Published:Updated:

மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி... மத்யாஷ்டமி நாளில் நாம் செய்யவேண்டியது என்ன?!

புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். அதற்கு முன்பு உள்ள 14 நாள்கள் மகாளய பட்ச நாள்கள் எனப்படும். அதில் எட்டாவதாக வரும் அஷ்டமி தினமே மத்யாஷ்டமி என்ற பித்ரு காரியங்களுக்கு ஏற்ற புண்ணிய நாள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒருவரது வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் மரணம் நிம்மதியாக இருக்க வேண்டும். அதைவிட இறந்துபோன ஆன்மாவுக்குக் குறைந்த பட்சம் ஓராண்டுக்காவது நல்லபடி பித்ரு கர்மாக்கள் செய்யப்பட வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. 'எல்லா பரோபகாரங்களையும் விட உத்தமமானது ஒரு ஜீவனைப் பரமாத்மாவிடம் சேர்க்கிறதுதான்' என்பது காஞ்சி மகாமுனிவரின் அருள் வாக்கு.
பித்ரு காரியங்கள்
பித்ரு காரியங்கள்

நம் வீட்டில் வாழ்ந்து நமக்கு வழிகாட்டியாய் இருந்து மறைந்து போன ஆன்மாக்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் கடைப்பிடிக்கும் சடங்குகள் பித்ரு காரியங்கள் எனப்படுகின்றன. இதில் புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய பட்ச நாள்கள் பித்ரு காரியங்கள் செய்ய ஏற்ற காலங்கள் என்கின்றன நூல்கள். இந்த 15 நாள்களிலும் நம்முடைய பித்ருக்கள் பூமிக்கு வந்து நம்முடைய வணக்கங்களையும் தானங்களையும் ஏற்று விண்ணுலகுக்குச் செல்வதாக ஐதீகம்.

அதில் மிகச் சிறப்பான மத்யாஷ்டமி தினம் 29.09.21 புதன்கிழமையான இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
மகாளய பட்ச நாள்கள்
மகாளய பட்ச நாள்கள்

புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். அதற்கு முன்பு உள்ள 14 நாள்கள் மகாளய பட்ச நாள்கள் எனப்படும். அதில் எட்டாவதாக வரும் அஷ்டமி தினமே மத்யாஷ்டமி என்ற பித்ரு காரியங்களுக்கு ஏற்ற புண்ணிய நாள். மகாளய அமாவாசையை முன்னிட்டு கடந்த பிரதமை திதியில் இருந்தே பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பலரும் தொடங்கி இருப்பர்.

மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் காலபைரவருக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. இறந்துபோன ஆன்மாக்களின் ஏக தலைவனாக விளங்குபவர் பைரவர். மும்மூர்த்திகளில் இவரே ருத்திரராக மத்தியில் இருப்பவர். எனவே மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி, மத்யாஷ்டமி என்று போற்றப்படுகிறது.

மத்யாஷ்டமி நாளில் (29.09.21 புதன்கிழமை) பைரவரை வணங்கி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இல்லை, நாங்கள் மொத்தமாக மகாளய அமாவாசையில்தான் பித்ரு காரியங்கள் செய்வோம் என்று இருப்பவர்கள், இந்த மத்யாஷ்டமி நாளில் உங்கள் பித்ருக்களை எண்ணி ஒரே ஒரு ஜீவனுக்காவது பசியாற்ற வேண்டும் என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

மத்யாஷ்டமி தினம்
மத்யாஷ்டமி தினம்
திருச்சி கோயில்கள் - 14: இன்றும் ஈசனே எறும்பாக வந்து அருளும் திருவெறும்பூர் திருத்தலம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எத்தகைய தோஷம் சாபம் இருந்தாலும் ஒருவரைக் காப்பாற்றுவது அவரின் முன்னோர்களின் ஆசிதான் என்கின்றன ஆன்மிக நூல்கள். பித்ருக்களின் ஆசி பெற இந்த மகாளய காலம் மிகுந்த பயன் தரும். பித்ருக்களுக்கு பிரியமான உணவானது எள் கலந்த நீரே. இதை மனமுவந்து மந்த்ர பூர்வமாக அவரவர் பெயர் சொல்லி அளிப்பதன் மூலம் அவர்களது ஆன்மா திருப்தி கொண்டு மேல் உலகம் செல்லும் என்பது நம்பிக்கை. மத்யாஷ்டமி நாளில் தில தர்ப்பணம் கொடுப்பது சனி பகவானை மகிழ்ச்சி கொள்ள செய்து நலம் அளிக்கும் என்பதும் நம்பிக்கை. இந்த மத்யாஷ்டமி தினத்தில் நம் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், தானங்கள் கொடுப்பதன் வழியே நம்முடைய வாழ்க்கை சிறக்கும். பைரவரின் அருளால் தைரியம், சமயோசித புத்தி, அறிவாற்றல் அதிகமாகும் என ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

தர்ப்பணம்
தர்ப்பணம்

சைவ சித்தாந்தத்தில் ஈசனே தன் அம்சமான ஒரு ஜீவனுக்கு தநு, கரண, புவன, போகங்களைத் தருகிறார் எனப்படுகிறது. புவனத்தைப் படைத்து, அதிலுள்ள போகங்களை அனுபவிக்கவென்றே சரீரம் எனும் தநுவை படைத்து அதில் கரணங்கள் என்ற இந்திரியங்களை ஈசன் படைத்திருக்கிறார். ஒரு ஆன்மா தனது கர்மாவைத் தீர்த்துக் கொள்ளும்வரை போகங்களை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பது விதி. எனவே ஈசனின் படைப்பான தநு எனும் உடலின் கரணங்கள் ஓய்ந்த பிறகு அதற்குரிய கௌரவத்தைக் கொடுத்து அடக்கம் செய்கிறோம். அதேபோல் ஆன்மா எனும் ஈஸ்வர அம்சத்தையும் உரிய பித்ரு காரியங்களைச் செய்து மீண்டும் ஈஸ்வரனிடமே திரும்பக்கொடுக்க வேண்டும் என்கின்றன சைவ சாஸ்திரங்கள்.

ஈசனால் பூமிக்கு வந்த ஆன்மாக்களை மீண்டும் ஈசனிடமே அனுப்பும் புண்ணிய நாள்களே மகாளய பட்ச நாள்கள். இதில் மத்தியில் அமைந்து மகத்தான பலன்களைத் தரும் மத்யாஷ்டமி நாளில் முன்னோர்களை வணங்கி, அவர்கள் பெயர் சொல்லி தானங்கள் வழங்கி நலமும் வளமும் பெறுவது அவசியமாகும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு