திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

மணிமகுடத்தில் மகாலட்சுமி தரிசனம்!

மகாலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
மகாலட்சுமி

செல்வகடாட்சம் அருளும் ஶ்ரீவீற்றிருந்த பெருமாள்

`வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்ந்து வணங்குமின்கள் தண்மலராய்...’ என எங்கும் வியாபித்து அருளும் மாலவனையே சிந்தையில் வைத்துப் போற்றியவர் திருமழிசை ஆழ்வார். அவர் அவதரித்த புண்ணிய க்ஷேத்திரம் திருமழிசை.

இவ்வூரைச் சுற்றிலும் அமைந்த 3 வைணவ ஆலயங்களில் ஒன்றில், பாற்கடல் பரமன் வீற்றிருந்த பெருமாளாய் அருள்பாலிக்கிறார்.இவரின் மகுடத்தில் நான்கு புறமும் மகாலட்சுமி திகழ்கிறாள். ஆகவே, வந்து வழிபடுவோருக்குச் செல்வகடாட்சம் அருள்வதில் மகுடமான க்ஷேத்திரம் இது என்பது ஆன்றோர் வாக்கு.

மணிமகுடத்தில் 
மகாலட்சுமி தரிசனம்!

அதுமட்டுமா? வெளிநாடு செல்வதற்கு ஆவலுடன் காத்திருக்கும் அன்பர்களுக்கு, விசா கிடைக்க அருளும் விசா ஆஞ்சநேயரும் இங்கு அருள்வது சிறப்பம்சம். இந்தக் கோயிலின் தலவரலாறு சொல்லும் கதை என்ன தெரியுமா?

ஒடிசா மாநிலத்தில் உள்ளது பூரி திருத்தலம். முன்னொரு காலத்தில் மகா விஷ்ணுவின் தரிசனம் வேண்டி, பிருகு முனிவரும் மார்க்கண்டேய முனிவரும் இவ்வூரில் தவம் இருந்து வந்தனர். எனினும், அங்கே சங்கு-சக்ரதாரியான மகாவிஷ்ணுவின் பூரணத் திருக்கோல தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. முனிவர்கள் கலங்கினர்.

``தெற்கே காஞ்சி மண்டலத்தில் உள்ள புண்ணிய பூமியாம் மஹீசார க்ஷேத்திரத்துக்குச் சென்று தவம் இயற்றினால், அங்கு நீங்கள் விரும்பியது நடக்கும்’’ என்று பெருமாளின் அருள்வாக்கு கிடைத்தது.

ஐம்பது யோசனை (ஓர் அளவு) பரப்புள்ள பூமிப் பந்தினையும் இந்த மஹீஸார க்ஷேத்திரத்தையும் துலாத் தட்டுகளில் வைத்தால், மஹீஸாரமே எடை மிகுந்து காணப்படுமாம். அந்த அளவுக்குப் புண்ணியம் நிறைந்தது மஹீசாரம் என்கின்றன ஞானநூல்கள்.

மணிமகுடத்தில் 
மகாலட்சுமி தரிசனம்!

ஆனால் இத்தலத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்தனர் முனிவர்கள். ஆகவே, இருவரும் பிரம்மனிடம் பிரார்த்தித்தனர். பிரம்மன் மகாவிஷ்ணுவை வணங்கி வழிகாட்ட வேண்டினார்.

`செண்பகவல்லித் தாயாருடன் யாம் வீற்றிருந்த கோலத்தில் அருளும் தலமே மஹீசார க்ஷேத்திரம்’ என்று அருளினார் பெருமாள். இந்த விவரத்தைப் பிரம்மன் விளக்கியதும், முனிவர்கள் இருவரும் இந்தத் தலத்தை அடைந்து தவமியற்றினர். விரைவில் அவர்களுக்கு சங்கு-சக்ரதாரியாகக் காட்சி தந்தார் பெருமாள். முனிவர்கள் இங்ஙனம் தரிசனம் பெற்ற தலமே திருமழிசை - அருள்மிகு வீற்றிருந்த பெருமாள் கோயில்கொண்டிருக்கும் தலம்.

சென்னையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது இவ்வூர். இங்கு மிக எழிலுற அமைந்துள்ளது வீற்றிருந்த பெருமாள் ஆலயம். ஐந்து நிலை கோபுரத்தை தரிசித்து உள்ளே நுழைந்தால், கொடி மரம், பலீபடத்தை தரிசிக்கலாம். ஆலயத்தை வலம் வரும்போது ஶ்ரீவரதராஜபெருமாள், ஶ்ரீவைஷ்ணவி தேவி, ஶ்ரீவிநாயகர், ஶ்ரீசக்கரத்தாழ்வார், ஶ்ரீலட்சுமி நரசிம்மர், ஶ்ரீஆண்டாள் மற்றும் ஶ்ரீவேதாந்த தேசிகர் சந்நிதியை தரிசிக்கலாம். திருமழிசை ஆழ்வாருக்குத் தனிச் சந்நிதி உள்ளது.

ஶ்ரீவீற்றிருந்த பெருமாள்
ஶ்ரீவீற்றிருந்த பெருமாள்
ஶ்ரீசெண்பகவல்லி தாயார்
ஶ்ரீசெண்பகவல்லி தாயார்

கருவறையில் ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்கிறார் ஶ்ரீவீற்றிருந்த பெருமாள். தரிசிக்கும் கணத்திலேயே மனத்துக்குள் ஒருவித பரவசமும் பெரும் நிம்மதியும் நிறைவதைப் பக்தர்கள் உணரலாம்!

பெருமாளின் கிரீடத்தின் நான்கு புறமும் லட்சுமிதேவி அருள்கிறாள். ஆகவே, இந்தப் பெருமாளை வணங்குபவர்களுக்குச் சகல விதமான செல்வங்களும் சேரும் என்கிறார்கள்.

ஶ்ரீசெண்பகவல்லித் தாயார் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். இந்தத் தாயாரை ஒருமுறை தரிசித்தாலே போதும்; நம் மனக் கவலைகளை எல்லாம் விலகியோடச் செய்து, வாழ்வில் நிம்மதியை யும் சகல சுபிட்சங்களையும் அருள்வார் என்கிறார்கள் ஆன்றோர்.

மணிமகுடத்தில் 
மகாலட்சுமி தரிசனம்!
மணிமகுடத்தில் 
மகாலட்சுமி தரிசனம்!

தீராத நோயினால் அவதிப்படுபவர்கள், சனிக் கிழமைகளில் இந்த ஆலயத்துக்கு வந்து, ஶ்ரீவீற்றிருந்த பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டால் விரைவில் பிணிகள் நீங்குமாம்.

முனிவர்களுக்கு அருளிய பெருமாள், இன்றைக்கும் தன்னைத் தேடி வந்து வணங்கும் அன்பர்களுக்கு கோடி வரம் தந்து அருள காத்திருக்கிறார்.

நீங்களும் ஒருமுறை, திருமழிசை வீற்றிருந்த பெருமாள் கோயிலுக்குச் சென்று, பெருமாளை தரிசித்து வழிபட்டு வாருங்கள்; நீங்கள் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்; எதிர்காலம் சிறக்கும்!