Published:Updated:

திருவெம்பாவை - 10: எங்கெல்லாம் ஈசன் நிலைத்து இருக்கிறார்? திருவாசகம் காட்டும் சில எளிய வழிகள்!

திருவாசகம்
News
திருவாசகம்

சிவாலயங்களில் சுத்தம் செய்தல், பூசைக்குத் தேவையான பணிகள் செய்தல், விழாக்களில் தொண்டு செய்தல் போன்றவை சரியை எனப்படும் உடலால் தொண்டு செய்யும் முறையாகும்.

"பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்!"

சிவபெருமான்
சிவபெருமான்

தீதில்லா குலத்தில் பிறந்து, ஈசன் திருக்கோயில் பணியையே சிரமேற்கொண்ட பெண்களே! சற்றே யோசித்துப் பாருங்கள்! எண்ணுவதற்க்குரிய நம் ஈசனின் திருப்பாதங்கள் ஏழு பாதாள லோகங்களையும் கடந்து எல்லாவற்றுக்கும் ஆரம்பமாக நிற்கின்றன. கொன்றை, ஆத்தி, தும்பை, எருக்கு, ஊமத்தை போன்ற மலர்களை அணியும் ஈசனின் திருமுடி விரிந்து பரந்து வான்வெளியின் எல்லைகளைக் கடந்து எல்லாவற்றுக்கும் முடிவாக உள்ளது. சக்தி எனும் பெண்மையை தன்னுள் வைத்துக் கொண்டதால் அவன் ஒருவனல்ல. விண்ணோரும், மண்ணோரும், வேதங்களும் ஒன்றிணைந்து துதித்தாலும் அவன் புகழைப் பாட முடியாது. அன்பும் பண்பும் கொண்ட யோகிகளும் ஞானிகளும் அவன் நண்பன். ஏராளமான அடியார்களை, பக்தர்களை உறவாகக் கொண்டவன் ஈசன். அகிலமெங்கும் நீக்கமற நிறைந்து இருப்பதால் எது அவன் ஊர்! எல்லாமுமாக இருக்கும் அவனுக்கு பெயர் தான் என்ன! சகல ஆன்மாக்களும் அவனில் இருந்தே தோன்றியதால் யார் அவனது உறவு! யார் அவனுக்கு உற்றார்! எந்த வார்த்தைகளால் எந்த பொருளால் அவனைப் பாடி உருவகம் செய்ய முடியும்! சொல்ல முடியாத உணர்வுகளால், சொல்லால் நிறைந்திருக்கும் அவனைப் பாட எழுந்து வா என் தோழி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சகலருக்கும் பிடித்ததை நமக்குக் கொடுத்துவிட்டு யாருக்கும் பிடிக்காததை தான் ஏற்றுக்கொண்ட தியாகமூர்த்தி சிவபெருமான். எருக்கு, ஊமத்தை அவன் சூடிக் கொள்வான். மல்லிகையும் முல்லையும் நமக்கு. ஜாவ்வாதும் சந்தனமும் நமக்கு. சுடுகாட்டுச் சாம்பலும் கொக்கிறகும் அவனுக்கு. பட்டும் பீதாம்பரமும் நமக்கு. யானைத் தோலும் புலித் தோலும் அவனுக்கு. பொன்னும் மணியும் நமக்கு. பொங்கரவமும் எலும்பு மாலைகளும் அவனுக்கு. அமிர்தமும் அறுசுவையும் நமக்கு. ஆலகாலம் அவனுக்கு.

தியாகராஜன்
தியாகராஜன்

தெய்வங்களிலேயே சிவபெருமான் மட்டுமே தியாகராஜன் என்று போற்றப்படுவர். பாற்கடல் கடைந்து வெளிவந்த சகல செல்வங்களையும் எல்லா தேவர்களும் போட்டி போட்டு பங்கிட்டுக் கொண்டனர். இறுதியாக வலி தாங்க முடியாமல் வாசுகி பாம்பு கக்கிய மகா ஆலகால விஷத்தைக் கண்டதும் எல்லோரும் ஓடி விட்டனர். அதன் அருகில் சென்றாலே எரிந்து விடும் ஆற்றல் கொண்ட விஷம் அது. அது பரவினால் சகல லோகங்களும் அழிந்துவிடும் சூழல். விண்ணோர் எல்லோரும் ஈசனைப் பணிய, கருணைக் கடலாம் நம் ஈசன், சகலரையும் காக்க தாம் அந்த விஷத்தை எடுத்துக் கொண்டார். நீலகண்டராக மாறினார். அதனாலேயே தியாகராஜப் பெருமானாகவும் நின்றார். இதுவே சிவத்தின் தன்மை. எவ்வுயிர்க்கும் இரங்கும் தன்மையே சிவம். எங்கெல்லாம் அன்பு நிறைந்து வழிகிறதோ, அங்கெல்லாம் சிவம் நிறைந்து இருக்கிறது என்று பொருள். எங்கெல்லாம் கருணை ஆட்சி செய்கிறதோ அங்கு கருணாமூர்த்தி ஈசன் நிலைத்து இருக்கிறார் என்று அர்த்தம். சிவம் என்பது பொருள் அல்ல, காண்பதற்கு. அது பண்பு, குணம்! அதை உணரத்தான் முடியும். சிவத்தை உணர்ந்தவர் அதை எங்கும் எப்போதும் காண்பார். இதுவே சூட்சுமம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படிச் சூட்சுமமான ஈசனை தன் அன்பால் உணர்ந்து கொண்டு தவ வலிமையால் அடைந்தவர் வாயிலார் நாயனார். மயிலையில் வேளாளர் குடியில் பிறந்த இந்த நாயன்மார், அன்பே சிவம் என்பதை அறிந்து இளமையிலேயே தவ வாழ்வை மேற்கொண்டார். எந்த சொல்லிலும் சிறை வைக்க முடியாத சிவத்தைப் பற்றிக் கொள்ள தவமே சிறந்தது என்று தெளிந்து சிவத்தை சிந்தையில் வைத்து தம் வாழ்வை தவத்தில் செலுத்தினார். தன்மை வாயிலார் என்னும் தபோதனர், சிந்தையில் சிவத்தை வைத்து எப்போதும் பேசாமலே அன்பு செய்து இறைபதம் எய்தினார் என்பதே இவரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு.

சிவசிந்தனை
சிவசிந்தனை

சிவாலயங்களில் சுத்தம் செய்தல், பூசைக்குத் தேவையான பணிகள் செய்தல், விழாக்களில் தொண்டு செய்தல் போன்றவை சரியை எனப்படும் உடலால் தொண்டு செய்யும் முறையாகும். மனதால் எப்போதும் சிவபூசை செய்தல், ஐந்தெழுத்து ஓதுதல், ஐந்து இந்திரியங்கள், அந்தக்கரணம் ஆகியவற்றால் எப்போதும் சிவத்தியானத்தில் ஆழ்ந்திருத்தல் போன்றவை கிரியை எனப்படும். சரியை தொண்டுக்கு திருநாவுக்கரசர் உதாரணம் என்றால், கிரியை தொண்டுக்கு உதாரணமாக விளங்கியவர் வாயிலார் நாயனார். அகப்பூசையின் வழியே ஆனந்தம் கண்ட வாயிலார் தாம் விரும்பியவாறே ஈசனின் திருவடி நிழலை விரைவிலேயே பெற்றார் என்பது சிறப்பு.

பூக்கைக் கொண்டரசன் பொன்னடி போற்றிலர்
நாக்கைக் கொண்டரசன் நாமம் நவிற்றிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே!

திருவெம்பாவை
திருவெம்பாவை

புறத்தால் ஈசனைத் துதிப்பதைப் போலவே உள்ளேயும் சிவசிந்தனையால் மலர்ந்து இறைவனைத் தேடுவதும் முக்கியமானது. எண்ணுவதற்கு அரியவனான நம் ஈசனை இந்த மார்கழி விடியலில் சொல்லி சொல்லிப் பாடுவோம் வா தோழி!

"புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே மாசிலா மணியே உனைப் போற்றுவோம்!"