Published:Updated:

நீர் நிலைகளில் பித்ரு காரியங்கள் செய்வது ஏன்? மகாளய அமாவாசை கடைப்பிடிப்பது எப்படி?

மகாளய அமாவாசை: 'மகாளய தானம் மகத்தான தானம்' என்கின்றன புனித நூல்கள். இந்நாளில் வஸ்திர தானம் செய்ய தரித்திரம் அழியும். குடை, காலணி, போர்வை வழங்க தோஷங்கள் நீங்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'மறந்து போனவர்களை மாகாளயத்தில் சேர்' என்பது பழமொழி. ஏழேழ் தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்களுக்கும் அவர்களுக்கான பித்ரு காரியங்களைச் செய்ய வேண்டும் என்பது நமது தர்மங்கள் நமக்கு விதித்திருக்கும் கட்டளை. பெற்றோர்களைப் பேணுதல், தெய்வ ஆராதனை, அதிதி வரவேற்பு, சந்நியாசிகளைப் போற்றுதல், பித்ரு காரியங்கள் என ஐவகை தர்மங்களைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள்.

தர்ப்பணம்
தர்ப்பணம்

தேவ, பூத, ரிஷி, பித்ரு, வேத யாகங்களில் பித்ருக்களுக்கான யோகமே சிறப்பானது எனப்படுகிறது. இது திதி, தர்ப்பணம் என்னும் வகையில் நீர் நிலைகளுக்கு அருகே எள்ளும் நீரும் பிண்டமும் கொடுத்து செய்யப்படும் ஒரு வழிபாடு. நம்மைப் பிறப்பித்து வாழ்வித்துக் கொண்டிருக்கும் நம்முடைய மூதாதையர்களுக்கு நாம் நன்றி காட்டும் நாளே மகாளய அமாவாசை.

பகீரதன்
பகீரதன்

பகீரதனின் வேண்டுதலுக்காக, அவன் முன்னோர்களின் பாவத்தை அழித்து அவர்களுக்கு நற்கதியை கொடுக்கவே அன்னை கங்கை பூமிக்கு வந்தாள். அதனாலேயே அவளை சாட்சி வைத்து இறந்து போன ஆன்மாக்களை மேலோகம் அனுப்பி வைக்கும் சடங்கை இந்த நாளில் நடத்துகிறோம். பகீரதனின் வேண்டுகோளை நிறைவேற்றிய அன்னை கங்கையிடம், 'இந்த பூவுலகம் இருக்கும் வரை நீங்கள் செய்த நற்காரியத்துக்காக இனி எப்போதும் உங்களை சாட்சி வைத்தே பித்ரு காரியங்கள் நடைபெறும். எங்கே எப்போது பித்ரு காரியங்கள் நடந்தாலும் அங்கு காணப்படும் நீர் நிலைகளில் நீங்களே வந்து ஆசிர்வதித்து, அந்த பித்ரு பிண்டங்களை குறித்த ஆன்மாவுக்குச் சேர்பித்துவிட வேண்டும்!' என்று வேண்டுகோள் விடுக்கிறான் பகீரதன். அவ்வாறே இன்றும் புனித கங்கையின் தலைமையில் அவள் சாட்சியோடு பித்ருக்களை திருப்திப்படுத்தும் காரியங்கள் செவ்வனே நடைபெறுகிறது என்கின்றன புராணங்கள்.

அதுவுமில்லாமல் மானிடர்கள் மண் வழியாக உணவைப் பெற்றுக் கொள்கிறார்கள். தேவர்கள் அக்னி வழியாக உணவைப் பெற்றுக் கொள்வார்கள். அதுபோலவே இறந்து போன ஆன்மாக்கள் நீர் வழியாக தங்களது உணவைப் பெற்றுக் கொள்வது வழக்கம். இதனாலேயே தொன்று தொட்ட காலம் முதல் நீர் வழியே பித்ரு காரியங்களைச் செய்கிறோம். அதற்கு நன்றியாக நீரில் நீராடி வருணனையும் கங்கையும் வழிபடுகிறோம்.

ஆண்டு முழுக்க மாதம்தோறும் அமாவாசை வந்தாலும் பித்ரு காரியங்கள் செய்ய ஏற்ற காலம் மகாளய அமாவாசை எனப்படுகிறது. இறந்து போன ஒவ்வொரு ஆன்மாவையும் அதற்குரிய திதியில் தர்ப்பணம் கொடுத்து மகிழ்வித்து அதை தெய்வங்களிடம் ஒப்படைப்பதே பித்ரு காரியம் எனப்படும். எல்லா முன்னோர்களின் திதியும் நமக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை என்பதாலும், பித்ருக்கள் அனைவரும் பூலோகத்துக்கு ஒரே சமயத்தில் வரும் காலம் என்பதாலும் இந்த மகாளய அமாவாசை பித்ருக்களை மகிழ்விக்க திதி, தர்ப்பணம், படையல், வழிபாடு, தான தர்மங்கள் செய்ய ஏற்ற நாள் எனப்படுகிறது. குறிப்பாக வாரிசுகள் இல்லாத நம் உறவினர்கள், அகாலமாக இறந்து போன ஆன்மாக்களுக்கு இந்த மகாளய அமாவாசை ஷாந்தி செய்ய ஏற்ற நாள் என்கிறது சாஸ்திரம். இதனால் அறிந்தும் அறியாமலும் போன எல்லா முன்னோர்களையும் நினைவில் நிறுத்தி வழிபட வேண்டிய நாள் இது.

பெருந்தொற்று காலம் என்பதால் கடல் மற்றும் ஆறுகளில் நீராடி தர்ப்பண பூஜை செய்ய முடியாதவர்கள், தங்கள் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய நாளை 6-ந் தேதி தங்கள் வீட்டிலேயே அதிகாலையில் எழுந்து குளித்து, காலை உபவாசம் இருந்து தொடங்கி மதியம் படையல் போட்டு அவர்களை வணங்க வேண்டும். மதியம் சாப்பிடுவதற்கு முன்பு காக்கைக்கும் பசு மாட்டிற்கும் உணவிட வேண்டும். ஆதரவற்றோருக்கு உணவும் தானங்களும் அளிக்க வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள். அதன்பின்னர் பித்ருக்கள், குலதெய்வம், இஷ்ட கடவுளை வேண்டி மதிய உணவு சாப்பிட்டு மகாளய விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். இதனால் நமது முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும். நாமும் நல்வாழ்வைப் பெறலாம்.

'மகாளய தானம் மகத்தான தானம்' என்கின்றன புனித நூல்கள். இந்நாளில் வஸ்திர தானம் செய்ய தரித்திரம் அழியும். குடை, காலணி, போர்வை வழங்க தோஷங்கள் நீங்கும். கோதானம் செய்ய காரியத்தடைகள் நீங்கும். அன்னதானம் செய்ய சகல பாவங்களும் நீங்கும் என சாத்திரங்கள் சொல்கின்றன. எனவே புனிதமான இந்த நாளில் முடிந்தவரை தானங்களும் தர்மங்களும் செய்து, குறைந்த பட்சம் பசுவுக்கு ஒரு வாய் கீரையாவது அளித்து பித்ருக்களின் மகிழ்ச்சியைக் கொண்டு நம் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்போம்.

அமாவாசை
அமாவாசை

வேர்கள் இல்லாது விருட்சங்கள் இல்லை; விதைகள் இல்லாது கனிகள் இல்லை. முன்னோர்களின் சாயல் இல்லாமல் நம் தலைமுறைகளே இல்லை என்கிறது கருட புராணம். வாழையடி வாழையென நம்மை வாழ்விக்கும் நம் முன்னோர்களை மகாளய அமாவாசை தினத்தில் நம்மால் முடிந்த அளவுக்கு வழிபட்டு நலமும் வளமும் பெறுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு