Published:Updated:

திருப்பள்ளியெழுச்சி 2: நான் மரணமற்றவன், மாற்றமில்லா முடிவற்றவன்! ஏன் என்றால் நான் சிவத்தின் அங்கம்!

சிவன்
News
சிவன்

ஆண்டவனை எழுப்பும் இந்த திருப்பள்ளியெழுச்சி பாடலில் மறைபொருளாக ஒரு செய்தி உள்ளது. அது தாமரையைத் தேடி வரும் வண்டினங்கள் போல, சகல ஆன்மாக்களும் ஈசனை நோக்கியே தரிசிக்க ஓடி வருகின்றன, ஓடி வராத ஆன்மாக்கள் தேனைப் பருக முடியாது என்பதுதான்.

"நான் மெய்யான சுயத்தின் பிம்பமாக இங்கு இப்போது வந்து கொண்டிருக்கிறேன். நான் உடலல்ல, நான் அறிவல்ல, நான் ஒரே ஒரு மனிதன் அல்ல, உண்மையில் நான் ஒருமை இல்லை, பன்மை! நான் பேரானந்தம், நான் பெரும் சக்தி, நான் பேரொளி, நான் அகண்ட ஞானம், நான் பேரன்பு, நான் பெருங்கருணை. நான் இந்த உடலில் வாழ்கிறேன், அதனால் அதன் வாயிலாக இந்த உலக வாழ்க்கையைக் காண்கிறேன். மற்றபடி நான் என்றென்றும் நிலைத்திருக்கும் நிலைபேறான பரம்பொருளின் ஒரு துளியே நான். என்னுள் சிவம் அடக்கம். சிவத்துள் நானும் அடக்கம்"

"அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழுவெழ நயனக்

கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்

திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே

அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!"

சிவபெருமான்
சிவபெருமான்

பெருந்துறை எனும் பிறப்பறுக்கும் திருத்தலத்தில் உறையும் எம் சிவபெருமானே! கதிரவனின் தேரோட்டியான அருணன் இந்திரா திசையாகிய கிழக்கே வந்து விட்டான். கோடி சூர்யப் பிரகாசமாக ஒளிரும் நினது கருணை நிறைந்த திருமுகம் போல ஆதவனும் ஒளி பரப்பத் தொடங்கி விட்டான். ஆதவனின் ஒளியால் புற இருள் அகன்று வருகிறது. அக இருளை உன் திருவடி தரிசனம் மட்டமே அளிக்கும் என்பது திண்ணம். பெருமானே! உனது அழகியக் கண்களைப் போன்ற தாமரைகள் தடாகம் எங்கும் மலர்ந்து விட்டன. உமது திருவடிகளை நோக்கி திரண்டு வரும் ஜீவன்களைப் போல வண்டினங்கள் தாமரைகளில் தேன்குடிக்கத் திரளாக வந்து கொண்டிருக்கின்றன. அருளெனும் செல்வத்தை அளவில்லாது வாரி வழங்கும் எங்கள் அருள் வள்ளலே! ஆனந்தத்தை மலை போல் அள்ளித் தந்து இன்பம் அளிக்கும் பெருந்துறை பெருமானே! நாங்கள் எல்லோரும் வாழ நீ கண் விழிப்பாயே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆண்டவனை எழுப்பும் இந்த திருப்பள்ளியெழுச்சி பாடலில் மறைபொருளாக ஒரு செய்தி உள்ளது. அது தாமரையைத் தேடி வரும் வண்டினங்கள் போல, சகல ஆன்மாக்களும் ஈசனை நோக்கியே தரிசிக்க ஓடி வருகின்றன, ஓடி வராத ஆன்மாக்கள் தேனைப் பருக முடியாது என்பதுதான். தாமரைக்கு அருகிலேயே வாழும் தவளைகள், மீன்கள், நத்தை போன்ற பூச்சிகள் எவையும் தாமரை பற்றியோ, அதில் உள்ள தேனைப் பற்றியும் அறிந்து கொள்ளவில்லை. அதனால் அவற்றுக்கு தேனின் ருசி தெரியாது. தாமரையின் மகத்துவமும் தெரியாது. ஆனால் எங்கிருந்தோ பறந்துவரும் வண்டுக்கு தேனும் கிடைக்கிறது, வாழ்க்கையும் ருசிக்கிறது.

இது ஏன் என்றால், ஒரு ஆன்மா ஈசனை அடைவதற்கு கூட அந்த ஈசனின் அருள் இருக்க வேண்டும் என்பதையேக் காட்டுகிறது. சிவமே விரும்பினால் ஒழிய சிவத்தை அடைய முடியாது என்பதே தத்துவம். சிவத்தை அடையும் ஜீவன் தெளிவைப் பெரும் என்பது சைவ சித்தாந்தம் கூறும் செய்தி. ஈசனைப் பற்றி கொள்ளும் ஆன்மா, பரவசம் எனும் பெருந்தேனை உண்டு மயங்கும். அந்த பரமானந்த மயக்கத்தில் தன்னையும் சிவத்தையும் உணர்ந்து தெளிவு கொள்ளும்.

