Published:Updated:

நரியைப் பரியாக்கி திருவாதவூராருக்கு அருளிய ஈசன்..! மாணிக்கவாசகர் குருபூஜை தினப் பகிர்வு!

சிவலிங்கம்
சிவலிங்கம்

கேட்டார் உள்ளம் உருக்கும் திருவாசகம்! மாணிக்க வாசகர் குருபூஜை தினப்பகிர்வு...

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ.போப் ஒருமுறை தனது நண்பருக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். அப்போது, கடிதத்தில் திருவாசகத்தைப் பற்றி எழுத நேர்ந்தது. உடனே ஜி.யூ.போப்பின் உள்ளம் உருகத்தொடங்கியது. அவரது விழிகளிலிருந்து பெருக்கெடுத்த கண்ணீர்த் துளிகள் காகிதத்தில் விழுந்து எழுத்துகளை நனைத்து அழித்தன. திருவாசகத்தால் பெருக்கெடுத்த கண்ணீர்த் துளிகள் விழுந்ததால் அழிந்த எழுத்துகள் மீது மீண்டும் எழுத மனமில்லாமல் அப்படியே, கண்ணீர் தடத்துடனே அந்தக் கடிதத்தை அனுப்பிவைத்தார் ஜி.யு.போப். இப்படியாக ஒரு செய்தி உலவுகிறது.

மாணிக்க வாசகர்
மாணிக்க வாசகர்

‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்’ என்பார்கள். படிப்போர் உள்ளத்தைப் பக்திப் பெருக்கால் நெகிழச்செய்யும் திருவாசகத்தை உலகுக்கு அளித்தவர் மாணிக்கவாசகப் பெருமான். பாண்டிய நாட்டில் வைகை நதிக்கரையில் அமைந்திருக்கும் திருவாதவூரில் பிறந்தார். அவர் பிறந்த ஊரின் பெயராலேயே ‘திருவாதவூரார்’ என்றே அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே கல்வி, ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய திருவாதவூராரின் புகழைக் கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கிக் கௌரவித்தான்.

ஒருமுறை, தரமான, வளமான குதிரைகள் பல சோழநாட்டுத் துறைமுகங்களில் கப்பல்களில் வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட பாண்டிய மன்னன், அமைச்சரான வாதவூராரை அனுப்பி அந்தக் குதிரைகளை வாங்கிவரும்படி ஆணையிட்டான். திருவாதவூராரும் தனது பரிவாரங்களுடன் புறப்பட்டார். வாணிபம் செய்யச் சென்ற வாதவூராரை தன் வசமாக்க முடிவு செய்தார் ஈசன்.

Vikatan
சிவபெருமான்
சிவபெருமான்

சோழ நாட்டுக்குச் செல்லும் வழியில் இருந்த திருத்தலம் திருப்பெருந்துறை. அங்கு, குருந்த மரத்தடியில் ஞானமே வடிவாய் ஒருவர் அமர்ந்திருந்தார். ஒளிபொருந்திய அவரின் திருமுகத்தைக் கண்டதும் வாதவூராருக்கு அன்பும் பக்தியும் பெருகியது. உணர்வுப்பெருக்கோடு அவரின் காலில் விழுந்து வணங்கினார். அவரின் பாதம் தொட்டதுமே, 'அமர்ந்திருப்பது மனிதரல்ல, இந்த உலகின் குருவான தட்சிணாமூர்த்தியே' என்பதை உணர்ந்தார் வாதவூரார். பக்திப் பெருக கண்ணீர் சிந்தியபடி இறைவனின் பெருங்கருணையை எண்ணி பாடல்களைப் பாடத்தொடங்கினார்.

அந்தப் பாடல்களைக் கேட்ட பரமனே, உள்ளம் உருகி கண்ணீர் சிந்தினார். “உன் நாவிலிருந்து வெளிப்படும் சொற்கள் ஒவ்வொன்றும் மாணிக்கத்தை விடவும் மதிப்பு மிக்கவையாக இருக்கின்றன. இனி நீ மாணிக்கவாசகன் என்று அழைக்கப்படுவாய்” என்று சொல்லி மறைந்தார். அந்த ஆலவாயனின் தரிசனம் கண்டபின், இந்த உலகின் இன்பங்களை வெறுத்தார் மாணிக்கவாசகர். அமைச்சருக்குரிய ஆடைகள் அனைத்தையும் துறந்து கௌபீனம் உடுத்தி, திருநீறு தரித்து துறவியாக மாறினார். சிவபக்தியில் முழுமையாய்த் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னை மறந்து, தான் வந்த பணியையும் மறந்தார். கொண்டுவந்த பொன், பொருள் அனைத்தையும் கோயில்களின் திருப்பணிகளுக்கும் அடியார்களுக்கும் செலவிட்டார்.

மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர்

நாள்கள் கடந்தும் திரும்பாத மாணிக்க வாசகருக்குப் பாண்டிய மன்னன் ஓலை அனுப்பினான். அப்போதுதான், அவருக்குத் தான் வந்த வேலை நினைவுக்கு வந்தது. கவலையோடு இறைவனின் பாதங்களைச் சரணடைந்தார் மாணிக்கவாசகர். அப்போது, ‘ஆடி மாதம் முடிவடைவதற்குள் குதிரைகள் வந்துசேரும் என்று ஓலை அனுப்பு’ என்ற அசரீரி எழுந்தது. அவ்வாறே ஓர் ஓலை எழுதி அனுப்பிவைத்தார் மாணிக்கவாசகர். ஆனால், ஆடிமாதமாகியும் புரவிகள் எதுவும் மதுரைக்கு வரவில்லை. 'தான் கொடுத்தனுப்பிய செல்வங்கள் அனைத்தையும் களவாடிவிட்டாரோ' என்று சந்தேகம் கொண்ட மன்னன் மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்தான். அப்போதும், 'எல்லாம் ஈசனின் செயல்' என்றிருந்தார் மாணிக்கவாசகர்.

தன் அடியவர்க்காகத் திருவிளையாடல் செய்யத் திருவுளம் கொண்ட சிவபெருமான், வனத்தில் இருந்த நரிகள் அனைத்தையும் பரிகளாக்கி மதுரைக்கு அனுப்பினார். வந்துசேர்ந்த குதிரைகளைக் கண்ட மன்னன் மகிழ்ச்சியில் மாணிக்கவாசகரை விடுதலை செய்தான். ஆனால், அன்றிரவே பரிகள் நரிகளாக மாறி ஊளையிட்டன. 'என்ன நடக்கிறது' என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் சினம் கொண்ட பாண்டிய மன்னன் மாணிக்க வாசகரை வைகை நதியின் சுடு மணலில் நிறுத்தி மரண தண்டனை அளிக்கக் கட்டளையிட்டான்.

Vikatan
சிவபெருமான்
சிவபெருமான்

அப்போது இறைவனின் கருணை, மழையாகப் பெய்து வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த, 'வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்க வரவேண்டும்' என்று ஆணையிட்டான் பாண்டிய மன்னன். அப்போது, மதுரையில் வாழ்ந்த, பிட்டு விற்றுப் பிழைக்கும் 'வந்தி' என்று மூதாட்டி தன் பங்குக்குக் கரையடைக்க ஆள் இல்லாமல் திண்டாடினாள். ஈசன் கூலியாள் வேடம் பூண்டு வந்து, பிட்டுக்கு மண் சுமக்க ஒப்புக்கொண்டார்.

உண்ட பிட்டுக்கு ஈடாகக் கரையடைக்க வந்த ஈசனோ, வேலையைச் செய்யாமல் படுத்துத் தூங்கினார். அதைக் கண்ட பாண்டியன் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் ஈசனை அடித்தான். அந்தப் பிரம்படியானது, உலகின் அனைத்து உயிர்கள் மீதும் விழுந்தது. பாண்டியனும் வலியால் துடித்தான். அப்போது பணியாளன் உருவில் இருந்த ஈசன் ஒரு கூடை மண்ணை எடுத்துச் சென்று கரையில் கொட்டினார். அப்போது வைகை ஆற்றின் வெள்ளம் வடிந்து தனது எல்லைக்குள் ஓடியது.

சிதம்பரம்
சிதம்பரம்

பின்பு மன்னனைப் பார்த்து சிரித்த சிவனார், அங்கிருந்து மாயமாக மறைந்தார். 'மாணிக்கவாசகரைக் காக்க சிவபெருமான் செய்த திருவிளையாடலே இது' என்பதை உணர்ந்த பாண்டிய மன்னன் மீண்டும் அவரை அமைச்சர் பதவியில் நியமித்தான். ஆனால், அவரோ அதை நிராகரித்துவிட்டு, சிவபெருமானின் புகழ் பாடுவதையே வேலையாகக் கொண்டு சிதம்பரம் தலத்துக்குச் சென்றார். அங்கே தங்கி இறைவனை எண்ணிப் பாடல்கள் பாடத் தொடங்கினார். தில்லையம்பதியானின் கருணையை மாணிக்கவாசகர் கண்ணீர் சிந்திப் பாட, வேதியர் ஒருவர் ஓலையில் எழுதினார். பாடல்கள் அனைத்தையும் எழுதி முடித்த நிலையில், அந்த வேதியர், 'திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான்’ என்று எழுதி ஓலைகளைக் கீழ்வைத்து மறைந்தார்.

‘தெய்வம் மனிதனுக்குக் கூறியது கீதை, மனிதன் மனிதனுக்குக் கூறியது திருக்குறள், மனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம்’ எனும் பழந்தமிழ் வாக்கியமே மாணிக்கவாசகர் மற்றும் அவர் இயற்றிய திருவாசகத்தின் பெருமையை உணர்த்தும். இறைவனுக்கு அடிமையாக இருந்து தொண்டாற்றினால், இறைவனே நேரில் வந்து அருள்வான் என்பதை உலக மக்களுக்கு உணர்த்துவது மாணிக்கவாசகரின் வரலாறு.

சிவலிங்கம்
சிவலிங்கம்

பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும் திருக்கோவையும் 8 - ம் திருமுறைகளாக விளங்குகின்றன. 32 ஆண்டுக்காலமே வாழ்ந்த மாணிக்கவாசகர், மக்கள் அனைவரும் காணும் வகையில் ஆனி மாத மகம் நட்சத்திரத்தில் சிதம்பர தலத்தில் இறைவனோடு இரண்டறக் கலந்தார். இந்த நாளில் அனைத்து சிவ தலங்களிலும் மாணிக்க வாசகரின் குருபூஜை சிறப்பாக நடைபெறும்.

அடுத்த கட்டுரைக்கு