Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்

Published:Updated:
வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

காட்டுப் பாதையில் வீரபிரம்மேந்திரர் சென்றுகொண்டிருந்த வண்டியை வழிமறித்து சூழ்ந்துகொண்டனர் சிலர். அவர்கள் கொள்ளையர்கள். வண்டியோட்டி பயந்து நடுங்கினான். அவன் கொள்ளையர் தலைவனிடம், ``ஐயா! நான் சாதாரண வண்டி ஓட்டி; பரம ஏழை. என்னிடத்தில் எதுவும் இல்லை. என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்’’ என்றான்.

வீரபிரம்மேந்திர சுவாமி
வீரபிரம்மேந்திர சுவாமி


அதேநேரம் வீரபிரம்மேந்திர சுவாமிகளின் அருள்பார்வை அந்த வண்டியோட்டியின் மீது விழுந்தது. ஆம் ஸ்வாமி அவனை ஒரு பார்வை பார்த்தார். மறுகணம் அவனுடைய பேச்சும் செயல்பாடுகளும் அடியோடு மாறிப் போயின. அவனிடமிருந்த பயம் காணாமல் போனது.

``என்னை மீறிதான் வண்டியில் இருப்பவரை நீங்கள் தொட முடியும். அவர் சாதாரணமானவர் அல்ல. பிரபஞ்சத்தையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் சக்கரவர்த்தி. ஞானம் எனும் பெருஞ் சொத்துக்குச் சொந்தக்காரர். உயர்ந்த நேர்மையான சிந்தனை உள்ளவர்களுக்கு தனது ஞானம் எனும் செல்வத்தை அள்ளி அள்ளித் தருவார். அவரின் பாதங்களைச் சரணடையுங்கள். அவர் உங்கள் பாவங்களை அழித்து, ஞானத்தின் திறவுகோலை உங்களுக்கு வழங்கக் காத்துக்கொண்டிருக்கிறார்’’ என்றான்.

அவனது இந்தப் பேச்சைக் கேட்டு சீடர்கள் வியந்தனர். `ஸ்வாமி நினைத்தால் எவரும் ஞானியாக முடியும்’ என்று உணர்ந்தனர். கொள்ளையர்களோ வண்டியோட்டி சொன்னவற்றை ஏற்கவில்லை. ஸ்வாமியை கீழே இறங்கும்படி உத்தரவிட்டனர். அவரோ அமைதியாக வீற்றிருந்தார். இதனால் கொள்ளையர்களின் கோபம் அதிகரித்தது. அனைவரும் அவரை அடித்துப் பணியவைக்க முடிவு செய்தனர். கைகளில் தடியை எடுத்து ஓங்கினர். ஆனால் ஓங்கிய கை ஓங்கியபடியே நின்றது. அவர்களால் தங்களின் கையை அசைக்க முடியவில்லை.

அதேவேளை, திருடர்களால் தங்களுக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாதே என்று மற்ற சீடர்கள் எல்லாம் ஓடி ஒளிந்தனர். சித்தய்யா மட்டும் ஸ்வாமியின் திருநாமத்தை உச்சரித்தபடி அருகிலேயே நின்றிருந்தார். ஸ்வாமி வண்டியிலிருந்து கீழே இறங்கினார். கொள்ளையரை நோக்கி, ``ஏன் அப்படியே நின்று விட்டீர்கள். என்னை அடித்துப் போட்டுவிட்டு வண்டியில் உள்ள செல்வத்தைத் தூக்கிச் செல்லுங்கள்’’ என்றார்.

அவரின் வார்த்தைகள் தங்கள் செவிகளில் தெளிவாக விழுந்தும் கொள்ளையர்களால் கையை கீழே இறக்கமுடியவில்லை. ஸ்வாமி சித்தய்யாவிடம் ``இவர்களை ஒவ்வொருவராக என்னிடம் அழைத்து வா’’ என்றார்.

அப்படியே செய்தார் சித்தய்யா. ஸ்வாமி அவர்கள் ஒவ்வொரு வரின் கைகளையும் தன் கரங்களால் தொட்டு கீழே இறக்கினார். அவர்களுக்கு விபூதி அளித்தார். அவர்களின் கரங்கள் நலம்பெற்றன. ஆனால், சொல்லிவைத்தாற்போன்று எல்லோரும் தலைகுனியும் நிலை ஏற்பட்டது. அவர்களை அறியாமலேயே சிரம் தாழ்ந்தது.

வீரபிரம்மேந்திரர்
வீரபிரம்மேந்திரர்


அனைவரும் ஸ்வாமியிடம் மன்னிப்புக் கோரினார்கள். ``இனியும் நாங்கள் சிறு உயிருக்கும் துன்பம் விளைவிக்கமாட்டோம். தங்கள் அருளால் எங்களின் கைகளுக்கு உயிர் கிடைத்தது. ஆனால் குனிந்த தலையை நிமிர்த்த முடியவில்லை. நீங்கள்தான் மன்னித்து எங்கள் தலையை நிமிர்த்தவேண்டும்’’ என வேண்டினார்கள்.

ஸ்வாமி, ``உங்களின் பாவக் கணக்குகளைத் தீர்க்கவே நான் இவ்வழியில் வந்தேன். இனி நீங்கள் நினைத்தாலும் உங்களால் தவறு செய்ய இயலாது. ஆம்! இது கடவுளின் தண்டனையே. உங்களின் நிலைகுறித்து நீங்கள் வருந்தும் போதெல்லாம், நீங்கள் செய்த பாவச் செயல்கள், கொலை பாதகங்கள் எல்லாம் உங்கள் நினைவுக்கு வரவேண்டும். மற்றவர்களுக்கும் உங்களின் நிலை ஒரு பாடமாகும்’’ என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

இதற்கிடையில் ஓடி ஒளிந்த சீடர்கள் யாவரும் தங்களின் செயலுக்காக வெட்கித் தலைகுனிந்தனர். அவர்களில் ஒருவன் ``குருவின் மீது நம்பிக்கை இல்லாமல் நடந்துகொண்டோம். சித்தய்யாவின் குருபக்தியில் நூறில் ஒரு பங்குகூட நம்மிடம் இல்லை என்பதை குரு இன்று நமக்குத் தெளிவாக உணர்த்திவிட்டார்’’ என்று கூறி கண்ணீர் வடித்தான்.

மற்றவர்களும் அதை ஆமோதித்து குருதேவரிடம் மன்னிப்பு வேண்டினர். அவரும் அவர்களைக் கருணையோடு மன்னித்து அருள்புரிந்தார். அவர்களின் பயணம் மீண்டும் தொடர்ந்தது. ஸ்வாமி வண்டியில் அமர்ந்திருக்க, அவருக்கு விசிறி சேவை செய்தபடி சித்தய்யா வண்டியுடன் சேர்ந்து நடந்துகொண்டிருந்தார். மற்றவர்களில் சிலர் ருத்ரம் போன்றவற்றைச் சொல்லியபடி பயணித்தனர். வேறுசிலர் குருநாமத்தை உச்சரித்தபடி சென்றனர்.

அவர்களின் யாத்திரை புஷ்பகிரி எனும் கிராமத்தின் எல்லையை அடைந்தது. ஊர் எல்லையில் இவர்களை பண்டிதர்கள் சிலர் வழிமறித்தனர். சித்தய்யாவிடம் ``நீங்கள் எல்லோரும் யார், எங்கிருந்து வருகிறீர்கள்?’’ என்று கேட்டனர்.

``ஐயா! நான் பிறப்பால் முகமதியன். இந்த ஸ்வாமியின் சீடராக ஏற்றுக்கொள்ளப்பட்டேன். இவர் இந்தப் பிரபஞ்சத்தின் அதிபதி, வைகுண்டநாதர் வீரபிரம்மேந்திர ஸ்வாமி ஆவார்’’ என்று பதிலளித்தார் சித்தய்யா.

பண்டிதர்கள் அதைக்கேட்டுச் சிரித்தனர். மாற்று மதத்தைச் சேர்ந்த நீ காவி உடுத்தியிருக்கிறாய். கையில் ருத்ராட்சம் வேறு... எங்களை அவமானப்படுத்தவே நிங்கள் எல்லோரும் இங்கே வந்துள்ளீர்கள்...’’ என்றெல்லாம் கூறி, ஸ்வாமியையும் சீடர்களையும் ஊருக்குள் செல்லவிடாமல் தடுத்தனர்.

சித்தய்யா அவர்களிடம் ``நீங்கள் ஆத்திரம் கொள்ள தேவையில்லை. நான் சொல்வதை அமைதியாகக் கேளுங்கள்’’ என்று கூறி விட்டு சம்ஸ்கிருத சுலோகம் ஒன்றைக் கூறி அதன் விளக்கத்தையும் எடுத்துரைத்தார்.

``இறைவனை அடைவதற்கான தகுதி உண்மையான பக்தி மட்டுமே; பிறப்பு, குலம், மதம் எதுவும் தேவையில்லை. ஒருவர் தன்னையே இறைவனிடம் சமர்ப்பித்துக்கொள்ளும் தன்மை உடை யவராக இருந்தால், அவருக்கு நிச்சயம் முக்தி நிலை வாய்க்கும்’’ என்றார்.

பண்டிதர்களோ அவரின் கூற்றினை ஏற்கவில்லை. இறைவனை ஆராதிக்க தாங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று கூறினார்கள். தங்களின் கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை எனில், சித்தய்யாவும் உடன் வந்த எல்லோரும் கடும் துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்தார்கள்.

ஸ்வாமி அவர்களிடம் ``உங்களுக்கு நான் விளக்கம் அளிக்கிறேன்’’ என்று கூறி பூமியில் பிறந்த எல்லோரும் தாயின் கருவறையில் பிண்டமாகத் தோன்றி இப்பூமியில் பிறந்தவர்களே. ஆக, மனிதப் பிறப்பில் எவ்வித பேதங்களும் இல்லை’’ என்று கூறி, ஞானநூல்களின் விளக்கங்கள், கிருஷ்ண பகவானின் உபதேசம், ரிஷ்யசிருங்கர், விஸ்வாமித்திரர், வால்மீகி, வியாசர் முதலான ரிஷிகளின் மகிமைகள் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

உண்மை உணர்ந்த வயதான பண்டிதர் ஒருவர், ``ஸ்வாமி! தாங்கள் மிக உயர்ந்த ஞானத்தை அடைந்தவர். ஆனால், இங்குள்ள இந்தப் பண்டிதர்களுக்கு தாங்கள் கூறுவது எதுவும் காதில் நுழையாது. ஆகவே, தயவுகூர்ந்து இந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுங்கள். இவர்களால் நீங்கள் துன்பம் அடைவதை என்னால் காண இயலாது’’ என்று கரம்கூப்பி வேண்டினார்.

உடனே அவர்மீது கோபம் கொண்ட மற்ற பண்டிதர்கள் அந்த முதியவரைத் தாக்க ஆரம்பித்தார்கள். ஸ்வாமி அவர்களைத் தடுத்தார்.

``முதியவரைத் தாக்கினால் கொடும் பாவம் வந்து சேரும். அவரை அடிக்காதீர்கள். நாங்கள் புறப்படத் தயாராக உள்ளோம்’’ என்றவர், அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார். ஆனால் பண்டிதர்கள் விடவில்லை. ஸ்வாமியையும் சீடர்களையும் பலவாறு அவதூறு செய்து அவமதித்தனர்.

வீரபிரம்மேந்திரர் அவர்களிடம், ``என்ன பண்டிதர்கள் நீங்கள்? தகாத வார்த்தைகளையெல்லாம் பிரயோகித்து பவித்ர தன்மையை இழந்துவிட்டீர்கள். கர்வமும் கர்மவினையும் உங்களை ஆட்டிப் படைக்கின்றன’’ என்று கூறியவர் கையை நீட்டி ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, ``அதோ பாருங்கள்... உங்களின் கர்மவினை உங்கள் வாழ்வை எரித்துக்கொண்டிருக்கிறது...’’ என்றார்.

பண்டிதர்கள் அவர் சுட்டிக்காட்டிய திசையை நோக்கினார்கள். அங்கே அவர்களின் வீடுகள் இருந்த பகுதி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது!

- தரிசிப்போம்...

கண்ணனுக்கு கொழுக்கட்டை..


கண்ணனின் விஷமத்தைத் தாங்காத யசோதா அன்னை, கண்ணனை ஒரு கயிற்றால் கட்டிவிட்டு தன் வேலையைப் பார்க்க போய்விட்டாராம். குழந்தை கண்ணன், தன்னை யாரும் விடுவிக்க மாட்டார்களா என்று ஏக்கமாக, தாவி தாவிச் சென்று விநாயகரின் முன்பு தவழ்ந்தாராம். விநாயகர் வைத்திருந்த கொழுக்கட்டையைப் பார்த்த குழந்தை கண்ணன் ஏங்கி நின்றாராம். பரமாத்மாவான கண்ணபிரான் ஏங்குவதா என்று எண்ணிய யானைமுகத்தான், சுயரூபம் கொண்டு கண்ணனுக்கு முன் வந்து, தனது தும்பிக்கையால் கண்ணனுக்கு கொழுக்கட்டை வழங்கினாராம்.

இது என்ன காட்சி என்கிறீர்களா? இப்படிப்பட்ட ஒரு அழகிய திருக்காட்சி உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் இன்றும் உள்ளது. கடவுளர்கள் என்றாலும் குழந்தைகள் குழந்தைகள் தானே!

- என்.மஞ்சுளா, திண்டுக்கல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism