Published:Updated:

திருவெம்பாவை - 18: மாயையில் சிக்காமல், ஈசனோடு எளிதாக ஒன்றச் செய்யும் எளிய வழிகள் இவைதான்!

சிவன்
News
சிவன்

இந்த ஆன்மா பிறப்பெடுத்ததன் நோக்கமே, ஈசனை வழிபடத்தான் என்பது சைவத்தின் கொள்கை. ஒரு ஆன்மா மனிதப் பிறவியை அடைய 84 லட்சம் பிறப்புகளைக் கடந்து வரவேண்டும் என்கிறது ஆன்மிகம்.

"அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்

கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்

தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல

பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி

கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி

பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்!"

சிவபெருமான்
சிவபெருமான்

நள்ளிரவில் ஒளிரும் நட்சத்திரங்கள், சூரியனின் வெளிச்சம் பட்டதுமே ஒளி மங்கிப் போவதைக் காணலாம். அதைப்போல அடிமுடி காண இயலாத நம் ஈசனைப் பணிந்து, அவன் திருவடியைத் தொட்டு வணங்கும்போது விண்ணோர்களின் திருமுடியில் உள்ள ரத்தினங்கள் தம் ஒளியை இழந்து விடுகின்றன. ஆணாகவும் பெண்ணாகவும் அர்த்தநாரீஸ்வரனாகவும் விளங்கும் நம் சிவபெருமானின் திருவடி ஒளி கோடி சூரியர்களின் ஒளியைக் காட்டிலும் உயர்வானது. விண்ணும் மண்ணுமாக நிறைந்திருக்கும் நம் சிவம், அதையும் தாண்டி பிரபஞ்ச வெளியெங்கும் தானாகி நின்றுள்ளது. அதை வார்த்தையால் வர்ணிப்பதோ, கற்பனையில் வடிப்பதோ இயலாதது. அன்பு கொண்டவரின் கண்ணுக்கு இனியவனாக விளங்கும் நம் ஈசனின் திருவடிகளைப் பாட பொங்கி வரும் இந்த பூம்புனலில் நீராடி எழுந்து வா தோழி!

உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் எல்லாமுமாகவும் விளங்கும் ஈசனைப் பாடி வணங்குவது என்பதே அலாதியான இன்பத்தை அள்ளித் தரும் விஷயமாகும். அவன் திருநாமங்களைப் பாடும்போது நாவில் இன்பமும், அவனை தரிசிக்கும் வேளையில் அங்கம் எங்கும் இன்பம் பொங்கி ஆனந்தப் பரவசம் உண்டாவதும் இயல்பானது. ஓர் உரு, ஒரு பேர், ஓர் ஊர் ஒன்றுமில்லாத இறைவனை ஆயிரம் ஆயிரம் திருநாமங்கள் சொல்லி வேண்டுவதும் ஒரு பேரானந்தம் தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சிவபெருமான்
சிவபெருமான்

இந்த ஆன்மா பிறப்பெடுத்ததன் நோக்கமே, ஈசனை வழிபடத்தான் என்பது சைவத்தின் கொள்கை. ஒரு ஆன்மா மனிதப் பிறவியை அடைய 84 லட்சம் பிறப்புகளைக் கடந்து வரவேண்டும் என்கிறது ஆன்மிகம். அப்படி மனிதப் பிறவி கொண்ட ஆன்மா, பரம்பொருளைக் கண்டுகொள்ளும் வண்ணம் வாழவும் வேண்டும் என்கிறது. தானே அறியாதது ஆன்மா, ஆனால் சொல்லிக் கொடுத்தால் அறிந்து கொள்ளக் கூடியது. விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூன்று வகையான ஆன்மாக்கள் நம்மிடையே உண்டு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் கொண்ட ஆன்மா சகலர், ஆணவம், கன்மம் இரண்டும் கொண்டவர் பிரளயாகலர், ஆணவம் மட்டும் கொண்டவர் விஞ்ஞானகலர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆன்மாக்கள் பெறும் உடலையும் அதனால் அது அடையும் பயனையும் விளக்குவதே சைவத்தின் பயன். எத்தனையோ தவங்கள் செய்து பெற்ற இந்த உடலையும் அதன் ஆன்மாவையும் பக்குவப்படுத்த வழிபாடுகள் அவசியமாகிறது. அதனால் இந்த அற்புத வேளையில் அந்த பரம்பொருள் நம்மைத் தேடிவரும் காலையில் அவன் திருவடிகளைப் பற்றி கொள்ள விரைந்து செல்வோம் வா தோழி!

மூன்று வகை மலங்களை நீக்கி, முப்போதும் ஈசனுடனே கலந்து வாழ்ந்தவர் முருக நாயனார். மலர்களில் ஈசனை தரிசித்து, அந்த மலர்களையே ஈசனுக்குத் தொடுத்து மலர்த் திருப்பணி செய்தவர் இந்த நாயன்மார். சோழ நாட்டில் திருப்புகலூரில் வாழ்ந்த இவர், ஈசனைப் பூசிக்க மலர்களை விட அற்புதமான பொருள் வேறு ஒன்று இல்லை என்று உணர்ந்து திருப்பணி செய்தவர்.

சிவனே காண்க
சிவனே காண்க

கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என நால்வகை மலர்களிலும் ஈசனுக்கு விதவிதமான மாலைகள் செய்து அலங்கரித்து அழகு பார்த்தவர் முருகனார். மலரும் ஒவ்வொரு மலரும் சிவலிங்க வடிவமே என்று தொழுத அற்புத ஆன்மா அவர். அதனால்தான் ஒருசேர அப்பர், சம்பந்தர், திருநீலநக்கர், சிறுத்தொண்டர், நீலகண்ட யாழ்ப்பாணர் ஆகியோரை தரிசித்துப் பேறுபெற்றவர் என்று ஆனார். இவர் திருமடத்தில் இந்த ஞானியர்கள் எல்லாம் தங்கி இருக்க, அவர்களுக்கு சேவையும் புரிந்து இறையருள் கொண்டவர். இறுதியில் திருஞான சம்பந்தப் பெருமானுக்கு நடைபெற்ற திருமண விழாவில் திருநல்லூர்ப் பெருமண சிவன் முன்னிலையில் தோன்றிய மகா ஜோதியில் சம்பந்தரோடு கலந்து ஈசனின் திருவடி அடைந்தார். முருகனாரின் திருத்தொண்டைக் கண்ட சம்பந்த பெருமான், திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரரைப் பாடும்போது முருகநாயனாரையும் போற்றிப் பாடுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"தொண்டர் தண்கய மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையும்

கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன்செய் கோலம்

கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்

வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே!"

முருக நாயனார்
முருக நாயனார்

பூசைக்கு ஒரு முருகனார் என்று பேறுபெற்ற இந்த நாயன்மார் சிவத்தை மலர்களில் கண்டு ஆனந்தம் கொண்டார். இப்படி எங்கும் எதிலும் சிவத்தைக் காண்பவர், அவத்தை கொள்ளவே மாட்டார் என்கிறது சைவம். எல்லாம் சிவனென அறிந்து கொண்ட ஆன்மா மாயையில் சிக்காது. அது ஈசனோடு எளிதாக ஒன்றிவிடும். ஆன்மா ஈசனை உணர்ந்து கொள்ள எளிய வழி, மார்கழி அதிகாலை ஆராதனையை. இதை உணர்ந்து கொண்டால் தோழி உன் தூக்கம் கலைந்து விடும். நீயும் ஈசனை தரிசிக்க விரைந்து ஓடி வருவாய்!

"தேவரும் அறியாச் சிவனே காண்க

பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க

கண்ணால் யானும் கண்டேன் காண்க

அருள்நனி சுரக்கும் அமுதே காண்க

கருணையின் பெருமை கண்டேன் காண்க!"