Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

மகான் சரிதம்
பிரீமியம் ஸ்டோரி
மகான் சரிதம்

மகான் சரிதம்

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

மகான் சரிதம்

Published:Updated:
மகான் சரிதம்
பிரீமியம் ஸ்டோரி
மகான் சரிதம்

கிராம தேவதையான பொலேரம்மா வழிபாட்டுக்குத் தயாரான மனைவியைப் பாராட்டிய ஸ்வாமி வீரபிரம்மேந்திரர், ``அன்னை பொலேரம்மாவை இன்று நம் வீட்டு விருந்துக்கு அழைக்கிறேன். அவள் வந்து விருந்துண்டு கிராமத்தை ஆசீர்வதிப்பாள்’’ என்றும் அருள்பாலித்தார்.

வீரபிரம்மேந்திரர்
வீரபிரம்மேந்திரர்


இந்த விஷயத்தை அறிந்து கிராம மக்கள் ஸ்வாமியின் வீட்டுமுன் கூடினர். அதேவேளையில் கர்னூல் நவாபும் அங்கே வந்து சேர்ந்தார். ஸ்வாமியின் அறிவிப்பை அறிந்து அவரும் மகிழ்ந்தார்.

வீரபிரம்மேந்திரர் மனைவியிடம் ஊர்ப் பெரியவர்களையும் குழந்தைகளையும் அழைத்து வந்து, அவர்களுக்கு இலை போடுமாறு பணித்தார். அனைவரும் இலைக்குமுன் அமர்ந்ததும், முதலில் பொலேரம்மாவின் இலையில் உணவு பரிமாறும்படி ஸ்வாமி கூறினார். அதன்படியே கோவிந்தம்மா மிக ஆனந்தமாக பொலேரம்மாவுக்கு வைக்கப்பட்டிருந்த இலையில் உணவு பரிமாறினார்.

ஸ்வாமி தன் கண்களை சிறிது நேரம் மூடிக்கொண்டார். கிராம தேவதையிடம் பேசத் தொடங்கினார்.

``பொலேரம்மா! உனது தாய் அதிகாலை பூஜை செய்து, உணவைச் சமைத்துப் பரிமாறி உனது வருகைக்காகக் காத்திருக்கிறாள். நீ உடனே வந்து உணவு உபசாரத்தை ஏற்றுக்கொண்டு, இந்தக் கிராம மக்களை ஆசீர்வதிப்பாயாக’’ என்று வேண்டினார்.

ஒட்டுமொத்த கிராமமும் அந்த இலையைப் பார்த்துக் கொண்டிருந்தது. என்ன ஆச்சர்யம்... திடீரென்று ஆறு அல்லது ஏழு வயது நிரம்பிய ஓர் அழகான பெண் குழந்தை அங்கு தோன்றினாள். அவளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மெள்ள நடந்து சென்று இலைக்குமுன் அமர்ந்து உணவு அனைத்தையும் உண்டு முடித்தாள்.

பின்னர் ஸ்வாமியிடம் ``தந்தையே! நான் இப்போது செல்லலாமா?’’ என்று கேட்டாள்.

ஸ்வாமி, ``அம்மா... குழந்தை பொலேரம்மா... உனக்கு என் நன்றிகள். நான் இன்னும் சில நாள்களில் சமாதி அடையப்போகிறேன். அதன் பிறகு, இந்த ஆசிரமத்தில் என் மனைவி, பிள்ளைகள் எப்போது அழைத்தாலும் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, நீ இங்கு வந்து ஆசீர்வதிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.

``நிச்சயமாக வருவேன்’’ என்று கூறி மறைந்தாள் அந்தப் பெண்.

மக்கள் ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தனர். பொலேரம்மாவையும் ஸ்வாமியையும் வணங்கி மகிழ்ந்தனர். கர்னூல் நவாபும் ஸ்வாமியை வணங்கினார். காலக்ஞானத்தை அறியும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அவருக்காக எதிர்காலம் குறித்த காலக்ஞானத்தின் சில முக்கிய அம்சங்களை உபதேசித்தார்.

