
மருத மலை
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அழகிய மருதமலை அமைந்துள்ளது. இங்குதான் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 741 மீட்டர் உயரத்தில் அழகுற அமைந்துள்ளது. மருதாசலமூர்த்தி குடியிருக்கும் இந்த மருதமலை பக்தர்களால் ஏழாம் படைவீடாகப் போற்றப்படுகிறது.

`கருதுவார்க்கு களிதர வல்லது; பொருதுவார்க்கு புயவள ஈவது; சுருதி நீண்முடி போல்வது; தூய்மையில் மருவோங்கல் வளத்தில் பெரியதே' என்று கச்சியப்ப முனிவர் பேரூர் புராணத்தில் குறிப்பிடும் அற்புதத் தலமிது. திருப்புகழ் கொண்டாடிய திருக்கோயில் இது.`பேரூரில் அருள் வழங்கும் ஈசனைப் பூஜித்து குசத்துவராஜன் என்னும் அரசன் இரண்டு பெண் மகவுகளைப் பெற்றான். பிறகு ஈசனின் ஆணைப்படி மருதமலையானை வழிபட்டு ஒரு மகனைப் பெற்றான்' என்று பேரூர் புராணம் கூறுவதால் இது மகப்பேறு அளிக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது.
சுமார் 900 ஆண்டுகள் பழைமையான இப்போதைய ஆலயம் கொங்கு சோழர்கள் தொடங்கி விஜயநகரப் பேரரசர்கள் வரை திருப்பணிகள் செய்யப்பெற்று உருவானது. மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் அருளுகிறார். இவரை `தம்பிக்கு உகந்த விநாயகர்' என்றும் கூறுகிறார்கள்.
கொங்கு மண்டலத்தின் முதன்மைத் தலம் இந்தக் கோயில். இன்றும் இங்குள்ள பலருக்கு மருதன், மருதாசலம், மருதவரையான், மருதப்பன், மருதைய்யன் எனப் பெயர்கள் உள்ளன. மருத மரங்கள் சூழ்ந்த மலை என்பதால் இப்பெயர் உருவானது. தலவிருட்சமாக மருதமரம் விளங்குகிறது.

பாம்பாட்டிச் சித்தரே இங்குள்ள மூலமுருகனின் சிலையை வடித்தார் என்கிறார்கள். இரு கரங்களுடன் பழநி முருகனைப் போலவே, தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்து காட்சி தருகிறார் மருதமலையான். அழகிய குடுமியும் காலில் தண்டை அணிந்தும் உள்ள இவருக்குத் தினமும் ராஜ அலங்காரம், விபூதிக் காப்பு, சந்தனக்காப்பு என மூன்று வித அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
இன்றும் பாம்பு வடிவில் பாம்பாட்டி சித்தர் உலவுவதாக சொல்லப்படுகிறது. இவர் வாழ்ந்த குகையில் ஒரு பாம்பு இன்றும் பாலும் பழமும் உண்டு செல்வதாக நம்பப்படுகிறது. இங்கு வந்து வேண்டினால் நஞ்சினால் உண்டான தீமைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
விழாக்களின்போது வெள்ளிக் கவசமும் தங்க கவசமும் அணிவிக்கப்படும். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே மருதாசலனை தண்டாயுதபாணியாக மூலவடிவில் தரிசிக்க முடியும். அப்போது ஆபரணம், கிரீடம் என எந்த அலங்காரமும் இன்றி வேட்டி மட்டும் அணிந்து ஏகாந்தமாகக் காட்சி தருவார்.

ஞானமும் போகமும் அளிக்கும் மருதாசல மூர்த்தியை எல்லோரும் கட்டாயம் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டும். அவரின் கொஞ்சும் அழகில் மயங்கி அவர் தாள் பற்றி உய்யவும் வேண்டும் என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.
மருதமலை ஆண்டவனை மனமுருகி வழிபடும் அன்பர்களுக்கு, மனத்துயரங்கள் எதுவும் நேராது என்பது ஆன்மிக ஆன்றோர்களின் வாக்கு. வெள்ளிங்கிரி ஆண்டவன், நீலிமலையை அம்மை, மருதமலை முருகன் கோயில்... இந்தத் தலங்களை சோமாஸ்கந்த அமைப்புத் தலங்களாக பேரூர் புராணம் குறிப்பிடுகிறது.
ஒவ்வொரு நாளும் மருதாசலனுக்கு பூஜை முடிந்ததும், பாம்பாட்டிச் சித்தருக்கும் பூஜை செய்யப்படும். அர்த்தசாம வேளையில் பாம்பாட்டி சித்தர் இன்றும் முருகனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். பாம்பாட்டி சித்தருக்கென ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்கிறார்கள். மறுநாள் இந்த பால் குறைந்திருப்பது அதிசயம் எனலாம்.

மருதமலை முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. மருதமலை திருத்தலம் பிரசித்தி பெற இந்த சித்தரின் அருள் லீலைகளும் காரணம் என்பர். 18 சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இங்கு பல சித்து விளையாட்டுகளை நடத்தினாராம்.
ஆலயத்துள் வலம்புரி விநாயகர், வரதராஜப் பெருமாள், பட்டீசுவரர், மரகதாம்பிகை, நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை, சண்டிகேசுவரர், தண்டாயுதபாணி, சப்த கன்னியர் சந்நிதிகள் உள்ளன. இங்கு மருத தீர்த்தம் எனும் சுனை நீர், நோய்கள் தீர்க்கும் புனித தீர்த்தமாக உள்ளது.
மலைப்பாதையில் உள்ள இடும்பன் சந்நிதி, குதிரைக் குளம்புச் சுவடு போன்றவை தரிசிக்க வேண்டியவை. ஒருமுறை, திருடர்கள் சிலர் இங்கு வந்து திருடிக்கொண்டு ஓடினார்களாம். மருதாசலன் குதிரை மீதேறிச் சென்று பொருள்களை மீட்டாராம். அதோடு அந்தத் திருடர்களை பாறையாகவும் மாற்றிவிட்டார். குதிரை மிதித்த இடத்தில் பள்ளம் உண்டானது. அதுவே ‘குதிரைக்குளம்பு கல்’ எனப்படுகிறது எனும் தகவல் உண்டு.
முன்மண்டபம், தண்டாயுதபாணி சந்நிதிக்கு இடையே பஞ்ச விருட்ச விநாயகர் உள்ளார். இவர் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை ஆகிய ஐந்து விருட்சங்கள் இணைந்த அமைப்புக்குக் கீழே ஐந்து முகங்களுடன் அருள்கிறார்.
"அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!"
திருப்புகழ்.