Published:Updated:

மனச் சஞ்சலம் தீர்க்கும் மகேஸ்வரன்!

வேளூர் கும்பாபிஷேகம்
பிரீமியம் ஸ்டோரி
வேளூர் கும்பாபிஷேகம்

வேளூரில் ஒரே நாளில் ஒன்பது கும்பாபிஷேகம்!

மனச் சஞ்சலம் தீர்க்கும் மகேஸ்வரன்!

வேளூரில் ஒரே நாளில் ஒன்பது கும்பாபிஷேகம்!

Published:Updated:
வேளூர் கும்பாபிஷேகம்
பிரீமியம் ஸ்டோரி
வேளூர் கும்பாபிஷேகம்

காவிரிசூழ் சோணாட்டின் சிவத் தலங்களில் ஒன்று. ஶ்ரீராமன் சிவ வழிபடு செய்த ஊர். தந்தையின் வழியில் லவனும் குசனும் சிவபூஜை செய்த புண்ணியப் பதி. ருத்ர அம்சம் என்று புராணங்கள் போற்றும் அனுமன் சிவனாரை வழிபட்டு மகிழ்ந்த க்ஷேத்திரம். மனச் சஞ்சலங்களைத் தீர்க்கும் மகத்தான திருத்தலம்!

இவ்வளவு மகிமைகள் பொருந்திய ஊர் எது தெரியுமா?


வேளூர் என்ற திருத்தலம்தான் அது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ளது இவ்வூர். சிவம் என்றால் ஐஸ்வர்யம் என்றும் மங்கலம் என்றும் பொருள் சொல்கின்றன ஞானநூல்கள். அதற்கேற்ப சகல ஐஸ்வர்யங்களையும் சர்வ மங்கலங்களையும் அருளும் மூர்த்தியாய் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கிறார், இந்த வேளூரில். ஸ்வாமியின் திருப்பெயர் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர். அம்பிகைக்கு அருள்மிகு சொர்ணாம்பிகை என்று திருப்பெயர்.

புராணங்கள் இவ்வூரைப் பலவாறு போற்றுகின்றன. ஶ்ரீராமனின் புதல்வர்களான லவனும் குசனும் இவ்வூருக்கு வந்து, தங்களின் தந்தை வழிபட்ட சொர்ணபுரீஸ்வரரை தாங்களும் வழிபட்டு அருள்பெற்றார்கள். இவ்வூர் ஈசன் அருளால் அவர்கள் எதிர்கொண்ட போரிலும் வெற்றிபெற்றனர் என்கிறது தலபுராணம்.

லவனும் குசனும் வேள்வி செய்த ஊர் என்பதால், வேள்வியூர் என்று பெயர்பெற்றது. அந்தப் பெயரே தற்போது `வேளூர்’ என்று மாறிப்போனது என்கிறார்கள் ஊர் மக்கள். நாயன்மார்களில் ஒருவரான இடங்கழி நாயனாரும் இவ்வூர் இறைவனை அடப்ப மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டதாகவும் ஒரு தகவலைச் சொல்கிறார்கள், இப்பகுதி பக்தர்கள். இத்தலத்தின் தலவிருட்சமாகவும் அடப்ப மரம் திகழ்கிறது.

மனச் சஞ்சலம் தீர்க்கும் மகேஸ்வரன்!

சோழர் காலத்துக் கோயில் இது என்கிறார்கள். வாயிற்படியில் உள்ள கல்வெட்டில் கோச்செங்கட் சோழனின் பெயர் பொறிக்கப் பட்டுள்ளது. அர்த்த மண்டபம் கருங்கற்களால் கட்டப்பட்டு, அதன் விதானம் செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மகாமண்டபம் முழுவதுமே செங்கல் கட்டுமானம்தான்.

வெளிப்புறங்களில் அஸ்வ சிவபூஜை, அன்ன சிவபூஜை, கண்ணப்ப சிவபூஜை, பார்வதி சிவஆலிங்கனம், கஜ சிவபூஜை, புலிப்பாணி சிவபூஜை, ரிஷப சிவபூஜை, நடராஜர் சிவ ஆலிங்கனம் போன்ற காட்சிகள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.

அனுமனும் இத்தலத்து ஈசனை வழிபட்டுள்ளார். அனுமன் சிவபூஜை செய்யும் காட்சியும் சிலாரூபமாக இங்கு உள்ளது. மேலும் இத்தலத்தில் விநாயகர், சுப்ரமணியர், மனோன்மணி அம்மை, தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், வில்வாரண்யர், சண்டிகேஸ்வரர், பைரவர், விஸ்வநாதர், விசாலாட்சி அம்மை, சூரியன், சனீஸ்வரர் ஆகிய தெய்வங்களும் சந்நிதி கொண்டு அருள்கின்றனர்.

இந்தத் திருக்கோயிலின் கிணற்று நீர், புனித நதிகளுக்கு இணையான புனிதத்துடன் திகழ்வதாம். ஆகவே, இதன் நீரைக் கொண்டே சுவாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இத்தலச் சிறப்புகள் குறித்து இந்த ஆலயத்தின் பாலச்சந்திர குருக்களிடம் பேசினோம்.

மனச் சஞ்சலம் தீர்க்கும் மகேஸ்வரன்!

“45 ஆண்டுகளாக இக்கோயிலில் பூஜை செய்து வருகிறேன். பலரும் இங்கு வந்து வணங்கி இந்த ஈசனின் அருளைப்பெற்று நலமுடன் வாழ்கிறார்கள். கேட்டவர்களுக்குக் கேட்கும் வரம் தரத்தை வாரி வழங்கும் வள்ளலாய் திகழ்பவர் இந்த சொர்ணபுரீஸ்வரர்.

இந்தக் கோயிலில் அருளும் முருகப்பெருமான் திருச்செந்தூர் முருகனைப் போலவே அமைந்திருப்பது விசேஷம். தெற்கு திசை நோக்கிய மயில் வாகனம் இங்குள்ளது. இத்தலத்தில் அஸ்வமேத யாக பூஜை செய்து ஈசனை வணங்குவது மிகுந்த நற்பலனைத் தரும். குறிப்பாக மனச் சஞ்சலம் உடையவர்கள், இங்கு வந்து அஸ்வமேத யாக பூஜை செய்தால், சஞ்சலங்கள் விலகும். அவர்களின் குடும்பம் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் திகழும். இதற்காகவே, அஸ்வமேத யாக பூஜை மண்டபம் இங்கு தனியாக உள்ளது. இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, அம்பாளையும் மூலவரையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் எண்ணிய காரியம் வெற்றியாகும். ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகம் இங்கு மிகவும் விசேஷம்.

இடைக்காலத்தில் கோயில் சிதலமடைந்தபோது, இவ்வூரில் வசித்த பெருநிலக்கிழார் ஒருவரின் கனவில், இத்தலத்து அம்பாள் தோன்றி, ‘என் மேல் கற்கள் கொட்டுகின்றன. அது உனக்குத் தெரியவில்லையா? அதனைத் தடுக்க வழி செய்யமாட்டாயா?’ என்று கேட்டாளாம். மறுதினமே அவர் குடும்பத்துடன் இங்கு வந்து வழிபட்டதுடன், வெகு விரைவில் கும்பாபிஷேகமும் நடத்தி வைத்தார்களாம்’’ என்று சிலிர்ப்புடன் சொன்னார் பாலச்சந்திர குருக்கள்.

மனச் சஞ்சலம் தீர்க்கும் மகேஸ்வரன்!

தற்போதும், அற்புதமான இந்தக் கோயில் 24.3.21 புதன்கிழமை அன்று கும்பாபிஷேகம் காணவுள்ளது. உள்ளூர் அன்பர்கள் பக்தர்கள் ஒருங்கிணைப்போடு திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அவசியப் பணிகள் முடிந்துவிட்டாலும் இன்னும் சில பணிகள் நடைபெறவேண்டுமாம். அத்துடன், அதே தினத்தில் இந்த ஊரில் சிவாலயத்தையும் சேர்த்து ஒன்பது கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீகற்பக விநாயகர் கோயில், ஶ்ரீசித்தி விநாயகர் கோயில், ஶ்ரீகண்ணடப்ப ஐயனார் கோயில், ஶ்ரீமன்மத பகவான் கோயில், ஶ்ரீவீரபக்த ஆஞ்சநேயர் கோயில், ஶ்ரீதூண்டிக்காரன் அய்யா கோயில், ஶ்ரீசெல்லம்மா காளியம்மன் கோயில், ஶ்ரீபூரண புஷ்கலாம்பிகா சமேத ஶ்ரீஐயனார் கோயில், ஶ்ரீசொர்ணாம்பிகா சமேத ஶ்ரீசொர்ணபுரீஸ்வரர் கோயில் ஆகிய ஒன்பது கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளன.

இது பெரும் முயற்சியாகும். ஒரே நாளில் ஒன்பது கோயில்கள் கும்பாபிஷேகத்தை தரிசிப்பது மிகவும் அரிது. இந்த அற்புதத் திருப்பணியில் நாமும் பங்கெடுக்கலாம். காணிக்கை - பொருளுதவியுடன் நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கலாம்.

ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்பதால் கிடைக்கும் புண்ணியம் அளப்பரியது. அதனால் நம் வாழ்க்கை மட்டுமல்ல, நம் சந்ததியினரின் வாழ்க்கையும் சிறக்கும். நாமும் வேளூர் கும்பாபிஷேக வைபவங்களுக்குப் பங்களிப்பை வழங்குவோம். ஶ்ரீசொர்ணபுரீஸ்வர் முதலான அனைத்துத் தெய்வங்களின் திருவருளையும் பரிபூரணமாகப் பெற்று மகிழ்வோம்.

பக்தர்கள் கவனத்துக்கு...

தலம்: வேளூர்

ஸ்வாமி: அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர்

அம்பாள்: அருள்மிகு சொர்ணாம்பிகை

திருத்தலச் சிறப்பு: அஸ்வமேத யாக பூஜை இக்கோயிலின் சிறப்பம்சம். இந்தப் பூஜையைச் செய்து வேண்டிக்கொண்டால் மனச் சஞ்சலங்கள் நீங்கும்; குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் பெருகும்.

எப்படிச் செல்வது?: திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பேரூந்து மார்க்கத்தில் திருத்துறைப்பூண்டியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் வேளூர் திருத்தலம் அமைந்துள்ளது.

வங்கிக் கணக்கு விவரம்:

P.GUNASEKARAN

TAMILNADU MERCANTILE BANK LTD

A/C NO: 258100050301777

IFSC CODE: TMBL0000258

MICR CODE: 614060202

தொடர்புக்கு: 98409 79025

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism