தொடர்கள்
Published:Updated:

ஆடல் வல்லவா அல்லல் தீர்க்கவா!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

ஆடல் வல்லவா அல்லல் தீர்க்க வா!

மார்கழித் திருவாதிரை என்றதும் நம் நினைவில் எழுந்து ஆடுவது ஆடலரசனின் அற்புதக் கோலம் அல்லவா? வரும் ஜனவரி 6-ம் நாள் மார்கழித் திருவாதிரை - ஆருத்ரா தரிசனம். இந்த நன்னாளில் நடராஜப் பெருமானைச் சிந்தையில் ஏற்றி மகிழும் வண்ணம், சில அபூர்வத் தகவல்களை அறிந்து மகிழ்வோம்!

ஆருத்ரா தரிசனம்
ஆருத்ரா தரிசனம்


மண்ணில் நவரத்ன மணிகளின் ஒளி வீச்சாக, நீரில் அலைகளின் எழுச்சியாக, காற்றின் விசையாக, நெருப்பின் தகிப்பாக, விண்ணில் மின்னல் கீற்றாக இறையின் நடனம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆம், பஞ்சபூதங்களும் அந்த ஆண்டவனின் அசைவாலேயே அசைகின்றன. நுண்ணிய அணுவும் அசைவற்று இருப்பதில்லை. இந்தத் தத்துவத்தை உணர்த்தும் இணையற்ற திருவடிவே நடராஜ மூர்த்தம்!

அசைந்தாடி ஐந்தொழில்களையும் புரியும் சிவதாண்டவங்களை ஏழு வகையாகப் பிரித்துப் போற்றுகின்றன ஞானநூல்கள். அவை: ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், கௌரி தாண்டவம், காளிகா தாண்டவம், திரிபுர தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம். இவற்றில் பிரதானமாகப் போற்றப்படுவது தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும் ஆனந்த ஆடல் கோலமே!

`தீர்த்தம் என்பது சிவகங்கையே ஏத்தரும் தலம் எழிற் புலியூரே மூர்த்தி அம்பலக் கூத்தனது உருவே...’ என்று நடராஜ பெருமானின் வடிவை குமரகுருபரர் வியந்து போற்றுகிறார். இதில் புலியூர் என்பது சிதம்பரத்தையும் சிவகங்கை என்பது சிதம்பரம் ஆலய தீர்த்தக்குளத்தையும் அம்பலக் கூத்தன் எனும் பதம் நடராஜரையும் குறிக்கும்.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பார்கள். பிண்டமாகிய நம் தேகத்தில் இதயத்தின் அசைவு நின்றால் உடல் இயக்கம் நிகழாது. அப்படியே நடராஜரின் திருக்கூத்து நிகழவில்லை எனில் உலக இயக்கம் நிகழாது என்பர்.

நடராஜ வடிவத்தின் தத்துவ நுட்பங்களைச் சைவ சித்தாந்த சாத்திரங்கள் விளக்குகின்றன. இறைவன் மந்திர வடிவினன். அவன் திருவுருவம் ‘நமசிவாய’ எனும் தூல பஞ்சாட்சர வடிவமானது. திருவடியில்-ந, வயிற்றில்-ம, தோளில்-சி, முகத்தில்-வ, திருமுடியில்-ய. இந்த வடிவம் ‘லயாங்கம்’ எனப்படுகிறது. இறைவனின் ஆடலில் பஞ்ச கிருத்தியம் எனும் ஐந்தொழில்கள் நடைபெறுகின்றன.

உடுக்கை ஏந்திய திருக்கரம் - சிருஷ்டியைக் குறிக்கும். அபய கரம் ரட்சித்தலைக் குறிக்கும். தழல் ஏந்திய கரம் சம்ஹாரத்தைக் குறிக்கும். ஊன்றிய திருப்பாதம் மறைத்தலைக் குறிக்கும். தூக்கிய திருவடி அருளலைக் குறிக்கும். இங்ஙனம் ஐந்தொழில்களை ஒருசேர ஆற்றுகிறது இறை.

சங்க இலக்கியங்களில் இறைவனது பாண்டரங்கம், கொடு கொட்டி, காபாலம் எனும் ஆடல்கள் குறிக்கப்பட்டுள்ளன. திரிபுரம் எரித்தபோது இறைவன் ஆடியவை கொடுகொட்டியும், பாண்டரங்கமும் ஆகும்.

உமாதேவி ஒரு பக்கமும், இறைவன் ஒரு பக்கமுமாக நின்று அச்சம், வியப்பு, விருப்பு, அழகு முதலியன பொருந்த போர்க்களத் தில் ஆடியது கொடுகொட்டி ஆகும். திரிபுரத்தை எரித்த சிவனார் ஊழிக்காற்று போன்று சுழன்று ஆடியது பாண்டரங்கம். பிரம்ம கபாலத்தை ஏந்தி இறைவன் ஆடியது காபாலம்.

பரத சூடாமணி எனும் நூல் ஐந்தொழில் களைச் சார்ந்து ஐவகை தாண்டவங்களைக் குறிப்பிடுகிறது. அவை: அகோரத் தாண்டவம், ஊர்த்துவத் தாண்டவம், ஆச்சர்யத் தாண்டவம், ஆனந்தத் தாண்ட வம், சௌந்தர்யத் தாண்டவம்.

திருமூலர் இறையனாரின் கூத்துகளை ஐவகையாகச் சொல்கிறார். அவை: சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக் கூத்து. இவை மட்டுமன்றி `திருக் கூத்து தரிசனம்’ எனும் தலைப்பில் அதன் தத்துவத்தையும், உருவ அமைப்பையும் அவர் விளக்குகிறார். காரைக்கால் அம்மையார், தேவார மூவர், மணிவாசகர் ஆகியோரின் பாடல்களிலும் மற்ற திருமுறைகளிலும்கூட தில்லைக் கூத்தனின் மகிமைகள் பேசப்படுகின்றன.

திருக்கோயில்களில் நடராஜர் தெற்கு நோக்கி அருள்கிறார். ‘நம்பினவருக்கு நடராஜன்; நம்பாதவருக்கு எமராஜன்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, இறைவனை வழிபடும் அடியவர்க்கு தெற்கே இருந்து வரும் எமராஜனால் யாதொரு துன்பமும் நேராமல், காத்தல் பொருட்டு தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாராம்.

திருவிளையாடல் புராணத்தின் ஆசிரியர் பரஞ்சோதி முனிவர் என்ன சொல்கிறார் தெரியுமா? ‘இறைவனுக்குத் தென்றல் மற்றும் தென் தமிழின் மீது விருப்பம் அதிகம். ஆதலால் தெற்கு நோக்கி ஆடுகிறார்!’ என்கிறார் அவர்!

ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் தொடங்கிவைத்தவர் ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி மகரிஷி. சிதம்பரம் கருவறையின் வலது புறம் சிதம்பர ரகசியம், பொன் கூரையின் கீழ் நடராஜப்பெருமான், ஸ்படிகலிங்கம் என தில்லையில் மூன்று வடிவங்களில் அருள்கிறார் சிவனார். நமசிவாய எனும் ஐந்தெழுத்தைக் குறிக்கும் வகையில் நடராஜரின் கருவறை வாயி லில் ஐந்து படிகள் அமைந்துள்ளன என்பர்.

நடராஜருக்கு உரிய பஞ்ச சபைகளில் முதன்மையான திருவாலங்காடு- ரத்ன சபையில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாக இறைவன் காட்சியளிக்கிறார். இதேபோல் திருநெல்வேலி தாமிர சபையும், திருக்குற்றாலம் சித்ர சபையும் பஞ்ச சபைகளில் சிறப்பு வாய்ந்தவை.

மதுரையின் ரஜத சபையில் கால் மாறி அதாவது இடக் காலை முயலகன் முதுகில் ஊன்றி, வலக் காலை உயர்த்தி ஆடுகிறார். ராஜசேகர பாண்டிய னின் வேண்டுதலுக் காக இவ்வாறு கால் மாற்றி ஆடினார் என்கிறது தல புராணம். இந்தத் தாண்டவம் அதிர வீசி ஆடுதல் எனப் படுகிறது.

திருவாரூர் அருகி லுள்ள கீழ்வேளூர், திருப்பத்தூர்-வன்னியன் சுரக்குடி, சென்னை- குமரன் குன்றம் (குரோம்பேட்டை) கோயில் களிலும் கால் மாறி ஆடும் கோலத் தில் நடராஜரைத் தரிசிக்கலாம்.

சிவபெருமானின் 108 கரணங்கள் கொண்ட சிற்பங்களை தில்லை, தஞ்சை, குடந்தை சார்ங்கபாணி கோயில் களிலும், விருத் தாசலம், திருவண்ணாமலை கோயில்களிலும் காணலாம்.

சிதம்பரம் கோயிலில் உள்ள ரத்தின சபாபதி எனும் மாணிக்க நடராஜ மூர்த்தமும், திரு உத்தரகோசமங்கை தலத்திலுள்ள மரகத நடராஜ மூர்த்தமும் தனிச் சிறப்பு வாய்ந்தவை.

‘சப்த விடங்கத் தலங்கள்’ என ஏழு தலங்கள் போற்றப்படுகின்றன. திருவாரூர்- அஜபா நடனம், திருக்கோளிலி- பிரமர தாண்டவம், திருநள்ளாறு- உன்மத்த நடனம், நாகப்பட்டினம்- பாரவார தரங்க நடனம், திருமறைக்காடு- ஹம்ச நடனம், திருவாய்மூர்- கமல நடனம், திருக்காறாயில்- குக்குட நடனம் ஆகிய நடனக் கோலங்கள் சிறப்புடையன.

நடராஜ மூர்த்தம்
நடராஜ மூர்த்தம்

`தலையாரக் கும்பிட்டு கூத்தும் ஆடி...’ என்று திருநாவுக்கரசு பெருமான் பாடுவதைப் போல, இறைவனை வணங்கும் வழிகளில் ஒன்றாகக் கூத்து கருதப்படுகிறது. திருக் கோயில்களில் நடன மாதர்கள் பணியாற்றி யமை கல்வெட்டுகளால் புலப்படும்.

சுந்தரமூர்த்தி நாயனார் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றிருந்தபோது, அவருக்கு தில்லையம்பலத்தானின் ஆனந்த தாண்டவத்தை தரிசிக்கும் ஆசை ஏற்பட் டது. அவருடைய விருப்பத்தை நிறை வேற்ற, பட்டீஸ்வர நடராஜர் ஆனந்த தாண்டவத்தில் தரிசனம் தந்தார். இதன் காரணமாக இங்கிருக்கும் நடராஜருக்கு `குடகத் தில்லை அம்பலவாணன்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திண்டி வனம்-மரக்காணம் சாலையில், சுமார் 19 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆலங்குப்பம். இங்கிருந்து தெற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந் துள்ள திருத்தலம் முன்னூர். ‘முன்னூற்று மங்கலம்’ என்று புராணங்களும் சரித்திரமும் போற்றும் இந்தத் தலத்தில், மூலவரே ஆட வல்லீஸ்வரர் எனும் பெயரில் அருள்கிறார். அம்பாளின் திருநாமம் பிரஹன்நாயகி. பிரகஸ்பதி சிவனருள் பெற்ற தலம் இது. குலோத்துங்க மன்னனுக்கு நடனக் கோலத் தில் காட்சி தந்த தலம் என்றும் கூறுவர்.

உத்திரகோசமங்கையில், மரகத நடராஜரை ஆருத்ரா அன்று மட்டுமே பூரணமாக தரிசிக்க முடியும். மற்ற நாள்களில் சந்தனக் காப்புடன் காட்சி தருகிறார். இறைவன், உமையவள் மட்டும் கண்டு மகிழும்படி ஆடியது இத்தலதில்தான். `உத்திரம்’ என்ற சொல்லுக்கு `உபதேசம்’ என்ற பொருளும் உண்டு. `கோசம்’ என்றால் `ரகசியம்’. அம்பாளுக்கு பிரணவத்தை ரகசியமாக உபதேசித்த இடம் என்பதால், உத்திரகோச மங்கை எனப் பெயர் பெற்றது இத்தலம்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊர் பாடாலூர். இங்கிருந்து புள்ளம்பாடி எனும் ஊருக்குச் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஊட்டத்தூர். இத்தலத்தின் பஞ்சநதன நடராஜருக்குச் சம்மேளன அர்ச்சனை என்று சொல்லப்படும் அர்ச்சனையைத் தொடர்ந்து செய்துவந்தால், நீண்டநாள் திருமணம் ஆகாதவர்களுக்கு, விரைவில் திருமணப் பிராப்தம் கிடைக்கும். சம்மேளன அர்ச்சனை என்பது சுவாமி, அம்பாள் இருவருக்கும் சேர்த்து செய்யப்படுவது.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது ராஜவல்லிபுரம். இங்கே தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ளது செப்பறை அழகிய கூத்தர் கோயில். நெல்லையப்பர்- காந்திமதியம்மை மற்றும் நடராஜர் அருளும் இத்தலத்தை தென் சிதம்பரம் எனப் போற்றுகிறார்கள். தோஷம் மற்றும் நோய்களால் அவதியுறும் குழந்தை களை அழைத்துக் கொண்டு, தவிடு மற்றும் கருப்பட்டியை இறைவனிடம் வைத்துவிட்டு, ‘இனி இது உன் குழந்தை’ என்று சொல்லி பிரார்த்தித்து, குழந்தையை அழைத்துச் செல்கின்றனர். இதனால், குழந்தைகள் பூரண குணம் அடைகின்றனர் என்பது நம்பிக்கை!

சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் ரயில் பாதையில், பட்டாபி ராம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது சித்துக்காடு. ஜடைமுடி பிராண தீபிகா சித்தர், கருடக் கொடி சித்தர், படுக்கைச் சித்தர் ஆகியோர் தவம் செய்து அருள்வதால் இந்த ஊருக்கு ‘சித்தர்காடு’ என்று பெயர்.

இதுவே சித்துக்காடு என மருவியது என்கிறார்கள். மணம் பொருந்திய புஷ்பக் காடுகள் நிறைந்த இடம் என்பதால் இந்தப் பெயர் வந்தது என்றும் கூறுவர். இங்கே திருவாதிரையையொட்டி நடைபெறும் நடராஜர் திருக்கல்யாணம் விசேஷம். இந்த வைபவத்தைத் தரிசித்தால் கல்யாண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருவெண்காடு தலத்தில் எழுந்தருளி யிருக்கும் நடராஜர், ஈரேழு பதினான்கு புவனங் களைக் குறிக்கும் வகையில் 14 சதங்கைகள் கொண்ட காப்பு, பிரணவம் முதல் நம: வரையுள்ள 81 பத மந்திரங்களைக் குறிக்கும் 81 வளையங்கள் கோக்கப்பட்ட அரைஞாண், 28 ஆகமங்களைக் குறிக்கும் 28 எலும்புத் துண்டுகள் கோத்த ஆரம், பதினாறு கலைகளைக் குறிக்கும் வகையில் 16 சடைகளுடன் காட்சி தருகிறார்.

கும்பகோணம் அருகே நல்லம் என்ற திருத் தலத்தில் அருளும் நடராஜரை உற்று நோக்கி னால், அவரது கையில் உள்ள ரேகைகளும், காலில் உள்ள நரம்புகளும் தென்படுமாம். இங்கு நடராஜரை தொலைவிலிருந்து பார்த் தால் முதியவரைப் போலவும், அருகில் சென்று பார்த்தால் இளைஞரைப் போலவும் தோன்றும் என்பார்கள் பக்தர்கள்!

பொதுவாக சிவன் கோயில்களில் நடராஜருடன் பதஞ்சலி, வியாக்ரபாதர், காரைக்கால் அம்மையார் ஆகியோர்தான் இருப்பார்கள். ஆனால் மயிலாடு துறை மயூரநாதர் கோயிலில் நடராஜருடன் ஜுரஹர தேவரும் இருக்கிறார். இந்தத் தலத்தில் அம்பிகைக்காக ஈசன் மயில் வடிவம் எடுத்து நடனம் ஆடியதால், இங்குள்ள நடராஜரை `மயூர தாண்டவர்’ என்கிறார்கள்.

தொகுப்பு: நமசிவாயம்