``கடப்பாவின் அழிவு இயற்கையின் பல சீற்றங்களால் நிகழும் என்பதை நீ அறிவாயா? இந்த மாபெரும் அழிவின் தொடக்கம் ரங்கபுரத்திலிருந்து தொடங்கும்.

வீரேஸ்வர ஸ்வாமி என்னிடம் இந்த ராஜ்ஜியத்தை அளிப்பார். இவ்வுலகில் வித்யாரண்யர் ஸ்வாமி என்ற யோகியும் ப்ரதி பிம்பாசுக யோகி என்ற யோகீஸ்வரரும் தர்மத்தை நிலைநாட்ட இன்னும் சில ஆண்டுகளில் அவதரிப்பார்கள்.

நட்சத்திரங்களை ஆராய்ந்து, அவற்றை ஆளவும் மனிதர்கள் திட்டமிடுவார்கள். அதன் விளைவாக நான்கு திசைகளிலும் மிகப்பெரிய நட்சத்திரங்கள் பூமியில் விழுந்து மிகப்பெரிய அழிவை உண்டாக்கும்.

கலியுகத்தில் ஒருவர்கூட பரம்பரைப் பெருமை பேச இயலாது. தீய நோக்கத்துடன் அடுத்த நாட்டிலிருந்து மிகப்பெரிய அளவில் நமது நாட்டின் மீது போர் தொடுப்பார்கள்.

அடிக்கடி எரிமலைகள் வெடித்துச் சிதறும் நாட்டில், அணு ஆயுதம் வெடித்து, லட்சக்கணக்கான மனிதர்களின் பாதிப்படைவார்கள். அதன் தாக்கம் அவர்கள் பரம்பரையினருக்கும் நிகழும். அத்தகைய ஆயுதம் ஏற்படுத்தும் விளைவுகளிலிருந்து தப்பிக்க இயலாது’’ என்றெல்லாம் எடுத்துரைத்தார் வீரபிரம்மேந்திரர்.

`எரிமலை வெடிக்கும் நாடு’ என்று ஜப்பானையும், `அணு ஆயுத பாதிப்பு’ என்று ஹிரோஷிமா நாகசாகி சம்பவம் குறித்தும் 13-ம் நூற்றாண்டிலேயே ஸ்வாமி வீரபிரம்மேந்திரர் சொல்லியிருப்பாது மிகவும் வியப்புதான்!

வீரபிரம்மேந்திரர்
வீரபிரம்மேந்திரர்


ஸ்வாமி மேலும் சில தீர்க்கதரிசன தகவல்களை எடுத்துரைத்தார்.

``விண்ணில் மிகப்பெரிய வால்நட்சத்திரம் தோன்றும். கரிய நிறத்தில் சுமார் 20 மைல் நீள அளவில் அது திகழும். அது உருவாகி 30 நாள்களுக்குப் பிறகு எல்லோருக்கும் தென்படும். கலியுகத்தின் முடிவை அந்த வால் நட்சத்திரம் அறிவிக்கும்.

பூமியின் பல்வேறு பகுதிகளிலும் பாவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பூமி முழுவதும் கடல்நீரால் ஆக்கிரமிக்கப்படும் நிலையில், தூய்மையான பக்தி கொண்ட பக்தர்களை நிச்சயம் நான் காப்பாற்றுவேன். எனது ஆட்சி 175 ஆண்டுகள் நடைபெறும்’’ என்று விவரித்தார் வீரபிரம்மேந்திரர்.

அனைத்தையும் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்த நவாபு ஸ்வாமியிடம், ``தாங்கள் சமாதி அடையும் தருணத்தில் நானும் என் குடும்பமும் தங்களை தரிசித்து ஆசிபெற விரும்புகிறோம். ஆகையால் சமாதி நிலை குறித்து முன்கூட்டியே அறிவிக்கவேண்டும்’’ என்று வேண்டினார்.

ஸ்வாமி புன்னகையுடன் ``என் சமாதி நிலையைக் காண நிறைய மனிதர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. நான் நிச்சயமாக அனைவருக்கும் அறிவித்தபிறகே சமாதி அடைவேன்’’ என்றார்.

நவாபு அவரிடம் ஆசிபெற்று கர்னூல் திரும்பினார். அங்கே அனைவரிடமும் ஸ்வாமியின் அற்புதங்கள் குறித்து எடுத்துரைத்தார். ஸ்வாமியின் அடியவர்களாக மாறும் அன்பர்களுக்கு உதவிகள் செய்தார். பண்டிதர்கள், அறிஞர்களை அழைத்து ஸ்வாமி வீரபிரம்மேந்திரரின் மகிமைகளைத் தொகுத்து நூல் எழுதும்படியும் உத்தரவிட்டார். மதம் கடந்து அனைவரும் வீரபிரம்மேந்திரரைப் போற்றினார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

நாள்கள் நகர்ந்தன. மடத்தின் பூஜை-வழிபாடுகளைச் செய்யவும் மடத்தை நிர்வகிக்கவும் கோவிந்தாசார்யாவை நியமித்தார். அதிகாரப்பூர்வமாக மடத்தின் புதிய நிர்வாகியை அறிவிப்பதற்காக, பலருக்கும் அழைப்பிதழ் அனுப்பினார். ஒருவேளை நீண்ட தூரத்தில் உள்ளவர்கள் வர இயலாமல் போனால், அவர்களும் காலக்ஞானத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன், அதன் முக்கிய அம்சங்களின் பிரதிகளையும் சேர்த்து அனுப்பிவைத்தார்.

ஆம்! ஸ்வாமி வாழ்ந்த காலத்திலேயே கலியுகத்தின் நிகழ்வுகள் குறித்த அவரின் காலக்ஞான உபதேசங்கள், கைப் பிரதிகள் எடுக்கப்பட்டு பலருக்கும் சென்றடைந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

புனிதமான வைசாக சுத்த சப்தமி தினத்தில், குருவாரமான வியாழக்கிழமையில், பூஜை வழிபாடுகளுக்குப் பிறகு, கோவிந்தாசார்யாவை மடத்தின் நிர்வாகியாக - அதிகாரபூர்வமாக அறிவித்தார் வீரபிரம்மேந்திரர்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு ஒருநாள் மனைவியை அழைத்தார் ஸ்வாமி வீரபிரம்மேந்திரர்.

``நாளை மதியம் 2:30 மணியளவில் சமாதி நிலைக்குச் செல்லவிருக்கிறேன். ஆகையால் தேவி... நான் சொன்னதாக சித்தய்யாவிடம் கூறு. அவன் இன்று இரவே பனகானப் பள்ளி கிராமத்துக்குப் புறப்பட்டுச் சென்று, அங்கிருந்து நறுமணம் மிக்க மலர்களைப் பறித்து வரும்படி நான் கூறியதாகச் சொல்’’ என்றார்.

கோவிந்தம்மா அப்படியே செய்தார். சித்தய்யா உடனடியாகப் புறப்பட்டார். சித்தய்யா தினமும் கோவிந்தம்மாவைத் தன் தாயாகக் கருதி, அவரைத் தினமும் வணங்கி வந்தார். அன்றும் அந்த அன்னையை வணங்கிவிட்டு, ஸ்வாமியையும் ஒருமுறை தரிசித்து விட்டுப் புறப்படலாம் என்று எண்ணினார்.

அதேநேரம், ஸ்வாமியின் உத்தரவு அன்னையின் மூலம் கிடைத்த பிறகு உடனே புறப்பட வேண்டியதுதானே. அப்படியில்லாமல் ஸ்வாமியையும் தரிசிக்கவேண்டும் என்று மனம் சொல்வது ஏன் என்பது சித்தய்யாவுக்குப் புரியவில்லை!

அவர் ஸ்வாமியைத் தேடி அவரது அறைக்குச் சென்றார். ஸ்வாமி உறங்கிக்கொண்டிருந்தார். அவரின் உறக்கத்தைக் கலைப்பது கூடாது எனக் கருதிய சித்தய்யா, மெள்ள ஸ்வாமியின் பாதத்தைத் தொட்டு வணங்கிவிட்டுப் புறப்பட்டார்.

கோவிந்தம்மாவுக்கு ஸ்வாமியின் இந்த உத்தரவு குறித்துப் பல கேள்விகள் மனதுக்குள். `பனகானப்பள்ளிக்குச் சென்றுவர நீண்ட நேரம் பிடிக்கும். ஸ்வாமி நாளை மதியம் 12:30 மணிக்கு சமாதி நிலைக்குச் செல்ல இருக்கிறார். அதற்குள் சித்தய்யாவால் எப்படித் திரும்ப முடியும். மட்டுமன்றி, ஸ்வாமி குறிப்பிட்ட நறுமணப் பூக்கள் இங்கே இந்தக் கிராமத்திலேயே கிடைக்கும். அப்படியிருக்க சித்தய்யாவைப் பனகானப்பள்ளிக்கு அனுப்பியது ஏன்?’

இப்படியான கேள்விகள் கோவிந்தம்மாவுக்குள் எழுந்தன. ஆனாலும் அவர் `ஸ்வாமி என்ன செய்தாலும் அதற்குத் தக்க காரண இருக்கும். சித்தய்யாவின் குருபக்தியை உலகுக்கு உணர்த்தவே இப்படியான நாடகத்தை நடத்துகிறார் ஸ்வாமி’ என்பதைப் புரிந்து கொண்டார்.

சையாத் என்கிற சித்தய்யா, ஸ்வாமியின் உத்தரவையே வேதவாக்காகக் கருதி, நடைபயணமாகவே விரைந்தார். இடைவிடாமல் அவர் உச்சரித்துக்கொண்டிருந்த குருநாமம் அவருக்குத் துணையானது!

இந்த நிலையில் மகன் கோவிந்தாசார்யாவுக்கும் சில உபதேசங்கள் நல்கினார் வீரபிரம்மேந்திரர். அதுபற்றியும் நாம் அறிவது அவசியம்.

ஸ்வாமி வீரபிரம்மேந்திரர், தாம் சமாதி நிலையை அடையப் போகிறோம் என்று உணர்ந்த நாள் முதலாகவே பேசுவதைக் குறைத்துக் கொண்டார். எப்போதும் தனிமையில் தியானத்தில் இருப்பதே அவரின் வழக்கமாயிற்று.

அன்றைய தினம் கோவிந்தசார்யாவை அழைத்து அருகில் அமரச் சொன்னவர் அவருக்கு அறிவுரைகள் வழங்கினார். ``நான் இன்று மதியம் ஜீவசமாதி அடையப்போகிறேன். வாழும் காலத்தில் என்னைத் தேடி வரும் மக்களுக்கு ஞானமார்க்கத்தைப் போதித்தேன். இனி இப்பொறுப்பை நீ ஏற்க வேண்டும். அதற்குத் தகுதியுள்ளவனாக நீ இருக்கவேண்டும்...’’ என்றெல்லாம் அறிவுறுத்தினார்.

ஸ்வாமியின் சமாதி நிலை அறிவிப்பைக் கேட்டு கோவிந்தாசார்யா அதிர்ந்தார். அத்துடன் பொறுப்பை எப்படிச் சுமக்கப்போகிறோமோ என்று தயங்கவும் செய்தார். அவரின் தயக்கத்தைப் போக்கிய ஸ்வாமி வீரபிரம்மேந்திரர், ``உனக்கு ஒரு தெய்விக ரகசியத்தைக் கூறுகிறேன்... உனக்குப் பிறக்கப் போகும் நான்கு பெண்களும் யோகினிகளாகத் திகழ்வார்கள். அவர்களில் மூத்தவள் ஈஸ்வரம்மா பார்வதிதேவி அம்சம். முக்காலமும் உணர்ந்த பிரம்மஞானியாகத் திகழ்வாள். மற்ற மூவரும் பர்வதம்மா, சங்கரம்மா, கோவிந்தம்மா. இவர்களும் தெய்விக அம்சம் நிறைந்தவர்கள்.

முதல் பெண் ஈஸ்வரம்மா மிகப்பெரிய மடத்துக்குப் பொறுப்பாளராக பதவி ஏற்பாள். உனக்கு ஏற்படும் சந்தேகங்களை அவளிடம் கேட்டு நிவர்த்தி செய்துகொள்’’ என்றார். அத்துடன் சித்தய்யா குறித்த ரகசிய விவரங்களையும் விளக்கத் தொடங்கினார்.

- தரிசிப்போம்...