Published:Updated:

சுற்று விளக்கு ஏற்றினால் நினைத்து நிறைவேறும்!

மலையாலப்புழா பத்திரகாளி அம்மன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
மலையாலப்புழா பத்திரகாளி அம்மன் கோயில்

மலையாலப்புழா பத்திரகாளி அம்மன் கோயில்!

சுற்று விளக்கு ஏற்றினால் நினைத்து நிறைவேறும்!

மலையாலப்புழா பத்திரகாளி அம்மன் கோயில்!

Published:Updated:
மலையாலப்புழா பத்திரகாளி அம்மன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
மலையாலப்புழா பத்திரகாளி அம்மன் கோயில்

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவிலிருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது மலையாலப்புழா பத்திரகாளி அம்மன் கோயில். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்தபடியாக எண்ணிக்கையில் அதிகமான பக்தர்கள் கூடும் இந்த ஆலயம், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அச்சக்கண்ணா மலை (கரிம்பாற மலை), செறுகுந் நத்து மலை, ஊட்டுபாற மலை, உப்பிடும்பாற மலை, புலிப்பாற மலை ஆகிய ஐந்து மலைகளிலும் 1008 குன்றுகள் உள்ளனவாம். அவ்வகையில் மேற்சொன்ன ஐந்து மலைகளுக்கு நடுவிலுள்ள ஒரு குன்றில் பத்திரகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்தத் தலத்தின் கிழக்கில் அச்சன்கோவில் ஆறும், வடக்கில் கல்லாறும் பாய்கின்றன. இங்ஙனம் மலையும் புழையும் (ஆறு) சேரும் இடம் என்பதால், இந்தத் தலத்துக்கு மலையாலப் புழா என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.

மலையாலப்புழா பத்திரகாளி அம்மன் ஆலயம் தோன்றி ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆகிறது என்கிறார்கள் பக்தர்கள். கோயி லின் வரலாறு குறித்து தேவியின் பக்தர் ஸ்ரீகாந்த் பகிர்ந்துகொண்டார்.

மலையாலப்புழா பத்திரகாளி அம்மன் ஆலயம்
மலையாலப்புழா பத்திரகாளி அம்மன் ஆலயம்


“காளிதேவி இங்கே தாரிகாசுரனை வதம் செய்த கோலத்தில் அருள்கிறாள். அசுரனை வதம் செய்தபிறகு, பக்தர்களுக்கு அருள்புரிய சாந்தசொரூபியாக மாறிவிடுவாளாம் அன்னை. இங்கும் தன்னைத் தேடி வந்து வழிபடும் அன்பர்களுக்குக் கருணையோடு அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றிவைக்கிறாள். மேலும் இந்தக் கோயிலில் அம்பிகை துர்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெருந்தேவியர் அம்சத்திலும் அருள்கிறாள். மிகப் பழைமையான இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் சத்ருபயம் நீங்கும்'' என்ற காந்த், அன்னை இங்கே கோயில்கொண்ட கதையையும் விவரித்தார்.

மலையாலப்புழா  ஆலயம்
மலையாலப்புழா ஆலயம்


தேவி கோயில் கொண்ட திருக்கதை!

“இரவிமங்கலம் இல்லம் மற்றும் ஐக்கரத்து இல்லத்தைச் சேர்ந்த நம்பூதிரிகள் இருவர் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தங்கி, தேவி ரூபம் ஒன்றை வைத்து விரதம் இருந்து வழிபட்டுவந்தனர். அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்த மூகாம்பிகை, `நீங்கள் வழிபடும் சிலா ரூபத்தில் எனது சாந்நித்தியம் எப்போதும் இருக்கும்' என்று அருள்புரிந்தாள்.

பின்னர் நம்பூதிரிகள் இருவரும் தேவி விக்கிரகத்துடன் பல்வேறு கோயில்களுக்குச் சென்று வழிபட்டனர். இருவரும் முதுமையை அடைந்ததும் மேற்கொண்டு யாத்திரை செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். அப்போது, பராசக்தி அவர்களுக்குக் காட்சியளித்தாள். அவர்கள் வழிபட்டு வந்த தேவி விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்ய ஏற்ற இடம் என்று இந்தத் தலத்தைச் சுட்டிக்காட்டினாள்.

மலையாலப்புழா
மலையாலப்புழா
காளிதேவி
காளிதேவி
சுற்று விளக்குப் பிரார்த்தனை
சுற்று விளக்குப் பிரார்த்தனை


அதன்படியே, ஓர் இரவுப் பொழுதில் இருவரும் மலையாலப்புழாவுக்கு வந்து சேர்ந்தனர். அந்தத் தருணத்தில் உக்கிர ரூபத்தில் இருந்த அம்மனை இங்கே பிரதிஷ்டை செய்தனர். ஆகவேதான் அன்னை இன்றைக்கும் இங்கே உக்கிர ரூபத்தில் காளிதேவியாக அருள்கிறாளாம்'' என்று சிலிர்ப்புடன் விவரித்து முடித்தார் ஸ்ரீகாந்த்.

விசேஷ யோக கோலத்தில் அம்மன்!

கேரளப் பாரம்பர்யக் கட்டுமானத்துடன் திகழ்கிறது ஆலயம். ஆண்கள் சட்டை, பனியன் அணிந்து உள்ளே செல்ல அனுமதியில்லை. கருவறையில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று தேவியர் விக்கிரகங்கள் உள்ளன. கடுசர்க்கர யோகத் தில் ரெளத்திர ரூபத்தில் சுமார் 5 அடி உயரத்தில் பத்திரகாளி அம்மன் அருள்பாலிக்கிறாள். அன்னை கடுசர்க்கரை யோகத்தில் அருள்வதால் மூலவர் அம்பிகைக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. அபிஷேக-அர்ச்சனை செய்யும் பொருட்டு தனி விக்கிரகம் உள்ளது. அதேபோல் சீவேலி வைபவத்துக்கென்று மற்றொரு தேவி விக்கிரகமும் உள்ளது. இதை `சீவேலி விக்கிரகம்' என்கிறார்கள்.

முறுக்கான் வழிபாடு

தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் சீவேலி நடைபெறுகிறது. கோயில் சுற்றுப் பிராகாரத்தில் மூர்த்தி, ரக்ஷஸ், நாகராஜா, நாக யக்‌ஷி சந்நிதிகள் உள்ளன. மூர்த்தி சந்நிதியில் `முறுக்கான்' எனப்படும் வெற்றிலை, பாக்கு, புகையிலை வைத்து வழிபடுகிறார்கள். மட்டுமன்றி, இந்தக் கோயிலில் அன்னையிடம் பால் குடிக்கும் கோலத்தில் பாலகணபதி சந்நிதி, சுயம்பு சிவன் சந்நிதி ஆகியவையும் உள்ளன.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் கூடுகிறது. ஆலயத்தில் நடைபெறும் பூஜைகள் பற்றி வெளிப்படையாகக் கூறுவது இல்லை, ரகசியம் காக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் பிரார்த் தனைகள் சிறப்பானவை. தொடர்ந்து 7 வெள்ளிக்கிழமைகள் இங்கு வந்து வழிபாடு நடத் தினால், நினைத்த காரியங்கள் நிறைவேறும்; என்கிறார்கள் பக்தர்கள்.

சுற்று விளக்கு ஏற்றினால் நினைத்து நிறைவேறும்!


சுற்று விளக்குப் பிரார்த்தனை

காளிதேவி கோயிலில் அடுக்கு விளக்கு மற்றும் சுற்று விளக்கு ஏற்றிவைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். கோயிலைச் சுற்றிலும் சுற்றி 10,400 சுற்று விளக்குகள் அமைந்துள்ளன. அடுக்கு விளக்கு மற்றும் சுற்று விளக்குகளில் தீபம் ஏற்ற தலா ஒரு டின் எண்ணெய் (சுமார் 20 லிட்டர்) தேவைப்படும் என்கிறார்கள்.

இந்த சுற்றுவிளக்கு தீபம் ஏற்றும் பிரார்த் தனைக்காக பக்தர்கள் அதிகளவு முன்பதிவு செய்து கொண்டு காத்திருக்கிறார்களாம். இப்படி தீபம் ஏற்றி வழிபட்டால், நினைத்த காரியம் நினைத்தபடி விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

குடும்ப ஐஸ்வர்யத்துக்காகவும், செய்த தவறுகளை மன்னிக்க வேண்டியும் மஞ்சாடி முத்து வாங்கித் தலையைச் சுற்றி அம்மனுக்குச் சமர்ப்பிக்கும் பிரார்த்தனையும் இங்கு உண்டு. அதேபோல் சத்ரு தோஷம் நீங்கிட, `குருதி சமர்ப்பணம்' என்ற வழிபாட்டை நடத்துகின்றனர். சேவலைக் கொண்டு வந்து, தங்களின் தலையை - உடம்பைச் சுற்றிக் கோயிலில் விடுகிறார்கள். இதையே குருதி சமர்ப்பணம் என்கிறார்கள். ரத்த புஷ்பாஞ்சலி என்ற வழிபாடும் இங்கு உண்டு.

விருப்பங்கள் நிறைவேற...

அம்மனுக்கு வேட்டி, நேரியல், பட்டுச் சேலை ஆகியவற்றைச் சார்த்தி வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்; மாங்கல்ய பாக்கியம் கிடைக்குமாம். அதேபோல், தூணிஅரி பாயசம், நெய் விளக்கு, நிறபற நெல், சீனி, அரிசி ஆகியவற்றைச் சமர்ப்பித்தும் வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள் (நிறபற என்றால் தானியம் அளக்கும் கொள்கலன்). இதனால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

திருநீறு, பால், சந்தனம், நெய், இளநீர் ஆகியவற்றால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. மாதம்தோறும் திருவாதிரைத் திருநாள் இந்த அம்மனுக்கு மிகவும் உவப்பான நாள். அன்று அம்மன் சீவேலிக்கு எழுந்தருளும் நேரத்தில் நூற்றுக்கணக்கான மூதாட்டிகள் சமய விளக்கு ஏந்தி கோயிலை வலம் வருவது வழக்கம். சிவராத்திரி, திருவாதிரை, மகரப் பொங்காலை ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மாசி - திருவாதிரை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, 11-நாள்கள் நடைபெறும்; ஆராட்டு வைபவத்துடன் நிறைவடைகிறது.

இந்த ஆலயம், தினமும் அதிகாலை 5 முதல் மதியம் 12:30 மணி வரையிலும்; மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும். ஞாயிற்றுகிழமைகளில் மதியம் 1 மணி வரை நடை திறந்திருக்கும். நீங்களும் ஒருமுறை குடும்பத்துடன் சென்று மலையாலப்புழா காளிதேவியை வழிபட்டு வாருங்கள்; அந்த அன்னையின் அருளால் எதிர்காலம் சிறக்கும்!`

சில நிமிடங்கள் போதுமே...'

குரு ஒருவரைச் சந்திக்க வந்த செல்வந்தர், ``காலை முதல் மாலை வரை அயராது உழைக்கிறேன். சில நாள்களில் இரவில்கூட பணிகள் சூழ்ந்துகொள்ளும். இந்தச் சூழலில் எப்படி நேரத்தை ஒதுக்கிக் கடவுளை வழிபட முடியும்?'' என்று கேட்டார்.

அதற்கு குரு,``உலகின் மொத்த பரப்பில் மூன்று பங்கு நீராகவும் ஒரு பங்கு நிலமாகவும் உள்ளது. அந்த நிலத்திலும் பெரும்பகுதி காடுகளும், மலைகளும், பாலைவனங்களுமாக உள்ளன. இந்த மாதிரியான நிலத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாழ எப்படி இடம் கண்டு பிடிக்கிறார்கள்?'' எனக் கேட்டார்.

``எவ்வளவோ துன்பங்களுக்கு நடுவில்தான் மனிதன் வாழ்வதற்கு இடத்தைக் கண்டடைகிறான்'' என்றார் செல்வந்தர்.

குரு சொன்னார்: ``அப்படித்தான் மனிதன் சில நிமிடங்களையாவது கடவுள் வழிபாட்டுக்காக ஒதுக்கவேண்டும்!''

- எஸ்.குமார், சென்னை-44

இப்படித்தான் சாப்பிட வேண்டும்!

உணவு பிரம்மா, அதன் சுவை விஷ்ணு, உண்பவன் ஈசன் என்று சொல்லி உணவருந்த வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்.

இதனால் மனதைக் கெடுக்கும் கெடுதல்கள் உணவில் இருந்து மறைந்துவிடுமாம்.

இயன்றவரையிலும் `முருகா சமர்ப்பணம்... கிருஷ்ணா சமர்ப்பணம்...' என்று அவரவர் இஷ்ட தெய்வத்துக்குச் சமர்ப்பணம் செய்தபிறகு உண்பது சிறப்பு.

உணவைக் கையில் வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது. பூமியில் வைத்துதான் சாப்பிடவேண்டும்.

கண்டகண்ட நேரங்களில் சாப்பிடக் கூடாது. அதேபோல் சந்தியாகாலம், விடியற்காலம், நள்ளிரவு நேரங்களில் சாப்பிடக் கூடாது.

கோபத்துடனும் சிந்தனையை கண்டபடி அலையவிட்டுக் கொண்டும் சாப்பிடக் கூடாது.

- வியாசர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism