Published:Updated:

ஆயர்குலப் பெருமைகளைப் பாடி பெருமாளை கோதை ஆராதிப்பதேன்? - திருப்பாவை 21

பெருமாள்
பெருமாள்

அதிகாலையில் தரிசித்து அவன் அருளைப் பெற்று தம் குறைகள் எல்லாம் நீங்கப் பெற வேண்டும் என்று ஆண்டாள் தம் தோழிகளோடு அவனிருக்கும் கோயிலில் வந்து நிற்கிறாள்.

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்

ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

ஆண்டாள்
ஆண்டாள்

திருமலையில் அனுதினமும் சுப்ரபாத சேவை நடைபெறும். அதில் கௌசல்யா சுப்ரஜா என்று தொடங்கும் ஸ்தோத்திரத் திரட்டைப் பாடி வேங்கடவனை எழுப்புவார்கள். ஆனால், இந்த மார்கழி மாதத்தில் மட்டும் அந்த ஸ்தோத்திர மாலை பாடப்படுவதில்லை. மாறாக ஆண்டாள் பாடிய திருப்பாவை முப்பதையும் இந்த மாதத்தில் இசைப்பார்கள். ஆண்டாள் ஆத்மார்த்தமாக அந்தக் கண்ணனை அருந்தமிழால் பாடி எழுப்பியதைப் போற்றும் விதமாகவே இத்தகைய நடைமுறை காலம் காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

போன பாசுரத்தில் நப்பின்னையை வேண்டி அவளின் திருக்கரத்தால் ஆலவட்டமும் கண்ணாடியும் பெற்று மங்கலச்சின்னங்களைச் சுமந்துகொண்டு கண்ணனுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார்கள். கண்ணனின் கல்யாண குணங்களைப் பாடி அவனைத் துயில் எழுப்புகிறார்கள்.

பெருமாள்
பெருமாள்
ஆண்டாள் வருவாள் என்று அறிந்தும் தோழிகள் உறங்கும் காரணம் என்ன? -கோதையின் திருப்பாவை- 12!

உலகம் தோன்றிய காலம் முதலே நாராயணன் தன் பக்தர்களுக்கு அருள்செய்துவருகிறார். அதுவும் வேண்டுபவர்களுக்கு அவர்கள் வேண்டுவதற்கும் மேலாக அருள்கிறார். அவரின் அருளைப் பெற்ற பின் இல்லாமை இல்லாமல் போகிறது. பொருளும் அருளும் பொங்கி வழியும் வாழ்க்கை வாய்க்கிறது. இப்படி எப்போதும் அருளை வாரி வழங்கும் வள்ளலாக நாராயணன் திகழ்கிறார். அதனால்தான் இந்த மார்கழியில் அவனை அதிகாலையில் தரிசித்து அவன் அருளைப் பெற்று தம் குறைகள் எல்லாம் நீங்கப் பெற வேண்டும் என்று ஆண்டாள் தம் தோழிகளோடு அவனிருக்கும் கோயிலில் வந்து நிற்கிறாள்.

மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் கோவிந்தன், கோபாலன் என்கிற நாமங்கள் அவருக்கு மிகவும் பிரியமாய் இருக்கிறது என்கின்றனர் அடியவர்கள். அவதாரங்களில் கண்ணனின் அவதாரம் அனைவர் மனதையும் கொள்ளைகொள்கிறது. கண்ணன் கோகுலத்தில் பசுக்களைக் காப்பவராகவும் பசுக்களை மேய்க்கும் ஆயர்குலத்தைக் காப்பவராகவும் விளங்கினார். அதனால் அவரைப் பாடும்போது ஆயர்குலப் பெருமையையும் சொல்லிப் பாடினால் அவர் பெருமகிழ்ச்சி கொள்வார் என்பதை கோதை அறிவாள். அதனால் ஆயர்பாடி பசுக்களின் பெருமையோடு இந்தப் பாசுரத்தைத் தொடங்குகிறாள்.

பெருமாள்
பெருமாள்

``ஆயர்பாடியில் உள்ள பசுக்கள் வள்ளல்கள் போன்றவை. எத்தனை கலங்கள் எடுத்துக்கொண்டுவந்து பால் கறந்தாலும் இல்லை என்று சொல்லாமல் வழங்கும் வள்ளல்கள். அப்படிப்பட்ட பசுக்களை மேய்ப்பவர்களின் தலைவனாக விளங்கும் நந்தகோபனின் மகனே உன் அறிதுயில் நீக்குவாய்" என்றாள் கோதை. அதிகாலையில் பசுக்களை நாடி பால் கறக்கும் ஆயர்களைப் போல நாங்கள் உன் வாசலை நாடிவந்து நிற்கின்றோம். எப்படிப் பசுக்கள் தங்களின் வள்ளல் தன்மையால் சிறந்து விளங்குகின்றனவோ அதேபோன்று நீ எங்களுக்கு வரங்களை வாரி வழங்கி எம்மை நிறைவாக்குவாய் என்று பொருள்கொள்ளத் தக்க அளவில் பாடிய கோதை கோவிந்தனின் வீரதீர பராக்கிரமங்களையும் பாடுகிறாள்.

``கண்ணா, நீயே இந்த உலகின் முதல்வன். இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய சுடர் நீ. பக்தர்களுக்கு அருள்பாலிப்பதில் ஆர்வம் உடையவரும் பெருமை உடையவரும் நீ. உன் பகைவர்கள் எல்லாம் உன் வலிமையைக் கண்டு அஞ்சி உன் வாசலில் வந்து உன்னைச் சரணடைந்து நிற்கின்றனர். அத்தகைய புகழும் பெருமையும் வலிமையும் உடைய உன்னைப் போற்றிப் புகழ்ந்து பாடுவதற்காக வந்தோம். எங்களுக்காகத் துயில் எழுந்து வந்து காட்சியருள்வாய்" என்று கோதை கண்ணனின் அருட்தரிசனம் வேண்டிப் பாடி வேண்டுகிறாள்.

ஆண்டாள்
ஆண்டாள்
பகைவர்களுக்கு நெருப்பாக விளங்கும் விமலனைத் துயில் எழுப்பும் ஆண்டாள்... திருப்பாவை - 20

யோக நித்திரையில் இருந்துகொண்டே இந்த உலகைப் பரிபாலனம் செய்யும் அந்த நாராயணனை இந்தக் காலைவேளையில் நாமும் திருப்பாவையைப் பாடிப் புகழ்ந்து வரங்கள் பல பெறுவோம்.

அடுத்த கட்டுரைக்கு