Published:Updated:

மன்னார்குடி கோயில்: `பாப் கட்டிங் புகழ்' செங்கமலம் யானைக்கு பத்து லட்ச ரூபாய் செலவில் நீச்சல் குளம்!

பாப் கட்டிங் புகழ் செங்கமலம் யானை

'பாப் கட்டிங் புகழ்' செங்கமலம் யானை குளித்து மகிழ பத்து லட்சம் செலவில் நீச்சல் குளமானது கோயிலின் ஈசானி மூலையில் அமைக்கப்பட்டு உள்ளது.

மன்னார்குடி கோயில்: `பாப் கட்டிங் புகழ்' செங்கமலம் யானைக்கு பத்து லட்ச ரூபாய் செலவில் நீச்சல் குளம்!

'பாப் கட்டிங் புகழ்' செங்கமலம் யானை குளித்து மகிழ பத்து லட்சம் செலவில் நீச்சல் குளமானது கோயிலின் ஈசானி மூலையில் அமைக்கப்பட்டு உள்ளது.

Published:Updated:
பாப் கட்டிங் புகழ் செங்கமலம் யானை

ராஜமன்னார்குடி என்ற புராண பெயர் கொண்ட மன்னார்குடியில் அமைந்துள்ளது அருள்மிகு ராஜகோபாலன் சுவாமி திருக்கோயில்.

இங்கு உற்சவரான ராஜகோபாலன் இடையர் கோலத்தில் பாலகனாகவும், மூலவர் வாசுதேவர் என்ற பெயரிலும், தாயாராகப் பெண் வடிவ கருடாழ்வார் சிலை அருகே செங்கமலத்தாயாரும் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

'திருவாரூர் தேரழகு..! மன்னார்குடி மதிலழகு..!' எனப் பெரியோர்கள் சொல்வார்கள்.

அருள்மிகு ராஜகோபாலன் சுவாமி திருக்கோயில்
அருள்மிகு ராஜகோபாலன் சுவாமி திருக்கோயில்

இந்த மன்னார்குடி திருத்தலத்திற்கு மற்றொரு அழகு இந்தக் கோயில் யானை 'செங்கமலம்'. 34 வயதாகும் அந்தப் பெண் யானைக்கு 'பாப் கட்டிங் யானை' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. அதாவது எந்த யானைக்கும் இல்லாத அளவிற்கு செங்கமலம் யானையின் தலைப்பகுதியில் அதிக முடி காணப்படுகிறது.

அதனை யானைப் பாகன் ராஜகோபாலன் பாப் வடிவில் வெட்டிவிட்டு, பராமரித்து வருவதால் அதனை 'பாப் கட்டிங் புகழ் செங்கமலம் யானை' என்று சிறப்பு பெயரிட்டு அழைத்து வருகிறார்கள்.

தற்போது அந்த செங்கமலம் யானை குளித்து மகிழ பத்து லட்சம் செலவில் நீச்சல் குளமானது கோயிலின் ஈசானி மூலையில் அமைக்கப்பட்டு உள்ளது.

நீச்சல் குளம்
நீச்சல் குளம்

இது தொடர்பாக செங்கமலம் யானையின் பாகன் ராஜகோபால் அவர்களிடம் பேசியபோது...

"இந்த செங்கமலம் யானையை 2003-ம் ஆண்டு கேரளாவிலிருந்து வாங்கிட்டு வந்தோம். அப்போ இதோட பேரு சீதா! இந்த மன்னார்குடி கோயிலுக்கு வந்த பிறகுதான் செங்கமலம்ன்னு பேர் வெச்சோம்.

பொதுவா யானைகளுக்குத் தலையில முடி வளருவது இயல்பான விஷயம்தான். ஆனா அந்த முடியை யானையே தும்பிக்கையால பிச்சி எறிஞ்சிடும். ஆனா, செங்கமலம் மட்டும் அப்படிச் செய்யல, அதுக்கு அதோட தலையில முடி வளர்வது ரொம்ப புடிச்சி இருந்துச்சு.

அதனால நானும் அதோட முடிய அழகா கத்தரிக்கோல் வச்சு பாப் வடிவத்துல கட் பண்ணி இப்போ வரைக்கும் பராமரிச்சுகிட்டு வர்றேன். இதனாலேயே இந்தக் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் எல்லாம் இந்த யானையை 'பாப் கட்டிங் செங்கமலம்'-ன்னுதான் கூப்பிடுவாங்க.

செங்கமலம் யானை
செங்கமலம் யானை

அது கூட செல்ஃபி எடுத்துக்குவாங்க. வயசாகறதால இப்ப செங்கமலத்துக்கு முடி கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. பூந்திக்கொட்டை, மருதாணினு இயற்கை மூலிகைகளை வச்சி செங்கமலத்தோட முடியைப் பராமரிச்சிட்டு வர்றோம்.

எங்க செங்கமலம் யானை குளிக்கிறதுக்கு ஏற்கெனவே கோயில் நிர்வாகம் 75 ஆயிரம் மதிப்பீட்டுல ஷவர் வசதி பண்ணிக் கொடுத்திருக்காங்க. ஆனா, மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி ராஜா சட்டமன்றத்துல செங்கமலம் யானைக்கு நீச்சல் குளம் கட்டிக் கொடுக்கணும்ன்னு கோரிக்கை வச்சாங்க.

பாப் கட்டிங் புகழ் செங்கமலம் யானை
பாப் கட்டிங் புகழ் செங்கமலம் யானை

அதனால இப்போ எங்க செங்கமலம் யானைக்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீடுல நீச்சல் குளத்தை அரசாங்கம் கட்டிக்கொடுத்துருக்கு. இந்த நீச்சல் குளம் சுமார் 30 அடி அகலமும், 30 அடி நீளமும் கொண்டது. செங்கமலம் யானை குளிக்கிறதுக்கு வசதியா 9 அடி ஆழத்துடன் இந்த நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருக்கு.

இந்தக் குளத்துக்குத் தனி மோட்டார் மூலமா தண்ணீர் வசதியும் அரசாங்கம் ஏற்பாடு பண்ணி கொடுத்திருக்கு.

கிட்டத்தட்ட 20 வருஷமா இந்த செங்கமலம் யானையோட நான் பழகிட்டு வர்றேன். அந்த வகையில இந்த அரசாங்கம் நீச்சல் குளம் கட்டிக் கொடுத்திருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு! விரைவில் இந்த நீச்சல் குளம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர இருக்கு. அதுல செங்கமலத்தைக் குளிக்க வெச்சு பாக்குறதுக்கு நாங்க எல்லாம் ரொம்ப ஆர்வமாவும், ஆனந்தமாவும் இருக்கோம்" என்றார்.

செங்கமலம் யானை
செங்கமலம் யானை

"எங்க மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயிலுக்கு இந்த செங்கமலம் யானை தனி சிறப்புதான். பாப் கட்டிங் ஸ்டைல், முடியோட அது தலையை ஆட்டும்போது பார்ப்பதற்கே ரொம்ப அழகா இருக்கும். கோயில் திருவிழா சமயத்துல, சாமி வீதி உலாக்களின் போது செங்கமலம் யானை முன்னாடி தலைய ஆட்டி, ஆட்டி வரும்போது பார்ப்பதற்கே கண்கொள்ளாத காட்சியாக இருக்கும்.

அப்படிப்பட்ட எங்க செங்கமலம் யானைக்குத் தமிழக அரசாங்கம் நீச்சல் குளம் கட்டிக் கொடுத்திருப்பது, அதுக்கு ரொம்பப் பயனுள்ளதாக இருக்கும்." என்கின்றனர் மன்னார்குடி பக்தர்கள்.