Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்

வீரபிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீரபிரம்மேந்திரர்

வீரபிரம்மேந்திரர்

மகாயோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்

வீரபிரம்மேந்திரர்

Published:Updated:
வீரபிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீரபிரம்மேந்திரர்

நேரத்தின் அளவைக் கருத்தில் கொண்டு வேகவேகமாக பயணித்துக் கொண்டிருந்த சித்தய்யா, சாதுவின் குரல் காதில் விழுந்தபோதும் திரும்பிப்பார்க்கவிலை. மீண்டும் ஒருமுறை அழைத்தபோதுதான் ஒரு விநாடி நின்று திரும்பினார். அங்கே பொலிவான தோற்றத்துடன் திகழ்ந்த சாது ஒருவர், சித்தய்யாவின் பயணம் குறித்துவிசாரித்தார்.

வீரபிரம்மேந்திரர்
வீரபிரம்மேந்திரர்


சித்தய்யா ஓரிரு வரிகளில் பதிலைச் சொல்லிவிட்டுத் திரும்பி நடக்கத் தொடங்கினார். அப்போது மீண்டும் சாதுவின் குரல் பின்னால் ஒலித்தது

`உண்மையான குருபக்தி உனக்கு உண்டு எனில், இதோ... இங்குள்ள கிணற்றில் முளைத்திருக்கும் செடியில் இருந்து மூன்று இலைகளை மட்டும் பறித்துச் செல்’’ என்றது சாதுவின் குரல். அப்போதுதான் சித்தய்யாவுக்கு அந்தக் குரல் தன் குருநாதரின் குரலைப் போல் இருப்ப தாகப்பட்டது. சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தார். ஆனால், அங்கே சாது இல்லை; அதன் பிறகு அவரின் குரலும் ஒலிக்கவில்லை.

சித்தயாவுக்கு `குரல் வாக்கு’ குருவின் வாக்காகவே தோன்றியது. சாது சொன்னபடியே அருகில் கிணற்றில் முளைத்திருந்த செடியின் மூன்று இலைகளைப் பறித்துத் தனது பையில் வைத்துக்கொண்டார். அவ்வளவுதான்... சில விநாடிகளில் அந்தப் பிராந்தியம் முழுவதும் நறுமணம் மிகுந்த பூக்களின் வாசனை பரவியது.

சித்தய்யா தனது பையைத் திறந்து பார்த்தபோது வியப்பின் உச்சிக்கே சென்றார். ஆம்! அவர் பறித்து வைத்திருந்த இலைகள் அரியவகை வாசனை மலர்களாக மாறியிருந்தன. தனக்குப் பின்னால் வந்து வழிகாட்டியது சாட்சாத் குருநாதரே என்பதைத் தெள்ளத் தெளிவாக அவரால் உணரமுடிந்தது.

``குருவே சரணம்!’’ என்று கூறியபடி உடனடியாக மடத்துக்குத் திரும்ப தொடங்கினார். திரும்பும் வழியிலும் ஒரு சோதனையை அவர் சந்திக்க வேண்டியிருந்தது.

இந்த முறை வயதான அந்தணர் வடிவில் எதிர்ப்பட்டார் வீர பிரம்மேந்திரர். அவர் சித்தய்யாவைக் கடந்து விரைவாகச் சென்று கொண்டிருந்தார். அவரைக் கவனித்த சித்தய்யா, திரும்பிச் சென்று அந்தணரை நெருங்கி அவரிடம் வினவினார்.

``ஐயா! தள்ளாத வயதில் இவ்வளவு விரைவாக எங்கு செல்கிறீர்கள்?’’

அந்தணர் ``மகனே! வேலை நிமித்தமாக ஒரு கிராமத்துக்குச் சென்றேன். அது முடிந்து திரும்பும் வழியில் கண்டிமல்லயாபள்ளி என்ற கிராமத்தைக் கடந்து வந்தேன். அப்போது, அவ்வூரில் மக்கள் எல்லோரும் ஓரிடத்தில் குழுமியிருந்தனர். காரணம் கேட்டபோது மகாயோகியான வீரபிரம்மேந்திர ஸ்வாமி ஜீவ சமாதி அடையவிருக்கிறார் என்று தகவல் சொன்னார்கள்.

நானும் ஸ்வாமியை தரிசித்தேன். அவர் கால்க்ஞானம் எனும் புனித நூலிலிருந்து பல முக்கிய அம்சங்களை உபதேசமாக வழங்கினார். பின்னர் ஜீவசமாதிக் குழியில் அணையா விளக்கு ஒன்று ஏற்றப்பட்டது. ஸ்வாமி எல்லோருக்கும் ஆசி கூறி குழியில் அமர்ந்தார். சமாதியும் மூடப்பட்டுவிட்டது. முன்னதாக அந்த ஸ்வாமி என்னைப்போன்ற ஏழை அந்தணர்களுக்கு வஸ்திரங்கள் வழங்கினார். எனக்கும் கிடைத்தது!’’ என்று கூறி, தனது பையிலிருந்து புதிய வஸ்திரங்களை எடுத்து சித்தய்யாவிடம் காண்பித்தார்.

சித்தய்யா அதிர்ந்துபோனார். `ஸ்வாமி என்ன இது சோதனை. நான் பெரும் துர்பாக்கியசாலி. எனக்கு எல்லாமுமான சத்குரு ஜீவ சமாதி அடைந்துவிட்டார். நான் அதை அறியாமல் இங்கு இருக்கிறேனே... என்னை விட்டுவிட்டு தாங்கள் மட்டும் எவ்வாறு சென்றீர்கள். உங்களின் இறுதி தரிசனம் கிடைக்கவில்லையே...’ என்று பலவாறு சிந்தித்துக் கலங்கினார் சித்தய்யா.

அதேநேரம், வேறொரு சிந்தனையும் உதித்தது அவருக்குள். `ஒருவேளை இந்த அந்தணர் என்னைச் சோதிப்பதற்காக நாடகம் ஆடுகிறாரோ’ என்று எண்ணினார். ஆகவே அந்தணரிடம், ``ஐயா! நீங்கள் உண்மையைத்தான் கூறுகிறீர்களா? சத்தியத்தை உரையுங்கள். என் ஸ்வாமி சமாதி நிலையை அடைந்துவிட்டாரா?’’ எனக் கேட்டார்.

அந்தணரும் ``இது சத்திய வாக்கு’’ என்றார்.

சித்தய்யா நிலைகுலைந்து அந்த இடத்திலேயே செயலற்றுப்போய் அமர்ந்துவிட்டார். `ஸ்வாமியின் அருகில் இருந்திருந்தால் நானும் அவருடன் அவரின் திருப்பாதங்களுக்கு அருகில் அமர்ந்திருப்பேனே... ஸ்வாமி! அந்தப் பாக்கியம் எனக்குக் கைகூடவில்லையே? இனி, நான் என்ன செய்வேன்’ என்று புலம்பியபடியே தரையில் சாய்ந்துவிட்டார்.

அதுவரையிலும் அருகில் பொறுமையாக நின்றிருந்த அந்தணர், சித்தய்யாவின் நிலையைக் கண்டதும் ``அட பைத்தியக்காரனே! ஒரு மிகப்பெரிய குருவின் அன்புச் சீடன் நீ. இவ்வாறு குழந்தைபோல் அழுதுகொண்டிருந்தால், இத்தனை வருடங்கள் அவரிடம் நீ பெற்ற ஞானத்தால் என்ன பயன்? நடந்தது இயற்கையின் நியதி. குரு உனக்கு அளித்த கடமையை நினைவில் கொள்வாயாக. அறியாமையில் இருந்து வெளியே வா’’ என்றார்.

இவ்வாறு கூறிய அந்தணர் சட்டென்று மறைந்து விட்டார். சித்தய்யா உண்மை நிலையை உணர்ந்தார். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மடத்தை நோக்கி ஓடினார்.

காற்றைவிட வேகமாகப் பயணித்து மடத்தை அடைந்தார். மடத்தில் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தார். `இதென்ன சோதனை. குருநாதரின் சமாதியைத் தரிசிக்கவும் அவரின் அன்புச் சீடருக்கு உரிமை இல்லையா?’ என்று எண்ணியபடியே கதவை பலம்கொண்ட மட்டும் தட்டினார்.

`சித்தய்யா வந்திருக்கிறேன்... கதவைத் திறந்துவிடுங்கள்’ என்று அவர் பலமுறை கூக்குரலிட்டும் ஒருவரும் வரவில்லை. சித்தய்யா ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.

`என்னையும் அறியாமல் நான் ஏதோ பாவம் செய்திருக்கிறேன். ஆகவேதான் குரு என் மீது கோபமாக இருக்கிறார். பிராயச்சித்தமாக எனது ஆயுளை முடித்துக்கொள்கிறேன்; குருநாதருடன் ஐக்கியமாகி விடுகிறேன்’ என்று முடிவுசெய்தவராக வாயிற்கதவின் அருகில் பத்மாசனத்தில் அமர்ந்தார்.

மூச்சை உள்ளடக்கி, சக்கரங்களை இயக்கி குண்டலினி சக்தியை விழிக்கச் செய்தார். பின்னர் அதை சகஸ்ரார மையத்துக்குக் கொண்டு சென்றார். அங்கு குருவின் திருவுருவைப் பதியவைத்து, அவருக்குள் தன்னையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதுவே விதி முடிவுத் தேவதையை அழைக்கும் வகையாகும். இதற்கு அந்தர்கும்பகா என்று பெயர். அதாவது குருவின் ஆத்ம ஜோதியுடன் தாமும் கலந்து விடுவது. இந்த யோகப் பயிற்சி எல்லோருக்கும் கைகூடாது. சித்தய்யா பிரம்ம ஞானி. இதை ஸ்வாமி வீரபிரம்மேந்திரரே பலமுறை எடுத்துச் சொல்லியுள்ளார். ஆக, அபூர்வமான இந்த யோக சக்தியைக் கையாண்டு, தனது ஆத்மாவை சரீரத்திலிருந்து தனிமைப்படுத்த முயன்றார் சித்தய்யா.

அவரின் பிடிவாதத்தை நன்கு உணர்ந்த கோவிந்தம்மா வாயிலுக்கு ஓடோடி வந்தார். சித்தய்யாவின் முயற்சியைத் தடுத்து நிறுத்தினார்.

``நீ பல ஆண்டுகள் வாழ்ந்து தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதே ஸ்வாமியின் விருப்பம். ஜீவசமாதி அடையுமுன், உன்னைப் பற்றியும் உன் பெருமைகளையும் எல்லோருக்கும் எடுத்துரைத்தார். ஆகவே, அவருக்கு உன்மீது எவ்வித கோபமும் இல்லை. உனது துன்பத்தை அவரால் தாங்கிக்கொள்ள இயலாது. ஆகவேதான் ஜீவசமாதி அடையும் நேரத்தில் உன்னை இங்கிருந்து அனுப்பினார். இப்போது நீ அவரின் சமாதியை தரிசித்து வா’’ என்றார்.

சித்தய்யா ஓடோடிச் சென்றார். சமாதி மண்டபத்தைக் கண்டதும் மீண்டும் குருவின் நினைவு வர, மூர்ச்சையாகி விழுந்தார். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் சுயநினைவுக்கு வந்தவர், எழுந்து சமாதியை மும்முறை வலம் வந்தார். மலர்கள் தூவி வணங்கினார்.

அப்போதும் அவரின் மனம் சமாதானம் அடையவில்லை. ``ஸ்வாமி! நீங்கள் இல்லாத உலகில் என்னாலும் வாழ இயலாது. நீங்கள் தரிசனம் தரவில்லை எனில், இப்போதே எனது உயிரைத் தியாகம் செய்வேன்’’ என்றார் உரத்தக் குரலில்.

அருகில் புல்லறுக்கப் பயன்படும் கத்திரி ஒன்று கிடப்பதைக் கண்டவர், அதை எடுத்துத் தனது கழுத்துக்குக் குறிவைத்தார். என்ன விந்தை... மறுகணம் அந்த ஆயுதம் இரண்டாக உடைந்து விழுந்தது.

சித்தய்யா மனம் உடைந்து `என் உயிரை விடவும் எனக்கு உரிமை இல்லையா?’ என்று அரற்றியவர், மீண்டும் யோக ஆற்றலைப் பயன்படுத்தி உயிரைத் துறக்கும் முயற்சியில் இறங்கினார்.

அப்போது ``சித்தா’’ என்று குருநாதரின் குரல் ஒலித்தது!

- தரிசிப்போம்...

இவன் மட்டும் என்ன உசத்தி
இவன் மட்டும் என்ன உசத்தி

இவன் மட்டும் என்ன உசத்தி?

மடாலயத் தலைவர் ஒருவர், அங்கிருந்து மாற்றலாகி வெளியூரில் உள்ள வேறொரு மடத்துக்குச் செல்ல வேண்டி இருந்தது. எனவே, அவர் தன் சீடர்களுள் ஒருவரை இந்த மடத்தின் தலைவராக்க நினைத்தார். அவர், ‘‘இன்று முதல் உங்கள் செய்கைகளை கவனித்து, தகுந்த ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்கப் போகிறேன்!’’ என்று சீடர்களிடம் அறிவித்தார்.

அந்த நிமிடம் முதல் எல்லாச் சீடர்களும் தங்களது கடமைகளை ஒழுங்காகச் செய்தனர். சில நாட்கள் கழித்து, ‘‘இவனே அடுத்த தலைவன்’’ என்று ஒருவனை அறிவித்தார் குரு. சீடர்களுக்கு அதிர்ச்சி. அவர்கள், ‘‘நாங்கள் எல்லோரும் ஒழுங்காகத்தான் நடந்து கொண்டோம். அப்படி இருக்க இவன் மட்டும் என்ன உசத்தி?’’ என்று ஆதங்கத்துடன் கேட்டனர்.

உடனே, ‘‘நான் அறிவிப்பு செய்யும் முன்பே, அதே ஒழுக்கத்துடன் நடந்து கொண்டவன் இவன்!’’ என்று பதிலளித்தார் குரு.

- ஜெயலட்சுமி கோபாலன், சென்னை