Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்!

வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்!

வீர பிரம்மேந்திரர்

Published:Updated:
வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

குருதேவரின் தரிசனம் கிடைக்காததால் தன் உயிரைப் போக்கிக் கொள்ளும் முயற்சியில் சித்தய்யா இறங்கினார். அப்போது, ``சித்தா’’ என்று ஒலித்த குருநாதரின் குரல், சித்தய்யாவின் முனைப்பைத் தடை செய்தது.

வீர பிரம்மேந்திரர்
வீர பிரம்மேந்திரர்

தொடர்ந்து ஒலித்த குரல், ``என்ன காரியம் செய்ய துணிந்தாய் சித்தா! நான் சொல்வதைக் கேள். சமாதியின் நான்கு சுவர் கொண்ட இந்தச் சிறிய மண்டபத்தை உன் கைகளால் நகர்த்து’’ என்று உத்தரவிட்டது சுவாமியின் குரல்.

சித்தய்யா அப்படியே செய்தார். மேல்பூச்சு செய்யப்பட்ட சமாதியை, சித்தய்யா தன் கைகளால் வெகு எளிதாக நகர்த்தினார். குருவருள் இருந்தால் மலையையும் புரட்டலாம் எனும்போது, இந்தக் காரியம் சித்தய்யாவுக்கு எளிதாக இருந்ததில் வியப்பில்லைதான்.

சமாதியை நகர்த்திய சித்தய்யா சமாதிக் குழிக்குள் தன் குருநாதர் கம்பீரமாக அமர்ந்திருப்பதைக் கண்டார். மெய்சிலிர்த்து அவருக்கு. குருநாதரின் திருப்பாதங்களைப் பற்றிக்கொண்டார். ஸ்வாமி சித்தய்யாவை ஆதரவுடன் அணைத்துக்கொண்டார்.

``சித்தா! சமாதியின் அடங்கிய என்னை எழுப்பி உபதேசம் கேட்கும் ஆற்றல் உன் ஒருவனுக்கே உரித்தானது. நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ளும் தருணம் வந்துவிட்டது. நான் இப்போது கூறப்போகும் உபதேசம், துவாபர யுகத்தில் கிருஷ்ண பகவானால் உத்தவருக்கு உபதேசிக்கப்பட்டது. அந்த சம்ஸ்கிருத ஸ்லோகத்தின் பொருளை உனக்கு விளக்குகிறேன். மேலும் குருபரம்பரையைத் தோற்றுவித்து மும்மூர்த்தியரின் அம்சமாகத் திகழும் தத்தாத்ரேயர் இவ்வுலகைக் குறித்து சொன்ன வார்த்தைகளை நீ புரிந்துகொண்டால், உனது மாயை உன்னைவிட்டு விலகும்’’ என்றார் வீரபிரம்மேந்திரர்.

அத்துடன் தொடர்ந்து உபதேசத்தையும் வழங்கினார்.

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்
மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்


``இந்தப் பிரபஞ்சம் முழுவதும் மாயை எனும் போர்வையால் சூழப்பட்டுள்ளது. பாலைவனத்தில் தொலைவிலிருந்து பார்த்தால் தண்ணீர் நிரம்பிய குளம் இருப்பதைப் போன்று தோற்றம் தரும். ஆனால் அது கானல் நீராகும். மாயத் தோற்றம் அது. ஆக, பரம்பொருளான சதாசிவ ப்ரம்மம் மட்டுமே இங்கு சத்தியம். மற்ற அனைத்தும் பொய்யே.

பெண், பொன், மண், உறவுகள், நட்புகள், சுகம், அந்தஸ்து, அனுபவங்கள் அனைத்தும் மாயையின் பல்வேறு தோற்றங்கள். இவை யாவும் என்றேனும் ஒருநாள் நம்மைவிட்டுச் சென்றுவிடும். எதுவும் நிரந்தரம் அல்ல.

மாயை எனும் இந்த இரும்புப் பிடியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற சங்கல்பத்தை - தீர்மானத்தை நாம் ஒவ்வொருவரும் முதலில் மேற்கொள்ள வேண்டும். மாயை வலிமையானது. சில தருணங்களில், ப்ரக்ருதி மற்றும் புருஷ் இரண்டையும் வேறுபடுத்திக் காண்பிக்கும். இரண்டும் ஒன்றே என்பதையும்கூட மறக்கடிக்கச் செய்யும். ஆக, எந்தச் சக்தியானது நம்மை அறியாமையிலிருந்து நீக்கி ஞானத்தைத் தருகிறதோ, அதுவே தன்னிலை அறிதல் என்ற விடுதலையைப் பெற்றுத் தரும்.

அங்ஙனம் விடுதலை அடைந்தவர்கள் சுக-துக்கங்களைப் பொருட்டாகவே நினைக்கமாட்டார்கள். இரண்டையும் சமமாக பாவிக்கும் பக்குவத்தைப் பெறுவார்கள். வேறுபாடுகளைக் கடந்த தன்மையை அடைவார்கள். பிரபஞ்சத்தில் அனைத்தையும் உருவாக் கியும் யாவற்றிலும் நீக்கமற நிறைந்ததுமான நிலையை உணர்ந்தவர்களே பரிபூரணமான நிலை அடைந்தவர்கள். நடப்பவை அனைத்தும் ப்ரக்ருதி மற்றும் புருஷ் எனப்படும் இயற்கையின் தத்துவங்களால் நிகழ்கின்றன என்பதைப் பரிபூரணமாக அறிந்துகொள்வார்கள்’’ என்று கூறிய வீரபிரம்மேந்திரர், ``சித்தா! உனக்கு பரப்பிரம்ம ஜோதியைக் காட்டுகிறேன்’’ என்று கூறி சித்தய்யாவின் காதுகளில் `நமசிவாய’ என்ற மந்திரத்தைக் கூறினார்.

சில விநாடிகளில் சித்தய்யா தனது உள்ளத்தில் அகக்கண்களைத் திறந்து பரம்பொருளை ஜோதி வடிவில் கண்டார். அவரின் மனம் அமைதி அடைந்தது. வீரபிரம்மேந்திர ஸ்வாமி சித்தய்யாவுகு பீஜ மந்திரத்தை உபதேசித்து ``சித்தா! இப்போது முதல் நீ பந்தபாசங்களை முழுவதும் கடந்துவிட்டாய். என் உடலின் மீது வைத்திருக்கும் குரு என்ற சரீர பாசத்தையும் களைந்துவிடு. என்னை ஆத்மாவில் ஏற்றுக் கொள். அப்போது நான் அருகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீ கவலைப்பட மாட்டாய்.

உடல் என்ற சதைப் பிண்டத்துக்கு ஒருபோதும் மதிப்பு அளிக்காதே. அப்போது நீ உனக்குப் பரம்பொருள் ஆவாய்; உனது ஆத்மாவே பரப்பிரம்மம் என்பதை உணர்வாய். நான் உபதேசித்த மந்திரத்தை எப்போதும் உள்ளத்தில் உச்சரித்துக் கொண்டிரு. உனக்கு ஒரு துன்பமும் நேராது’’ என்று கூறி சித்தய்யாவின் தலையில் தன் உள்ளங் கையை வைத்து ஆசீர்வதித்தார்.

சித்தய்யா முழுவதும் தன்னிலை இழந்து பரவச நிலையை அடைந்தார். ஸ்வாமி தன் கையை எடுத்தபிறகே தன்னிலைக்குத் திரும்பினார். குருவைப் பலவாறு வணங்கித் தொழுதார்.

அப்போது வீரபிரம்மேந்திரர், ``சித்தா! இப்போது முக்கியமான சில விஷயத்தைக் கூறப் போகிறேன். என் வார்த்தைகளைத் தட்டாமல் நீ ஏற்க வேண்டும்’’ என்றார் வீரபிரம்மேந்திரர்.

``உத்தரவிடுங்கள் ஸ்வாமி’’ என்றார் சித்தய்யா.

``சித்தா! நான் சமாதி அடைந்தபிறகு, உனக்கு இங்கு வேலை இல்லை. என் வாரிசுகளுடன் எனது பரம்பரை முடிவுறும். உன் கதை அப்படியல்ல. உன் புத்திரர் உன்னைப் போன்றே மிகப்பெரிய ஞானியாக விளங்குவார்’’ என்றார் வீரபிரம்மேந்திரர்.

சித்தய்யா அதிர்ந்தார். ``ஸ்வாமி என்ன இது... உங்கள் அருளால் பந்தபாசங்களில் இருந்து விடுபட்டுவிட்ட எனக்குப் புத்திரப் பாக்கியம் உண்டு என்று கூறுகிறீர்களே...’’ எனக் கேட்டார்.

வீரபிரம்மேந்திரர் புன்னகையோடு கூறினார்: ``சித்தா! ஜனகர் ராஜரிஷியாகத் திகழ்ந்தவர் என்பதை அறிவார். எனக்கும்கூட மனைவி மக்கள் இருக்கிறார்கள். மணம் செய்து கொள்வதால், நம் சரீரத்துக்கு எவ்வித களங்கமும் வராது. இல்லற வாழ்வில் இருந்துகொண்டே பற்றற்ற நிலையைக் கடைப்பிடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதுவே தன்னிலையை அறிய உதவும் வழியாகும். உன் பொருட்டு உன் திருமணம் குறித்து உன் பெற்றோர் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள். அவர்களின் கண்ணீரைத் துடைப்பது உனது கடமை. நீ திருமணம் செய்துகொள். உனக்குப் பிறக்கும் புத்திரன் `பெத்த பெரியய்யா’ என்ற பெயரில் பெரிய யோகீஸ்வரனாக விளங்குவான். மேலும் இப்போது நீ கற்ற ஞானத்தைக் கண்டுகொண்டு, இல்லறத்திலும் சமூகத் தொண்டிலும் சிறந்து விளங்குவாயாக!’’ என்று ஆசிபுரிந்தார்.

மேலும் சித்தய்யா வேண்டிக்கொண்டபடி தன் பாதுகைகள், யோக தண்டம், ஜடாமுடியைக் கட்டும் ஆபரணம், கைத்தடி, மோதிரம் ஆகியவற்றை வழங்கினார். ``என்றும் நீ சச்சிதானந்த மூர்த்தியாய் விளங்குவாய்’’ என்று வாழ்த்தினார். பின்னர் மீண்டும் சமாதிக்குழியில் அமர்ந்துவிட்டார். அவரை வணங்கியபிறகு, சமாதி மண்டபத்தை நகர்த்தி, பழைய நிலையில் வைத்த சித்தய்யா, ஸ்வாமியின் இல்லத்துக்குச் சென்றார்.

அங்கே அன்னை கோவிந்தம்மாவை வணங்கினார். ஸ்வாமியின் புத்திரர்களிடமும் ஆசிபெற்றார். மீண்டும் ஒருமுறை மடத்தை நோக்கி வணங்கிவிட்டு தமது பயணத்தைத் தொடங்கினார். ஸ்வாமியின் நாமத்தை உச்சரித்தபடியே அவர் பயணித்தைத் தொடர்ந்தார்.

இந்த நிலையில், தந்தையின் பொருள்களை சித்தய்யா எடுத்துச் செல்வதை விரும்பாத ஸ்வாமியின் புத்திரர்கள், ஒரு காரியம் செய்தார்கள். திருடர்கள் இருவரை அழைத்து சித்தய்யாவிடம் இருந்து அந்தப் பொருள்களைப் பறித்துவரும்படி கூறினார்கள்.

அவர்களும் சித்தய்யாவைத் தேடிச் சென்றனர். ஓரிடத்தை அவரைக் கண்டவர்கள் பின்புறமாகச் சென்று தடியால் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது கொடூரமான புலி ஒன்று பாய்ந்து வந்தது!

- தரிசிப்போம்...

`லாபம் பெருக வரம் தருவார்’

ஈரோடு மாவட்டம், ஈரோடு- சென்னிமலை சாலையில் உள்ளது மயிலாடி. இந்த ஊருக்கு அருகில் உள்ள வேலம்பாளையத்தில் கோயில்கொண்டுள்ளார், கிருஷ்ண பெருமாள் ஸ்வாமி!

இந்த ஸ்வாமி இங்கே சுயம்புவாகத் தொன்றியவராம். இவருக்குச் சர்க்கரைப் பொங்கல், பால், வெண்ணெய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் யாவும் விரைவில் நடந்தேறும். இந்த கிருஷ்ணனை வணங்கிவிட்டுத் தொழிலைத் தொடங்கினால், வியாபாரம் சீரும் சிறப்புமாக நடைபெறும்; லாபம் கொழிக்கும் என்கின்றனர் ஊர்க்காரர்கள்.

மேலும், கிருஷ்ணருக்கு வஸ்திரம் சார்த்தி, திருமஞ்சனம் செய்து வணங்கினால், தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது நம்பிக்கை.

- சி.முகிலன், சேலம்