Published:Updated:

கல்யாண வரம் தரும் பிள்ளையார் வழிபாடு!

ஶ்ரீவிநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீவிநாயகர்

ஷக்திதர்

கல்யாண வரம் தரும் பிள்ளையார் வழிபாடு!

ஷக்திதர்

Published:Updated:
ஶ்ரீவிநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீவிநாயகர்

விசேஷம் வாய்ந்த சங்கடஹர சதுர்த்தி தினத்தில் மன உறுதியோடு விரதம் கடைப்பிடித்து முறைப்படி விநாயகப் பெருமானை வழிபட்டால், ஜாதக தோஷங்களும் இன்னல்களும் நீங்கும். கல்யாணத் தடைகள் நீங்கி விரைவில் மணமாலை தோள்சேரும். கடன் தொல்லை, நோய், பகை முதலானவை அகன்று நலமுடன் வாழலாம். அற்புதமான இந்த விரத வழிபாட்டின் மகிமை என்ன, வழிமுறைகள் என்ன விரிவாக அறிந்துகொள்வோம்

கல்யாண வரம் தரும் 
பிள்ளையார் வழிபாடு!

`யானை முகம் கொண்டவரும் சந்திரனுக்குச் சமமான நிறத்தை உடையவரும் தந்தம், பாச-அங்குசம், லட்டுகம் ஆகியவற்றைக் கரங்களில் ஏந்தியவரும், தாமரை ஆசனத்தில் அமர்ந்தவரும், மலர்ந்த திருமுகத்துடனும் திகழும் பிள்ளையார் பெருமானைப் போற்றி வணங்கிட சகல நலன்களும் கைகூடும்.

சந்திரன் அருள்பெற்ற நாள் சதுர்த்தித் திருநாள் என்பதை நாமறிவோம். அதேபோல் செவ்வாய் பகவான் விநாயகரின் திருவருளைப் பெற்றது, ஒரு சங்கடஹர சதுர்த்தி திருநாளில்.

நவக்கிரகங்களில் தனியிடம் பெற்றவன் செவ்வாய். இவனுக்கு ‘குஜன்’ என்றும் பெயர் உண்டு. ‘கு’ என்றால் பூமி; ‘ஜன்’ என்றால் பிறந்தவன் எனப் பொருள்; பூமி புத்திரன் என்பார்கள்.

படைப்புக்கு வெப்பத்தின் துணை அவசியம். பிரம்மன், ரஜோகுண சேர்க்கையில் படைப்பை நிகழ்த்துகிறார் என்கிறது புராணம். இந்த ரஜோகுணத்துடன் இணைந்தவன் செவ்வாய். ‘அக்னிர்மூர்த்தா’ என்ற மந்திரத்தை அவனை அழைப்பதற்காக பயன்படுத்தச் சொல்கிறது வேதம்.

‘அங்கார’ என்றால் நெருப்புத் தணல். வேதம், நெருப்புத் தணலை அங்காரம் என்கிறது. அதிக வெப்பம் தணலில் இருக்கும்; ஜ்வாலையில் இருக்காது. அந்த வெப்பத்தைச் சுட்டிக் காட்டி, செவ்வாயை அங்காரகன் என்றார்கள்.

சுறுசுறுப்பு, செயல்பாடு, சிந்தனையோட்டம், தன்மானம், வீரம், தைரியம், கண்டிப்பு, ஆர்வம், பிடிப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய அனைத்தும் செவ்வாயின் சேர்க்கையில் முழுமை பெற்று விளங்கும். அத்யுச்சம், உச்சம், மூலத்ரிகோணம், ஸ்வக்ஷேத்ரம், போன்ற பலம் பெற்ற செவ்வாய், வாழ்க்கையில் தடையில்லா மகிழ்ச்சியை அளிப்பார் என ஜோதிடம் விளக்கும்.

கல்யாண வரம் தரும் 
பிள்ளையார் வழிபாடு!

அங்காரகன் அருள்பெற்ற கதை...

செவ்வாய் பகவானின் அவதாரக் கதைகள் பலவாறு சொல்லப் படுகின்றன. அவற்றில் ஒன்று பரத்வாஜரின் மைந்தன் செவ்வாய் என்கிறது. நர்மதைக் கரையில் கண்ட தேவமங்கையை மணந்தார் பரத்வாஜர். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். நாட்கள் நகர, தேவமங்கை பூமியை விட்டு அகன்றாள். பரத்வாஜரும் நர்மதை தீரத்தில் தவத்தில் ஆழ்ந்துவிட்டார்.

தனித்துவிடப்பட்ட அவரின் மைந்தனை பூமாதேவி அரவணைத்து வளர்த்தாள். குழந்தையின் மேனி, செந்நிறத்துடன் அக்னி போல் பிரகாசித்ததால், அவனுக்கு ‘அங்காரகன்’ என்று பெயர் சூட்டினாள். அங்காரகனுக்கு ஏழு வயதானபோது, அவனை தந்தையிடம் ஒப்படைத்தாள். சதுர்வேதங்களை மிகக் குறுகிய காலத்திலேயே கசடறக் கற்றுத் தேர்ந்த அங்காரகன், சர்வ வல்லமைகளைப் பெற விரும்பினான். தந்தையிடம் வழி கேட்டான். பரத்வாஜர், விநாயகரைக் குறித்து தவம் இருக்கும்படிப் பணித்தார்.

அவந்தி நகரை அடுத்த அடர்ந்த வனத்தில் தவம் செய்தான் அங்காரகன். காலம் கனிந்தது. மாசி மாதம், கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தியன்று இரவு சந்திரோதய காலத்தில், அங்காரனுக்கு தரிசனம் தந்தார் ஆனைமுகத்தோன். அவரது பாத கமலங்களைப் பணிந்த அங்காரகன், விநாயகரைப் பலவாறு துதித்துப் போற்றினான்.

``விநாயகப்பெருமானே! நான், அமிர்தம் அருந்தி அமரனாக ஆசைப்படுகிறேன். சர்வ மங்களமான திரு உருவோடு தங்களைத் தரிசித்த என்னை எல்லோரும், ‘மங்களன்’ என்று அழைக்க வேண்டும். அத்துடன், தங்களது திவ்விய தரிசனம் கிடைத்த இந்நாளில் உம்மை வணங்கும் அடியவர்களது இன்னல்களை நீக்கி அருள வேண்டும். என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வம் அளிக்கும் கிரகமாக நான் மிளிர வேண்டும்!’’ என்று பல வரங்க ளைக் கேட்டான் அங்காரகன். அவன் கேட்ட வரங்களைக்கொடுத்து அருள்பாலித்தார் பிள்ளையார் பெருமான்.

இதன் பிறகு, விநாயகப் பெருமானின் அருளால், தேவலோகம் அடைந்த அங்காரகன், அங்கு அமிர்தம் பருகியதுடன்... விரைவிலேயே, நவக்கிரகங்களில் ஒருவனாகும் பேறு பெற்றான்.

அவன் அருள்பெற்ற திருநாள் விநாயகர் வழிபாட்டுக்கு உகந்த திருநாளானாது. இந்தத் தினத்தில் வழிபடும் அன்பர்களின் சங்கடங்கள் யாவும் பிள்ளையார் அருளால் தீரும் என்பதால், இதை சங்கடஹர சதுர்த்தி என ஞானநூல்கள் போற்றுகின்றன.

அங்காரனுக்கு விநாயகர் அருள் கிடைத்தது மாசி மாதத்துத் தேய்பிறை சதுர்த்தி தினம் ஆகும். அன்றுமட்டுமல்ல மாதம்தோறும் வரும் தேய்பிறை சதுர்த்தி தினங்களும் சங்கடஹர சதுர்த்தியாக கணபதியின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும் திருநாள்களாகவே திகழ்கின்றன (இந்த மாதம் மே-19 சங்கடஹர சதுர்த்தி தினம்).

புராணங்கள் போற்றும் வழிபாடு

அங்காரகனால் துவக்கப்பட்ட சங்கடஹர சதுர்த்தி விரதமும், காலம் காலமாக அனுசரிக்கப்பட்டு வருவதை பல புராணங்கள் வாயிலாக அறிகிறோம்.

விப்ரதன் என்ற வேடன் முற்கல முனிவரிடம் கணேச மந்திர உபதேசம் பெற்று ஆயிரம் ஆண்டுகள் தியானித்தான். அதன் பலனாக ‘புருசுண்டி’ என்ற பெயரு டன், விநாயகரை குருவாகக் கொண்டு ஞானோபதேசம் பெற்று முக்தி அடைந்தான். அவன் அனுஷ்டித்தது சங்கடஹர சதுர்த்தி விரதம்.

அரசன் கிருதவீர்யன், அத்ரி முனிவரிடம் இந்த விரதத்தை உபதேசமாகப் பெற்று புத்திரப்பேறு எய்தி மகிழ்ந்தான். சூரசேனன் எனும் அரசன், இந்திரன் வாயிலாகக் கேட்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்று முக்தி அடைந்தான்

கல்யாண வரம் தரும் 
பிள்ளையார் வழிபாடு!

வழிபடுவது எப்படி?

சூரியன் உதிப்பதற்கு ஐந்து நாழிகைக்கு முன்பே உறக்கத்திலிருந்து எழுந்து விதிப்படி சங்கல்பம் செய்து நீராட வேண்டும். அன்று முழுவதும் இயன்றவரையிலும் விநாயகரின் திருநாமங்களை ஜபிப்பதும் விநாயகர் புராணத்தைப் பாராயணம் செய்வது சிறப்பு.

காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்து, நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும்.

கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், ஆழாக்குப் பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, பசுவுக்குக் கொடுக்க வேண்டும். கணபதியோடு பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும்.

எளிமையான வழிபாட்டில் மகிழ்பவர் விநாயகப் பெருமான். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பது வழக்கு. ஆக இந்த நாளில் பூஜையறையில் மஞ்சள், மண், சந்தனம் போன்றவற்றில் பிள்ளையார் பிடித்துவைத்து பூஜிக்கலாம்.

சங்கடஹர சதுர்த்தி நாளில் சந்திரன் உதயமாகும் நேரத்தில் பிள்ளையாரை வழிபடுவது விசேஷம் என்பார்கள். ஆகவே இந்த நேரத்தில் பூஜிக்கத் தொடங்கலாம்.

பிள்ளையாருக்கு அறுகம்புல் மற்றும் மலர்கள் சமர்ப்பித்து அலங்கரிக்கவேண்டும். சந்தனக் குங்குமத் திலகம் இடவேண்டும்.

விநாயகருக்குப் பிடித்த இலை வன்னி இலை. வன்னி இலைகளால் விநாயகரைப் பூஜிப்பது சிறப்பான பலன்களைத் தரும். ஆகவே அறுகம்புல், வன்னி இலை மற்றும் பூக்களால் பிள்ளையாரின் திருநாமங்களைக் கூறி அர்ச்சனை செய்யலாம்.

வீட்டிலேயே மோதகம், சித்திரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், கொழுக்கட்டை, சுண்டல் என்று தயாரித்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்து வழிபடவேண்டும். பூஜை முடிந்ததும் பிரசாதப் பதார்த்தங்களை ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுத்து, நாமும் உண்ணலாம்.

மாசி மாதம்-தேய் பிறை சதுர்த்தி திதிநாளில் தொடங்கி மாதம் தோறும் வழிபட்டு ஒருவருட காலம் விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு என்கின்றன ஞானநூல்கள். இயலாதவர்கள் 11 சங்கடஹர சதுர்த்தி தினங்களில் வழிபட்டு வரம்பெறலாம். தேய்பிறை சதுர்த்தி தினம் செவ்வாய்க்கிழமையுடன் இணைந்து வந்தால் அது அங்காரக சதுர்த்தி எனும் சிறப்பைப் பெறும்.

சங்கடஹர சதுர்த்தி தினங்களில், வீட்டில் விரதம் இருந்து வழிபட இயலாத நிலையில் உள்ளோர், அன்று ஆலயங்களுக்குச் சென்று, அறுகம்புல் மற்றும் அபிஷேக திரவியங்களைச் சமர்ப்பித்து, 11 முறை வலம் வந்து விநாயகரை வழிபடலாம்.

இவ்வாறு இந்த அரிய விரதத்தை மன உறுதியோடு கடைப்பிடித்தால், ஜாதக தோஷங்களும் இன்னல்களும் நீங்கும். கல்யாணத் தடைகள் நீங்கி விரைவில் மணமாலை தோள்சேரும். கடன் தொல்லை, நோய், பகை முதலானவை அகன்று நலமுடன் வாழலாம்.

பிள்ளையார் அருளும் பலன்கள்

பிள்ளையார் பிடிக்கப் பயன்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பலன் உண்டு. அவரவர் தங்கள் பிரச்னைக்கு ஏற்ப குறிப்பிட்ட பொருளைக் கொண்டு பிள்ளையாரைப் பிடித்து வைத்துப் பூஜை செய்ய அந்தப் பிரச்னை எளிதில் தீரும் என்பது நம்பிக்கை.

மஞ்சள் பிள்ளையார்: திருமணத் தடை நீங்கும்
மண் பிள்ளையார்: ராஜ பதவி கிடைக்கும்
புற்றுமண் பிள்ளையார்: வியாபார லாபம் கிடைக்கும்
வெல்லப் பிள்ளையார்: சௌபாக்கியம் உண்டாகும்
உப்புப் பிள்ளையார்: எதிரிகள் வசியமாவர்
வெள்ளெருக்கம் பிள்ளையார்: ஞானம் கிடைக்கும்
பசுஞ்சாணப் பிள்ளையார்: எண்ணிய காரியம் கைகூடும்
பச்சரிசி மாவுப் பிள்ளையார்: விவசாயம் பெருகும் வெண்ணெய் பிள்ளையார்: வியாதிகள் அகலும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism