வங்களையும் தருவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

அங்கே குருபரம்பரையைத் தோற்றுவித்த ஶ்ரீதத்தாத்ரேயரிடம் இருந்து பல கலைகளைக் கற்று, பின்னர் ஶ்ரீசைல மல்லிகார்ஜுனரை தரிசித்துவிட்டு, வீரநாராயணபுரத்துக்கு வருவேன். அங்கு பதினைந்து நாள்கள் தங்கியிருப்பேன்.

எவர் ஒருவர் பிறருடைய சொத்துக்களின் மீது பேராசை கொண்டும், போதை தரும் பானங்களில் நாட்டம் கொண்டும் இருப்பார்களோ, அவர்கள் அழிவைச் சந்திப்பார்கள்.

கலியுகத்தின் முடிவில் மக்களுடைய ரசாயனக் கண்டுபிடிப்புகளால் கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் பரிதாபமாகச் செத்துமடியும் அவல நிலை உண்டாகும். புனித நகரமான காசியில் மிகப்பெரிய போர்கள் நிகழும். அதேநேரம் மனிதகுல நன்மையைக் கருத்தில்கொண்டு பல யோகிகளும் சித்தர்களும் தோன்றுவார்கள்.

ஆண் பெண் உறவுகள் நெறிமுறையின்றி சிதைவுபடும். போதிய பணமின்றி வசதிகளின்றி, உணவுக்கு வழியின்றி மக்கள் மடியும் அபாயமும் நேரிடும். ஹரித்வார் திருத்தலத்தில் உள்ள புனித ஆலமரத்தில் நிறைய அற்புதங்கள் நிகழும். அங்குள்ள ஆலயங்கள் பயங்கரவாதிகளால் மூடப் படும் நிலை ஏற்படும்.

அகோபில மடத்தில் இரும்புத் தூண்களில் மல்லிகை மலர்கள் பூக்கும். இந்த அதிசயங்கள் எனது வருகையை உலகுக்கு அறிவிக்கும்.

சமூகத்தில் பாவங்களின் கணக்கு மிகவும் அதிகரித்து வருகிறது. பாவங்கள் புண்ணியங் களைவிட அதிகமாகும்போது, உலகம் பல்வேறு அழிவுகளைச் சந்திக்கும். ஆனால் இறைச் சிந்தனை உள்ளவர்களும், நேர்மையாளர்களும், அறநெறி தவறாதவர்களும் என்னால் காக்கப்படுவார்கள் என்று உறுதியளிக்கிறேன்.’’

இவ்வாறு விளக்கிய ஶ்ரீவீரபிரம்மேந்திர ஸ்வாமி வேறோரு விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார்.

மகாயோகி காலக்ஞானி
வீரபிரம்மேந்திரர்

``குழந்தைகளே! இன்று நான் உங்களுக்கு ஒரு முக்கிய விஷயத்தைக் கூறப் போகிறேன். நான் இந்தப் பூமியை விட்டுப் புறப்படும் நாள் நெருங்கிவிட்டது. இறைவனின் ஆணையை ஏற்று, நான் இந்த உடலுடன் ஜீவசமாதி அடையவிருக்கிறேன். இறைவன் மீது நம்பிக்கை வைத்து அறநெறி தவறாமல் நடந்து கொள்ளுங்கள்.

நான் உபதேசித்த `ஓம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம் நமசிவய ஶ்ரீவீரபிரம்மேந்திர ஸ்வாமினே நமஹ’ எனும் மந்திரத்தை எந்தப் பணியில் இருந்தாலும் எந்தச் சூழலில் இருந்தாலும் தொடர்ந்து ஜபித்து வாருங்கள். உங்களுக்கு ஒரு ஆபத்தும் நேராத வண்ணம் நான் காப்பாற்றுகிறேன். இப்போது அனைவரும் அவரவர் இல்லத்துக்குச் செல்லுங்கள். நாங்களும் இங்கிருந்து புறப்படுகிறோம்’’ என்றார்.

