Published:Updated:

திருவெம்பாவை - 14: நாள்தோறும் துன்பப்படும் ஆன்மா, ஆறுதல் பெறவும் தெளிவு கொள்ளவும் ஈசனைத் துதிப்போம்!

திருவெம்பாவை
News
திருவெம்பாவை

ஆடுவதும் பாடுவதும் ஆன்மிகத்தில் இயல்பாக இருந்த நிலை மாறி, தற்போது நாகரீகம் என்ற பெயரில் தவிர்த்து விட்டோம். மனம் ஒன்றை இசையும் உடல் லயிக்க ஆடலும் பக்தியில் அவசியம் தேவைப்படுகிறது.

"காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாம் ஆட

சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி

சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி

பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்!"

நடராஜர்
நடராஜர்

செவியில் பூட்டிய குழைகள் ஆட, செம்மேனியில் அணிந்த அணிகலன்கள் ஆட, கோதை அவள் கூந்தலாட, அந்த கூந்தலில் சூடியுள்ள மலர்களின் மது அருந்த வந்த வண்டுகளும் ஆட குளிர்ந்த நீரில் எல்லோரும் நீராடுவோம். நீராடும்போதே தில்லை சிற்றம்பலத்தில் கூத்தாடும் ஈசனின் திருநாமங்களைச் சொல்லிப் பாடுங்கள். வேதத்தின் பொருளாகவும், அப்பொருளின் வடிவாகவும் விளங்குகின்ற நம் ஐயனின் புகழைச் சொல்லி நீராடுங்கள். பிரபஞ்ச ஜோதியாக எழுந்து திருவண்ணாமலையில் அருளும் நம் ஈசனைப் பாடுங்கள் . பெறற்கரிய பேறாய் ஈசனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் அழகைப் பாடுங்கள். ஆதியாய், அநாதியாய், அகண்டமாய், அபூர்வமாய் விளங்கும் நம் தலைவனின் புகழைப் பாடுங்கள். பாசம் மாயைகளில் இருந்து நம்மை விடுவிக்கும் தாயுமான நம் தந்தையை வியந்து பாடுங்கள். சகலத்தையும் வழங்கும் அவன் திருவடியின் திறம் பாடி நீராடுங்கள். விரைவாக நீராட எழுந்து வா தோழி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆடும் கலையின் நாயகனாக விளங்குபவர் ஈசன். அதனாலேயே ஈசன் நடராஜர் என்றும் ஆடல் கூத்தன் என்றும் போற்றப்படுகிறார். தலம்தோறும் இவர் ஆடிய நாட்டியங்கள் 108. தானே விரும்பி தனித்து ஆகியவை 48. சக்தியோடு இணைந்து ஆடியது 36. விஷ்ணுவோடு ஆடியது 9. முருகனோடு ஆடியது 3. தேவர்கள், முனிவர்கள் விருப்பத்துக்காக ஆடியது 12. ஈசனின் தாண்டவத்தை தரிசிப்பவர்கள் பிறவா பேரின்ப நிலையை அடைவார்கள். பாசம் எனும் மாயையில் இருந்து விடுபடுவார்கள். பிறப்பே வேண்டாம் என்று பாடல்தோறும் அழுது புலம்பிய அப்பர் பெருமான், முரணாக நடராஜ பெருமானை கேசாதிபாதமாய் தரிசித்துவிட்டு 'மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்றார். அதாவது நடராஜரின் தாண்டவ தரிசனத்தைக் கண்டு மயங்கி, இன்னொரு பிறவியும் வேண்டும் என்று கேட்டுவிட்டார். அத்தனை அழகு வாய்ந்த திருக்கோலம் நடராஜ பெருமானுடையது.

தாண்டவ தரிசனம்
தாண்டவ தரிசனம்

ஆடும் நாயகனை நாம் எல்லோரும் கூடி மார்கழி அதிகாலையில் நீராடிப் பணிவோம். வெறுமே குளிக்காமல் சீதப்புனலில் குடைந்து முங்கி ஆரவாரமான ஆடலால் ஈசனைக் கொண்டாடுவோம். ஈசனின் ஏழு தாண்டவங்களால் (காளிகா தாண்டவம் - ச; ஸந்தியா தாண்டவம் - ரி; கௌரி தாண்டவம் - க; சம்ஹார தாண்டவம் - ம; திரிபுர தாண்டவம் - ப; ஊர்த்வ தாண்டவம்- த; ஆனந்த தாண்டவம் - நி) தான் ஏழு ஸ்வரங்களும் தோன்றின. அதனால் ஆடலோடு பாடலும் இணைத்து நம் ஐயனின் புகழ் பாடுவோம். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகைத் தொழிலையும் மறைபொருளாய் உணர்த்தும் தத்துவ வடிவமே ஆடல் கூத்தனின் அருமையான வடிவம்.

சம்பந்தர்
சம்பந்தர்

ஆடுவதும் பாடுவதும் ஆன்மிகத்தில் இயல்பாக இருந்த நிலை மாறி, தற்போது நாகரீகம் என்ற பெயரில் தவிர்த்து விட்டோம். மனம் ஒன்றை இசையும் உடல் லயிக்க ஆடலும் பக்தியில் அவசியம் தேவைப்படுகிறது. 'முத்தணி கொங்கைகள் ஆடஆட, மொய்குழல் வண்டினம் ஆடஆடச், சித்தஞ் சிவனொடும் ஆடஆடச், செங்கயற் கண்பனி ஆடஆடப், பித்தெம் பிரானொடும் ஆடஆடப், பிறவி பிறரொடும் ஆடஆட, அத்தன் கருணையொ டாடஆட...' ஆஹா... பொற்சுண்ணம் இடிக்கும் பெண்கள் எத்தனை விதமாக ஆடினார்கள் என்று திருவாசகம் பாடி உள்ளது. பெண்களே, ஈசனின் அருளை எளிதாகப் பெற ஆடலும் பாடலும் அவசியம் என்பதை உணருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இசையால் ஈசனோடு கலந்து போனவர் நீலகண்ட யாழ்ப்பாணர். பாணர் குலத்தில் தோன்றி, யாழ் இசைப்பதில் விற்பன்னராக விளங்கி பெரும்புகழ் கொண்டவர் நீலகண்ட யாழ்ப்பாணர். ஏழிசை நாயகியாம் மதங்க சூளாமணி எனும் மாதரசியை மணந்து தலம்தோறும் ஈசனைப் புகழ்ந்து பாடி பெரும்பேறு பெற்றவர் இவர். ஆலவாய் அப்பனுக்கு முன்னால் இவர் கீதம் வாசிக்க, ஐயனே இவருக்கு பொற்பலகை இட்டு அமரச் சொன்ன அதிசயமும் நடந்தது. ஆரூரிலும் ஈசன் இவரை தனி வழியே வரவைத்து தம்மைப் பாடும்படி அருள் பாலித்தார். கேட்டவர் உருகும் வகையில் இவர் இசைத்த பாடல்கள் ஈசனுக்கு விருப்பமானது. மேலும் இவர் புகழைக் கூட்ட திருவருள் செய்த ஈசன், இவரை சீர்காழியில் ஆளுடைய பிள்ளை சம்பந்த பெருமானோடு இணைத்து வைத்தார்.

திருவாசகம்
திருவாசகம்

சம்பந்தரின் பாடல்கள், இவருடைய யாழ் இசையால் மேலும் சுவை கூடியது. இவர்களின் இசை சங்கமத்தின் பெருமையால் அடியார் திருக்கூட்டம், ஆட்டமும் பாட்டுமாய் கொண்டாடி மகிழ்ந்தது. இசையால் ஈசனோடு நெருங்கிப் போன நீலகண்ட யாழ்ப்பாணர், ஒரு வைகாசி மூல நன்னாளில் துணைவியார் மதங்க சூளாமணியாருடன் ஈசனோடு இணைந்தார். ஆம், திருநல்லூர்ப் பெருமணத்தில் நடைபெற்ற சம்பந்த பெருமானின் திருமணத்தைக் கண்டு, மகிழ்வுற்று, அங்கு தோன்றிய பெருஞ்சோதியினுள் சம்பந்தர் உள்ளிட்ட அடியார் குழுமத்துடன் புகுந்தார். ஈசனோடு கலந்த நீலகண்டர் ஈடிலாப் பேரின்ப வாழ்வு பெற்று சிவலோகப் பதவி அடைந்தார் என்கிறது பெரிய புராணம்.

இசையும் ஆடலுமாய் நிறைந்திருக்கும் நம் பெருமானை நாளும் துதிப்போம். பிணி, பெருந்துயர், கடன், வம்புகள், வழக்கு, உறவுச் சிக்கல் என நாள்தோறும் துன்பப்படும் ஆன்மா, ஆறுதல் பெறவும் தெளிவு கொள்ளவும் ஈசனைக் கொண்டாடுவோம்!

'ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்

திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ!'