சிவன்
சிவன்

"நான் ஜடமல்ல, நான் ஆன்மா, அதனால் மாற்றமில்லாதவன், முடிவற்றவன். மீண்டும் மீண்டும் வேறு வேறு தோற்றங்களைக் காணும் அநாதியானவன். நான் உடையும் எலும்புகளுடன், அழியும் உடலுடன் கூடிய சாதாரண மனிதன் அல்ல. நான் மரணமற்றவன், மாற்றமில்லா முடிவற்றவன். ஏன் என்றால் நான் சிவத்தின் அங்கம். சிவத்திலிருந்து உதித்தவன்!" என்று உணர்ந்து கொள்ளும் ஜீவன் அச்சப்படுவதில்லை. அவஸ்தை படுவதில்லை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அச்சமற்ற இடத்தில்தான் உண்மையும் கருணையும் பிறக்கும். சிவனிடத்தில் தஞ்சம் கொண்டவர் அச்சம் என்பதை அறவே மறப்பர். குரங்குகள் வளர்க்கும் ஒரு குழந்தை, தன்னை குரங்கு போலவே பாவித்துக் கொள்வதைப்போல, மாயையில் சிக்கி சிவனை மறந்து போகும் ஜீவனும் ஏதோ ஒரு அச்சத்தில் சிக்கிக் கொள்கிறது. அந்த அச்சத்தில் இருந்து விலக மேலும் மேலும் தவறு செய்து ஒரு பிறப்பையே பாழ்படுத்தி விடுகிறது. 'தான் யார்' என தன்னைத்தானே ஆத்ம விசாரம் செய்து கொள்ளும் ஜீவனே சிவனை நோக்கிப் பயணப்படுகிறது. தான் பிறந்த நோக்கத்தைப் பூர்த்தியும் செய்கிறது. எனவே நீங்கள் யார் என்பதை உணர்ந்து உங்கள் பணியைத் தொடர இன்றே ஈசனை நோக்கிப் பயணப்படுங்கள். இது புற அளவிலான பயணம் அல்ல. உங்களுக்குள்ளேயே செல்லும் ஓர் ஆன்ம பயணம்.

சிவமாக முதல் வழி
சிவமாக முதல் வழி

உங்கள் பயணத்தில் எங்கேனும் சில கணம் சிவத்தை உணர்ந்து கொண்டீர்களானால் போதும். உங்கள் வாழ்க்கையே மாறிவிடும். வழிபாடுகள், சடங்குகள், விழாக்கள், கேளிக்கைகள் இதை எல்லாம் தாண்டிய நிலையில் சிவம் உள்ளது. அதை தியானத்தால். உங்கள் உள்ளொளிப் பெருக்கால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். அப்படி கண்டுகொண்டால்..."நான் மெய்யான சுயத்தின் பிம்பமாக இங்கு இப்போது வந்து கொண்டிருக்கிறேன். நான் உடலல்ல, நான் அறிவல்ல, நான் ஒரே ஒரு மனிதன் அல்ல, உண்மையில் நான் ஒருமை இல்லை, பன்மை! நான் பேரானந்தம், நான் பெரும் சக்தி, நான் பேரொளி, நான் அகண்ட ஞானம், நான் பேரன்பு, நான் பெருங்கருணை. நான் இந்த உடலில் வாழ்கிறேன், அதனால் அதன் வாயிலாக இந்த உலக வாழ்க்கையைக் காண்கிறேன். மற்றபடி நான் என்றென்றும் நிலைத்திருக்கும் நிலைபேறான பரம்பொருளின் ஒரு துளியே நான். என்னுள் சிவம் அடக்கம். சிவத்துள் நானும் அடக்கம்" என்று ஒரு ஜீவன் உணர்ந்து கொண்டால் அது சித்தனாகும்; மெல்ல சிவனுமாகும் என்பதே சைவத்தின் அடிப்படை. அப்படி சித்தம் சிவமாக, சிவனைப் பற்றிக் கொள்ளுங்கள். மார்கழியின் இந்த இதமான காலைப்பொழுதில் வேறெந்த சிந்தனையும் இல்லாமல் சிவதியானம் மேற்கொள்ளுங்கள். சிவம் விரும்பினால் நிச்சயம் நீங்களும் சிவமாகலாம். அதற்கு அன்போடு சக ஜீவன்களை அணுகுங்கள், அதுவே சிவமாக முதல் வழி!

"தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே

நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும்

அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியும்

குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ!"