Published:Updated:

திருவெம்பாவை - 6: அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்! திருவெம்பாவை சொல்லும் ரகசியம்!

திருவெம்பாவை
News
திருவெம்பாவை

கண்ணிருந்தும் ஈசனைக் காணாமல், அவனைப் போற்றாமல் இருக்கும் மந்த அறிவு கொண்டோர் நிலை பரிதாபத்துக்கு உரியது. அவர்கள் தன்னை உணராமல் வீணே வாழும் சடப் பொருள்கள் என்றே சொல்லலாம்.

"மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்"

எம்பாவாய்
எம்பாவாய்

மானின் அழகிய நடையைக் கொண்ட நங்கையே! உங்களை நானே அதிகாலையில் எழுப்புவேன் என்று நேற்று உறுதி கூறினாய். மாறாக நாங்கள் வந்து உன்னை எழுப்பும் வண்ணம் இன்னும் உறங்குகிறாய். உன் உறுதி போன திசை எங்கே! வாக்கு தவறியதில் வெட்கமில்லையா! எங்களுக்கு விடிந்துவிட்டது, உனக்கு இன்னமும் பொழுது புலரவில்லையா! வானவரும், மண்ணவரும், 14 லோகங்களைச் சேர்ந்தவரும் சேர முடியாதப் பெருமை கொண்ட ஈசனின் திருவடிகளைப் புகழ்ந்து பாடும் எங்களுக்கு இன்னமும் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்! ஞான வடிவாம் நம் ஈசனை எண்ணி ஊன் உருகாமல் இருக்க, கண்ணில் நீர் வடிய ஈசனைப் பாடாமல் இருக்க உன்னால் மட்டுமே முடியும். எங்களால் முடியாது. விரைவாக எழுந்து வா! சகலருக்கும் தலைவனான நம் ஈசனைப் பாட வேண்டும், சீக்கிரம் வா!

ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சித்து அரனாரைப் பாடியவர் திருமால். ஒருநாள் ஆயிரத்தில் ஒன்று குறைய, தன் செந்தாமரைக் கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்தார் மாலவன். நெகிழ்ந்து போன நம் தெய்வம், விரைந்து வந்து சக்கரம் அருளி 'கண்ணா!' என்று கரைந்துருகியது. கண் என்றாலே அன்பு தான். எங்கு வலித்தாலும் கண்ணே அழும். எவருக்குத் துன்பம் என்றாலும் கண்ணே கண்ணீர் சிந்தும். கண்ணே அன்பின் அடையாளம். கண்ணைக் கொடுத்ததால் அன்பின் வடிவமான திண்ணன், 'கண்ணப்பர்' ஆனார். திருமாலும் 'கண்ணன்' என்று ஆனார். இங்கு கண் என்பது பார்வை கொண்ட ஊனக்கண்ணை குறிப்பது இல்லை. பக்தி கொண்ட ஞானக் கண்ணும் ஈசனைக் காண அவசியம் என்கிறது சைவ உலகம். இங்கும் 'எம்பாவாய்' என்று குறிப்பது இரு பொருளைத் தருகிறது. என் பெண்ணே என்றும், என் கண்ணே (பாவை) என்றும் கொள்ளலாம். அன்பு, கருணை. இரக்கம் என்று வரும் இடத்தில் எல்லாம் குறள் கண்ணையே ஒப்புமையாகக் கூறுவதை அறியலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கண்ணிருந்தும் ஈசனைக் காணாமல், அவனைப் போற்றாமல் இருக்கும் மந்த அறிவு கொண்டோர் நிலை பரிதாபத்துக்கு உரியது. அவர்கள் தன்னை உணராமல் வீணே வாழும் சடப் பொருள்கள் என்றே சொல்லலாம். ஆன்மாக்களின் கண்ணாக ஈசன் விளங்குகிறார். கண் என்றால் அன்பு இல்லையா! அதனால்தான் அன்பே சிவமானது. கண்ணிருப்பவர் பலர் ஈசனை ஒதுக்கிவிட்டு வாழும் சூழலில் கண்ணில் ஒளி இழந்த ஒரு திருவாளர், சிவத்தைப் பற்றிக்கொண்டு திருத்தொண்டு செய்து சிவபதம் அடைந்த திருக்கதை நெகிழ்ச்சியானது, அன்பு மயமானது.

திருவெம்பாவை - 6
திருவெம்பாவை - 6


திருவாரூரில் பிறந்த தண்டியடிகள் பிறப்பிலேயே கண் பார்வை அற்றவர். இருந்தும் என்ன, ஞானக்கண் விழித்ததால் சிவனையே தலைவனாக ஏற்றுக் கொண்டு திருவாரூர் ஆலயத்தில் சிவத்தொண்டு செய்து தொழுது வந்தார். இப்பிரபஞ்சத்தில் இருக்கும் யாவும் சிவமே என்று எண்ணி வாழ்ந்த தண்டியடிகளுக்கு திருவாரூர் கமலாலயத் திருக்குளமும் ஈசனது அம்சமாகவேத் தோன்றியது. ஆத்திரத்தால் அறிவிழந்த ஒரு கூட்டத்தின் அட்டகாசத்தால் அந்த திருக்குளம் அசுத்தமாகி பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது. இதை எண்ணி நாளும் கண்ணீர் வடித்த அடிகள், அந்த குளத்தை தாமே சீர் செய்ய விரைந்தார். தினமும் அந்த குளத்தில் இறங்கி அசுத்தங்களையும் குவிந்து கிடந்த மண்ணையும் அள்ளி எடுப்பார். குளக்கரையில் கட்டி வைக்கப்பட்ட கயிற்றைப் பற்றிக்கொண்டு மேலேறி வந்து கொட்டுவார். எங்கே குளம் சுத்தமாகி விடுமோ என்று பயந்த அந்த மூடர் கூட்டம், அவரை கேலி செய்து திட்டியது. வேலையை தடுத்து நிறுத்தியது. ஆரூர் பெருமானை தஞ்சம் அடைந்தார் அடிகள். ஈசன், அந்த நாட்டின் மன்னனுக்கு ஆணையிட்டு தண்டியடிகளுக்கு உதவச் சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கண்ணிழந்தும் தன்னை அன்பு செய்யும் தண்டியடிகளுக்கு ஈசனே தாயானார். அவர் தியாகத்தை உலகறியச் செய்ய, மூடர் கூட்டத்தை தண்டித்தார். தண்டியடிகளுக்கு பார்வை கிடைக்கச் செய்தார். கண்ணுதல் பெருமானின் கருணையால் மகிழ்ந்த அடிகளார் தொடர்ந்து தனது திருத்தொண்டால் விரைவிலேயே ஈசனை அடையும் பேற்றையும் பெற்றார். 'முகத்திற் கண் கொண்டு காண்கின்ற மூடர்காள், அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்!' என்று திருமூலர் உரைத்தவாறு வாழ்ந்து காட்டியவர் தண்டியடிகள். இப்படி குறைபாடுகள் கொண்டவர்களும், ஈரறிவு முதல் ஐந்தறிவு வரை கொண்ட பூச்சி, பறவை, விலங்குகள் போன்றவையும் ஈசனின் கருணை அறிந்து தொழுது அருள் பெறும்போது, சகல செல்வங்களையும் கொண்ட நாம் ஈசனை எப்படி கொண்டாட வேண்டும். கிடைத்தற்கரிய மானுடப் பிறப்பை அருளியவன் ஈசன், அந்த பிறப்பில் அவனைத் தொழுது ஆனந்தம் கொள்ள வேண்டாமா! மார்கழியின் வைகறைப் பொழுது மாண்புக்கு உரியது. இது ஈசனைத் தொழுவதற்கே உண்டான சிறப்பான காலம். எனவே காலதாமதம் செய்யாமல் நீராடி, தூய ஆடை உடுத்தி, நீரிட்டு, மலர் சூடி, குதூகலமான உள்ளதோடு நம் கண்ணுக்குக் கண்ணான ஈசனைக் கொண்டாட விரைந்து வா!

சிவன்
சிவன்
"பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்கு
உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக்
கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே!"