Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்

Published:Updated:
வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

நந்தியாலா கிராமத்தில் செல்வந்தர்களின் அகம்பாவத்தை நீக்கி, ஸ்வாமி வீரபிரம்மேந்திரர் நிகழ்த்திய அற்புதத்தைக் கேள்வியுற்ற மக்கள் பல கிராமங்களிலிருந்தும் நந்தியாலாவுக்கு வருகை தந்து ஸ்வாமியை தரிசித்து, உபதேசம் அருளும்படி கேட்டுக்கொண்டனர்.

ஸ்வாமியும் அங்கேயே இரண்டு நாள்கள் தங்கியிருந்து, உள்ளூர் வெளியூர் பக்தர்கள் அனைவருக்கும் உபதேசம் அருளினார்.

கிராம மக்கள் ஸ்வாமியிடம் தாங்கள் நீண்ட நாள்களாகக் கேட்க நினைத்த கேள்விகளையெல்லாம் கேட்டனர். வீரபிரம்மேந்திரரும் அவர்களுக்குப் புரியும்படி எளிய முறையில் உரிய விளக்கங்களை அளித்தார். அந்த மக்களில் சிலர் பிரபஞ்ச தோற்றம் குறித்து விவரிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்


காலக்ஞானி மகாயோகி வீரபிரமேந்திர ஸ்வாமி பிரபஞ்ச ரகசியத்தை உரைக்கத் தொடங்கினார்.

``இந்தப் பிரபஞ்சம் முழுவதும் எட்டு வடிவில் அமைந்த பர ஈசனால் உருவானது பர ஈசன் என்பவர் சுயம்புவானவர். மகா சக்தியான அவரிடமிருந்தே இந்தப் பிரபஞ்சமும், உயிரினங்களும், உயிரற்ற வஸ்துக்களும் தோன்றின. அவரே பிரம்மா, விஷ்ணு, ருத்ரர், அக்னி, சூரியன், சந்திரன் மற்றுமுள்ள அனைத்தும் ஆவார். அவரே மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். மகாதேவர் ஐந்து முகங்களும் மூன்று கண்களும் உடையவர்.

எதுவுமே தோன்றாத காலத்தில் ஓம் எனும் மந்திரம் மட்டுமே ஜோதி வடிவில் இருந்தது. ஓம் எனும் பிரணவத்திலிருந்துதான் தசவித நாதம் என்று சொல்லப்படும் பத்துவித ஒலிகள் தோன்றின. சிட்டி, சின்னி, கண்டா முதலான பத்துவித நாதங்களும் பத்துவித வடிவங்களின் மூலம் வெளிப்பட்டன.

இவற்றுக்கு மூலமான ஓம் எனும் மந்திரம் தெய்விக ஒளியிலிருந்து பெறப்பட்டது. அந்த ஒளிக்கு முன்னோடி என்று எதுவும் இல்லை. அது தானாகவே தோன்றியது. அதற்கு ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை. பரசிவம் என்று சொல்லப்படும் அந்த ஜோதி ஓர் உருவம் கொண்டபோது, அதன் வடிவம் ஐந்து திருமுகங்கள் முக்கண்களுடன் கூடிய சதாசிவ பிரம்மமாகக் காட்சியளித்தார். அவரே பரமேஸ்வரனாவார். அவரே இந்தப் பிரபஞ்சத்தையும் அதில் நிறைந்த அனைத்தையும் உண்டாக்கியவர்’’ என்று விளக்கிய ஸ்வாமி வீரபிரம்மேந்திரர், ஈஸ்வரனின் பஞ்சமுக தத்துவங்கள் குறித்தும், 96 தத்துவ நிலைகளையும், ஐவகைக் காரியங்களைச் சொல்லும் பஞ்ச க்ருத்யா குறித்தும், பஞ்சாங்க விளக்கங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

பின்னர் அனைவருக்கு ஆசி வழங்கிவிட்டு, சீடர்களுடன் அங்கிருந்துப் புறப்பட்டு யாத்திரையைத் தொடர்ந்தார். வழியெங்கும் மக்கள் சிறப்பாக வரவேற்று ஸ்வாமியை வணங்கி ஆசிபெற்றனர். ஸ்வாமியும் சீடர்களும் வனப்பிரதேசங்களைக் கடந்து அகோபிலம் எனும் புண்ணியப் பதியை அடைந்தனர். அங்கே லட்சுமிநரசிம்மரை தரிசித்து வழிபட்டனர். பின்னர் அங்கிருந்தும் புறப்பட்டு பல்வேறு தலங்களை தரிசித்தவாறு பயணப்பட்டனர்.

ஒருநாள் வழியில் ஓர் ஆலமரத்தைக் கண்டதும் அதனடியில் ஓய்வெடுக்கலாம் என்றார் ஸ்வாமி வீரபிரம்மேந்திரர். அதற்கான காரனத்தைச் சீடர்கள் அறிந்திருக்கவில்லை.

அந்த ஆலமரத்தில் நீண்டகாலமாக பெண் பேய் ஒன்று தங்கியிருந்து அவ்வழியே போவோர் வருவோரையெல்லாம் துன்புறுத் திக் கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் ஸ்வாமியின் விஜயம் நிகழ்ந்தது. அவர் வந்திருப்பதை அறிந்த பக்கத்துக் கிராம மக்கள், வீரபிரம்மேந்திரருக்கும் அவரின் சீடர்களுக்கும் உணவு தயார் செய்து எடுத்து வந்தார்கள். இங்கே குறிப்பிட்ட ஆலமரத்தடியில் அவர்கள் அமர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் அதிர்ந்துபோனார்கள்.

வீரபிரம்மேந்திரரோ நீராடச் சென்றிருந்தார். உணவு பரிமாற இலைகள் தேவையாக இருந்தன. சீடர்களில் ஒருவன் விறுவிறுவென ஆலமரத்தில் ஏறினான். அதுகண்டு கிராமத்தவர்கள் பதற்றமாக... அதேவேளையில் மரத்திலிருந்த பேய் சீடனை சீற்றத்துடன் பார்த்தது. அவ்வளவுதான் அந்தச் சீடனுக்குப் பார்வை பறிபோனது. அவன் பிடியைத் தளரவிட்டுக் கீழே விழுந்தான்.

தொடர்ந்து மற்ற சீடர்களும் மரத்தில் மேலே ஏறி பார்வை இழந்து கீழே விழுந்தார்கள். சித்தய்யா, மரத்தில் ஏதோ விபரீதம் இருக்கிறது என்று உணர்ந்துகொண்டான். குருதேவரைத் தேடி குளக்கரைக்குச் சென்றான். அங்கே வீரபிரம்மேந்திரர் தியானத்தில் இருந்தார்.

சித்தய்யா காத்திருந்தான். சிறிது நேரம் கழித்து கண்விழித்த ஸ்வாமியை வணங்கி விவரத்தைச் சொன்னான். வீரபிரம்மேந்திரர் சிறு புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.

``சித்தய்யா! மற்ற சீடர்களின் நிலைக்குக் காரணம் என்ன என்பதை நீ அறிவாய். எவனொருவன் சதாசர்வ காலமும் குருவின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கிறானோ, அவனை எவ்வித துன்பமும் அணுகாது. இதை அவர்கள் மறந்துவிட்டார்கள். நீ அப்படியல்ல. குருவருளைத் தேடி வந்துவிட்டாய். உனது குருபக்தி உன்னைக் காத்து நிற்கும். நான் சொல்வதைக் கவனமாகக் கேள்...’’ என்றவாறு தனது கைத்தடியை சித்தய்யாவிடம் கொடுத்தார்.

பின்னர், ``மரத்தில் பேய் ஒன்று வசிக்கிறது. நீ இந்தக் கைத்தடியுடன் மேலே ஏறு. அந்தப் பேயை இழுத்துத் தரையில் தள்ளிவிடு. ஆனால், அந்தப் பேயே பல மாயவேலைகள் செய்து உன்னிடமிருந்து இந்தக் கைத்தடியை அப்புறப்படுத்த முயற்சி செய்யும். நீ அதற்கு இடம் கொடுத்துவிடாதே’’ என்று கூறி ஆசி வழங்கினார்.

குருநாதரை வணங்கிப் பணிந்த சித்தய்யா, அவர் கொடுத்த கைத்தடியுடன் மரத்தை நெருங்கினான். குருதேவரின் திருநாமத்தை உச்சரித்தபடியே மேலே ஏறினான். அங்கிருந்த பெரிய கிளை ஒன்றில் அமர்ந்துகொண்டான். பேய் அலறத் தொடங்கியது. குருதேவர் கொடுத்தனுப்பிய கைத்தடியின் வெம்மையை ஆற்றலை அந்தப் பேயால் தாங்க இயலவில்லை.

குருதேவர் சொன்னது போலவே கைத்தடியை சித்தய்யாவிடம் இருந்து அப்புறப்படுத்த ஏதேதோ செய்தது; என்னென்னவோ பேசி மயக்கப் பார்த்தது. ஆனால் சித்தய்யா அசரவில்லை. சத்குருவின் ஆணைப்படி அந்தப் பேயை கீழே தள்ளினான். அந்தவேளையில் வீரபிரம்மேந்திரரும் மரத்தடிக்கு வந்து சேர்ந்திருந்தார்.

அவரின் பாதங்களில் விழுந்த பேய் தன்னைக் காப்பற்றும்படி ஸ்வாமியிடம் மன்றாடிக் கேட்டது.

``தீய ஆவியே! இதுவரையிலும் நீ செய்த பாவ காரியங்கள் போதும். இன்றோடு அவற்றை நிறுத்திவிடு’’ என்றார் ஸ்வாமி.

அந்தப் பேய் அவரிடம், ``ஸ்வாமி, தங்களின் பாதங்களைப் பற்றியதுமே என்னுடைய கெட்ட எண்ணங்கள் யாவும் பொசுங்கி விட்டன. உம்மைச் சரணடைந்த எல்லோரும் முக்தி அடைகிறார்கள். எனக்கும் முக்தியைத் தாருங்கள்’’ என்று வேண்டியது.

ஸ்வாமி மனம் கனிந்தார். பரிவுடன் அந்தப் பேயை நோக்கினார். ``வினைப் பயனை எவராலும் மாற்ற இயலாது. ஞானியரின் அருளால் தண்டனை குறையுமே தவிர, முற்றிலும் விலகிவிடாது. இதுவரை செய்த பாவங்களுக்கான தண்டனையை குறிப்பிட்ட காலம் வரையிலும் நீ அனுபவிக்கவே வேண்டும். விமோசனத்துக்கான காலம் வரும்போது, பார்வதிதேவியின் அவதாரமான ஈஸ்வரம்மா என்ற அன்னை இவ்வழியாக வருவார். அவர் உன் வினையைப் போக்கி அருள்புரிவார். அதுவரை அமைதியாக இரு.

என்னை நீ சரண்டைந்த காரணத்தால், விமோசனம் கிடைக்கும் வரையிலும் பசி, தாகம் ஆகிய இரண்டிலும் இருந்து உனக்கு விடுதலை அளிக்கிறேன். ஆக, உனக்கு பசியும் தாகமும் எடுக்காது; நீயும் எவரையும் துன்புறுத்த வேண்டிய அவசியம் இல்லை’’ எனக்கூறி அருள்புரிந்தார்.

பின்னர் மற்ற சீடர்களை நோக்கினார். அவர்கள் மயக்க நிலையில் கிடந்தனர். தனது கைத்தடியால் அவர்களின் நெற்றியில் தட்டினார் ஸ்வாமி. மறுகணம் எல்லோரும் புத்துணர்ச்சியுடன் எழுந்து அமர்ந்தனர். நடந்ததை அறிந்து ஸ்வாமியை வணங்கிப் பணிந்தனர். பிறகு அங்கிருந்த கிராமத்தவர்களிடம் விடைபெற்றுக்கொண்ட வீரபிரம்மேந்திரர் யாத்திரையைத் தொடர்ந்தார்.

வழியில் அவர்கள் கடப்பா என்ற ஊரை அடைந்தனர். அவர்களின் வருகையை அறிந்த அப்பகுதியின் நவாபு தன் குடும்பத்துடன் ஸ்வாமியை வரவேற்க வந்தார்.

அவர் வேறு யாருமல்ல... சித்தய்யாவின் அருளாற்றலைப் பரிசோதித்த அதே நவாபுதான். இந்தமுறை அவர் ஸ்வாமி வீரபிரம்மேந்திரரையே சோதிக்க முனைந்தார்.

விளைவு என்னவாயிற்று தெரியுமா?

- தரிசிப்போம்...எந்தக் கோயிலில் எந்த காலம் விசேஷம்?

ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளை காலச் சந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என்று வகைப்படுத்துவார்கள். அவ்வகையில் சில ஆலயங்களில் குறிப்பிட்ட கால பூஜை சிறப்புற்றுத் திகழ்கிறது.

கால சந்தி: மதுரை சொக்கநாதர் ஆலயம்.

உச்சிகாலம்: திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயம்.

சாயரட்சை: திருவாரூர் தியாகேசர் ஆலயம்.

அர்த்தஜாமம்: சிதம்பரம் நடராஜர் ஆலயம், திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம்.

மேற்கண்ட ஆலயங்களுக்குச் சென்று குறிப்பிட்ட பூஜை வைபவத்தை தரிசிப்பதால், மிகுந்த புண்ணியம் வாய்க்கும்.

- ஆர்.ராதா, கருங்குளம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism