Published:Updated:

திருப்பள்ளியெழுச்சி - 7: எமக்கு என்ன தேவையோ, எது விருப்பமோ, அந்தப் பணியைச் செய்ய அருள் செய்!

திருப்பள்ளியெழுச்சி
News
திருப்பள்ளியெழுச்சி

எம்மை படைத்த தாயாகிய உமக்கு, எம்மை விட எம்மைப் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால், எமக்கு என்ன தேவையோ, எது விருப்பமோ, அந்தப் பணியைச் செய்ய அருள் செய்!

நாம் என்பது உடலோ அல்லது மனமோ இல்லை. அதையும் தாண்டிய நிலையில் உயர்ந்த ஆன்மாவாக இந்த பிரபஞ்சம் எங்கும் நிறைந்து நிற்கிறோம். எல்லை இல்லாத பரமானந்த நிலையில் திளைத்துக் கிடக்கிறோம். அந்தத் தெய்வீக உணர்வுநிலையே நாம்.

"அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென

எளிதென அமரரும் அறியார்

இது அவன் திருவுரு இவன் அவன் எனவே

எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்

மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்

திருப்பெருந்துறை மன்னா!

எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!"

சிவபிரான்
சிவபிரான்

தேன் சிந்தும் மலர்கள் கொண்ட சோலைகள் நிறைந்த உத்தரகோச மங்கை எனும் புண்ணியத் தலத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானே! சிவபிரானே! திருப்பெருந்துறை தலைவனே! உன் திருநாமம் ஒன்றே பழம் போல் இனிக்கிறது; அமுதென சுவைக்கிறது. அறிவதற்கு அரியவனான ஈசனே உன்னைப் பற்றி தெரிந்து கொள்வது சிரமமானது. அதைவிட சிரமமானது உன்னை உணர்ந்து கொள்வது. தேவர்களால் கூட உன்னைப் பற்ற முடியாது என்ற நிலையில் எங்களால் உம்மைப் பிடித்துவிட முடியமா!. வடிமில்லாத உந்தன் வடிவம் தான் என்ன? இதுவே அவன், இல்லையில்லை அதுவே அவன் என்று வர்ணிக்கத் திணறும் தேவர்களுக்கே தரிசனம் தராத ஈசனே, இதுதான் நான் என்று சொல்லி இதோ, எங்கள் முன்னால் எழுந்தருளி இருக்கிறாய். உம்மிடம் நாங்கள் என்ன வேண்டும் என்று கேட்கத் தோன்றவில்லை. அதைக் கொடு, இதைக்கொடு என்பதில் எங்களுக்குத் தெளிவில்லை. அனைத்தையும் கொடுத்தது நீ இல்லையா! எனவே உம விருப்பம் போல எங்களை நீ என்ன பணி செய்ய வைக்க விரும்புகிறாயோ, அதைச் செய் என்றே உன்னிடம் கேட்கிறோம். சிவபெருமானே! நீ எம்பொருட்டு எழுந்தருள்வாய். எமை ஏற்றருள்வாய்!

எந்நாளும் நம்மை பாதுகாத்து வரும் நம் சிவம், தாயினும் மிகுந்த கருணை கொண்டது. சகல ஆபத்துக்களில் இருந்தும் நம்மை மீட்டெடுக்கும் அந்த கருணை தெய்வத்துக்குத் தெரியாதா, நமக்கு எது தேவை, எது தேவை இல்லை என்று. எனவே அமைதியாக இருப்போம். நாம் என்ன பணி செய்து ஈசனை வழிபட எண்ணுகிறாயோ, அதையே ஈசன் நமக்கு அளிப்பான் என்று நம்பிக்கை கொள். எல்லாமுமாகி நிற்கும் ஈசன் நமக்கு எப்போதும் நன்மையே அளிப்பான். எனவே இது வேண்டும், அது வேண்டும் என்று நமக்கு எல்லாம் தெரிந்தது போல வேண்டுவதை விடவும், எம்மை படைத்த தாயாகிய உமக்கு, எம்மை விட எம்மைப் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால், எமக்கு என்ன தேவையோ, எது விருப்பமோ, அந்த பணியைச் செய்ய அருள் செய்! என்று வேண்டிக் கொள்வோம். அதுவே சிறந்தது. ஒருவேளை நாம் வேண்டுவதை விடவும் ஐயன் மேலாகச் செய்யலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சிவம்
சிவம்

"வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு

மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்

சோதியு மாய்இருள் ஆயினார்க்குத்

துன்பமு மாய்இன்பம் ஆயினார்க்குப்

பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப்

பந்தமு மாய்வீடும் ஆயினார்க்கு

ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு..." அறியாதது ஒன்று உண்டோ!

நாம் ஈசனின் பிள்ளைகள். அதனால் எதையும் குறித்து அஞ்சத் தேவையில்லை. திருஉத்திரகோச மங்கையில் எழுந்தருளி இருக்கும் நம் தேவன், நம்மை எப்போதும் காப்பான். நாம் என்பது உடலோ அல்லது மனமோ இல்லை. அதையும் தாண்டிய நிலையில் உயர்ந்த ஆன்மாவாக இந்த பிரபஞ்சம் எங்கும் நிறைந்து நிற்கிறோம். எல்லை இல்லாத பரமானந்த நிலையில் திளைத்துக் கிடக்கிறோம். அந்தத் தெய்வீக உணர்வுநிலையே நாம். ஆன்மாவை உணர்ந்து அதன் வழியே ஈசத்துவத்தை அடையும் சகல ஜீவன்களும் அன்பு என்ற பெரும் இன்பத்தில் ஆழ்ந்து கிடைக்கும். இதுவே சிவன் அடியார்களின் சிறப்பான அம்சம். இது தேவர்களுக்கும் கிடைக்காத பேரின்பம். இந்த பேரண்டம், அகண்டம் என்று எதிலும் வேரூன்றி நிற்கும் பொருள் எதுவோ அதுவே நாம். அதுவே சிவமும்!

நாம் யார் என்று நமக்கே தெரியாமல் இருப்பது தவறு அல்லவா, நம்முடைய சுயத்தை நாமே அறியாமல் இருப்பது வேடிக்கையானது அல்லவா, நமக்கான தேவையை நாமே அறியாமல், அதை நிறைவேற்றும் தலைவனை உணராமல் இருப்பது தவறிலும் பெருந்தவறு அல்லவா! எனவே சகல ஜீவன்களையும் கரையேற்றி அருளும் திருப்பெருந்துறை ஈசனை சரண் அடைந்து பலன் பெறுவோம்! என்ன வேண்டும் என்றே உணராத இந்த எளியோர்களைக் காக்கும் பொருட்டு எம் சிவமே, நீ எம் மனதுக்குள் எழுந்தருள தயை புரிய வேண்டும்!

சிவம்
சிவம்

"பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப்

பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த

செல்வமே சிவபெருமானே!"