திருக்கதைகள்
Published:Updated:

ஒளி வடிவில் அதிசய சித்தர்! மகான் தத்துவராயர்

மகான் தத்துவராயர்
பிரீமியம் ஸ்டோரி
News
மகான் தத்துவராயர்

மு.அரி

உலகம் எனும் பேரியக்கத்தின் அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைமைப் பொறுப்பை வகித்து வருவது மானுட இனமே. `மனிதன்' என்ற சொல் `மனதின்' என்ற வேர்ச் சொல்லில் இருந்துப் பிரிக்கப்பட்டது என்பார்கள். ஒருவன் தன் மனதை எவ்வளவு பலமாக, பக்குவமாகப் பயன்படுத்துகின்றானோ அந்த அளவுக்கு வாழ்வில் முன்னேறுகிறான்.

மகான் தத்துவராயர்
மகான் தத்துவராயர்


மனதின் வளமை ஒருவனின் சொல்லை, செயலை, செயல்வழி வாழ்வைச் சீரமைத்து இந்த உலகில் எதை வேண்டினாலும் அதை அவனுக்கு அருள்கிறது. இக்கருத்தைச் சித்தர்கள் பலரும் தாங்கள் அருளிய ஞான நூல்களின் மூலம் தெளிவாக விளக்குகின்றனர்.

எனினும் சித்தர்களைப் பற்றியோ அவர்கள் சொல்லும் மறைபொருள்களைப் பற்றியோ புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ‘திருவாசகத்தைப் புரிந்துகொள்ள மணிவாசகமாய் இரு’ என்று சொல்வார்கள். சித்தர்களை உணர, நாமும் மனதை வளமாக்கு வது ஒன்றே வழி என்று அறியவேண்டும்.

முதலில், நாம் ஏன் சித்தர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்?

அறம், நலம், தவம், திறம் என்ற அனைத் தையும் நமக்காக அருளியவர்கள் சித்தர்கள். ஒருவர் தன் வாழ்வை முழுமையாக வாழ்ந்து, உலக நன்மைக்காக பல சித்துகள் புரிந்து, ஸ்தூல தேகம் மறைந்தாலும் மற்றவர்களை வழிநடத்த சமாதி அடையும் பக்குவம் கொண்ட அற்புத மனிதர்களே சித்தர்கள்.

இவர்களை அறிவதிலும் குருவாக வரிந்து கொள்வதிலும் நாம் எப்போதும் பேராவல் கொண்டிருக்க வேண்டும். சித்தர்கள் என்ற துமே பதினெண் சித்தர்களே நம் நினைவுக்கு வருவர். அவர்களுக்கு இணையான ஸித்தி களைப் பெற்றவர் தத்துவராய சுவாமிகள்.

தத்துவராயர் கோயில்
தத்துவராயர் கோயில்

இவர் 16-ம் நூற்றாண்டில் சோழவள நாட்டில் வீரை மாநகரில் பிறந்தவர். இவர் தத்துவத்தின் வழியே ஆன்மிகத்தை விளக்கியதால் `தத்துவராயர்' எனப் பெயர் பெற்றார். இவரே உலகம் வியக்கும் சுத்த தேக ஸித்தி எனும் சித்து முறையைப் பலரும் அறியும் விதம் பிரபலமாக்கியவர். ஆன்மா உடலோடு மறையும் உன்னத ஸித்தி அது!

கல்வி அறிவில் தேர்ச்சி பெறாத தத்துவ ராயர், தன் மாமனான சொருபானந்தரைக் குருவாகக் கொண்டு, பல யோக ஞானங் களைக் கற்றறிந்தார்.

சிறுவயதிலேயே இவரும் சொருபானந்தரும் ஞானத் தாகமெடுத்து குருவைத் தேடி அலைந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் வடக்கும் தெற்கு மாகப் பிரிய, திருப்பைஞ்ஞீலி அருகே கோவர்த்தனம் என்ற ஊரில், ஒரு புதரில் சிவப்பிரகாசர் என்ற குருவைக் கண்டார் சொரூபானந்தர். அவரிடம் சகல ஞானமும் ஸித்தியும் பெற்றார். குருவை அடைய முடி யாத தத்துவராயருக்குப் பின்னர் மாமனே குருவானார்.

தத்துவராயர் அடிக்கடி தன் ஸ்தூல தேகத்தைச் சட்டெனப் பிரித்துக் காற்றோடு காற்றாகக் கலக்கக்கூடிய ஸித்தியைப் பெற்ற வர். இதுபோன்று இன்னும் பல சித்துக்களில் வித்தகராகத் திகழ்ந் தவர். உடலுக்குள் உறையும் இறை வனைக் காண வழி வகுத்தவர்.

கோயில் தீர்த்தம்
கோயில் தீர்த்தம்

`16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனினும் இன்றும் பலருக்கும் தன் ஸ்தூல தேகத்தோடு காட்சியளித்துள்ளார்' என்கிறார்கள் பக்தர்கள். சசிவர்ண போதம், திரியோத சாந்தம், சிவப்பிரகாச வெண்பா, தத்துவாமிர்தம், திருத்தாலாட்டு, அமிர்த சாகரம், அடங்கன்முறை, பெருந் திரட்டு, குறுந்திரட்டு, ஈசுவர கீதை, பிரம்ம கீதை, அஞ்ஞவதைப் பரணி போன்று யோக, ஞான நூல்களை இயற்றியுள்ளார். அவற்றின் எண்ணிக்கை 26 என்கின்றனர்.

எளிய மக்கள் இவரை `பாடுதுரை' என்றும் அழைத்து வந்துள்ளனர். எளிய நாட்டுப்புறப் பாடல் பாணியில் தன்னுடைய பாடல்களை இயற்றியவர் இவர். இவர் வடலூர் வள்ளல் ராமலிங்க சுவாமிக்கும் முன்பே, சேத்தியாத் தோப்பு அருகே எறும்பூர் என்ற இடத்தில் ஒரு ஆடி மாத சதய நட்சத்திர நாளில் ஒளி யாய்ப் பிரிந்தார் (சுத்த தேகஸித்தி).

தத்துவராயர் ஜீவசமாதி
தத்துவராயர் ஜீவசமாதி

வடலூர் ராமலிங்க வள்ளலார், இவரை ஞான குருவாக ஏற்று, அவரிடத்தில் சூட்சும மாகப் பல வித்தைகளை... குறிப்பாக ஒளி தேகம் பெறும் வித்தையை அறிந்ததாக நம்பப் படுகிறது.

வள்ளலார் தனது திருஅருட்பா உரைநடைப் பகுதியில் இவரை `மனித தேகத்தில் கடவுள் காரியப்படுவது' எனும்விதமாக... அதாவது, கடவுளுக்கு நிகராகக் குறிப்பிட்டுள்ளார். இவரிடமிருந்து கற்ற வித்தையின் வழியே வள்ளலாரும் நிறைவில் காற்றில் கரைந்து போனார் என்று சொல்லப்படுகிறது.

ஒரு செல்லால் உருவானது, பல கோடி செல் களால் உடலாகிறது. அந்த செல்களை மீண் டும் தனித்தனியாய்ப் பிரித்துக் காற்றில் கலந்துபோவதே ஒளியாய்ப் பிரியும் கலை என்பர். எண்ணற்ற அருள் லீலைகளை நடத்திய இந்தச் சித்தரின் அருளால் பலரின் வியாதிகள் தணிந்தன; தரித்திரம் ஒழிந்தன என்கிறது இவரின் சரித்திரம்!

போரில் ஆயிரம் யானைகளைக் கொன்றவருக்குப் பரணி பாடுவது புலவர் களின் வழக்கம். அதேபோல மன யானையை அடக்க முடியாமல் தவித்த ஆயிரக்கணக்கான மனிதர்களின் ஓட்டத்தைத் தனது திருக்கண் நோக்கு ஒன்றால் அடக்கிவிடுபவர் ஆதலால், இவருக்கும் பரணி பாடப்பட்டது.

கணபதி
கணபதி
முருகப்பெருமான்
முருகப்பெருமான்

மனித எண்ணத்துக்கு எட்டா பேரின்ப நிலையை அடைதல், கீழான சிந்தை கொண்ட மனிதர்கள் மேலான நிலையை அடைவது எப்படி என்பது குறித்து இவரின் தத்துவங்கள் விளக்கம் தந்தன. மட்டுமன்றி, மனதுக்கும் ஒரு சூட்சும மனம் உண்டு. அதுவே நம்மை அதன் இச்சையின்பால் வழிநடத்துகிறது. இந்த ஆழ்மனமே சித்தம் எனப்படும். சித்தத்தை இறைமீது வைத்து வழிநடத்தி, அதன் பாதை யில் பயணிப்பவர்களே சித்தர்கள் என்றும் வழிகாட்டின.

எவரும் அறியாவண்ணம் விருத்தாசலம், சேத்தியாதோப்புக்கு இடையே உள்ள எறும்பூரில் இவர் மறைந்துபோனாராம். வெகுகாலம் கழித்து 1895-ம் ஆண்டு இந்த இடத்தில் பிரகாசித்த ஒளியையும் அதிர் வையும் உணர்ந்து, பொன்னம்பல சுவாமிகள் இவருக்கு ஆலயம் எழுப்பினார். அந்தத் தலம் இன்றும் சித்தர்கள் பலரும் சங்கமிக்கும் சித்த லோகமாகவே விளங்கி வருகிறது.

``காற்றில் கற்பூரமாகக் கலந்த மகான் தத்துவராயர். இன்றைக்கும் அவர், அணு அணுவாய்ப் பிரித்துக்கொண்ட தன் உடலை வெவ்வேறு ரூபங்களில் காட்சிப்படுத்தி - பல உருவங்களில் வெளிப்பட்டு, வேண்டுவோருக்கு எல்லாம் தெளிவையும் ஆரோக்கியத்தையும் வழங்குகிறார் என்பது திண்ணம். மனதார இவரைக் காண வேண்டும் என்று நினைத்தாலே நாம் இருக்கும் இடத் திற்கு வந்துவிடுவார் தத்துவராயர்'' என்கிறார்கள் அவரின் பக்தர்கள்.

அர்ச்சகர் ரகுபதி ஐயா
அர்ச்சகர் ரகுபதி ஐயா

மகானின் கோயிலைப் பராமரித்து வரும் அர்ச்சகர் ரகுபதி ஐயாவும் பக்தர்களின் இந்தக் கருத்து உண்மை என்கிறார். மட்டு மன்றி, தத்துவராயரின் பெருமைகளை பலவாறு பகிர்ந்துகொள்கிறார். இறையருள் கொண்டவர்கள் இவர் ஜீவசமாதிக்குச் சென்று வாருங்கள்; நிச்சயம் ஒரு சிலிர்ப்பான அனுபவத்தைப் பெற்று வருவீர்கள்!

சுவாமியின் லீலைகள்!

சிதம்பரம் அருகே எளிய மக்கள் வாழும் பகுதிக்குச் சென்றிருந்தார் தத்துவராயர். அன்று ஆருத்ரா தரிசன நாள். அப்பகுதி மக்கள் சிதம்பரம் நடராஜபெருமானின் அருள்கோலத்தைத் தாங்களும் தரிசிக்க முடியுமா என்று சுவாமியிடம் வேண்டினர். உடனே தத்துவராயர், அங்கு காய்ந்துகொண்டிருந்த துண்டை எடுத்துத் திரை போன்று விரித்துக் காட்ட, தில்லையில் நடைபெற்ற ஆடல்வல்லானின் அபிஷேக ஆராதனைகளை அந்தத் திரையில் கண்டுகளித்தார்கள் பக்தர்கள்.

ஒருமுறை அடியார்கள் சிலருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே சமாதி நிலையை அடைந்துவிட்டார் சுவாமிகள். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் உணர்வுகொண்டார். கயிலை வாழ் ஞானியர்கள் விரும்பி அழைக்கவே, பயணம் சென்று வந்ததாக உரைத்தாராம். மட்டுமன்றி, அங்கு தான் கண்ட காட்சிகள், அருளுரைகள் பற்றியும் விவரித்தாராம்!

சுவாமிகள் ஒருமுறை பயணத்தில் இருந்தார். வழியில் ஏழைப்பெண் ஒருத்தி அளித்த புளித்துப்போன கஞ்சியை வாங்கிய சுவாமிகள், அதைச் சுவையான சூடான கஞ்சியாக மாற்றிக் குடித்தார். அந்த வீட்டில் இருந்த அந்தப் பெண்ணும் அவரின் குழந்தைகளும்கூட சுவையாக இருந்த கஞ்சியைக் குடித்து பசியாறினர். அதன்பிறகு அந்தப் பெண் வீட்டில் தரித்திரம் இல்லை என்பதும் வியப்பான விஷயம்.

சுவாமி எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு மழை பொழியும். நீர் நிலைகள் நிரம்பி விடும். ஊருக்குள் கொள்ளை நோய்கள், தீய சக்திகள், விலங்குகள் தொல்லை நீங்கும். இன்றும் இவர் இருப்பிடத்துக்கு வந்து பல ஸித்திகள் பெற்ற அடியார்கள் கூட்டம் அநேகம்!