Published:Updated:

திருவெம்பாவை - 12: இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்யவல்லார்? ஈசனில் கலந்து போகும் வழி எளிதே!

ஈசன் திருமூலநாதர்
News
ஈசன் திருமூலநாதர்

கொன்றதும் சிவம், கொல்லப்படுவதும் சிவம். தன் முடிவு இதுதான், இப்படித்தான் இருக்கும் என்பதை உணர்ந்த பக்குவப்பட்ட ஆன்மா மெய்ப்பொருள் நாயன்மாரானது.

"ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்!"

ஆலமர்ச் செல்வன்
ஆலமர்ச் செல்வன்

தொடர்ந்து வரும் பிறவி எனும் இந்த பெருந்துன்பம் இனியும் வாராது இருக்க வேண்டுமா! அதற்கு எளிய வழி ஈசனின் திருக்கழல்களைப் பற்றிக் கொள்வதுதான். கங்கையைத் தலையில் தாங்கிய கங்காதரனை, தில்லையில் அழலைத் தாங்கி ஆடும் கூத்தனை, வானையும் மண்ணையும் சகல உலகங்களையும் படைத்து காத்து அழித்து விளையாடி வரும் நம் ஈசனை மறவாது எந்நாளும் வணங்குவோம். கரங்களிலுள்ள வளையல்கள் குலுங்கி எழும்ப, இடையில் உள்ள அணிகள் ஒலி எழும்ப, பூக்கள் நிரம்பியுள்ள பொய்கையில் நீந்திக் குடைந்து நீராடி, சிவனின் திருநாமங்களை ஓங்கி உரைத்து இன்பம் கொண்டு அவனது பொற்பாதங்களை சரண் அடைவோம் விரைந்து வா தோழி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சகலமும் அவனால் தான் பிறக்கிறது; அவனால் தான் வாழ்கிறது; அவனால் தான் மறைகிறது என்பதை அறிந்தும், மாயையால் அறிவிழந்த சிலர் மட்டும் 'தானே எல்லாம்!' என்று ஆணவம் கொண்டு திரிந்து வருகிறார்கள். அகம்பாவம் எனும் பெரும் பாவத்தை விடுத்து அவர்கள் ஈசனை சரண் அடைந்தால் மட்டுமே பிறவி எனும் இந்த பெரும் துன்பத்தில் இருந்து விடுபட முடியும். இதையே சைவ சித்தாந்த நூல்கள் ஐயந்திரிபரக் கூறுகின்றன. சின்முத்திரை வழியே தென்முகக் கடவுளாம் நம் ஐயன் உணர்த்துவதும் அதையே. ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்று தீமைகளை விலக்கினால் ஆன்மா எனும் பசு, பதி எனும் இறைவனை அடைய முடியும் என்பதே சின்முத்திரையின் விளக்கம். அதையே காட்டி சகல ஆன்மாக்களுக்கும் பாடம் சொல்கிறார் ஆலமர்ச் செல்வன்.

ஈசன்
ஈசன்

'பதிபசு பாசம் எனப்பகர் மூன்றின், பதியினைப் போற்பசு, பாசம் அநாதி' என்கிறது சைவ சித்தாந்தம். பசு முயன்றால் பதியை அடைந்து கலக்க முடியும். அதற்கு பாசம் எனும் மாயை தடையாக அமைகிறது. எனவே பதியை அடைய வேண்டுமானால் ஈசனின் பாத கமலங்களைப் பற்றிக் கொண்டு நீயே கதி என்று சரண் அடைந்து விடவேண்டும். தன் முயற்சி என்று எதையும் கொள்ளாமல் ஈசனே சகலமும் என்று இருந்துவிட வேண்டும். அப்படி இருந்தவரை சைவ உலகம் மெய்ப்பொருள் நாயனார் என்றே இன்றும் கொண்டாடி வருகிறது. சேதி நாட்டு அரசராய் திருக்கோவிலூரை தலைநகரமாகக் கொண்டு ஆண்டவர் மெய்ப்பொருள் நாயனார். இவரது புகழும் தொண்டும் அண்டை நாட்டு அரசன் முத்தநாதனை அழுக்காறு கொள்ள வைக்க, அந்த கொடும் பாதகம் நடந்தது. ஒருநாள் ஈசனைக் குறித்த நல்ல நூலை ஒன்று இருப்பதாகவும், அது குறித்து விளக்க வேண்டும் என்று அந்த கயவன் தனித்து அழைத்தான். 'கனிகளைச் சுவைக்க கசக்குமா,' என்று கனிந்த மெய்ப்பொருளார் அவனுடன் தனித்துச் சென்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது மறைத்து வைத்திருந்த குத்து வாளால் கொடியவன் குத்த, மெய்ப்பொருள் நாயனாரின் மெய்க்காவல் வீரன் அந்த கொடியவனைத் தாக்க வந்தான். உயிர் போகும் நிலையிலும் 'தத்தா நமரே காண்!' (தத்தா அவர் நம்மைச் சார்ந்தவர்) என்று குரல் கொடுத்து, அவரை பாதுகாப்பாக அவரது நாட்டுக்கும் செல்ல வழி உண்டாக்கிக் கொடுத்தவர் மெய்ப்பொருள் நாயனார். இது என்ன கதை, இதில் என்ன உள்பொருள் உள்ளது என்று கேட்கலாம்.

சிவம்
சிவம்

இதுதான் இறைவனை உணர்ந்த நிலை. கொன்றதும் சிவம், கொல்லப்படுவதும் சிவம். தன் முடிவு இதுதான், இப்படித்தான் இருக்கும் என்பதை உணர்ந்த பக்குவப்பட்ட ஆன்மா மெய்ப்பொருள் நாயன்மாரானது. பதியை அடைய அது பக்குவம் கொண்டது. அதன் முதல் படியாக எல்லோர் மீதும் அன்பு கொண்டது. தன்னைக் கொன்றவனைக் கூட அது அன்பு கொண்டு பாதுகாத்தது. அந்த கொடியவன் பாதுகாப்பாக தன் நாடு சேர்ந்தான் என்பதைக் கேள்வியுற்றதும் 'இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்யவல்லார்!' என்று கண்ணீர் விட்டார். தான் உயிர் விடப்போகும் நாளே சிறந்த நாள், ஈசனை அடையப் போகும் நாள் என்று ஆவலோடு மரணத்தை எதிர்நோக்கினார். இதுதான் மிக மிக சிறப்பான தருணம். ஒருவனது பிறப்போ, வாழ்வோ எப்படியும் இருக்கலாம். ஆனால் ஒருவரின் மரணம் மிக அமைதியாக எந்த சலனமும் இன்றி நடைபெற வேண்டும். காம்பை விட்டு பூ பிரிவதைப்போல நடைபெற வேண்டும். அப்படி பிரிந்தவர் மெய்ப்பொருளார். அதனாலேயே அவர் சிவபதம் அடைந்தார். சாகும் தருவாயிலும் 'திருநீற்று நெறியைக் காப்பீர்!' என்று உறுதி பெற்றுக் கொண்டு மறைந்தார். அதனால்தான் இன்றும் சைவ உலகில் வாழ்கிறார். மனது கவலையுற்று இருக்க ஆன்மா பிரிந்தால் நிச்சயம் பிறவி தொடரும் என்கிறது சைவம்.

அப்படி பிறவாது இருக்க ஈசனைப் பற்றிக் கொள்ள வேண்டும். ஈசன் பக்குவப்படுத்துவான். அவன் நம்மை வாழ்விப்பான், தன்னுள் இனிமையாகச் சேர்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையும் வேண்டும். அந்த நம்பிக்கை கொண்ட என் இனிய தோழியே எழுந்து வா! ஈசனைப் புகழ்ந்து பாட இந்த ஒரு பிறவியே போதாது என்ற நிலையில், நீ உறக்கம் கொண்டு இன்னும் காலம் கடத்த வேண்டுமா! உடனே எழுந்து வெளியே வா தோழி!

என் எம்மானே
என் எம்மானே

"ஈசனே என் எம்மானே எந்தை பெருமான் என்பிறவி
நாசனே நான் யாதுமொன் றல்லாப் பொல்லா நாயான
நீச னேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
தேசனே அம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே!"