திருத்தலங்கள்
Published:Updated:

விதுரரின் முற்பிறவி!

ஆன்மிகக் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்மிகக் கதை

நமசிவாயம்

மனிதன் சத்யம், தானம், சோம்பலின்மை, பொறாமை இன்மை, பொறுமை, தைரியம் ஆகிய ஆறு குணங்களை ஒருபோதும் கைவிடக் கூடாது.

ஆன்மிகக் கதை
ஆன்மிகக் கதை


* தினமும் பொருள் வரவு, அன்பான மனைவி, நோயில்லாத வாழ்வு, பிரியமான பேச்சு, நல்ல பிள்ளைகள், சிறந்த கல்வி இவை ஆறும் மனிதனுக்கு நிலையான சுகத்தை அளிக்கும் சம்பத்துகள்.

* வறுமையை ஒழிக்க விரும்பும் மனிதன் அதீத தூக்கம், சோம்பல், பயம், கோபம், முயற்சி இல்லாமை, காரிய தாமதம் ஆகிய ஆறு தோஷங்களும் அணுகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இங்ஙனம் எக்காலத்துக்கும் பொருந்தும் அற நீதிகளை உலகுக்கு உரக்கச் சொன்னவர் யார் தெரியுமா?

விதுரர். மகாபாரதக் காலத்தில் அஸ்தினாபுரத்தின் அமைச்சராகத் திகழ்ந்தவர். கிருஷ்ண பரமாத்மாவின் அன்பைப் பெற்றவர். அறத்தைப் போதிக்கும் விதுரரின் நீதியுரைகள் மகாபாரதம் உத்யோக பர்வத்தில் உள்ளன. விதுரரை தர்மத்தின் அம்சமாகவே போற்றுகின்றன ஞானநூல்கள். இதை மெய்ப்பிக்கும் வகையில், அவரின் முற்பிறவி குறித்த கதையொன்றும் உண்டு!

`மாண்டவ்யர் என்றொரு முனிவர், தவத்தில் ஆழ்ந்திருந்தார். அரண்மனைப் பொருளைத் திருடிய கள்வர்கள் சிலர், காவலர்கள் துரத்தி வர மாண்டவ்யரின் ஆஸ்ரமத்துக்கு ஓடி வந்தனர். பொருள்களை அங்கே பதுக்கி வைத்துச் சென்றனர். நடந்தது தெரியாமல் தவத்தில் ஆழ்ந்திருந்த மாண்டவ்யரைக் கள்வர் எனக் காவலர்கள் பிடித்துச் சென்றனர். அவரைக் கழுவிலேற்ற உத்தரவிட்டான் மன்னன்.

இரும்பாலாகிய சூலத்தால் செய்யப்பட்ட கழுவில் ஏற்றப் பட்டார் அவர். சூலம் அவரைத் துளைத்துச் சென்றது. ஆனால், பல நாட்களாகியும் அவர் சாகவில்லை. கடும் வேதனையைப் பொறுத்துக்கொண்டு, இறைநாமத்தை உச்சரித்தவாறு இருந்தார்.

அவர் சாகாதது அறிந்து மன்னன் பதறினான். அவர் உண்மையான துறவி என்பதை உணர்ந்து, ஓடோடி வந்து வணங்கினான். அவரைக் கழுவில் இருந்து விடுவித்து மன்னிப்பு வேண்டினான். மலர்ந்து சிரித்தவாறே அவனுக்கு ஆசி கூறினார் அவர். தனக்கு இந்த வேதனை முன் ஜன்ம வினையால் வந்ததாகத்தான் இருக்க வேண்டும்; இதற்கு மன்னனைக் கோபித்து என்ன பயன் என்று அவரது பக்குவப்பட்ட மனம் நினைத்தது.

சூலத்தை அவர் உடலிலிருந்து பிடுங்கியும், சூலம் முழுதும் வெளிவராமல் உடைந்து, கால் பகுதி உடலின் உள்ளேயே தங்கி, அதன் தொடர்ச்சியாக இன்னொரு கால் பகுதி வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அதன் பொருட்டும் வருந்தாமல், அந்த இரும்பு முனைப் பகுதியில், தான் பூஜைக்காக மலர்கொய்யும் பூக்குடலையை மாட்டிக்கொண்டு ஆனந்தமாக நடமாடிக் கொண்டிருந்தாராம் அவர். ஆணீ என்றால் சூல முனை. அதோடு வாழ்ந்ததால், அவர் ஆணிமாண்டவ்யர் எனப்பட்டார்.

இந்த ஆணிமாண்டவ்யர், தனக்கு இந்தத் தண்டனை கிட்டக் காரணம் என்ன என்றறிய வேண்டி, கடும் தவம் செய்தார். தர்மதேவதை தோன்றியது (எமதருமன் என்றும் கூறுவது உண்டு) தர்மதேவதையிடம் காரணம் வினவினார். ‘நீங்கள் குழந்தைப் பருவத்தில் தும்பிகளின் உடலுக்குப் பின்னால் முள்ளால் குத்தி வேதனைப்படுத்தினீர்களே... அதற்கான தண்டனைதான் இது!’ என்றது தர்மதேவதை.

‘அறியாப் பருவத்தில் எது செய்தாலும் குற்றமல்லவே? அறிந்து செய்ததல்லவே அது? பதினான்கு வயது வரை எது செய்தாலும் அதற்கு இனி தண்டனை தரக் கூடாது!’ என்று தர்மதேவதைக்குப் புதிய விதி வகுத்துத் தந்தார் முனிவர்.

அதேநேரம், அறியாமல் குற்றம் செய்ததற்குக் கடும் தண்டனை அளித்த தர்மதேவதையைத் தண்டிக்க வேண்டாமா? ஆகவே தர்ம தேவதையை ‘மனிதனாகப் பிறக்கக் கடவது!’ என்று சபித்தார் அணீமாண்டவ்யர். அதன்படியே தர்மதேவதையின் அம்சம் பூமியில் விதுரராகவும் தர்மபுத்திரராகவும் அவதரித்தது என்கின்றன ஞானநூல்கள்!

- நமசிவாயம்

புத்தர்
புத்தர்

`மூச்சு விடும் நேரம்!’

புத்தர் ஒரு முறை, ‘ஒரு மனிதனின் வாழ் நாள் எவ்வளவு காலம்?’ என்று சீடர்களிடம் கேட்டார்.

இந்தக் கேள்வி மிகச் சாதாரண மாகத் தெரிந்தது சீடர்களுக்கு! அதேநேரம், காரணம் இன்றி புத்தர் கேட்க மாட்டார் என்பதும் அவர்களுக்குப் புரிந்தது. ஒருவர் ‘எழுபது’ என்றார். தவறு என்றார் புத்தர்.

அடுத்தவர் ‘அறுபது’ என்றார். அதுவும் தவறு என்றார். இன்னொருவர் ‘ஐம்பது’ என்றார். மீண்டும் தவறு என்றார் அண்ணல். ‘ஒரு மனிதனின் ஆயுள், ஒரு மூச்சு விடும் நேரம்’ என்று புத்தர் சொன்னதும் சீடர்கள் புரியாமல் திகைத்தனர்.

உடனே புத்தர், ‘`ஒரு மூச்சு விடும் நேரம் ஒரு கணப்பொழுது. ஒவ்வொரு கணமும் முழுமையாக வாழ்வதே வாழ்க்கை. நொடி நொடியாக மனிதன் அர்த்தமுள்ள வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்று உணர்த்தவே ஒரு மூச்சு விடும் நேரம் என்றேன்!’’ என்று விளக்கினார்.