`உயர்ந்த உண்மைகளைச் செயல்முறைப்படுத்தும் சமுதாயமே, மிகவும் உன்னதமான சமுதாயம். மிக உயர்ந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்குச் சமுதாயம் தயாராக இல்லாவிட்டால், அதைத் தயார்ப்படுத்துங்கள்.

உங்களால் உங்கள் சமுதாயத்தை உண்மையுடன் பிணைக்க முடியா விட்டால், மிக உயர்ந்த உண்மையைக் கடைப்பிடிக்கத் தக்கவிதத்தில் சமுதாயத்தை உருவாக்க முடியாவிட்டால், உங்கள் உடல்பலத்தைப் பற்றியோ, உங்கள் மேலை நாகரிகத்தின் உயர்வைப் பற்றியோ பேசுவதால் என்ன பயன்?’ எனக் கேட்கிறார், சுவாமி விவேகானந்தர்.

ஆம்! யுக யுகாந்திரமாக உயர்ந்த உண்மைகளையெல்லாம் உலகுக்கே போதித்த பரத கண்டம், அவற்றின் மகிமையைத் தானே உணரமுடியாமல், எளிதில் புரிய இயலாத தத்துவ விஷயங்கள், மத சடங்குகள், நாத்திகக் கொள்கைகள், அந்நிய ஆதிக்கம் எனப் பல்வேறு கட்டுத்தளைகளில் சிக்குண்டுக் கிடந்த காலம் அது.

இதற்கெல்லாம் தீர்வு கிடைத்ததா? கிடைத்தது! `தீர்வு- செயல்முறை வேதாந்தம்’ என்று முழங்கினார் சுவாமி விவேகானந்தர். `ஆன்மிக அறிவு இல்லாத லௌகீக அறிவை மெச்சுவது, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போலாகும்; சுயநலத்தையே பெருக்கும்’ என்று அறிவுறுத்தினார் அவர்.

உபதேசங்களோடு நிற்கவில்லை அவர். ஆன்மிக பலமே அனைத்துக்கும் அடிப்படை எனும் உண்மையை உலகுக்கு உணர்த்தும் வகையில் அவர் ஊன்றிய விதைகள் ஸ்ரீராமகிருஷ்ண மடம் - ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் எனும் கற்பக விருட்சங்களாக வளர்ந்து கிளைபரப்பின. அவற்றின் விழுதுகளாய்ப் பரிணமித்தன பல இதழ்கள். வேதாந்த கேசரி, பிரபுத்த பாரத, உத்போதன் முதலான அந்த ஞான இதழ்களில் ஒன்றாகத் தோன்றி ஒளிவீசிக் கொண்டிருக்கிறது ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்.

1921-ம் ஆண்டு ஜனவரி மாதம், தமிழில் ஓர் ஆன்மிகப் பண்பாட்டு மாத இதழாகத் தொடங்கப்பட்டு, இன்றைக்கு 1,60,000 பிரதிகளோடு நூற்றாண்டு விழாவை நெருங்குகிறது, இந்த ஞான இதழ்.

ஆன்மிக முன்னேற்றம், வேதாந்தத்தின் மூன்று நிலைகள் குறித்த விழிப்புணர்வு, பக்தி மற்றும் ஞானயோகம் குறித்த விளக்கங்கள், இந்திய புலமை மற்றும் ஆராய்ச்சி, சமய சம்பிரதாய நல்லிணக்கம், மகான்களின் சரிதங்கள், மொழி நடையில் எளிமை... இவையே ஓர் ஆன்மிக இதழின் கட்டமைப்பாக, இந்த அம்சங்களைப் பிரசுரிப்பதே லட்சியமாக இருக்க வேண்டும் என்பது சுவாமி விவேகானந்தரின் அருள் கூற்று (ஞானதீபம் - தொகுதி 10).

அவரின் எண்ணப்படியே இன்று வரையிலும் எல்லோருக்கும் நல்லவை எல்லாமும் எளிதில் சென்றடையும் விதமான அங்கங்களோடு வெளிவருகிறது, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்றால் மிகையல்ல. எளியோர் முதல் ஸ்ரீரமண மகரிஷி போன்ற மகான்களும் படித்துப் போற்றக் காரணம், இந்த அம்சங்களே. சமூகத்தின் மேன்மைக்கு அதன் அங்கமான மக்களின் மனத்தைப் பக்குவப்படுத்துவது என்பது எளிதான காரியமல்ல. அதற்கு அதிக உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. அவ்வகையில் `யாழ் நூல்' புகழ் சுவாமி விபுலானந்தர், சுவாமி ருத்ரானந்தர், சுவாமி சித்பவானந்தர், சுவாமி பரமாத்மானந்தர், அண்ணா என். சுப்ரமணியம் முதற்கொண்டு இந்த இதழை வளர்த்தெடுத்த பிதாமகர்களின் பங்களிப்பு மகத்துவமானது. 1980-களுக்குப் பிறகு ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தை பள்ளிகளிலும் தமிழக நூலகங்களிலும் கொண்டு சேர்த்ததில் சுவாமி கமலாத்மானந்தரின் பணி குறிப்பிடத்தக்கது.

எனினும் `அன்றும் இன்றும் விஜயத்தை நிர்வகிப்பது ஸ்ரீராமகிருஷ்ணரே. அவரின் திருக்கரங்களே பின்னணியிலிருந்து ஓயாது செயல்பட்டு வருகின்றன’ என்பதே மடம் சார்ந்த இந்தத் துறவிகளின் கூற்று.

காலத்துக்கேற்ப பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் தன்னைப் பொலிவுபடுத்திக் கொள்ளவும் தவறவில்லை இந்த இதழ். ஆரம்ப காலங்களில் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன், கா.ஸ்ரீ.ஸ்ரீ. தேசிகன், கோமதி ராஜாங்கம் போன்ற சான்றோர்களின் கட்டுரைகள் இதழுக்கு உரம் சேர்த்தன. மேலும், உயர்ந்தோர் கூறும் உறுதி மொழிகள், ஆசிரியர் தலையங்கம், வினா விடை, அன்னையர் உலகம், இளைஞர் உலகம், நீதிக்கதைகள், படக்கதைகள், ஹாஸ்ய யோகம், மாணவர் சக்தி... என இதழின் ஒவ்வொரு பகுதியும் எதிர்கால இந்தியாவை ஒளிரச்செய்ய சுவாமி விவேகானந்தர் கண்ட கனவை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்தது, இதழின் பலம்!

ஆன்மிகம், வாழ்வியல் முறை, கல்வி, இயற்கை சீற்றங்களின்போது இன்னல்களிலிருந்து மக்களை மீட்டெடுப்பது என நீளும் ஸ்ரீராம கிருஷ்ண மடத்தின் சமூகப் பணிகளிலும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழின் பங்களிப்பு உண்டு. இதழின் சார்பாக வருடம்தோறும் நடைபெறும் - லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் கட்டுரைப்போட்டி பக்தர்களுக்கும் மாணவர் களுக்கும் பெரும் உந்துசக்தி.

``ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் தமிழ் ஆன்மிக இதழ்களின் தாய் என்பார்கள் எங்கள் வாசகர்கள். அதை நான் வழிமொழிகிறேன். விஜயத்தைத் தொடர்ந்து சக்தி விகடன் முதலாக பல ஆன்மிக இதழ்கள், ஆன்மிகத்தை, நம் தர்மத்தை, நம் பாரம்பர்ய கலாசாரத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியே.

தன்முனைப்பைத் தவிர்த்து சுயமுன்னேற்றம் காண வேண்டும் சமூகம். ஒருவர் தனக்குள் நிறைவு; பிறருக்குச் சேவை; இறைவனுக்குள் பெருமை என்ற நிலையை எட்ட வேண்டும். அதற்கான அனைத்து சாராம்சங்களும் நிறைந்ததுதான் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம். எல்லோருக்கும் எல்லாமும்... அதாவது எட்டு வயது முதல் இறைவனை எட்டும் வயது வரையிலான அனைவருக்கும் நல்லவை அனைத்தையும் கொடுத்துவருகிறது விஜயம்.

மடம் சார்ந்தவர்கள், குறிப்பிட்ட வட்டத்தினர் என்றில்லாமல் சகல தரப்பினருக்கும் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்துகள், சுவாமிஜியின் வழிகாட்டல்கள், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மூலம் சென்று சேர வேண்டும் என்று விரும்பி, அதற்கு வழிவகுத்தவர் சுவாமி கமலாத்மானந்தர். அவர் வழியில் விஜயத்தின் பயணம் தொடரும்’’ என்கிறார், இதழின் முன்னாள் ஆசிரியரும் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மேலாளருமான சுவாமி விமூர்த்தானந்தர்.

விஜயம் என்றால் `வருகை’ என்றும் `வெற்றி’ என்றும் பொருள் உண்டு. நல்லனவற்றின் வருகைக்கு வரவேற்பும் நிரந்தர வெற்றியும் எப்போதும் உண்டு. `சிறந்த எண்ணங்களால் மூளையை நிரப்புங்கள், சிறந்த லட்சியங்களையே கொள்ளுங்கள்; அவற்றை உங்களிடமிருந்து ஒருபோதும் விலகவிடாதீர்கள். இத்தகைய ஈடுபாட்டினால் அரிய செயல்களைச் செய்ய முடியும்’ என்பது சுவாமி விவேகானந்தரின் திருவாக்கு.

சிறந்த எண்ணங்களையே மக்கள் மனத்தில் விதைக்கும் - உயர்ந்த லட்சியங்களை அவர்களின் உள்ளத்தில் பதித்து உயர்த்த முனைந்து பணியாற்றும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் வெற்றிப்பயணம் தொடரட்டும் என, அந்த இதழின் நூற்றாண்டு விழா நெருங்கும் இந்தப் பொன்னான தருணத்தில், மனம் கனிய வாழ்த்துகிறது சக்தி விகடன்.

வழி விட்ட பலிபீடம்...

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள பலிபீடம், ஸ்வாமி சந்நிதிக்கு நேர்க்கோட்டில் இல்லாமல் விலகி இருக்கும். என்ன காரணம்?

முற்காலத்தில், இந்தப் பகுதியில் வசித்த பால்காரர் ஒருவர், தினமும் அரண்மனைக்குப் பால் வழங்கி வந்தார். இந்தப் பால், திருநள்ளாறு கோயிலின் நித்திய பூஜைக்குக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், பொய்க் கணக்கு எழுதுவதில் வல்லவரான அரண்மனைக் கணக்கர், பாலைத் தனது வீட்டில் கொடுத்து விடும்படியும், அதற்கான பணத்தைக் கோயில் கணக்கில் பெற்றுக் கொள்ளும்படியும் வற்புறுத்தினார். பால்காரர் மறுக்கவே, 'பொய் குற்றச்சாட்டு கூறி அரச தண்டனைக்கு ஆளாக்கி விடுவேன்!' என மிரட்டினார் கணக்கர்.

இந்த இக்கட்டில் இருந்து காக்கும்படி தர்ப்பாரண்யேஸ்வரரை வேண்டிக் கொண்டார் பால்காரர். அதற்கு செவி சாய்த்த ஈசன், கர்ப்பக்கிர கத்தில் இருந்தவாறே... கணக்கரின் தலையைக் கொய்து வரும்படி தனது சூலாயுதத்தை ஏவினார். அப்போது சூலத்துக்குத் தடை ஏற்படாதவாறு சற்று விலகி வழி விட்டதாம் பலிபீடம்!

- கீதா சுப்பிரமணியன், சென்னை-91.