Published:Updated:

கிடாம்பி நாயனாருக்குக் கிடைத்த... ஆதிசேஷ தரிசனம்!

( மணவாள மாமுனிகள் சென்ற இதழ் தொடர்ச்சி...)

பிரீமியம் ஸ்டோரி

‘காலச்சக்கரம்’ நரசிம்மா, படங்கள்: காவல்கேணி வெங்கடகிருஷ்ணன்

சில அவதார புருஷர்கள் அவதரிக்கும்போதே நாட்டிற்கு நல்ல காலம் பிறக்கப்போவதை காலம் சூசகமாகத் தெரிவிக்கும். 1370-ம் ஆண்டு, திருநாவீறு உடையபிரானின் மனைவி ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆண் மகன் பிறந்தபோது, மதுரை அரசியலில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது.

குலசேகர பாண்டியன் கிபி 1268-ல் இறந்த பிறகு, டெல்லி சுல்தானியர்கள் மதுரையைக் கைப்பற்றினர். அதற்கு முன்பாகத்தான் திருவரங்கக் கலகம் நிகழ்ந்து, பிள்ளை லோகாச் சாரியார் அரங்கனைச் சுமந்துகொண்டு தெற்கே நகர்ந்திருந்தார்.

சுல்தானியர்களின் ஆட்சியில், வைதீக மார்க்கங்கள் சிரமப்பட்டன. அப்போது நம்பெருமாள் அரங்கன், செஞ்சியில் சந்திரகிரி மலையின்மீது இருக்கும்படியாயிற்று. அருகே இருந்த சிங்கவரம் ரங்கநாதர் கோயிலிலிருந்து ரகசியமாக பட்டர்கள் வந்து அவருக்கு ஆராதனை செய்து கொண்டிருந்தார்கள்.

மணவாளன் பிறப்பே, வைணவ சம்பிரதாயத்தை வீறு கொண்டு எழச்செய்தது என எண்ணும்படிக்கு நிகழ்வுகள் வேகமாக நடைபெற்றன. விஜயநகரத் தளபதி கம்பண்ணா, மதுரையை மீட்பதற்காகப் படையெடுத்து வந்து, சுல்தானியர்களை விரட்டினார்.

கிபி 1371-ம் ஆண்டு நம்பெருமாளை மீண்டும் திருவரங்க ஆலயத்தில் சேர்ப்பித்தார். அரங்கன் மீண்டு வந்ததும், புதிய உத்வேகத்துடன் ஆசான்கள் புறப்பட்டனர்.

கிடாம்பி நாயனாருக்குக் கிடைத்த... ஆதிசேஷ தரிசனம்!

மணவாளன் தனது தாய்வழிப் பாட்டனாரிடமே வேதங்களையும், வேதாந்தம் மற்றும் திவ்யப் பிரபந்தங்களையும் கற்றார். மணவாளனுக்கு ஏழு வயதில் உபநயனமும் பதினாறு வயதில் ‘ஸ்ரீவர மங்கை’ என்கிற நங்கையோடு திருமணமும் செய்வித்தனர். திருமணம் முடிந்ததும், மனைவியுடன் சிக்கில் கிடாரத்தில் இருந்து, தன் தகப்பனார் ஊரான ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார் மணவாளன்.

அங்கே திருவாய்மொழிப் பிள்ளை என்கிற ஆசானிடம் சரணாகதி அடைந்தார். மணவாளனுக்கும் ஸ்ரீவரமங்காவுக்கும் ஓர் ஆண் குழந்தை பிறக்க, தன் ஆசான் திருவாய் மொழிப்பிள்ளையிடம் அதற்குப் பெயர் வைக்கும்படி வேண்டினார். ஆசான் அந்தப் பிள்ளைக்கு ‘இம்மையின் ராமாநுஜன்’ என்று பெயரிட்டார்.

திருவாய்மொழி பிள்ளையின் காலத்துக்குப் பிறகு, துறவறம் ஏற்று ஆசானின் பீடத்தை அலங்கரித்தார் மணவாளன். ‘அருளிச்செயல்’ என்கிற திவ்ய ப்ரபந்தங்களில் கைதேர்ந்தவரான மணவாள மாமுனிகள் ‘ஈடு வியாக்யானம்’ எழுத உத்தேசம் செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

மணவாள மாமுனிகளின் பெருமைகளை அறிந்த வானமாமலையைச் சேர்ந்த அழகிய வரதர், நாடி வந்து சீடராகச் சேர்ந்தார். அவரை ‘வானமாமலை ஜீயர்’ என்று மணவாள மாமுனிகள் அழைக்கத் தொடங்கினார். அவரே முதல் சீடர் என்பதால் ‘பொன்னடி ஜீயர்’ என்ற நாமமும் அவருக்கு ஏற்பட்டது.

வைணவ ஆசான்களின் இலக்கே திருவரங்கம் அல்லவா. திருவாய் மொழிப்பிள்ளை தனது காலத்திலேயே மணவாள மாமுனிகளைத் திருவரங்கத்தில் வசிக்கும்படி பணித்திருந்தார்.ஆசானின் கட்டளையை நிறைவேற்ற எண்ணி, திருவரங்கம் புறப்பட்டார் மணவாள மாமுனி கள். வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கமன்னார் - ஆண்டாளையும் அழகர்கோயில் சுந்தரராஜ பெரு மாளையும் தொழுது மகிழ்ந்தார்.

முதல்முறையாக திருவரங்கம் சென்றதும், காவிரியில் நீராடி தனது நித்ய கர்மாக்களைச் செய்துவிட்டு, திருவரங்கன் ஆலயத்திற்குச் சென்ற மணவாள மாமுனிகளை ஊரே திரண்டு வந்து வரவேற்றது. முறைப்படி, ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீநம்மாழ்வார், சேனை முதலியார், ஸ்ரீரங்க நாயகி மற்றும் ஸ்ரீரங்க நாதனை தரிசித்த மணவாள மாமுனிகள், அங்கிருந்து பிள்ளைலோகாசார்யர் வசித்த மாளிகைக்குச் சென்றார்.

பிள்ளைலோகாசார்யர் அரங்கனுக்காகச் செய்த தியாகங்களை நினைவுகூர்ந்து அவரின் பாதுகைகளுக்குத் தன் மரியாதைகளைச் செய்தார்.

திருவரங்கத்திலேயே நிரந்தர மாக வசிக்க முடிவு செய்த மணவாள மாமுனிகள், சுல்தானியப் படையெடுப்பின்

போது தொலைந்துபோன கிரந்தச் சுவடிகளைத் தேடிச் சேகரிக்கும் பணியில் ஈடுபட் டார். இந்நிலையில் பொன்னடி ஜீயரைக் கொண்டு, உத்தம நம்பி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு அரங்கன் சேவையில் ஈடுபடுத்தும்படிக் கட்டளையிட்டார்.

மணவாள மாமுனிகளுக்குத் திருவேங்கடம் செல்ல வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட, பொன்னடி ஜீயருடன் வேங்கடம் நோக்கிப் புறப்பட்டார். திருக்கடிகை அருகே எறும்பி என்னும் கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது பண்டிதர் ஒருவர் மாமுனிகளின் சீடராகச் சரணடைந்தார்.

கிடாம்பி நாயனாருக்குக் கிடைத்த... ஆதிசேஷ தரிசனம்!

அவருக்கு ‘எறும்பியப்பா’ என்று பெயரிட் டார். தொடர்ந்து திருக்கடிகை என்கிற சோளிங்கபுரத்திலும், திருக்கோவலூரிலும் பெருமாளைத் தொழுதுவிட்டுத் திருவேங்கடம் நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவர் வருகையை ஒரு கனவின் மூலம் ஏற்கெனவே அறிந்திருந்த திருமலை பெரியகேள்விஅப்பன் ஜீயர், மணவாள மாமுனிகளுக்குச் சிறப்பான வரவேற்பை அளித்தார்.

அங்கிருந்து பெரும்புதூர் சென்று ராமாநுஜரின் பெருமைகளில் திளைத்துவிட்டு, காஞ்சிபுரம் சென்று கிடாம்பி நாயனார் என்பவரிடம் பாஷ்யம் பயின்றார்.

ஒரு நாள் இரவு... கிடாம்பி நாயனார் உறக்கம் வராமல் நடைபோட்டுக் கொண்டிருந்தபோது, தன் மாளிகைத் திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்த மணவாள மாமுனிகளைக் கண்டு அதிர்ந்து போனார். ஆம்! மாமுனிகள் படுத்திருப்பதைக் கண்டபோது, ஆதிசேஷன் சயனம் கொண்டது

போன்ற தரிசனம் அவருக்குக் கிடைத்தது.

மணவாளமாமுனிகள் ராமாநுஜரைப் போன்றே ஆதிசேஷனின் அம்சம் என்பதை கிடாம்பி உணர்ந்துகொண்டார். மேலும் பக்தியோடும் களிப்போடும் அவருக்கு பாஷ்யத்தைக் கற்று தந்தார். அதன் பிறகு மீண்டும் திருவரங்கம் திரும்பினார், மணவாள மாமுனிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருவரங்கத்தில் பல்லவராயர் மாளிகை என்கிற பழைய கட்டடத்தைச் செப்பனிட்டு அதற்கு பிள்ளைலோகாசார்யர் மாளிகை என்று பெயர் சூட்டி, அங்கிருந்து வைணவ மார்க்கத்தை வழி நடத்தினார், மணவாள மாமுனிகள்.

கிடாம்பி நாயனாருக்குக் கிடைத்த... ஆதிசேஷ தரிசனம்!

தன் சீடர்களுக்கு, திருவாய்மொழி மற்றும் வசன பூஷண உரைகளைப் போதித்து, அவற்றை மக்களிடையே பரப்பும்படிக் கட்டளையிட்டார். தொடர்ந்து மணவாள மாமுனிகளின் பெருமைகள் திக்கெட்டும் பரவ, பலரும் அவரை தங்களின் ஆசானாக ஏற்று அடிபணிந்தனர்.

திருமஞ்சன அப்பன், பட்டர்பிரான் ஜீயர், ஆய்ச்சியர் என்கிற பெண்மணி ஆகியோர் அவரைத் தேடிவந்து அடிபணிந்தனர்.

ஒரு முறை, திருவரங்கத்தில் பலத்த மழை. இரவு ஊரே அடங்கிவிட்டிருந்தது. அப்போது மணவாள மாமுனிகள் மடத்தின் வாயிற் கதவை யாரோ தட்டும் ஒலி. சீடர்கள் கதவைத் திறக்க, வயதான பெண்மணி ஒருவர் வெளியே குளிரில் நடுங்கியபடி நின்றிருந்தார்.

‘`சுவாமி ! போக்கிடம் இல்லாதவள். குளிரால் அவதிப்படுகிறேன். இன்றிரவு உங்கள் மடத்தில் அடைக்கலம் தாருங்கள்’’ எனக்கேட்டார் அந்த மூதாட்டி. ‘`இல்லையம்மா... துறவியர் தங்கும் மடத்தில் பெண்கள் உள்ளே வருவதற்கில்லை!’’ என்று மாமுனிகள் உறுதியாக மறுத்தாலும் ஆய்ச்சியர் என்ற வைணவ பெண்மணியின் வீட்டில் அந்தப் பெண்ணைத் தங்க வைத்தார். மாமுனிகளின் இந்தச் செயல் அவரின் வைராக்கியத்தையும் கருணையையும் சீடர் களுக்கு உணர்த்தியது.

மணவாள மாமுனிகள் மொத்தம் 19 கிரந்தங் களை இயற்றினார். அவற்றில் மூன்று மட்டுமே சம்ஸ்கிருதம். ஏனைய 16 நூல்கள் தமிழில் இயற்றப்பட்டவை ஆகும்.

வைணவத்தை எட்டுத் திக்கிலும் பரப்ப வேண்டி அஷ்டதிக்கஜங்கள் என்னும் எட்டு சீடர்களை நியமித்தார்.

கிடாம்பி நாயனாருக்குக் கிடைத்த... ஆதிசேஷ தரிசனம்!

மணவாள மாமுனிகளுக்கு வரவர முனி, சௌம்யா ஜாமாத்ரூ முனி, ரம்யா ஜாமாத்ரூ முனி, பெரிய ஜீயர், யதீந்திர பிரவணர் ஆகிய திருப்பெயர்களும் உண்டு. அவருடைய தெளிவான நீரோடையை போன்ற பேச்சு வன்மையைச் சிறப்பிக்கும் விதம் `விசதவாக் சிகாமணி' என்றும் அவர் அழைக்கப்பட்டார்.

ராமாநுஜரின் ஆயுளின் மீதி 80 ஆண்டுகளைக் கழிப்பதற்கென்று அவதாரம் செய்தவர் போன்று, தோன்றியிருந்த மணவாள மாமுனிகள் வைணவத்தை பலம் பொருந்திய மார்க்கமாகச் செய்து விட்டுத் தன்னுடைய 80-வது வயதில், 1450-ல் மறைந்தார்.

இன்று நம் அனைவருக்கும் தேவை குருவருளும் திருவருளுமே. அவற்றை அருள வல்ல மணவாள மாமுனிகளைப் போற்றுவோம். இந்த உலகம் நோயின்றி இன்புற்று வாழ வழி செய்யுமாறு, அந்த மாமுனியின் திருவடிகளைத் தொழுது வேண்டிக்கொள்வோம்.

அல்லிக்கேணி கொண்டாடும் மணவாள மாமுனிகள்!

பாண்டிய நாட்டுத் திருப்பதியான ஆழ்வார்திருநகரியில் பிறந்து, சோழநாட்டின் திருவரங்கத்தில் வசித்து, நடுநாட்டுத் திருப்பதி திருக்கோவலூரை மங்களாசாசனம் செய்தவர் மணவாள மாமுனிகள்.

எனினும் தொண்டை நாட்டுத் திருப்பதியான திருவல்லிக்கேணி, மணவாள மாமுனிகளைக் கொண்டாடுவது போன்று வேறு எந்த ஊரும் கொண்டாடுவதில்லை என்று கூறலாம்.

மணவாள மாமுனிகளின் நட்சத்திரமான ஐப்பசி மூலத்தை முன்னிட்டு ஐப்பசி மூலம் உற்சவம் பத்து நாள்கள் அல்லிக்கேணியில் நிகழும். கடைசிநாளான சாற்றுமுறை அன்று பார்த்தசாரதி கைத்தல சேவை கண்டருளிப் பிறகு, விமர்சையான புறப்பாடு நிகழும்.

பார்த்தசாரதி, எதிர்சேவையில் மணவாளமாமுனிகளுடன் வீதி வலம் வருவார். அப்போது தெருவெங்கும் பந்தல் போட்டது போன்று, இருபது பெரிய குடைகளுடன் புறப்பாடு நிகழ்வது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும்!

மணவாள மாமுனிகள் அருளிய ஞானநூல்கள்!

ணவாள மாமுனிகள் அருளிய கிரந்தங்கள் அனைத்தும் உலகம் போற்றும் பொக்கிஷங்களாகும்.

மொத்தம் 19 கிரந்தங்களை இயற்றினார். அவற்றில் மூன்று மட்டுமே சம்ஸ்கிருதம். ஏனைய 16 நூல்கள் தமிழில் இயற்றப்பட்டவை.

வசனபூஷண உரை, முமுட்சுபடி, தத்வத்ரயம், ஆசார்ய ஹ்ருதயம், ஞான சாரம், ப்ரமேய சாரம், பெரியாழ்வார் திருமொழி, இராமாநுஜ நூற்றந்தாதி, பகவத் கீதை ஆகிய நூல்களுக்கு உரை எழுதினர்.

இவற்றில் கீதைக்கான உரை காணாமல் போய்விட்டதாகக் கூறுகிறார்கள். தமிழில் அவர் இயற்றிய ‘உபதேச ரத்தினமாலை’ மிகவும் புகழ் பெற்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு