Published:Updated:

செல்வகடாட்ச திருத்தலங்கள்!

திருத்தலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
திருத்தலங்கள்

புவனா கண்ணன்

செல்வகடாட்ச திருத்தலங்கள்!

புவனா கண்ணன்

Published:Updated:
திருத்தலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
திருத்தலங்கள்

`அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வகையில், வாழும் காலத்துக்குத் தேவையான பொருள்செல்வத்தையும், மறுமையில் நன்மைகள் அடைய தேவையான அருள் செல்வத்தையும் ஒருங்கே அளிப்பவள் அலைமகள்.

செல்வகடாட்ச திருத்தலங்கள்
செல்வகடாட்ச திருத்தலங்கள்

அந்த அன்னையின் அருள் சுரக்கும் ஆலயங்கள் அனைத்தும் அருளும் பொருளும் அள்ளித் தரும் புண்ணிய க்ஷேத்திரங்களாக விளங்குகின்றன. அரிய திருக்கோலம், விசேஷ வழிபாடுகள், சிறப்புப் பிரார்த்தனைகள் முதலான சிறப்பம்சங்களுடன் திகழும் - குபேர யோகம் அருளும் லட்சுமிகடாட்ச தலங்களும் தகவல்களும் இங்கே உங்களுக்காக!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோல்ஹாப்பூர், திருமகளுக்கான புராதன தலங்களில் ஒன்று. கோலாசுரனை திருமகள் வதம் செய்த தலம் இது. அகத்தியர், ‘லட்சுமி பஞ்சகம்’ பாடியதும் இங்குதான். மும்பையில் இருக்கும் மகாலட்சுமி கோயிலும் பிரசித்தி பெற்றது.

அஹோபில மடம் மும்பைக் கிளையில் அமைந்துள்ளது நரசிம்ம சுவாமி திருக் கோயில். இங்கே மகாலட்சுமித் தயார் தனிச் சந்நிதிகொண்டு அருள்கிறாள். இந்தச் சந்நிதி 2007-ம் ஆண்டு அஹோபில மடத்தின் ஜீயர் சுவாமிகளால் சம்ப்ரோக்‌ஷணம் செய்யப்பட்டு அமைக்கப்பட்டது. இங்கு தாயாரின் உற்சவருக்கு `செஞ்சு லட்சுமி' என்பது திருநாமம். திருமால், நரசிம்மராக அவதரித்த தலம் அகோபிலம். இங்கு புகழ்பெற்ற நவ நரசிம்மர் கோயில்கள் உள்ளன. இங்குள்ள லட்சுமி தாயார் வேடர் குல பெண் வடிவத்தில் வீற்றிருக்கிறாள். இங்கு வாழும் மலைவாழ் மக்களுக்கு `செஞ்சுக்கள்' என்று பெயர். அவர்களின் பெயரில், தாயாரும் `செஞ்சுலட்சுமி' என்றே அழைக்கப்படுகிறாள். இந்தத் தாயாரை வழிபட்டால் செல்வ வளம் சேர்வதோடு மனதைரியமும் வீரமும் பிறக்கும் என்பது நம்பிக்கை.

தென் இந்தியாவிலும் திருமகளுக்கென்று தனிக் கோயில்கள் உண்டு. அவற்றுள் குறிப்பிடத் தக்கது, திருப்பதி அருகிலுள்ள திருச்சானூர். தாயார் அலர்மேல்மங்கை என்றும் பத்மாவதி தாயார் என்றும் வணங்கப்படுகிறார். தினமும் இரவில் திருமலையிலிருந்து திரு வேங்கடவன் இங்கு வந்து தங்கிவிட்டு, பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம். தினமும் காலையில் எழுந்ததும் `வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ’ என்று கூறி பத்மாவதி தாயாரைத் தியானித்து வழிபட, வீட்டில் லட்சுமிகடாட்சம் நிறைந்திருக்கும் குபேர சம்பத்துகள் கைகூடும் என்பது நம்பிக்கை.

திருச்சி- உறையூரில், கமலவல்லி நாச்சியார் எனும் பெயரில் அவதரித்த திருமகள், அரங்க நாதரை மணந்து கொண்டாளாம். எனவே, இங்கும் அவளுக்குத் தனிக் கோயில் உள்ளது.

கோவை அருகே உள்ள ஊர் காரமடை. இங்கு அரங்கநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அருகில் உள்ள மலையில் பெட்டத்தி அம்மனாக தனிக்கோயில் கொண்டிருக்கிறாள் திருமகள்!

அஷ்ட ஐஸ்வரியங்களை பெற்று உலகம் செழிக்கும் வகையில் அஷ்ட லட்சுமிகளும் அருள் புரிய, சென்னையிலும் மகாலட்சுமிக் கென்று தனிக்கோயில் அமைக்க விரும்பினார் காஞ்சிமுனிவர். அந்தத் திருப்பணியை, முக்கூர் சீனிவாச வரதாச்சாரியாரிடம் ஒப்படைத் தாராம். இறையருளால் விரைவில் விரைவில் திருப்பணிகள் நிறைவடைந்தன. சென்னை- பெசன்ட் நகரில், வங்கக்கடற்கரையோரம் அழகுற அமைந்தது அஷ்டலட்சுமி ஆலயம்.

அஷ்டலட்சுமிகளும் அருளும் இந்த ஆலயம் அஷ்டாங்க விமானத்துடன் திகழ்கிறது. திருமகள் உள்ளிட்ட சக்தி தெய்வங்களை சக்ர வடிவிலும் மேரு உருவாகவும் வழிபடுவது சிறப்பு என்கின்றன ஞான நூல்கள். மேலும் பிரதான மூர்த்தியாம் மகாலட்சுமி உடனுறை மகாவிஷ்ணு சந்நிதி முதல், அஷ்ட லட்சுமியரை யும் பக்தர்கள் தரிசித்து வலம் வரும் அமைப்பு, ‘ஓம்’ என்ற பிரணவ எழுத்தின் வடிவில் அமைந் திருப்பது விசேஷ அம்சமாகும்.

சென்னை-திருப்பதி மார்க்கத்தில், சென்னை யிலிருந்து சுமார் 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருநின்றவூர். `திரு’வாகிய மகா லட்சுமி தங்கி நின்ற ஊர் என்பதால் திருநின்ற வூர் என்று பெயர்பெற்றதாம். இங்குள்ள அருள்மிகு பக்தவத்சல பெருமாள் ஆலயத்தில் அருளும் தாயார், அழகான தமிழில் `என்னைப் பெற்ற தாயார்’ என்றே வணங்கப்படுகிறார்.

இந்தக் கோயிலில், கிரகச் சக்கரம் ஒன்று உள்ளது. அதில் கட்டத்துக்கு ஒன்பது என்று மொத்தம் 81 நாணயங்களை வைத்து வழிபடுவது விசேஷம். தொடர்ந்து 9 வெள்ளி அல்லது ஒன்பது பௌர்ணமிகள் இப்படிப் பூஜை செய்தால், குழந்தை பாக்கியம், தன வரவு, கல்யாண யோகம் அமையும் என்று ஐதிகம்.

சென்னையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது திருமழிசை அருள்மிகு வீற்றீருந்த பெருமாள் ஆலயம். கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்கிறார் வீற்றிருந்த பெருமாள். இந்தப் பெருமாளின் கிரீடத்தின் நான்கு புறமும் லட்சுமிதேவி அருள்கிறாள்.

திருமகள் தங்கிய `திருத்தங்கல்’ தலத்தில், லட்சுமி தேவி நின்ற கோலத்தில் செங்கமல நாச்சியாராக சேவை சாதிக்கிறார்.

வைணவ தலங்கள் மட்டுமன்றி சிவத்தலங்கள் சிலவும் லட்சுமி கடாட்சம் அருளும் தலங்களாக விளங்குகின்றன. திருமகள் பிறந்த இடம் என்று போற்றப்படும் தரங்கம்பாடி திருமால்மாகுடி தலத்தில் சிவகாம சுந்தரி அம்பாளே திருமகள் அம்சத்தினளாக வணங்கப் படுகிறாள்.

பாண்டிய நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று, சிவகங்கை மாவட்டம்- திருப்பத்தூரில் உள்ள திருத்தளிநாதர் ஆலயம். கெளரியான உமையவளுக்காக ஈசன் கெளரி தாண்டவம் ஆடிய தலம் இது. பின்னாளில், மகாலட்சுமி இந்தத் திருநடனத்தைத் தரிசிக்க விருப்பம் கொண்டாள்; இங்கு வந்து தவம் மேற்கொண்டாள். இறைவன், அவளுக்குத் தாண்டவக் கோலத்தில் காட்சி தந்தருளி னார். எனவே, இந்த ஆடல் கோலம் லட்சுமி தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நடராஜர் சந்நிதிக்கு எதிரிலேயே தாண்டவ கோலத்தைத் தவமிருந்து தரிசித்த மகாலட்சுமி சந்நிதி கொண்டிருக்கிறாள்!

திண்டிவனத்திலிருந்து வந்தவாசி செல்லும் மார்க்கத்தில் சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைதுள்ள ஊர் வெள்ளிமேடுப்பேட்டை. இங்குள்ள திரிபுரசுந்தரி சமேத நாகேஸ்வரர் ஆலயம், லட்சுமி கடாட்சம் தரும் தலமாகத் திகழ்கிறது. ஒருமுறை, திருமாலை அவமதிக்கும் வகையிலான பிருகு முனிவரின் செய்கையைக் கண்டு வெகுண்டெழுந்த திருமகள் வைகுந் தத்தை விட்டு விலகினாள். அவள் பூகோளம் வந்து, நம் தென்னகத்தில் திருமாலை எண்ணித் தவமிருந்த தலங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள். இங்கு, திருமாலை மீண்டும் அடைய வேண்டி அவரையும் நாகேஸ்வரரையும் வேண்டி வழிபட்டாளாம் திருமகள். அதேபோல், சுக்கிரபகவான் தான் இழந்த ஆற்றலை மீண்டும் பெற இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டார் என்கிறது தலபுரானம்.

இப்படித் திருமகளும் சுக்கிரனும் வழிபட்ட ஆலயம் இது என்பதால், சகல ஐஸ்வர்யங் களையும் அளிக்கும் ஆற்றல் கொண்டது. கடன் பிரச்னைகள் நீங்க, வியாபார விருத்தி உண்டாக, செல்வ வளம் பெற இங்கு வந்து வழிபடலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

திருமகளுக்கு எதிரில் பைரவர் தரிசனம்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்குக் கிழக்கில் சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவிசலூர். இங்குள்ள சௌந்தர நாயகி உடனுறை சிவயோகிநாத சுவாமி திருக் கோயில் வெகு பிரசித்தம். இங்கு வந்து தவம் புரிந்த யோகிகள் எட்டுபேர் நிறைவில் சிவலிங்கத்துடன் ஐக்கியமானார்களாம். ஆகவே, இங்குள்ள சிவபெருமானுக்கு சிவயோகி நாதர் என்று திருநாமம். அம்பாளின் பெயர்- சௌந்தர நாயகி.

பைரவர் வழிபாட்டுக்குச் சிறப்புப் பெற்ற தாகத் திகழ்கிறது இந்தத் தலம். இங்கு ஒரே வரிசையில் காட்சி தரும் நான்கு பைரவர் களை ‘சதுர்கால பைரவர்கள்’ என்று சிறப்பித்து வழிபடுகிறார்கள். ஞான பைரவர், சுவர்ணாகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் ஆகிய நால்வரையும் முறையே ஞானம், செல்வம், மனோ தைரியம், முக்திப்பேறு வேண்டி வழிபடுகிறார்கள் பக்தர்கள். குறிப்பாக சுவர்ணாகர்ஷன பைரவர் மகாலட்சுமியின் சந்நிதிக்கு எதிரில் திருவாசியுடன் அருள்கிறார். இவரை வழிபடு வோருக்கு செல்வகடாட்சம், வியாபார அபிவிருத்தி, குடும்பத்தில் நன்மை ஆகிய பலன்களையும் அருள்கிறார். வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் இந்த ஆலயத்துக்குச் சென்று, ராகு காலத்தில் கால பைரவர் துதி சொல்லி, சதுர் கால பைரவர் களை வழிபட, சகல நலன்களையும் பெறலாம்.

ஸ்ரீபத்ம சக்கரம்!

ஸ்ரீபத்ம சக்கரம்
ஸ்ரீபத்ம சக்கரம்


காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 33 கி.மீ. தொலைவில், வந்தவாசிக்கு அருகில் அமைந்துள்ளது, செளந்தர்யபுரம் எனும் ஊர். எம்பெருமானும் தாயாரும் செளந்தர்ய கோலத்தில் அருளும் தலம். இங்குள்ள ஆலயம், சுமார் 500 வருடங்களுக்குமுன் அகோபில மடத்தின் ஆறாம் பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீமத் ஷஷ்ட பராங்குச யதீந்த்ர மஹாதேசிகனால் திருப்ரதிஷ்டை செய்யப்பட்டதாம்.

இந்தத் தலத்தின் விசேஷ அம்சம் ஸ்ரீபத்ம சக்கரம். திருமகளின் பரிபூரண அருட்கடாட்சத்தை அள்ளித்தருவது ஸ்ரீபத்ம சக்கரம். பகவான் சக்ர ரூபீயாக கும்பகோணத்தில் எப்படி சக்ரபாணியாக வீற்றிருக் கிறாரோ, அதைப்போல், அம்புஜவல்லி தாயாரும், வேறு எங்குமே காண்பதற்கரிய அபூர்வமாக இந்தத் தலத்தில் ஸ்ரீபத்ம சக்ர ரூபியாய் அருள்கிறாராம்.

மத்தியில் மேரு பர்வதத்தைக் குறிக்கும் வகையில் ஓர் கர்ணிகையும், அதை ஒட்டினாற்போல் இரு வளையங்களும் திகழ... அதைச் சுற்றி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருளும் அஷ்ட லட்சுமிகளும் நித்ய வாசம் புரிய, அவர்களின் மத்தியில் அம்புஜ வல்லீ அருள்பாலிக்கிறாளாம்.

மேலும், ஸ்ரக்தரா விருத்தத்தைக் குறிக்கும் வகையில் 44 இதழ்களை கொண்டுள்ளது இந்தச் சக்கரம். அதேபோல் நான்கு வேதங்களுக்கு சமமாக நாற்புறமும் நான்கு தீ ஜ்வாலைகளையும், அந்த ஜ்வாலைகளில் லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர், வராஹர், கிருஷ்ணர் ஆகியோரையும் கொண்டு திகழ்கிறது. அற்புதமான இந்த ஸ்ரீபத்ம சக்கரத்தை வழிபடுவதன் மூலம் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism