Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - 23

வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

ஓவியம்: ஜீவா

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - 23

ஓவியம்: ஜீவா

Published:Updated:
வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

மகாயோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரரின் அருளால், தன் மனைவியின் தேகத்தில் - தண்டுவடத்தில் ஆதாரச் சக்கர மையங்களையும் தெய்வங்களையும் தரிசித்த சாக்கையன் பெரிதும் வியந்தான். அதேநேரம், மனைவியைக் கொன்றுவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியும் அவனைக் கலங்கடித்தது.

அவனை ஆறுதல்படுத்திய ஸ்வாமி வீரபிரம்மேந்திரர், அவன் மனைவியை உயிர் பெற வைக்க சித்தம் கொண்டார். தமது கமண்டலத் திலிருந்து சிறிதளவு தீர்த்தத்தை எடுத்து சடலத்தின் மீது தெளித்தார். விபூதியைக் கரைத்து அவளின் நெற்றியில் பூசினார். ஆனால், சடலத்தில் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை.

சாக்கையன் பரிதவித்தான்; “ஸ்வாமி! என் மனைவி இறந்து பலமணி நேரம் ஆகிவிட்டது. இனி அவள் எவ்வாறு உயிர் பெறுவாள்’’ என்று நம்பிக்கையின்றிப் புலம்பினான்.

``பொறுமையாக இரு மகனே! அவளின் உடலை நீ துண்டு துண்டாக சிதைத்துவிட்டாய். உடல் பாகங்கள் மீண்டும் ஒன்றிணைந்த பிறகே, உன் மனைவி உயிர் பெற முடியும்’’ என்று அவனை ஆற்றுப்படுத்தினார் ஸ்வாமி. அத்துடன், ஒரு துணியை எடுத்துச் சடலத்தின் மீது போர்த்தினார்.

பின்னர், ``நாம் சிறிது நேரம் வெளியே இருப்போம்’’ என்று கூறியவர், சாக்கையன் மற்றும் சித்தய்யாவுடன் குடிசையை விட்டு வெளியேறினார். வாசலில் மரப்பலகை ஒன்றில் அமர்ந்துகொண்டார்.

சற்றுநேரத்தில் அற்புதம் நடந்தது. துணியால் போர்த்தப்பட்ட உடலின் பாகங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தன. சில விநாடிகளில் தூங்கி விழித்தவள் போல் எழுந்து அமர்ந்தாள் சாக்கையனின் மனைவி.

`என்னவாயிற்று எனக்கு. வெகுநேரம் தூங்கிவிட்டேனோ... கணவர் வரும் நேரம் ஆயிற்றே? அவருக்கு உணவுகூட தயார் செய்யவில்லையே’ என்று எண்ணியவளாக சட்டென்று எழுந்துகொண்டாள்.

`வேலையைக் கவனிக்கலாம்’ என்ற எண்ணத்தோடு வெளியே வந்தவளைப் பார்த்ததும் சாக்கையன் அதிர்ச்சியில் உறைந்துபோனான்.

அவன் மனைவியோ ஸ்வாமியையும் சித்தய்யாவையும் கண்டு வியந்தாள். இவ்வளவு நாளாக எவரை தரிசிக்கவேண்டும் என்று நினைத்திருந்தாளோ, அவரே வீடு தேடி வந்திருப்பதைக் கண்டு பரவசத் தில் திளைத்தாள். ஸ்வாமியை வணங்கித் தொழுதாள்.

``ஸ்வாமி வணங்குகிறேன். இயல்பில் முரடரான இவருக்கு ஊருக்குள் நிறைய பகை. இந்தக் குடிசையில் தனித்து வாழ்கிறோம். இன்று தங்கள் வருகையால் பாக்கியம் பெற்றோம்’’ என்று கண்ணீர் உகுத்தாள்.

ஸ்வாமி புன்னகைத்தார். “அம்மா நீங்கள் புனிதவதி! நீங்கள் செய்த நற்காரியங்களின் பயனாகவே இறந்து பல மணி நேரம் ஆனபிறகும் உயிருடன் மீண்டும் வந்துள்ளீர்கள். இனி நீங்களும் சாக்கையனும் ஆனந்தமாக உங்களின் இல்லற வாழ்வைத் தொடருங்கள்’’ என்று கூறி ஆசீர்வதித்தார்.

சாக்கையா விரைந்தோடி வந்து ஸ்வாமியின் பாதங்களைப் பற்றிக் கொண்டான்.

“ஸ்வாமி! எங்களை விட்டு எங்கும் செல்லாதீர்கள்!” என்றான்.

வீரபிரம்மேந்திரர் அவனிடம் புன்னகை யோடு கூறினார்: “சாக்கையா! நான் அளித்த ஞானத்தைக் கொண்டு, இந்தச் சமூகத்திற்குப் பயனளிக்கும் நற்காரியங்களைச் செய்து வா. இறைவனைக் குறித்து இன்னும் என்ன சந்தேகங்கள் உனக்கு எழுந்தாலும், நீ எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம்.

உனக்கும் உன் மனைவிக்கும் என்னைச் சந்திக்க எந்தத் தடையும் இல்லை. ஆனால் ஒன்று... இனி மரத்தின் பின்னாலோ, சுவற்றின் பின்னாலோ மறைந்திருந்து எம்மைத் திட்ட வேண்டிய அவசியம் இல்லை... புரிந்ததா?’’

சாக்கையன் நெளிந்தான். தனது செயலை நினைத்து வெட்கம் அடைந்தவனாக தலைகுனிந்து கொண்டான். ஸ்வாமியும் சித்தய்யாவும் மீண்டும் அவனை ஆசீர்வதித்து விட்டு மடத்துக்குத் திரும்பினார்கள்.

அன்று முதல் சாக்கையாவும் அவன் மனைவியும் ஸ்வாமியின் பக்தர்களாக, இல்லறத்தை நல்லறத்துடன் கழித்தனர்.

சாதுக்களுக்கு ஏழைகளுக்கும் அளிக்கும் உணவும் நீரும் இறைவனையும் மகான்களையும் மிகவும் மகிழ்விக்கும் என்கின்றன ஞானநூல்கள். அது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

ஒருநாள் சீடர்களை அழைத்த வீரபிரம்மேந்திரர், அவர்களிடம் “நாளை முதல் சில காலம் நாம் யாத்திரை செல்வோம். முதலில் நாம் நந்தியாலா கிராமத்துக்கும் அருகிலுள்ள மற்ற கிராமங்களுக்கும் சென்று வருவோம். நாளைய இரவுப் பொழுதை திகுவமெட்டா கிராமத்தில் கழிக்கலாம்’’ என்றார்.

ஸ்வாமியின் கட்டளைப்படி பயணத்துக்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்தன. அதிகாலையில் யாத்திரை ஆரம்பமானது. ஸ்வாமி தன் சீடர்களுடன் நந்தியாலா கிராமத்தை அடைந்தார். உச்சி வேளையில் அனைவருக்கும் கடும் பசி எடுத்தது. ஸ்வாமிக்கும் தாகம் எடுத்தது. அருகில் எங்கேனும் தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்து வர சீடர்கள் சிலர் கிளம்பினர்.

அவர்கள் சற்று தூரத்தில் ஓரிடத்தில் புகை எழும்புவதைக் கண்டனர். அங்கு சென்றால் நீரும் உணவும் நிச்சயம் கிடைக்கும் என்று தீர்மானித்தனர். ஆகவே ஸ்வாமியிடம் விவரம் சொல்லி, அவரையும் உடன் அழைத்துச் சென்றனர்.

ஆனால் புகை எழும்பிய அந்த இடம் இரும்புப் பொருட்கள் செய்யும் இடமாகத் திகழ்ந்தது. அங்கே ஒருவன் இரும்பைக் காய்ச்சி கம்பி செய்யும் காரியத்தில் ஈடுபட்டிருந்தான்.

`சரி... இங்கே தாகத்துக்குத் தண்ணீராவது கேட்டுப் பெறலாம்’ என்ற நினைப்புடன், அங்கிருந்தவனிடம் தமக்கும் சீடர்களுக்கும் பருக தண்ணீர் தரும்படி கேட்டார் ஸ்வாமி.

அவனோ ஸ்வாமியையும் மற்றவர் களையும் ஏளனத்துடன் பார்த்தான்.

“இங்கு தண்ணீர் கிடைக்காது. வேண்டு மானால்.. எதிரில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடியுங்கள்’’ என்றான் அலட்சியமாக. பின்னர் தனது பணியில் மூழ்கிவிட்டான்.

சித்தய்யா அவனிடம் ``ஐயா! ஸ்வாமி இங்கு உமது இடம் தேடி வந்திருக்கிறார் எனில், ஏதோ காரணம் இருக்கும் என்பதை நான் அறிவேன். ஆனால் அது என்னவென்பது குறித்து நானறியேன். எதிரிலுள்ள கிணற்றில் நீர் எடுப்பதற்கான பாத்திரமோ வேறு கருவியோ எங்களிடம் இல்லை. ஆனால் உம்மிடம் இருக்கும்.

அதைக்கொண்டு நீங்களே தண்ணீர் மோந்து வந்து தரலாமே! சாதுக்களின் தாகத்தைத் தணிப்பதைக் காட்டிலும் வேறு புண்ணிய காரியம் என்ன இருக்க முடியும்? ஆகவே, தயைகூர்ந்து எங்கள் ஸ்வாமிக்குத் தண்ணீர் எடுத்து வாருங்கள்!’’ என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்.

ஆனால் இரும்பைக் காய்ச்சுபவனுக்கோ கோபம் வந்துவிட்டது. அவன் சித்தய்யாவிடம் ``வருவோர் போவோருக்கெல்லாம் நீரும் உணவும் தர நான் என்ன அன்னச்சத்திரமா நடத்துகிறேன். மட்டுமன்றி, உங்கள் ஸ்வாமியைப் போன்ற நாடோடிகளுக்கு வசதிகள் செய்து தரும் பொறுப்பை நான் ஏற்கவில்லை. நானே ஊரை விட்டு ஒதுங்கி, எனது வேலையைச் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கிறேன். என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?’’ என்று வெறுப்புடனும் சத்தமாகவும் பேசினான்.

கிணற்றில் நீர் இறைக்கக்கூட கருவி ஏதும் இல்லாத தால், மிகப் பொறுமையாகப் பேசி அவனிடம் உதவி பெற பலவாறு முனைந்தார் சித்தய்யா. ஆனால் அவனோ அசரவில்லை; நிறைவில் ஒரு முடிவுக்கு வந்தான். `தொந்தரவு செய்யும் இந்த சந்நியாஸிகளுக்குத் தக்க பாடம் கற்பிக்கவேண்டும். அதைப் பார்த்தபிறகு, வேறு எவரும் உதவி கேட்டு இங்கு வரக் கூடாது’ என்று முடிவு செய்தான்.

ஆகவே பணியை நிறுத்திவிட்டு எழுந்தான். அவன் ஸ்வாமிக்கு நீர் அளிக்கவே தயாராகிறான் என்று எண்ணி சித்தய்யா மகிழ்ந்தார். ஆனால் அவனோ கொதித்துக்கொண்டிருந்த இரும்புக் குழம்பை ஒரு கல் சட்டியில் எடுத்துக்கொண்டு ஸ்வாமியிடம் வந்தான்.

``உம்மைப் போன்ற சாதுக்களுக்கு எல்லாமே ஒன்றுதான். காணும் யாவையும் கடவுள் என்று சொல்வீர்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியெனில், உமக்குத் தண்ணீரும் ஒன்றுதான்; இந்த இரும்புக் குழம்பும் ஒன்றுதான். இதிலும் கடவுள் இருப்பார்... எங்கே இதைப் பருகுவீர்களா?’’ என்று ஏளனமாகக் கேட்டான்.

``எல்லாம் ஒன்றுதான் என்பதற்காக எல்லாவற்றை யும் உண்ண முடியுமா? தாகம் தணியட்டும் என்று கொதிக்கும் இரும்புக் குழம்பை எவரேனும் தருவார் களா... எனினும் உன் விருப்பம் இப்படி இருப்பதால், நானும் சம்மதிக்கிறேன்’’ என்ற ஸ்வாமிகள், சட்டென்று அந்தக் கல் சட்டியை வாங்கி, அதிலிருந்த கொதிக்கும் இரும்புக் குழம்பைப் பருகத் தொடங்கினார்!

சீடர்கள் அதிர்ந்துபோனார்கள்.

- தரிசிப்போம்...

சிவ தரிசனம்!
சிவ தரிசனம்!


சிவ தரிசனம்!

கும்பகோணம் நகரத்தில் காவிரிக்குத் தென்புறம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் நிறுவப்பெற்ற கோயில் இது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் காளஹஸ்தீஸ்வரர்; அம்பாள் ஞானாம்பிகை. இங்கு வந்து வழிபட்டால் வாயு லிங்க க்ஷேத்திரமான காளஹஸ்தி பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும்.

இந்தியாவின் மிகப் பழைமையான சிவலிங்கம் ஆந்திராவில் கடிமல்லம் கிராம ஆலயத்தில் இருக்கிறது. இந்த லிங்கம் கி.மு 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

சிவன் கோயில்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்கும். ஆனால், குளித்தலையில் உள்ள கடம்பவனநாதர் கோயில், வடக்கு நோக்கி உள்ளது. கங்கைக் கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில் போல, காவிரிக் கரையில் வடக்கு நோக்கியிருக்கும் கோயில் இது.

ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்க உருவங்கள் செதுக்கப்படுவது சகஸ்ரலிங்கம் எனப்படும். திருவிரிஞ்சை, திருக்காளத்தி போன்ற தலங்களில் இத்தகைய லிங்கங்கள் உள்ளன.

- கே.விக்னேஷ், திருச்சி-3

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism