Published:Updated:

ரத்தின மாலையிட்ட நம் மணவாளன்!

மணவாள மாமுனிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மணவாள மாமுனிகள்

`காலச்சக்கரம்' நரசிம்மா - படங்கள்: காவல்கேணி வெங்கடகிருஷ்ணன்

எல்லா ஜீவாத்மாக்களும் பெண் வடிவம்தான்; பரமன் மட்டுமே புருஷ வடிவம் என்று கூறுவார்கள். ஆனால், இதை உண்மை என்று நம்பி திருவரங்கத்து அழகிய மணவாளனை நெருங்க முடியுமோ?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரங்கநாயகி, கமலவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆண்டாளுக்கு ஒதுக்கிய நேரம்போக, துலுக்கநாச்சியாரையும் கடந்து நம்மைத் திரும்பிப் பார்க்க எங்கே நேரம் அவனுக்கு?

ஆகவேதான், அவனே ஒரு மணவாளனை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறான். ஓராண் வழி வந்த இந்த உபதேச மார்க்கத்தை வாழ்விக்க வநத மணவாளன் ஒருவர், தன் உபதேசங்களையே ரத்தின மாலையாக நமக்குச் சூட்டியுள்ளார். நமக்கு உபதேச ரத்தின மாலையைச் சூட்டிய அவர் நமக்கு மணவாளன்தான்; ஆனாலும் ஒரு துறவி!

அவர்தான் மணவாள மாமுனிகள் என்கிற வரவர முனி.

மணவாள மாமுனிகள்
மணவாள மாமுனிகள்

கடந்த ஐப்பசி மாத திருமூலம் நட்சத்திர நாள், வைணவத்துக்காக தன்னையே அர்ப்பணித்த அந்த ஆசானுக்கு 650-வது அவதார தினம். திருவரங்கனே அவரது பேருரையை உவந்து கேட்ட பெருமையைப் பெற்றவர் மணவாள மாமுனிகள். அவரின் சிறப்புகள் எண்ணிலடங்கா.

பொதுவாகவே, வைணவ ஆசான்கள், திருமாலவன் பெருமையை தவிர தங்களைப் பற்றி ஒன்றும் பேசிக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அடக்கத்துடன் திகழ்ந்தாலும், திருவரங்கன் அவர்களது பெருமைகளை மக்களிடையே எடுத்துச்சொல்லிவிடுவான்.

மணவாள மாமுனிகள் வாழ்க்கைப் பாதை எங்கே துவங்கியதுசிக்கில் கிடாரம்... தற்போது இந்தக் கிராமத்தின் பெயர் கொத்தன் குளம். ராமநாதபுரம் - தூத்துக்குடி நெடுஞ்சாலையில், திருப்புல்லாணி வட்டத்தில் உள்ளது இந்தக் கிராமம். 2-ம் நூற்றாண்டில், சிக்கில் கிடாரம் பாண்டிய நாட்டின் புகழ்மிக்க துறைமுகம். அப்போது அதன் பெயர் ‘சுக்கில கிடாரம்.’ சுக்கிலம் என்றால் வளர்ச்சி. ‘வளரும் கிடாரம்’ என்று இதற்கு பொருள்.

மலேசியாவின் கேடா மாகாணத்தையே, பாண்டிய நாட்டில் கடாரம் என்று அழைத்தனர். கடாரத்திற்கு சுக்கில கிடாரத்திலிருந் துதான் நன்முத்துகளை ஏற்றுமதி செய்தனர் என்கிறது வரலாறு. பின்னாளில் சுக்கில கிடாரமே, சிக்கில் கிடாரம் என்று மருவி, பிறகு கொற்றவன்குளம் என்று மாறியது. இப்போது கொத்தன்குளம் என்று அழைக்கப்படுகிறது.

ரத்தின மாலையிட்ட நம் மணவாளன்!

14-ம் நூற்றாண்டில் இங்கு கொல்லிக்காவல்தாசர் என்கிற வைணவர் வாழ்ந்துவந்தார். அவர் மகளின் பெயர் ஸ்ரீரங்க நாச்சியார். திருமாலைத் தன் திருவுள்ளத்தில் கொண்ட அடியவர்க்கே தன் மகளை மணமுடிக்க விரும்பிய கொல்லிக்காவல் தாசர், ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த ‘திகழக்கிடந்தான் திருநாவீறு உடையபிரான்’ என்பவருக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்.

சுல்தானியப் படையெடுப்பின்போது, திருவரங்க நம்பெருமாள் விக்ரகங்களை தெற்கே எடுத்துச் சென்று அவற்றைக் காப்பாற்றியவர் பிள்ளைலோகாசார்யார். இவர் மீதும் ராமாநுஜர் மீதும் அளவற்ற பக்தி கொண்டவர் திருநாவீறு உடையபிரான். இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாகத் திகழ ஸ்ரீரங்க நாச்சியார் தாய்மை அடைந்தார். கர்ப்பக் காலத்தில் தாய்வீடு வரும் மரபின் படி, நாச்சியாரைச் சிக்கல் கிடாரத்துக்கு அழைத்து வந்தார் நாவீறு உடையபிரான். மகளைக் கண்டதில் மகிழ்ச்சியென்றால் மருமகனையும் கண்டதில் மிகவும் உவந்தார், கொல்லிக்காவல் தாசர். மனைவியைத் தந்தையிடத்தில் ஒப்படைத்து, ஓர் ஒப்பற்ற விண்ணப்பத்தையும் வைத்துவிட்டு, ஆழ்வார்திருநகரிக்குத் திரும்பி விட்டார் நாவீறு உடையபிரான்.

கொல்லிக்காவல் தாசருக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. தன்னலம் இல்லாமல் தன் மாப்பிள்ளை வைத்த விண்ணப்பத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்தார்.

“நம் சம்பிரதாயத்தைக் காப்பாற்ற ராமாநுஜர் போன்ற ஒரு மகவை எனக்குத் தாருங்கள்...” என்னும் நாவீறு உடையபிரானின் கோரிக்கை அவர் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.

பொன் கேட்டாலும் பொருள் கேட்டாலும் நாமே தரலாம். அருள் கேட்டால்... அதை வழங்க உரியவன் அந்த அரங்கன் அல்லவா. அவனிடமே தஞ்சமடைந்தார், கொல்லிக்காவல் தாசர். ‘`ராமாநுஜரைப் போன்று என்ன ராமாநுஜரையே எனக்குத் திரும்பி தா, அரங்கா!’’ என்று வேண்டிக்கேட்டார்.

ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்
ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்

அரங்கனின் சித்தத்தை அவனன்றி வேறு யார் அறிவார். ராமாநுஜரை அவதரிக்கச் செய்தபோது `அவருக்கு இருநூறு வயது’ என்பது அவன் சித்தம். ஆனால் ராமாநுஜரோ 200 ஆண்டுகளில் ஆற்றவேண்டிய பணியை 120 ஆண்டுகளில் முடித்துவிட்டு விண்ணுலகம் ஏகினார். மீதம் உள்ள 80 ஆண்டுகளைப் பயன்படுத்த அரங்கன் முடிவு செய்தான். அந்தக் கணத்தில்தான் ரங்க நாச்சியாரின் வயிற்றில் ஓர் உன்னதமான கரு உதித்தது.

1370-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், அதாவது ஐப்பசி திருமூல நட்சத்திர தினத்தில் ரங்க நாச்சியார் ஓர் அழகிய ஆண்மகனை பெற்றெடுத்தார். கண்டவுடன் மனம் கவரும் தேஜஸ் பொருந்திய முகமும் உடலும் கொண்ட அந்தக் குழந்தையின் அழகில் திருநாவீறுடைய பிரானும், ஸ்ரீரங்கநாச்சியாரும் மயங்கினர்.

குழந்தைக்கு ‘அழகிய மணவாள பெருமாள் நாயனார்’ என்று அந்தத் திருவரங்கப் பெருமாளின் பெயரையே வைத்தனர்.

சில அவதார புருஷர்கள் அவதரிக்கும்போதே நாட்டிற்கு நல்ல காலம் பிறக்கப்போவதற்கான நிகழ்வுகள் சூசகமாகத் தெரிவிக்கும். ஸ்ரீரங்க நாச்சியாருக்கு குழந்தை பிறந்த அன்று, மதுரை அரசியலில் பெரிய மாற்றம் ஒன்று நிகழ்ந்தது.

அதுவே அந்த ஸ்ரீரங்கம் வரலாற்றிலும் பெரும் மாறுதலைக் கொண்டுவந்தது.

என்ன மாறுதல் அது?

- அடுத்த இதழில் தரிசிப்போம்...