Published:Updated:

திருவெம்பாவை - 13: ஐந்தெழுத்து எனும் வேத சாரத்தின் பொருள் என்ன? அதைச் சொல்வதால் பயன் என்ன?

திருவெம்பாவை
News
திருவெம்பாவை

ஐந்தெழுத்தை ஜீவன் உருக ஜபித்து சிவத்தோடு கலந்தவர் அநேகர். அதில் தலை சிறந்த நாயன்மார் என்றால் அது சோமாசிமாற நாயனார் எனலாம்.

"பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து

நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்!"

நமசிவாய மந்திரம்
நமசிவாய மந்திரம்

கருமை நிற குவளை மலர்கள் இந்த குளத்தின் மத்தியில் மலர்ந்து கிடக்கின்றன. அதன் அருகில் சிவந்த நிற தாமரை மலர்கள் விரவிக் கிடக்கின்றன. இவை அம்பிகையும் ஈசனும் கலந்து நிற்பதுபோல காணப்படுகின்றது. அம்பிகை கரிய நிறமுடையவள், ஈசன் சிவந்த நிறம் கொண்ட திருமேனியன். இரண்டையும் கொண்டது இந்த தடாகம் என்றே நமக்குத் தோன்றுகிறது. மேலும் நீர் காக்கைகள் இங்கு மிதக்கின்றன. உடலும் மனமும் கொண்ட அசுத்தங்களை களைந்து கொள்ள மக்கள் வருகிறார்கள். அவர்களால் தடாகம் எங்கும் 'ஐந்தெழுத்து' மந்திரம் எழும்புகிறது. இதனாலும் இந்தக் குளம் ஈசனையும், அம்பிகையும் போல தோற்றமளிக்கிறது. மலர்கள் நிறைந்த இந்த தெய்வீகத் தடாகத்தில், சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென குரலெழுப்ப, ஆனந்தத்தில் மார்புகள் விம்ம, தடாகத்தின் மத்திக்குச் சென்று மகிழ்வோடு நீராடுவோம் வா என் அழகிய தோழியே!

புற அழுக்கை சுத்தம் செய்வது தடாகம் என்றால், அக அழுக்கை நீக்குவது நமசிவாய எனும் ஐந்தெழுத்தே என்கிறது இந்தப் பாடல்.

'சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே!'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எத்தனை பெரிய துன்பம் வந்தபோதிலும் அதினின்று நம்மைக் காப்பது நமசிவாய மந்திரமே. கோவிலுக்கு மதில் சுவரைப்போல நம் ஆன்மாவுக்கு அரணாக நிற்பது நமசிவாய மந்திரமே.நான்கு மறைகளின் ரத்தினச் சுருக்கமே நமசிவாய மந்திரம். 'எல்லாவித மந்திரங்களும் தோன்றியதும் விளக்குவதும் ஐந்தெழுத்தாலே!' என்பது திருமுறைகள் சொல்லும் பாடம். எல்லா விளக்கும் விளக்கல்ல, அக இருளை விரட்டும் நமசிவாய மந்திரமே திருவிளக்கு என்கிறது 'நல்லக விளக்கது நமச்சி வாயவே' எனும் திருமுறை வரி. இப்படி நாளும் நமக்கு நல்லது செய்யும் நமசிவாய மந்திரத்தை மார்கழி நன்னாளில் அதிகாலையில் ஜபிப்பது நலம் தரும்.

நமசிவாய
நமசிவாய

ஐந்தெழுத்தை ஜீவன் உருக ஜபித்து சிவத்தோடு கலந்தவர் அநேகர். அதில் தலை சிறந்த நாயன்மார் என்றால் அது சோமாசிமாற நாயனார் எனலாம். சோழநாட்டில் திருவம்பர் எனும் தலத்தில் மறையவர் குலத்தில் தோன்றினார். பிறந்தது முதலே சிவபக்தியில் திளைத்து, காணும் சகல ஜீவன்களும் சிவாம்சம் என்று கருதி வழிபட்ட பெரும் புண்ணியவான் இவர். அடியார்களுக்கு அன்னம் பாலித்து, அவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்கும் இயல்பு கொண்டவர் இவர். ஈசனையே தமது தலைவன் என்று வரித்துக்கொண்டு நாள்தோறும் பூசைகள், யாகங்கள் என பலவிதமான ஆராதனைகள் செய்து ஏழுலகம் விரும்ப தொண்டு புரிந்தவர் இந்த பெருமகனார். ஈசனுக்கு அன்பர் எனில் அவரே நாம் விரும்பும் தோழர் என்று பேதங்கள் அற்ற வாழ்வை இவர் மேற்கொண்டார். நீறணிந்து ஐந்தெழுத்தை ஓதும் அடியார்களே தனது எஜமானர்கள் என்று அவர்கள் நல்லடியை வணங்கிய மெய்யடியார் இவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுந்தரரின் பக்திக்கும் பாடலுக்கும் மயங்கிய இவர், அவரின் நண்பரானார். திருவாரூரில் வாழ்ந்து சகல குற்றங்களையும் நீக்கி, பிறர் வாழ பல தொண்டுகள் செய்து, ஐந்தெழுத்தையே உயிர் கவசம் என்று எப்போதும் ஓதி, சிவனடி சேர்ந்தவர் சோமாசிமாற நாயனார். ஐந்தெழுத்தின் மகிமைகள் சொல்ல முடியாதது என்பதையே இவரது திருக்கதை உணர்த்துகிறது. ஐந்தெழுத்தை ஜபிக்கும் ஆன்மா. சுத்தமடையும். எந்த தீங்கில் இருந்தும் தப்பித்துக் கொள்ளும். ஐந்தெழுத்து எனும் இந்த பஞ்சாட்சரமானது ஸ்தூல பஞ்சாட்சரம் (நமசிவாய) என்றும், சூட்சும பஞ்சாட்சரம் (சிவாயநம) என்றும் இரு வகைப்படும். ஸ்தூல மந்திரம் இவ்வுலகில் நிலை பெற்று வாழவும், சூட்சும மந்திரம் சிவலோகத்தில் நிலை பெற்று வாழவும் உதவும் என்பது சைவர்களின் நம்பிக்கை.

எம்பாவாய்
எம்பாவாய்

எல்லா மந்திரங்களும் ஓம் என்ற பிராணவத்தோடே ஆரம்பிக்கும். அது தேவையில்லாத ஒரே ஒரு மகா மந்திரம் 'சிவாயநம'. யஜுர் வேதத்தின் நான்காவது காண்டத்தில் ஈசனைத் துதிக்கும் ருத்திர மந்திரம் உள்ளது. அதில் 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்து பற்றி விவரமாக உள்ளது. இதன் பெருமை தேவர்களாலும் சொல்ல முடியாதது என்கிறது. எல்லா மந்திரங்களையும் முறைப்படி தீட்சை பெற்று குருவின் அருளால் ஓத வேண்டும் என்பது விதி. ஆனால் எல்லோரும் எப்போதும் எங்கும் ஓதக்கூடிய மந்திரமாக 'ஐந்தெழுத்து' உள்ளது சிறப்பு.

ந எனும் எழுத்து திரோத மலத்தையும், ம எனும் எழுத்து ஆணவ மலத்தையும், சி எனும் எழுத்து சிவமே சகலமுமாய் இருப்பதையும், வா எனும் எழுத்து திருமிகுந்த சக்தியையும், ய என்பது ஆன்மாவையும் குறிப்பிடும் என்பது சைவத்தின் அடிப்படை. அதாவது ஆணவமும் மாயையும் விலகிய ஆன்மாவானது சிவத்தோடு கலந்து சக்தியாகும் என்பது விளக்கம். ஆன்மாவுக்கு துணையாகவும் வழியாகவும் உள்ள இந்த ஐந்தெழுத்து சிவபதத்தை அளிக்கக் கூடியது. அதனால்தான் சிவாயநம என்றிருப்போரை அபாயம் ஒருநாளும் அடைவதில்லை. நமசிவாய என்ற மந்திரமே வேதத்தின் சாரம் என்பதால் தான் திருவாசகம் எனும் மாபெரும் தோத்திர, சாத்திர நூல் 'நமசிவாய' என்றே தொடங்கியது. இதிலிருந்தே இந்த சொல்லின் பெருமையை அறியலாம், உணரலாம்!

சிவாயநம
சிவாயநம

புண்ணியங்கள் பலவும் அருளும் இந்த ஐந்தெழுத்தை நாத்தழுதழுக்க நாளும் ஓதுவோம் எழுந்து வா தோழி!

'நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க!'