Published:Updated:

திருவெம்பாவை - 9: சிவனை அடைவதைவிடவும் சிறப்பானது அவர் அடியார்களை அடைவது என்கிறது திருவாசகம்!

திருவெம்பாவை
News
திருவெம்பாவை

ஈசனைப் பாடி இந்த மார்கழியில் நோன்பிருந்து வேண்டினால் இனிய திருமண வாழ்வும், மங்கல நிகழ்வுகளும் நிலைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். எனவே சோம்பி உறங்காமல் ஈசனைப் பாட எழுந்து வா தோழி!

"முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்!"

சிவன்
சிவன்

பல பல ஊழிகள் கழிந்தும் பல பல சிருஷ்டி மாயைகள் கழிந்தும் எப்போதும் நிலைத்து இருந்துவரும் பழமையான பொருள் என்று போற்றப்படும் பழமையோனே! இன்னும் தொடர்ந்து வரப்போகும் பல பல புதிய யுகங்களின் புதுமைக்கெல்லாம் புதுமையான இளையோனே! எம் ஈசனே! உமைத் தலைவனாகக் கொண்ட யாம், உம்முடைய அடியார்களுக்கு மட்டுமே பணிவோம்; பணி செய்வோம்! உம்மைத் தலைவனாக ஏற்றுக் கொண்ட உன் அடியார்களே எங்களுக்கு கணவராக வரவேண்டும். அவர் விடுக்கும் ஆணையையே எங்கள் பரிசாகக் கருதி, சிரம் தாழ்ந்து பணி செய்வோம். அடியார்களை வேண்டும் இந்த பிரார்த்தனையை ஈசனே நீவிர் ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு வேறு எந்த குறையும் இல்லை என்போம். அதனால் நேசத்துக்குரிய எம் பாவையே ஈசனைப் பாடுவோம் எழுந்து வா சீக்கிரம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அழகானவர் மணாளனாக வரவேண்டும், அதிக பொருள் படைத்தவர் கணவனாக வர வேண்டும், தன் சொல்படி கேட்பவரே புருஷனாக வர வேண்டும், என்றெல்லாம் பெண்கள் விரும்புவர். ஆனால் அழியக்கூடிய தோற்றத்தை விடவும், செல்வத்தை விடவும் சிவபக்தி மேலானது. சிவனை அடைந்த அடியாரை கணவனாக அடைய வேண்டும் என்பதுவே பெண்களின் விருப்பமாக இருக்க வேண்டும் என்பதுவே புத்திசாலித்தனமான வேண்டுதலாக இருக்க முடியும். எதுவுமே நிலைக்காத இந்த உலகில் என்றும் எங்கும் நிலைத்திருப்பது சிவம் ஒன்று மட்டுமே. அது அழிவில்லாத அநாதியான அபூர்வமான மாபெரும் சக்தி. இந்த பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் மகாசக்தி. சக்தி என்பதால் அதற்கு அழிவும் இல்லை; ஆக்கமும் இல்லை. போக்கு வரவு இல்லாத அந்த புண்ணியனே பழைமையானவனாகவும் புதுமையானவனாகவும் விளங்குபவன். என்றும் நிலைத்திருக்கும் சிவத்தைப் பற்றிக் கொண்டோரும் அழிவில்லாத நித்திய நிலையை சிவலோகத்தில் அடைவர் என்பது சைவ சித்தாந்தம் கூறும் உண்மை.

சிவபக்தி
சிவபக்தி

சிவத்தை கணவனாக அடைவதை விடவும் சிவனடியாரைக் கணவனாக அடைவது எளிது. சிறப்பானதும் கூட. சிவம் என்பது உருவம் இல்லை, பண்பு இல்லை, குணம் இல்லை அது மாபெரும் சக்தி. அதை கணவனாக அடைவது மாபெரும் பிரயத்தனம். ஆனால் சிவன் அடியாரைக் கணவனாக அடைந்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். கணவனாகிய சிவனடியாருக்கு தொண்டு செய்த புண்ணியமும் கிடைக்கும், அதன் வழியே சிவனாரின் ஆசியும் கிடைக்கும் என்பது விசேஷம். 'ஜங்கம சிவம், பராவு சிவம்' எனப்படும் அடியாரைத் தொழுவது ஈசனைத் தொழுவதை விட மேலானது என்கிறது சைவம். அவரே கணவன் என்றால் பதிபக்தியும் கூடிவிடும் இல்லையா. அப்படி சிவன் அடியாரையே மணாளனாக அடைய வேண்டும் என்று விரும்பி அந்த மாபெரும் பேற்றை அடைந்தவர் சங்கிலி நாச்சியார். ஆலால சுந்தரரின் அழகில் மயங்கி, அடுத்த பிறவியில் சுந்தரமூர்த்தி நாயனாராகப் பிறப்பெடுத்த வேளையில் கரம் பிடித்த சங்கிலி நாச்சியாரின் வாழ்வும் தொண்டும் சைவ உலகில் ஒரு பேரொளியாக, மகளிருக்கு வழி காட்டும் கலங்கரை விளக்கமாக விளங்கி வருகிறது எனலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஈசனின் திருவடிவம் ஆடியில் காணப்பெற்று அதுவே தனித்து உருவான தோற்றமே ஆலால சுந்தரர் எனப்படும் சுந்தரர் வடிவம். இவரே திரண்டு வந்த ஆலகால விஷத்தைத் திரட்டி ஈசனிடம் கொடுத்தவர். இந்த சுந்தர மூர்த்தி பெருமானால் கயிலையில் இரு பெண்கள் கமலினி, அநிந்திதையார் என்பவர்கள். ஈசனின் விதிப்படி பூமியில் சுந்தரராக அவதாரம் செய்த சுந்தரர் சங்கிலி நாச்சியாரை திருவொற்றியூரில் மணம் செய்து கொண்டார். செங்குன்றம் அருகே ஞாயிறு எனும் தலத்தில் வாழ்ந்த நிலக்கிழாரின் அருமை மகள் சங்கிலி நாச்சியார். எப்போதும் இறைத்தொண்டில் ஈடுபாடு கொண்ட இந்த திருமகளின் வேண்டுகோளின்படி, திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமான் கோயிலின் அருகே கன்னி மாடம் ஒன்றை அமைத்து தங்க வைத்தார் அவர் தந்தை.

திருவெம்பாவை
திருவெம்பாவை


சங்கிலி நாச்சியாரும் ஈசனுக்கும் அவர் தொண்டர்களுக்கும் அணிவிக்க என்று மலர் மாலை தொடுக்கும் புனித பணியில் ஈடுபட்டார். தாம் தொடுக்கும் மாலையே படம்பக்க நாதருக்கும் திருவொற்றியூர் தியாகருக்கும் சூட்ட வேண்டும் என்று விரும்பி நாள்தோறும் மலர்த் தொண்டை தொடர்ந்து வந்தாள். அப்போதுதான் அவளுக்கு அந்த எண்ணம் உதித்தது. 'எப்படியும் தன்னுடைய தந்தையார் நச்சரிப்பு தாளாமல் ஒருநாள் திருமணம் புரிந்துதான் ஆகவேண்டும். அப்போது சுவாமியையே மணாளனாக வரித்துக் கொண்டேன் என்று கூறுவது காரியத்துக்கு உதவாது.

மேலும் அது ஈசனை சங்கடப்படுத்தக் கூடும். எனவே ஈசனின் மனதுக்கு உகந்த அவர் அடியாராகிய ஒரு நல்லவரை, அவர் எப்படி இருந்தபோதும் அவரையே மணப்பேன்!' என்று உறுதி பூண்டாள் சங்கிலியார். அதுபோலவே தல யாத்திரை திருவொற்றியூருக்கு வந்த சுந்தர மூர்த்தி நாயனார் முற்பிறவி விருப்பம் காரணமாக சங்கிலி நாச்சியாரைக் கண்டவுடன் காதலித்து அவரையே மணம் முடிக்கவும் செய்தார். சிவனிலும் அவன் அடியார்கள் பெரியவர்கள் என்பது சைவ உலகின் கருத்து. அந்த வகையில் சங்கிலி நாச்சியார் பெரும் புண்ணியம் செய்த பெருமாட்டி எனலாம். அவளின் விருப்பம் நிறைவேறவும், விரும்பியபடி திருமணம் முடிக்கவும் உதவியது அவளுடைய மார்கழி நோன்பு என்கிறது ஆன்மிக உலகம்.

பரஞ்சோதி
பரஞ்சோதி

ஈசனைப் பாடி இந்த மார்கழியில் நோன்பிருந்து வேண்டினால் இனிய திருமண வாழ்வும், மங்கல நிகழ்வுகளும் நிலைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். எனவே சோம்பி உறங்காமல் ஈசனைப் பாட எழுந்து வா தோழி!

"நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே!"