கூடியிருந்த மக்கள் அனைவரும் `ஶ்ரீவீர பிரம்மேந்திர ஸ்வாமிக்கு ஜெய்’ என்று ஆரவாரம் செய்ய, கூட்டம் கலைந்தது.

ஶ்ரீவீரபிரம்மேந்திர ஸ்வாமியும் அவரின் சீடர்களும் அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் கண்டிமல்லய்யாபள்ளி கிராமத்துக்கு வரும் வழியில், பெரியதோர் ஆலமரத்தின் அடியில் ஓய்வெடுத்தனர். அப்போது ஸ்வாமிக்கு பாதசேவை செய்துகொண்டிருந்த சித்தய்யா, ``ஸ்வாமி! `துர்காத்மா’ என்று சொல்கிறார்களே... அதன் அர்த்தம் என்ன?’’ என்று கேட்டார்.

சித்தய்யா இப்படித்தான். அவருடைய சிந்தனை எப்போதும் ஞானத்தைத் தேடுவதிலேயே லயித்திருக்கும். அவரின் இந்தக் குணம்தான் ஶ்ரீவீரபிரம்மேந்திர ஸ்வாமியை மிகவும் கவர்ந்தது. அவர் அந்தச் சீடருக்கு விளக்கம் அளித்தார்.

``சித்தய்யா! இந்தப் பூமியின் 24 தத்துவங்களுடன் நான்குவித வண்ணங்களும் இணைந்து காணப்படுகின்றன. அவற்றில் சிவப்பு நிறம் ஸ்தூல சரீரத்தையும்; வெண்மை சூட்சும சரீரத்தையும்; கருத்த சாம்பல் நிறம் காரண சரீரத்தையும்; நடுவில் ஒளிரக்கூடிய மஞ்சள் மகா காரண சரீரத்தையும் குறிக்கும்.

இதில் மிகப்பெரிய ஆச்சர்யம் என்ன வென்றால் நான் கூறிய இந்தத் தத்துவங்கள் அனைத்தும் நம் கண்களுக்குள் அடங்கியிருக்கின்றன. இந்த ரகசியத்தையே துர்காத்மா என்கிறோம். யோகிகளின் வழியில் சென்று மனதை ஒருமுகப்படுத்திய ஒருவர், தனது ஆத்மா மிகப் பிரகாசமாக ஒளிர்வதை அகக் கண்களால் காணலாம். அந்தக் காட்சியை உனக்கும் காட்டுகிறேன்...’’ என்றவர் ஒரு கண்ணாடியை எடுத்து வரப் பணித்தார். அந்தக் கண்ணாடியை உற்றுநோக்குமாறு சித்தய்யாவிடம் கூறினார்.

அவ்விதமே சித்தய்யா அந்தக் கண்ணாடியைப் பார்த்தார். அதில் தோன்றிய காட்சி, சித்தய்யாவை சில நிமிடங்கள் செயலிழக்கச் செய்தது. அதைக் கண்ட சித்தய்யாவுக்கு மீண்டும் இவ்வுலகக் காட்சிகளைக் காண்பதில் சிறிதும் விருப்பம் இல்லை!

- தரிசிப்போம்...

பிரசாத தீர்த்தத்தைப் பருகிய பிறகு, புனிதம் கருதி கையைத் தலையில் துடைக்கலாமா?

தீர்த்தத்தை உட்கொண்ட பிறகு ஈரக் கையை துணியால் துடைக்கலாம். தீர்த்தத்தின் கௌரவத்தை மனதில் கொண்டு தலையில் துடைக்கிறார்கள். அது தேவையற்றது. பக்தியோடும் கடவுள் நினைவோடும் கோயிலில் நுழையும்போதே நம் உடலும் உள்ளமும் புனிதம் பெற்றுவிடுகின்றன. ஆகவே, தீர்த்தத்தைத் தலையில் தடவுவது தேவையற்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism