திருத்தலங்கள்
ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

ஆன்மாக்களைக் குளிர்விக்கும் அண்ணாமலை தீர்த்தவாரி!

அண்ணாமலை தீர்த்தவாரி
பிரீமியம் ஸ்டோரி
News
அண்ணாமலை தீர்த்தவாரி

திருவண்ணாமலையில் ஆண்டுக்கு 7 முறை தீர்த்தவாரி நடை பெறுவது சிறப்பம்சமாகும்.

தீர்த்தத்தை வரித்தல் என்பதே தீர்த்தவாரி. அதாவது, தீர்த்தம் எனும் புனித நீரை பக்தர்களுக்கு உரிமையாக்கும் (வரித்தல்) புனித வைபவமே தீர்த்தவாரி.

ஆலயங்களுக்குச் சென்று மூலவரை தரிசிக்க இயலாத நிலையில் உள்ளோருக்கும் அருள்செய்ய, உற்சவ மூர்த்தியராய் தெய்வங் கள் பக்தர்களைத் தேடி வருவர். அதுபோல், இந்தப் புண்ணிய பூமியிலுள்ள சகல புனிதத் தீர்த்தங்களையும் ஒரே இடத்தில் மானசீகமாக வரவழைத்து, இறைவன் அருள்செய்யும் அற்புத வைபவமே தீர்த்தவாரி என்பார்கள் பெரியோர்கள்.

ஆன்மாக்களைக் குளிர்விக்கும் அண்ணாமலை தீர்த்தவாரி!

கோயில் விழாக்களின் நிறைவு நிகழ்வாக தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த வைபவத்தின்போது, சுவாமி நீராடிய தீர்த்தத் தில் தீர்த்தமாடி வழிபட்டால்தான் விழாவை தரிசித்ததற்கான பலன் பூரணமாகும் என்கின்றன ஞான நூல்கள்.

பிரமோற்சவம், சூரிய-சந்திர கிரகணங்கள், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, மஹோதய அமாவாசை போன்ற விசேஷங்களின்போது தீர்த்தவாரி நிகழும். ஆடியில் அம்பிகைக்கும்; தை, மாசி, பங்குனி மாதங்களில் ஈசனுக்கும் பல ஆலயங்களில் தீர்த்தவாரி நடை பெறுவது வழக்கம். திருவண்ணாமலையில் ஆண்டுக்கு 7 முறை தீர்த்தவாரி நடை பெறுவது சிறப்பம்சமாகும்.

ஆன்மாக்களைக் குளிர்விக்கும் அண்ணாமலை தீர்த்தவாரி!

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை தலத்தில் 300-க்கும் அதிகமான தீர்த்தங்கள் உண்டு என்கிறது திருவருணை புராணம். அருணை நதி, சோணை நதி பாய்ந்த இந்தப் புனித பூமியில் நவகிரகங்கள், நட்சத்திரங்கள், தேவர்கள், பல்வேறு கணங்கள், மகான்கள், மன்னர்கள் எல்லோரும் ஒவ்வொரு காலகட்டத்தில் பல தீர்த்தங்களை உருவாக்கி, அவற்றில் நீராடி அருள் பெற்றார்கள் எனக் கூறப்படுகிறது. மலையைச் சுற்றிலும் மலைக்கு மேலும் பல தீர்த்தங்கள் இன்றும் இருப்ப தைக் காணலாம்.

சரி, இந்தத் தலத்தில் எந்ததெந்த காலத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது என அறிவோமா?

ஆடிப்பூரம் உற்சவத்தின்போது திருக்கோயிலின் சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.

கார்த்திகை தீபத் திருவிழாவின்போது பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி விழா நடைபெறும்.

ஆன்மாக்களைக் குளிர்விக்கும் அண்ணாமலை தீர்த்தவாரி!

சூரிய-சந்திர கிரகண நாள்களில் உற்சவரான சந்திரசேகரர் பிரம்ம தீர்த்தத்துக்கு எழுந்தருள்வார்.

திருவண்ணாமலை ஆலயத்துக்கு அருகே உள்ள அய்யங்குளம் (மஹோதய அமாவாசை நாளில்), தாமரைக்குளம் போன்ற திருக்குளங்களிலும் தீர்த்தவாரி நடைபெறுவது உண்டு.

இவை போக, திருவண்ணாமலை தலத்தைத் தாண்டி - கலசப்பாக்கத்தில் செய்யாறு, மணலூர் பேட்டையில் தென்பெண்ணை ஆறு, பள்ளி கொண்டாபட்டு கிராமத்தில் கெளதம ஆறு ஆகிய இடங்களுக்கும் தீர்த்தவாரிக்காக சென்று வருவார் அண்ணாமலையார்.

இவற்றில், தை மாதம் ரத சப்தமி நாளில் கலசப்பாக்கம் செய்யாற்றுக்குச் சென்று அண்ணா மலையார் தீர்த்தவாரியில் பங்கு கொள்வார்.

அதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் - அண்ணாமலையாரின் தீர்த்தவாரி, பொங்கல் பண்டிகையின் நிறைவாக நடைபெறும்.

தை முதல் நாளிலிருந்து 5-ம் நாள் வரையிலும் நம் தேசத்தில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளும் தென்பெண்ணை நதியில் கலப்பதாக ஐதிகம். இந்தப் புண்ணிய காலத்தில் அண்ணாமலையார் அங்கு சென்று அந்தத் தலத்துக்கு மேலும் புனிதம் அளித்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்.

அண்ணாமலையாரே 30 கி.மீ பயணித்து இந்த தீர்த்தவாரிக்கு வருவதால் இந்த தீர்த்தவாரி விசேஷமாகப் போற்றப்படுகிறது.

`ஈசனின் திருவடி பட்டால் புண்ணியமாயிற்றே' என்று சகல நதிகளும் இங்கு கூடுகின்றனவாம். ஆக, இந்த வைபவ தினங்களில் அங்கு சென்று தீர்த்தமாடினால் நம்முடைய சகல பாவங்களும் நீங்கும், ஆரோக்கியம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதேபோல், தைப்பூச தினத்தன்று உற்சவரான சந்திரசேகரர் கிரிவலப் பாதையில் உள்ள ஈசான்ய குளத்துக்குச் சென்று தீர்த்தவாரியில் கலந்து கொள்வார். அப்போது, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் (உற்சவ மூர்த்திகள்) விசேஷ அலங்காரத்தில் ஐயங்குளத்தில் தீர்த்த வாரிக்கு எழுந்தருள்வார்கள்.

இந்தத் தீர்த்தவாரியின்போது, சூல வடிவான சந்திர சேகரருக்கு பால், தயிர், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடை பெறும். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எழுந்தருளியுள்ள காமாட்சியம்மன், வடவீதி சுப்ரமணியர், துர்கையம்மன் உள்ளிட்ட தெய்வங் களும் குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

சிவபக்தரான வல்லாள மகா ராஜாவுக்கு, ஆண்டுதோறும் மாசி மகத்தன்று திருவண்ணா மலையை அடுத்த பள்ளிகொண்டாபட்டு கிராமத்தில் கெளதம நதியில், அண்ணாமலையார் திதி கொடுப்பார்.

அதற்கு முன்னதாக தைப்பூசத்தின்போது திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நடை பெறும் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு, மாலையில் மேளதாளத்துடன் திரும்பிச் செல்வார் அண்ணாமலையார். அப்போது வல்லாள மகாராஜா மறைந்தார் என்ற செய்தி அண்ணாமலையாருக்குச் சொல்லப்படும்.

அதனால் வருத்தம் கொள்ளும் அண்ணா மலையார், மேள தாளங்கள் இல்லாமல் சோகமாக ஆலயத்துக்குத் திரும்புவது ஐதிகம் என்கிறார்கள்.

ஆண்டுக்கு 9 விழாக்கள், 7 தீர்த்தவாரிகள் எனும் சிறப்புகள் கொண்ட திருவண்ணாமலை தலத்தில் வரும் தை, மாசி, பங்குனி போன்ற மாதங்கள் சிறப்பாக இருக்கப் போகின்றன.

தீர்த்தவாரியில் பரம ஆத்மாவான ஆதிசிவன் நீராடுகையில், ஜீவ ஆத்மாவான நாமும் நீராடுவது மனத்துக்குக் குளிர்ச்சியை அளிக்கும்; நம் அக அழுக்குகள் நீங்கும். நாமும் இந்தப் புண்ணிய வைபவங்களில் கலந்துகொண்டு, அண்ணாமலையார் அருளால் சகல பாவங்களும் நீங்கப் பெற்று புண்ணியம் பெறுவோம்.'

- யாழினி பர்வதம், சென்னை-78

ஆன்மாக்களைக் குளிர்விக்கும் அண்ணாமலை தீர்த்தவாரி!

கண்ணனை அடைய கண்ணனே வழி!

`க
ண்ணனை அடைய கண்ணனே வழி’ என்கின்றன ஞானநூல்கள்.

அது எப்படி?

செல்வந்தர் ஒருவர், ‘நாளைய தினம், பொன்னும் மணியும் தானம் செய்கிறேன். அவற்றைப் பெறுவதற்கு பையுடன் வாருங்கள்’ என ஊராருக்குத் தண்டோரா போட்டு அழைப்பு விடுத்தார்.

மறுநாள், பையுடன் வந்த அனைவரும் விலை உயர்ந்த பொருட்களைத் தானமாகப் பெற்றுச் சென்றனர்.

ஒருவன் மட்டும் பை ஏதும் எடுக்காமல் வெறுமனே வந்திருந்தான்.

`ஏன் பை எடுத்துவரவில்லை’ என அவனிடம் கேட்கப்பட்டது.

பதிலுக்கு அவன் ‘`ஐயா! பொன்னும் மணியுமாக வாரி வாரி வழங்கும் உங்களால், அவற்றை எடுத்துச் செல்ல ஒரு பை தர முடியாதா என்ன..?’’ என்று கேட்டான்!

ஆம்! பகவான், முக்தி எனும் பொன்னை தர வல்லவன். அது நமக்குக் கிடைப்பதற்கு துணையாக நிற்பவனும் அவனே!

(சொற்பொழிவு ஒன்றில் கேட்டது...)

- சி.ராஜூ, சத்தியமங்கலம்